இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“சரி எப்போது கிளம்ப வேண்டும்? சென்னை போய் அலுவலகத்தில் அனுமதி வாங்கிக் கொண்டு இலங்கைப் போக வேண்டுமா, இல்லை நாம் இங்கிருந்து நேராக இலங்கைப் போகலாமா?” என்றாள்.
“நாமோ போவது நாடு விட்டு நாடு. அதற்கு நீ விசா வாங்க வேண்டுமல்லவா? த்ரூ பிராப்பர் சேனல் மூலமாகத்தான் போக வேண்டும், அதனால் நாம் சென்னை சென்று உன் அலுவலகத்தில் விடைபெற்றுச் செல்லலாம்” என்றான் ராகுல்.
மாதவியை பிரிட்டிஷ் ஏர்வேஸில் சென்னைக்கு அனுப்பி விட்டு, ஹோட்டல் அறையை காலி செய்து விட்டு, ஸ்வர்ணா ஆபீசில் சுருட்டி பேண்ட் பேக்கெட்டில் வைத்திருந்த பேப்பர்களையெல்லாம் ஜாக்கிரதையாக பைல் செய்து தன் சூட் கேஸில் பத்திரப்படுத்திக் கொண்டான் ராகுல்.
கெஸ்ட் ஹௌஸிற்கு வந்தவுடன், தேங்கியிருந்த மெயில்களுக்கு பதில் அனுப்பி விட்டு நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்க்க, முழுசாக இரண்டு மணி நேரத்தை விழுங்கியிருந்தது.
யாரோடாவது வம்பு பேசவேண்டுமென்று உள்ளுக்குள் குறுகுறுத்தது. அம்மாவோடு பேசினால் அட்சரம் பிசகாமல் அப்பாவிடம் ஒப்புவிப்பாள். அதற்கு அப்பாவிடமே பேசிவிடலாம், ஆனால் அப்பா இப்போது அந்தஸ்து பேரன்டேஜ் எல்லாம் அதிகமாகப் பார்ப்பதால் மாதவியை அவ்வளவாகப் பிடிப்பதில்லை.
ஆதலால் அப்பாவிடம் இப்போது மிகவும் ஜாக்கிரதையாகத் தான் பேச வேண்டும். இலங்கை ஆபீஸ் ட்ரிப் பற்றி இப்போது பேசக்கூடாது. மாதவியோடு போக இருப்பதாகத் தெரிந்தாலோ நமக்கே தெரியாமல் நம்மை வேறு மாதிரி டைவர்ட் பண்ணி நமக்கே ஆப்பு வைத்து விடுவார். ஆதலால் இப்போது அவரிடம் கொஞ்சம் விலகியே இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.
ரக்ஷிதாதான் அவர்கள் காதலை நன்கு புரிந்து கொண்டு, நல்ல ஆலோசனையும் சொல்வாள். ரக்ஷிதாவிடம் கொஞ்ச நேரம் பேசினால் பொழுதும் ஜாலியாகப் போகும், உருப்படியாக ஏதாவது ஐடியாவும் கொடுப்பாள் என்று அவளுக்குப் போன் செய்தான். ரக்ஷிதா உற்சாகத்தின் மறுபிறவி, அவளும் போனை உடனே எடுத்தாள்.
விஷயத்தைக் கூறிய நொடி, “அண்ணா, உங்களுடன் நானும் வரட்டுமா? எனக்குக் கூட இலங்கையைப் பார்க்க வேண்டுமென்று மிக ஆசையாக இருக்கிறது. நான் வந்தால் உங்கள் இருவருக்கும் துணையாக இருப்பேனே தவிர, தொந்தரவு செய்யமாட்டேன். அண்ணியிடம் கேட்டுச் சொல்லுங்கள்” என்றாள்.
“ஏய் ரக்ஷிதா, நீ என்ன எதெற்கெடுத்தாலும் காலேஜைக் கட் செய்வதிலேயே இருக்கிறாய்? பிறகு நான்கு வருட டிகிரியை ஆறு வருடமாகப் படிக்கப் போகிறாய்” என்று கிண்டல் செய்தான் ராகுல்.
“அண்ணா, நான் என் அண்ணியைப் போல பெரிய அறிவாளி தெரிந்துகொள். நாங்களெல்லாம் நான்கு வருடப் படிப்பை மூன்று வருடத்திலேயே முடித்து விட்டு அப்படியே மாஸ்டர்ஸ் படிக்கப் போகிறோம்” என்று பதிலுக்கு கிண்டல் செய்தாள்.
ராகுல், “ஒரே நிமிஷம் ரக்ஷிதா… மாதவிதான் போன் செய்கிறாள், லைனைக் கட் செய்து விடாதே” என்றான்.
“இல்லை, நீ அண்ணியோடு பேசிவிட்டு எனக்குக் கான்பரன்ஸ் கால் போடு, நானும் பேசவேண்டும்” என்றாள்.
மாதவியிடம், ரக்ஷிதாவும் அவர்களுடன் வர விரும்புவதைக் கூறிவிட்டு கான்பரன்ஸ் காலில் மூவரும் கலந்து பேசினார்கள்.
“இப்படி அடிக்கடி காலேஜிற்கு லீவ் போட்டால் பாடம் எல்லாம் போய்விடாதா?” என்று கேட்டாள் மாதவி.
“அண்ணி இது ஹைஸ்கூல் இல்லை, காலேஜ். கிளாஸிற்குப் போனாலும் போகாவிட்டாலும் எங்கள் பாடத்தை நாங்கள் படித்துவிடுவோம். இப்போது பிரச்சனை என்னவென்றால் நான் உங்களோடு சிலோனிற்கு வருவதால் உங்கள் தனிமைக்கு இடைஞ்சலாக இருப்பேன் என்று நினைக்கிறீர்களா?”
“ரக்ஷிதா, நீ இப்படியெல்லாம் பேசினால்தான் எனக்குக் கோபம் வரும். நீ தான் எங்களைச் சேர்த்துவைத்த சமாதானப் புறா ஆயிற்றே. நீ வந்தால் எனக்குக் கொள்ளை மகிழ்ச்சிதான். நீங்கள் இருவரும் கிளம்பும் தேதியை முடிவு செய்து தெரிவியுங்கள். அதற்குள் நான் ஆபீசில் விவரம் தெரிவித்து விசாவிற்கும் ஏற்பாடு செய்து விடுகின்றேன்” என்று மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தாள் மாதவி.
மாதவிக்கு ஆபீசிற்கு விடுமுறை சாங்ஷன் ஆவதற்கும் விசா கிடைப்பதற்கும் கொஞ்சம் அவகாசம் கொடுத்து, அதற்கேற்றாற் போல் மட்டக்களப்பு போவதற்கு நாள் குறித்தனர்.
ராகுல் அவன் அப்பாவிடம், “ரக்ஷிதாவிற்கு ஏதோ பிராஜக்ட் ஒர்க் செய்ய வேண்டுமாம். அவள் என்னை அவளுடன் வரும்படி தொந்தரவு செய்கிறாள். நான் எப்படி நம் அலுவலக வேலையெல்லாம் விட்டுவிட்டு அவளோடு போகமுடியும்?” என்று கதை விட்டான்.
“ராகுல், வயதிற்கு வந்த பெண்ணைத் தனியே அவளுக்குப் பழக்கமில்லாத நாட்டிற்கு எப்படி அனுப்புவது? நீயும் அவளுடன் போய் விட்டு வா. எப்படியும் நம் அலுவலகத்தின் கிளை ஒன்று அங்கு இருக்கிறது. அங்கும் போய் கொஞ்சம் கணக்கு வழக்கெல்லாம் பார்த்துவிட்டு, ரக்ஷிதாவையும் அவள் போக வேண்டிய இடங்களுக்கு அழைத்துச்செல்” என்றார் ராகுலின் அப்பா.
“அப்பா… ரக்ஷிதா லண்டன் பொண்ணு, கூடுவாஞ்சேரி பெண்ணில்லை. அவளே சுதந்திரமாக எல்லா இடத்திற்கும் போகக் கூடியவள், அவளுக்கு நானெல்லாம் துணையாக மாட்டேன்” என்றான் நமுட்டுச்சிரிப்புடன்.
ராகுல் விளையாட்டுத்தனமாக சொல்வதை அவர் சீரியசாக எடுத்துக் கொண்டு, மகனிடம் கெஞ்சி கொஞ்சி இலங்கைக்குப் போக சம்மதம் என்று சொல்ல வைத்து விட்டார். ஆனால் ஏர்போர்ட்டில் மாதவியைப் பார்த்து திகைத்து விட்டார். இவள் ஏன் இவர்களுடன் போகிறாள் என்ற சந்தேகம் எழுந்தது. ராகுலின் அம்மாவிற்கு மட்டும் மாதவியைப் பார்த்ததும் உள்ளத்தில் பொங்கிய சந்தோஷம் முகத்தில் தெரிந்தது, ஆனால் ராகுல் எதையும் கண்டு கொள்ளவில்லை.
நேராக யாழ்ப்பாணத்தில் போய் இறங்கினார்கள். ஊரின் அழகைப்பார்த்து மயங்கி நின்றாள் மாதவி. இவர்களை வரவேற்க ஏர்போர்ட்டிற்கு வந்திருந்தாள் ஸ்வர்ணா. அதெல்லாம் ராகுலின் முன்னேற்பாடு போல் இருக்கிறது, அவள் என்னவோ ராகுலிடம் ரகசியம் பேசிக் கொண்டு வந்தாள் ஸ்வர்ணா.
“ஏய் ராகுல், எப்போது பார்த்தாலும் என்னடா ரகசியம் பேசுகிறீர்கள்?” என்றாள் மாதவி, எரிச்சல் மேலிட்ட குரலில்.
“அண்ணிக்கு உங்கள் மேல் பொஸஸிவ்நஸ் அண்ணா, அதனால் தான் குரலில் அவ்வளவு எரிச்சல்” என்றாள் ரக்ஷிதா கிண்டலாக.
“எனக்கு பொஸ்ஸிவ்நஸ்ஸா, உன்னை ரெண்டு போட்டால் தான் சரிப்படும்” என்று விளையாட்டாக அவளை அடிப்பது போல் துரத்தினாள் மாதவி.
சமாதானக் கொடிபோல் தன் கர்சீபை பறக்க விட்ட ரக்ஷிதா, “அண்ணி, அண்ணாவிடம் அவள் என்ன ரகசியம் பேசினாள் தெரியுமா?” எனக் கேட்க
“எனக்கெப்படித் தெரியும்? அவர்கள்தான் ரகசியம் பரம ரகசியம் என்று பேசுகிறார்களே” என்றாள் மனத்தாங்கலுடன்.
“உங்களுக்குத் தெரியாமல் அண்ணாவிடம் போய் என்ன ரகசியம் பேச முடியும்? அந்த சிலோன் பெண் மதுமிதா இங்கே யாழ்ப்பாணத்தில் தான் ஒரு கல்லூரியில் வேலை செய்கிறாளாம். அதைத்தான் அவ்வளவு ரகசியமாக சொல்லுகிறாள். உங்களுக்குத்தான் மதுமிதா என்ற பெயரைக் கேட்டாலே கோபம் வருமே, அதனால்தான் இந்த ரகசியப் பேச்சு” என்றாள் ரக்ஷிதா.
“என்ன சொன்னாய் ரக்ஷிதா, அந்த மதுமிதா இங்கேயுள்ள கல்லூரியில் வேலை செய்கிறார்களா?” என்றாள் ஆச்சர்யத்துடன்.
“ஆம், இதிலென்ன ஆச்சர்யம் அண்ணி. அவர்கள் நல்ல ஸ்காலர்போல் இருக்கிறது” என்றாள் தனக்குள் பேசிக் கொள்வது போல் மெதுவாக.
மாதவி மௌனமாக தனக்குள் ஏதோவொரு யோசனையில் ஆழ்ந்து விட்டாள். எவ்வளவு நேரம் அப்படி இருந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. எதிரே கை கட்டி வாய் பொத்தி சிரித்தவாறு நின்றிருந்தான் ராகுல். இவர்கள் இருவரையும் ரசித்தவாறு நின்றுருந்தாள் ஸ்வர்ணா.
“ஏய் மாதவி, நின்றுக் கொண்டே தூங்குகிறாயா?” என்று சிரித்துக் கொண்டே அவளைப் பிடித்து உலுக்கினான் ராகுல்.
“இல்லை ராகுல், ஏதோ யோசனை” என்றவள், “நான் இதற்கு முன் இங்கு வந்ததே இல்லை. இந்ந ஊரின் இயற்கை அழகைப் பார்த்தாலே பிரமிப்பாக இருக்கிறது. ஆறும், நீர் வீழ்ச்சியும், பச்சைப்பசேலென்ற வயல்களும், உங்களுக்கு நான் காவல் என கூறுவதுபோல் மலைகளும் எவ்வளவு அழகாக இருக்கிறது. ராகுல், இங்குள்ள அழகான ஊர்களையெல்லாம் அழைத்துச் சென்று காட்டுகிறாயா?” என்று கேட்டாள், கண்களில் ஆர்வம் கொப்பளிக்க.
“அதெல்லாம் காட்டலாம், பிரச்சனையில்லை. ஆனால் நாம் இங்கே இந்த ஊரின் அழகை ரசிக்கவோ இல்லை இந்த ஊரின் இயற்கையைப் பற்றி கட்டுரை எழுதவோ இங்கு வரவில்லை. அந்தப் லேடி மதுமிதாவின் இயற்பெயர் என்ன என்பது பற்றியும், மேலும் அவர் தான் உன் தாயாக இருக்கும் பட்சத்தில்… ஏன் உன்னிடம் கூட தன்னைப் பற்றி மனம் திறந்து பேசவில்லை என்பதும் நமக்குத் தெரிய வேண்டிய உண்மைகளாகும். இந்த விவரங்கள் எல்லாம் இன்னும் ஒரு வாரத்திற்குள் தெரிய வேண்டும். உனக்கு லீவ் ஒரே வாரத்தில் முடிந்து விடும் அல்லவா?” என்றான்.
அவன் சொல்வது உண்மை என்பது போல் மெதுவாகத் தலையசைத்தாள் மாதவி.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)




GIPHY App Key not set. Please check settings