இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நிகழ்ச்சிகள் நடத்த வந்த எல்லோரும், மதுமிதாவும் சேர்த்துத்தான் – முதல்நாள் இரவே கப்பலில் கிளம்பி விட்டிருந்தனர் என்றாள் அந்த இலங்கைப் பெண். அந்த அலுவலகத்தில் பணிபுரியும் இலங்கைப் பெண்ணும் வேறு சில மக்களும் மட்டும் இருந்து மீதமுள்ள பொருட்களையும் பார்ஸல் செய்துக் கொண்டிருந்தனர்.
இவர்களைப் பார்த்தவுடன் அந்த இலங்கைப் பெண் நட்புடன் சிரித்தாள். தன்னை ஸ்வர்ணா என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
“நல்லவேளை நீங்கள் இப்போது வந்தீர்கள். இன்னும் சிலமணி நேரம் தாமதமாக வந்திருந்தால், நாங்களும் இந்த ஹோட்டலை காலி செய்து விட்டு கிளம்பியிருப்போம். பதில் சொல்லக் கூட யாரும் இருக்க மாட்டார்கள்” என்று சிரித்தாள். மாதவிக்கும் ராகுலிற்கும் என்ன பேசுவதென்று புரியவில்லை.
“உங்களுக்குப் பேக்கிங்கில் ஏதாவது உதவி தேவையென்றால் சொல்லுங்கள்” என்றான் ராகுல்.
“மேலே ராக்கில் உள்ள கோப்புகளை கீழே இறக்கி, அதை ஒரு மூட்டையாக்க் கட்டி இந்த மரப்பெட்டியில் வைக்க வேண்டும். நானும் ஒரு மணி நேரமாக யாராவது வந்து உதவி செய்ய வருவார்கள் என்று எதிர்ப்பார்த்துக் காத்திருந்தேன், ஆனால் எல்லோரும் பேக்கிங்கல் பிசி. நல்லவேளையாக நீங்கள் வந்தீர்கள். உங்களால் மேலே உள்ள அத்தனைக் கோப்புகளையும் கீழே இறக்க உதவி செய்ய முடியுமா?” எனக் கேட்டாள் அப்பெண்.
“ஷ்யூர்… ஒரு ஏணி மட்டும் ஏற்பாடு செய்து கொடுக்க முடியுமா? கோப்புகளை எந்த பாதிப்பும் இல்லாமல் இறக்கித் தருகிறேன்“ என்றான் ராகுல்.
“கட்டாயம். நான் ஸ்டோர் ரூமில் இருக்கும் ஏணியை எடுத்து வருகிறேன். நீங்கள் இருவரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றாள்.
“ஸ்வர்ணா, தலை கொஞ்சம் வலிக்கிறது. நானும் வருகிறேன், நாம் இருவரும் கான்டீனில் ஒரு காப்பி சாப்பிட்டு வரலாமா?“ என மாதவி கேட்க
“ஓ.கே… ராகுல் உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” எனக் கேட்டாள் ஸ்வர்ணா.
“எனக்கு ஏதும் வேண்டாம். யூ டேக் யுவர் ஓன் டைம். மெதுவாக வாருங்கள், நான் இந்த ஆங்கிலப் பத்திரிகையைப் படித்துக் கொண்டிருக்கிறேன்” என்று அருகிலிருந்த ஒரு ஆங்கில செய்தித்தாளை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தான்.
கண்ணால் லேசாக ராகுலிற்கு ஒரு மாதிரி சைகை காட்டிய மாதவி, ஸ்வர்ணாவுடன் வெளியேறினாள். வெளியே சென்று எட்டிப் பார்த்து விட்டு, அவசரமாக அருகில் இருந்த மேஜை மேல் ஏறி அந்த ராக்கில் உள்ள கோப்புகளைத் தள்ளித் தள்ளி மதுமிதாவின் கோப்பினைக் கண்டெடுத்தான் ராகுல்.
அதில் உள்ள பேப்பர்களைச் சுருட்டி, தன் பேண்ட்டில் பின்புறம் உள்ள பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். ஆனால் அந்தக் கோப்பின் மேல் உள்ள அட்டையை மட்டும் அங்கேயே செருகி விட்டு கீழே இறங்கினான். பேப்பர்களை சுருட்டி தன் லெதர் பேகில் வைத்துக் கொண்டு, ஒன்றும் தெரியாத குழந்தைபோல் மீண்டும் அந்த ஆங்கிலச் செய்தித்தாளை படிக்கத் தொடங்கினான்.
அவர்கள் இருவரும் காபி குடித்து விட்டு, ராகுலிற்காக ஒரு சமோசா வாங்கி வந்து, சூடாக இருப்பதால் உடனே சாப்பிடும்படி வற்புறுத்தினர். இவனும் அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டான். பிறகு ஸ்வர்ணாவிற்கு கோப்புகளை அடுக்க எல்லா உதவிகளையும் செய்தான்.
அப்போது மாதவி, இலங்கையில் அவர்கள் தங்கியிருந்த ஊரின் பெயர் எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டாள். அவர்கள் மொத்தமாக ஒரு பெரிய வீட்டில் மட்டக்களப்பு என்னும் ஊரில் தங்கியுள்ளனர் என்றும், அது கடலை ஒட்டி அமைந்துள்ள அழகான நகரம் என்றும் தெரிந்து கொண்டார்கள்.
எல்லா விவரங்களையும் கேட்டு விவரங்களைத் தெரிந்து கொண்டாளே தவிர, மாதவியின் முகம் வாடிவிட்டதைப் போல் தெரிந்தது ராகுலிற்கு. இவள் ஏன் அடிக்கடி தொட்டாற்சிணுங்கி போல் சுருங்கி விடுகிறாள் என்று வருத்தப்பட்டான். சில சமயம் கோபம் கூட வரும். இவள் என்ன அனிச்சமலரோ என்று ஆச்சர்யப்படுவான்.
ஸவர்ணா இவர்கள் இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டாள். “எங்கள் நாட்டிற்கு வர வேண்டும், முக்கியமாக எங்கள் மட்டக்களப்பிற்குக் கட்டாயம் வரவேண்டும். அதன் அழகை ரசிக்க வேண்டும்” என்று வற்புறுத்தி அழைத்தாள். இவர்களும் அவளிடம் பிரியாவிடை பெற்று தங்கள் ஹோட்டலுக்குத் திரும்பினர்.
“மாதவி, நாம் காலையில் கிளம்பும்போது சந்தோஷமாகத் தானே வந்தாய். இப்போது ஏன் என் கண்ணம்மாவின் முகம் வாட்டமாக இருக்கிறது? நான் தெரிந்து கொள்ளலாமா?” என ராகுல் கேட்க
“ராகுல், இதில் தெரியாமல் போவதற்கு என்ன இருக்கிறது? என் அம்மா கிடைப்பாள் என்று இன்னுமா நீ நம்புகிறாய்? அந்த மதுமிதாதான் என் அம்மா என்ற எண்ணம் இருந்தால் மாற்றிக் கொள். சென்னைக்குப் போய் உன் அப்பா காட்டும் பெண்ணை மணந்து கொள். எனக்காகக் காத்திருந்தால், அவ்வளவுதான் உன் திருமண வாழ்க்கை. என்னை மறந்து விடு. என் தாயைக் கண்டுபிடிக்காமல், அவள் மேல் சுமத்திய பழியை நீக்காமல் நான் நிச்சமாய் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். அதனால் நீ உன் வழியைப் பார்த்துக் கொள், நான் என் வழியில் போகிறேன். இத்துடன் என்னை மறந்து விடு” என்றாள் காரின் கண்ணாடி வழியே எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டு.
“என்னை மறந்துவிடு என்று எவ்வளவு சுலபமாகச் சொல்லி விட்டாய். உன் வழியை நீ பார்த்துக் கொள், என் வழியில் நான் போகிறேன் என்றாயே. நம் இருவரின் வழியும் ஒரே வழிதான். அந்த மதுமிதாதான் உன் அம்மா என்று நிரூபித்து கட்டாயம் உன்னை என் மனைவியாக்கிக் கொள்வேன். நீ வேண்டுமானால் பார்” என்று சவால் விட்டான் ராகுல்.
கண்கள் கண்ணீரில் பளபளக்க, “நீ ஏண்டா என் மேல் இவ்வளவு பாசம் கொட்டுகிறாய்? பொய்யை மெய்யென்று நினைக்காதே, உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே” என்றாள் மாதவி மெல்லிய விசும்பலோடு.
காரை ஓரமாக நிறுத்தி விட்டு அவளை இறுக அணைத்துக் கொண்ட ராகுல், “அழாதே கண்ணம்மா, நீ அழுதால் என் உள்ளம் நொறுங்கிப் போவதுபோல் உணர்கிறேன். உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி, என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதடி” என்று அவள் காதுகளில் பாடினான்.
“பாட்டெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் நிஜம் வேறு கற்பனை வேறு என்பதை நீ கூடிய சீக்கிரம் புரிந்து கொள்வாய். அப்போதுதான் நீ உன் கற்பனையிலிருந்து வெளியே வருவாய். ராகுல், நீ இப்படி எனக்காக உருகுவதைப் பார்த்தால் என் மனம் மிகவும் கஷ்டப்படுகிறது. பேசாமல் என் சபதம் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு நாம் இருவரும் வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆகிவிடலாமா என்று கூட வெறுப்பாக இருக்கிறது. நம்மைப் பற்றிக் கவலைப்படாதவர்களுக்காக நாம் ஏன் இப்படி உருக வேண்டும் என்று கோபம் வருகிறது“ என்றாள் அவன் கழுத்துவளைவில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு.
“எண்ணித் துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு என்னும் குறளை மறந்து விட்டாயா? முன் வைத்த காலை பின் வைக்காதே, நம்பிக்கை வை வெற்றி நமதே” என்றான் உறுதியான குரலில். எந்த நம்பிக்கையில் அவன் அப்படிப் பேசுகிறான் என்பது அவளுக்கே திகைப்பாகத் தான் இருந்தது.
அவனை மாதவி மௌனமாய் ஏறிட்டு பார்க்க, “ஏன் மாதவி அப்படிப் பார்க்கிறாய்? ‘காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்’ என்ற பாரதியார் பாடல் உனக்கு மறந்து விட்டதா? காதல் பெண்களின் கடைக்கண் பார்வைக்காக விண்ணையே சாடுவோம் என்று பாரதி பாடும்போது, என் காதல் கண்ணம்மாவிற்காக நான் மட்டக்களப்பு வரை சென்று தகவல் அறிய மாட்டேனா?” என்றான் ராகுல்.
“என்ன சொல்கிறாய் ராகுல்? மட்டக்களப்பு போகப் போகிறாயா?” என்றாள் திகைப்புடன்.
“ஆம் போகிறோம், நீயும் என்னுடன் வருகிறாய். ஸ்வர்ணா அவளுடைய போன் நெம்பரைக் கொடுத்திருக்கிறாள். நாம் அந்த பைலில் இருந்து எடுத்த பேப்பர்களையும் ஒன்றாக சேர்த்துப் பார்த்தால், நமக்கு ஏதாவது அதில் விவரம் கிடைக்கலாம். எனக்கென்னவோ அந்த மதுமிதாதான் உன் அம்மா என்று நினைக்கிறேன். மட்டக்களப்பிற்குப் போனால் நாம் உண்மையைக் கண்டுபிடிக்கலாம் என்று தோன்றுகின்றது” என்றான் உறுதியான குரலில்.
“ராகுல், இலங்கைக்குப் போவதற்கு ‘விசா’ வாங்க வேண்டாமா? நாம் ஆபீசிற்கு எத்தனை நாள் லீவ் போட வேண்டும்? உங்கள் வீட்டில் இதெற்கெல்லாம் ஒத்துக் கொள்வார்களா?” என்றாள் பிரமிப்புடன்.
“எங்கள் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் கிளை அலுவலகம் ஒன்று இலங்கையில் இருப்பதை மறந்து விட்டாயா? எனக்கு அதனால் ஏற்கெனவே விசா இருக்கிறது. உனக்கு மட்டும்தான் விசா வாங்க வேண்டும், அது ஒன்றும் கஷ்டமில்லை. அதனால் நீ உன் ஆபீசில் மேலும் ஒரு வாரம் மருத்துவ விடுப்பு சொல்லி விடு. இனிமேல் இதைப் பற்றிப் பேசாதே, சொன்னதை மட்டும் செய்” என்றான் உத்தரவிடும் குரலில்.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
GIPHY App Key not set. Please check settings