in , ,

உன் கண்ணில் நீர் வழிந்தால் ❤ (பகுதி 16) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“சரி பாட்டியம்மா, கடைசியாக ஒருமுறை அந்த  லேடியுடன் பேசி பார்க்கலாம் கிளம்பு. இப்போது அவர்கள் எல்லாரும் அவர்கள் தங்கும் அதே ரெஸ்டாரண்டில்தான் இருப்பார்கள்” என்றவன் தயாராக கிளம்பினான்.

மாதவி அவளுடைய துணிகள், பொருட்கள் எல்லாவற்றையும் தன் சூட்கேசில் தூக்கிப் போட்டுக் கொண்டு இருந்தாள்.

குளித்து விட்டுத் தலையைத் துவட்டிக் கொண்டு பாத்ரூமிலிருந்து வெளியே வந்த ராகுல், “மாதவி” என்று அழைத்தான். அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தவுடன், தன் ஈரமான தலையை அவள் முகத்தைப் பார்த்து ஆட்டுக்குட்டியைப் போல் தலையை உதறினான். நீர்த்திவலைகள் அவள் மேல் பன்னீர் புஷ்பங்களாக சிதற, அவன் கலகலவென்று சிரித்தான்.

“ராகுல், இது என்ன குழந்தை மாதிரி” என்று சிணுங்கினாள் மாதவி.

“நீ செய்வதுதான் குழந்தை மாதிரி இருக்கிறது. உன் லீவ் முடிய இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறதல்லவா? அதற்குள் ஏன் மூட்டைக் கட்டுகிறாய்? லீவை கேன்ஸல் செய்து விட்டு இந்தியா போகப் போகிறாயா?”

“ஆமாம் ராகுல், அது எப்படி கரெக்ட்டாகச் சொல்லி விட்டாய். நேற்றுத் தான் வெண்பா மெயில் அனுப்பியிருந்தாள். முக்கியமான ப்ராஜெக்ட் ஒன்று எங்கள் டீமிற்குக் கொடுத்திருப்பதால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்து சேர் என்றாள். என் அம்மாவைக் கண்டுபிடிக்கும் முயற்சி ஒன்றும் தேராதுபோல் இருக்கிறது. அதனால் நம் வேலையையாவது நாம் ஒழுங்காகப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்” என்றாள் மாதவி.

“எதற்கும் கடைசியாக ஒருமுறை கல் எறிந்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன். மறுபடியும் அவர்களிடத்தில் பேசிப் பார்க்கலாம், இப்போதே கிளம்பு. ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ இல்லயா? இது நம் கடைசி முயற்சியாக இருக்கட்டுமே. நீ வருகிறாயா இல்லை நான் மட்டும் போய் வரட்டுமா?” என்றான் விடாப்பிடியாக.

“ஊர்சுற்றும் உன் கால் வீட்டில் தங்காது போல, சரி  கிளம்பு. ஒரே ரூமில் இருந்தாலும் போர்தான் அடிக்கும், டிக்கெட்டை நாளை கூட ‘பிரிபோன்’ செய்து கொள்ளலாம்”

இருவரும் காரில் ஏறி உட்கார்ந்ததும், அவனுக்குப் பிடித்த தமிழ் சினிமாப் பாடல்களைப் போட்டு விட்டான். பழைய தமிழ் பாடல்கள் மிகவும் பிடிக்கும். பழைய ‘பார்த்திபன் கனவு’ போன்ற படங்களில் வரும் பாடல்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்பான்.

இவர்கள் இருவரும் போன போது அங்கே யாரும் இல்லை. ஒரே ஒரு கிளார்க் மட்டும் உட்கார்ந்து ஏதோ ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள். இவர்களைப்பார்த்தவுடன் மிகவும் தெரிந்தவள் போல் சிரித்தாள்.

“மதுமிதா உங்களுக்கு உறவா?” என்று கேட்டாள் அந்தப் பெண் கொஞ்சும் இலங்கைத் தமிழில்.

இவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆம் என்று சொல்லவும் முடியாமல், இல்லையென்று தலையசைக்கவும் இயலாமல் ஒரு இரண்டுங்கெட்டானாக தலையசைத்து வைத்தனர்.

“நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள் என்று தெரியவில்லை, ஆனால் மதுமிதா நீங்கள் வந்து விட்டுப் போன பிறகு வெகு நேரம் ரகசியமாக அழது கொண்டு இருப்பார்” என்றாள் அவளுடைய அழகான இலங்கை தமிழில். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பொருள் பொதிந்த ஒரு பார்வையைப் பார்த்து கொண்டனர்.

அப்படியானால் சரயூ தான் அந்த மதுமிதா என்று  இவர்களுக்குத் தெளிவாக விளங்கிவிட்டது. ஆனால் அவள் ஏன் இந்த உண்மையைத் தன் மகளிடமே மறைக்கிறாள் என புரியவில்லை. சரயூ ஏன் இப்படி ஒளிந்து வாழ வேண்டும் என்ற கேள்விக்கும் பதில் தெரியவில்லை.

அப்போது அந்த கிளார்க், “சார்… மேடம்… ஒரு பத்து நிமிடம் இங்கே இருங்கள். ஒரே தலைவலயாக இருக்கிறது, நான் போய் ஒரு டீ மட்டும் குடித்து விட்டு வருகிறேன் ப்ளீஸ்” என்றாள்.

“நாங்கள் இங்கேயே இருக்கிறோம், நீங்கள் போய் விட்டு வாருங்கள்” என்றனர் இருவரும்.

“உங்களுக்கும் காபி அல்லது டீ வாங்கி வரட்டுமா?” என்ற அந்த இலங்கைக் குயிலுக்கு ‘எதுவும் வேண்டாம்’ என்று தலையசைத்தனர்.

மீண்டும் அந்தப் பெண்ணே, “சார், யாராவது வந்தால் அவர்கள் போன் நெம்பரும், அட்ரஸும் மட்டும் இதில் எழுதச் சொல்லுங்கள்” என்று ஒரு நோட்டுப் புத்தகமும் பேனாவையும் இவர்கள் அருகில் நகர்த்தி விட்டுச் சென்றாள்.

மாதவிதான் பொறுமையில்லாமல் அந்த அறையில் சுற்றிச் சுற்றி வந்தாள். மேலே கப்போர்டில் நிறைய கோப்புகள் இருந்தன, அதில் ஒன்றைப் பிடித்து இழுத்தாள். அது ஒவ்வொன்றும் தனித்தனியே ஒரு நபரைப் பற்றிய கோப்புபோல் இருக்கிறது. இலங்கைக் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களின் பைல்கள். பிறந்த தேதி, படித்த கல்லூரி, போன்ற முழு விவரங்களுடன் அந்த பைலில் குறிப்பிட்டவரின் போட்டோவும் இருந்தது. அதை உடனே ராகுலிடம் காட்டினாள்.

அவனோ அலட்சியமாக, “மாதவி, அந்தப் பெண்ணின் அனுமதியின்றி இந்த கோப்பை எடுத்தது தவறு, இதை அங்கேயே வைத்து விடு” என்றான்.

“ராகுல், இதேபோல் மதுமிதா பெயரிலும் ஒரு கோப்பு இருக்கும். அதைப் பார்த்தால் அவர்கள் பற்றிய முழு விவரமும் தெரியும் இல்லையா?”         

“வேண்டாம், அவர்கள் அனுமதியின்றி அந்த கோப்புகளை நாம் பார்க்கக் கூடாது” என்றான் ராகுல்.

ஆனால் அவள் யார் பேச்சையும் கேட்பதாக இல்லை. சரசரவென்று கோப்புகளை நகர்த்தினாள். கடைசியில் ஒரு கோப்பைக் கையில எடுத்துக் கொண்டு கீழே குதித்தாள். அந்தக் கோப்பின் மேல் மதுமிதா என்று எழுதப்பட்டிருந்தது. ராகுலிடமும் காட்டினாள்.

இருவரும் அந்தக் கோப்பின் முக்கியமானப் பக்கங்களை தங்களின் செல்போனில் அவளுடைய போட்டோவோடு  படம் பிடித்துக் கொண்டனர்.  பிறகு மீண்டும்  அந்தக் கோப்பினை அங்கேயே வைத்து விட்டனர். இதற்குள் பத்து நிமிடம் ஆகி விட்டிருந்தது. இலங்கைப் பெண்ணும் காலம் கடந்து வந்ததற்கு சாரி கேட்டாள்.

“நேரமாகி விட்டது, மீண்டும் நாளை சந்திக்கலாம்” என்று அவளிடமிருந்து விடைபெற்றனர்.

ஹோட்டல் அறைக்குத திரும்பிய அவர்கள், தாங்கள் எடுத்த எல்லா போட்டோகளையும் வரிசையாக அடுக்கினர். ஆனால் இதில் இவர்கள் தேடிய ஒன்றை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த கோப்பில் எங்கும் மதுமிதாவின் பெயர் ‘சரயு’ என்று குறிப்பிடப்படவில்லை. அதுதான் ஏன் என்று இவர்களுக்குப் புரியவில்லை. ஒருவேளை மதுமிதா கூறியது போல் இவள் சரயூ இல்லையோ?’ என்று இவர்களுக்கும் சந்தேகம் வந்தது.

“ஒருவேளை இந்த கோப்பிலேயே ‘பார்ட் 1’ என்று ஏதாவது இருக்குமோ, அதில் ஒருவேளை சரயூ அந்த குரூப்பில் சேர்ந்தது முதல் இருந்தால்? அதில் ஒருவேளை அவள் முகத்திலிருந்த மச்சத்தை எடுத்திருப்பாளோ?” என்று ராகுல் சந்தேகப்பட்டான்

‘இவர்கள் இந்த கோப்பினை எடுத்த அதே ‘ரேக்‘கில் வேறு ஒரு பைல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டுமே, நேற்றுத் தான் அவளே காபி சாப்பிடப் போனாள். இன்று என்ன செய்வது’ என்று அவனும் மாதவியும் பேசிப்பேசி மண்டையை உடைத்துக் கொண்டனர்.

அப்போது ராகுல் தன் சீட்டிலிருந்து துள்ளி குதித்து, “ஒரு ஐடியா” என்றான் விரலால் சொடக்குப் போட்டபடி.

“என்ன?” என்றாள் மாதவி.

“நேற்று அவளாகவே காபி சாப்பிடப் போனாள் இல்லையா? இன்று, ‘தலைவலிக்கிறது காபி சாப்பிடலாம்’ என்று நீ அவளை அழைத்துப் போ. அதற்குள் நான் எல்லா கோப்புகளையும் புரட்டி, பைல் கிடைத்தால் நேற்றுப் போலவே செல்போனில் போட்டோ எடுத்து விடுகிறேன். எப்படி என் ஐடியா?” என்றான் ராகுல்.

“ஐடியா நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் அது ‘ஒர்க் அவுட்’ ஆக வேண்டும் இல்லையா? அந்தப் பெண்ணிற்கு ஏதும் சந்தேகம் வரக்கூடாது. அதுவும் இல்லாமல் நம்மால் அவள் வேலைக்கு ஏதும் வம்பு வரக்கூடாது. மிகவும் நல்லப் பெண்“ என்றாள் மாதவி ஒரு நீண்ட பெருமூச்செறிந்தவாறு.

 “அதெல்லாம் அவள் வேலைக்கு ஏதும் வம்பு வராது. நீ ஏன் அதற்கு அவ்வளவு பெரிய பெருமூச்சு விடுகிறாய்?“ என்றான் ராகுல் கேலியாக சிரித்தபடி.

“ஆனால் நீ சொல்வதும் சரிதான். பாவம் ஊர் விட்டு ஊர் பிழைக்க வந்தவள், எத்தனை பேர் அவளை நம்பி இருக்கிறார்களோ?” என்றான் ராகுல் இப்போது அவனும் பெருமூச்சு விட்டவாறு.

இப்போது மாதவி சிரித்தாள். ”ராகுல், இப்படி மாற்றி மாற்றி பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தால், அவர்கள் எல்லோரும் இலங்கைக்கே திரும்பி விடுவார்கள். நீ காரில் பெட்ரொல், காத்து எல்லாம் ‘செக்‘ செய்துக் கொள். அப்போது தான் நேராக எந்தத் தடங்கலுமில்லாமல் போய் அவர்களைப் பார்க்கலாம்” என்றாள்.

காலை உணவிற்காகவும், மதியம் லஞ்சிற்காகவும் சில சேண்ட்விச்களும், சப்-வேயிலிருந்து கொஞ்சம் உணவு வகைகளையும் வாங்கி காரில் போட்டுக் கொண்டு கிளம்பினர். ஆனால்  இவர்கள் கெட்ட நேரம் இவர்களுக்கு முன்பே போய் நின்றது?

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உன் கண்ணில் நீர் வழிந்தால் ❤ (பகுதி 15) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    உன் கண்ணில் நீர் வழிந்தால் ❤ (பகுதி 17) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை