இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“உங்களைப் பார்த்தால் என் அம்மா போலவே இருக்கிறது, அதனால் தான் நான் ‘அம்மா’ என்று கூப்பிட்டேன். ஆனால் அது என் அருகில் உள்ளவர்களுக்கே சரியாகக் கேட்கவில்லை. அப்படியிருக்க பத்தடி தூரத்தில் மேடையில் இருந்து நீங்கள் எப்படித் திரும்பிப் பார்த்தீர்கள்? டெலிபதி மாதிரி ஏதோ ஒரு உள்ளுணர்வு தானே உங்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது? உங்கள் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா?” என்ற மாதவி, உணர்ச்சி மிகுதியால் அழுது விடுவாள் போலிருந்தது.
ராகுல் அவள் கைகளை ஆதரவுடன் அழுத்திப் பிடித்துக் கொண்டான். ரக்ஷிதா அந்தப் பெண்ணையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என் பெயர் மதுமிதா. என் தமிழ் உச்சரிப்பு உங்களுக்குத் தெரியவில்லையா? நான் தமிழ்நாட்டின் மண்ணைக் கூட மிதித்ததில்லை. ஒருத்தரைப் போல் ஒரேமாதிரி இந்த உலகில் ஏழு பேர் இருக்கிறார்கள் என்று நீங்கள் கேள்விப் பட்டதில்லையா? அதனால் நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்கள் சரியான தாயைக் கண்டுபிடிக்க கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம், பை” என்று கூறிக்கொண்டே அருகில் வந்த காரில் ஏறிப் போய்விட்டாள்.
அவள் பதில் இவர்கள் மூவருக்கும் அதிர்ச்சி அளித்தது., ஆனால் மாதவி மதுமிதாதான் அவள் தாய் என்று உறுதியாக நம்பினாள். அவள் அந்த இடத்தில் இருந்து நகரவேயில்லை. காரில் ஏறிப் போன மதுமிதாவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ராகுலும் ரட்சிதாவும் அவளை சமாதானம் செய்து மீண்டும் நாளை வந்து பேசிப் பார்க்கலாம் என்று அழைத்துச் சென்றனர்.
அடுத்த நாள் ராகுல், “ஆபீஸில் போய் முக்கியமான வேலைகளைப் பார்த்து விட்டுப் பிறகு மதுமிதாவைத் தேடிப் போகலாம்” என்றான்.
மாதவி ஆகாய நிறத்தில் சின்னச்சின்ன எம்பிராய்டரி பூ வேலைகள் செய்த ஜார்ஜெட் புடவையும், அதே நிறத்தில் சோளியும் அணிந்து தென்றல் அசைந்து வருவது போல் மென்மையாக நடந்து வந்தாள். கட்டுக்குள் அடங்காத அவள் கூந்தலை ஹேர்பின் கொண்டு அடக்கி வைத்திருந்தாள். அந்த மெல்லிய புடவையில் அவள் இன்னும் ஒல்லியாக, உயரமாகக் காணப்பட்டாள். அவளைப் பார்த்தவுடன் கண்களை அகல விரித்து விசிலடித்தான் ராகுல்.
“ராகுல் உங்களுக்கு என்ன ஆயிற்று?” என்றாள் மாதவி முகம் சிவக்க.
“நான் என் மாதவியைத்தான் எதிர்பார்த்தேன், ஆனால் ஒரு தேவதை எதிரில் வந்தால் என்ன செய்வது? அதனால் தான் விசிலடித்தேன்” என்றான் குழி விழுந்த அவள் கன்னத்தை லேசாக வருடியபடி.
சேலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு சின்னக் குழந்தை போல் தட்டாமாலை சுற்றி நின்ற மாதவி, “புடவையில் நான் அழகாக இருக்கிறேனா ராகுல்?” எனக் கேட்டாள் சிரிப்புடன்.
“நீ என் தேவதைடி. நீ என்ன டிரெஸ் போட்டாலும் அந்த டிரெஸ் அழகாக விடுகிறது” என்றவன், “அதென்ன சேலை கட்டும் நாட்டில் ஜீன்ஸ் போடுகிறீர்கள், இங்கு பேன்ட் போடும் ஊரில் சேலை கட்டுகிறீர்கள்?” என சத்தமாய் சிரித்தான்.
“அது அப்படித்தான். சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை, எங்கள் சுதந்திரத்தை நாங்கள் கொண்டாடுகிறோம்” என்றாள் இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு. அதே நேரத்தில் ரக்ஷிதாவும் அங்கு வந்து சேர்ந்தாள்.
மூவரும் ராகுலின் ஆபீஸிற்குச் சென்றனர். அங்கு அவன் வேலைகளை சீக்கிரம் முடிக்க, மூவரும் மதுமிதா தங்கியிருந்த ஹோட்டலிற்கு சென்றனர். இவர்களைப் பார்த்த மதுமிதா, எரிச்சலும் ஆச்சரியமும் அடைந்தாள்.
“நான்தான் எனக்கும் உங்களுக்கும் எந்த உறவும் இல்லையென்றேனே, மீண்டும் ஏன் நான் போகும் இடமெல்லாம் வந்து தொந்தரவு செய்கிறீர்கள்? ஒருமுறை சொன்னால் உங்களுக்குப் புரியாதா?” என்றாள் மதுமிதா, கோபமாக அடிக்கடி கண்களை வேறு தேய்த்துக் கொண்டாள்.
இங்கே எந்த தூசும் இல்லை அழுக்கும் இல்லை, அப்படியிருக்க இந்த அம்மா ஏன் கண்களை இப்படித் தேய்த்துக் கொள்கிறாள் என்று நினைத்துக் கொண்டான் ராகுல்.
அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று மூவரும் திகைத்து நின்றனர். மாதவி, திடீரென ஏதோ தோன்றியவளாகத் தன் கையில் இருந்த செல்போனில் அவள் தாய் சரயூவின் புகைப்படத்தைக் காட்டினாள். மதுமிதாவும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்துத் திகைத்தாள்.
பிறகு அவள் மாதவியை உற்றுப் பார்த்து, “நீ இவர்கள் மகளா?” எனக் கேட்டாள்.
மாதவியின் கண்களில் ஏனோ கண்ணீர் குளம் கட்டியது. பேச வார்த்தை வராமல் ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.
“தொலைத்த இடத்தை விட்டு வேறு எங்கோ தேடி அலைகிறார்கள். போட்டோவை நன்றாக உற்றுப்பாருங்கள். அவர்களுக்கு வலது தாடையில் எவ்வளவு பெரிய மச்சம் இருக்கிறது. எனக்கு இல்லை அல்லவா? அதனால் மீண்டும் மீண்டும் வந்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள். தமிழ் நாட்டில் காணாமல் போனவர்களை தமிழ்நாட்டில் தேடுவதை விட்டு லண்டனில் வந்து தேடுகிறீர்களே, வெரி ஸாரி” என்று கிண்டலாகக் கூறிவிட்டு, அப்போது அங்கு வந்த இரண்டு பெண்களோடு கிளம்பிச் சென்றார்.
இவர்கள் மூவரும் வேறு வழியின்றி அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பினர். மாதவிக்கு சமாதானம் சொல்லி விட்டு, ரக்ஷிதா தன் ஹாஸ்டலுக்குத் திரும்பினாள்.
மாதவி அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்த பெரிய கண்ணாடி ஜன்னல் வழியே, எந்த இலக்கும் இல்லாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மனம் படும் துயரம், ராகுலிற்கு மிகுந்த கஷ்டத்தைக் கொடுத்தது.
‘சும்மா இருந்த அவளைத் தூண்டிவிட்டு இப்படி ஒரு துன்பம் கொடுத்து விட்டோமே’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டான்.
மெதுவாக மாதவியின் பின்னால் நின்று, அவளை அணைத்துக் கொண்டான் ராகுல்.
“ஐயம் வெரி ஸாரிடா கண்ணா. நீ உண்டு உன் ஆபீஸ் வேலையுண்டு என்று இருந்தவளைத் தூண்டி விட்டு மேலும் உனக்குத் துன்பம்கொடுத்து விட்டேன், என்னை மன்னிப்பாயா?” என்றான் குரல் தழுதழுக்க. அவன் கண்களும் கலங்கியிருந்தன.
அவன் கை வளையத்தில் இருந்து அப்படியே திரும்பி அவனைப் பார்த்த மாதவி திகைத்தாள். “ராகுல்… என் ஏமாற்றம் உங்கள் கண்கள் கலங்கும் அளவிற்கு உங்களை பாதித்ததா?” என்றாள்.
அவன் அவளை இன்னும் இறுக அணைத்து, “நீ என் உயிரல்லவா! பாரதியார் பாடல் போலவே உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம்தான் கொட்டுகிறது கண்ணம்மா” என்றவன், அவள் கண்களில் தன் இதழ்களைப் பதித்தான்.
வழக்கமாக காலை எட்டு மணிக்கு எழுந்து கொள்ளும் ராகுல், அடுத்தநாள் காலை ஆறு மணிக்கு எழுந்து பால்கனியில் உட்கார்ந்து ஏதோ யோசனையுடன் காபி குடித்துக் கொண்டிருந்தான்.
சப்தம் கேட்டு மாதவி புரண்டு படுத்தாள். அவள் மனம் வெறுமையாக இருந்தது. இங்கு வந்ததால் பணமும் நஷ்டம், விடுமுறை நாட்கள் வீணானதும்தான் மிச்சம் என்று நினைத்தாள். ஆனால் இங்கு வந்ததால் ராகுலுடனும் ரக்ஷிதாவுடனும் சந்தோஷமாக அவளுடைய விடுமுறையைக் கழித்தாள்.
எல்லாவற்றையும் யோசனை செய்து கொண்டே எழுந்து லைட்டை ஆன் செய்தாள். பால்கனியில் ராகுல் உட்கார்ந்து ஏதோ யோசனையுடன் காபி குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். இவளுக்காக ராகுல் படும் மனக்கஷ்டம் மாதவிக்கு புரிந்து இருந்தது. அதனால் ஒரு பக்கம் மனம் வருந்தினாலும், ஒரு பக்கம் நமக்காக வருத்தப்படவும் ஒருத்தன் இருக்கிறான் என்று மகிழ்ச்சியாகவும் இருந்தது.
‘இவ்வளவு சுயநலமா?’ என்று அவள் தலையில் அவளே தட்டிக் கொண்டாள்.
‘எனக்காக ராகுல் தன் நேரத்தை வீணாக்கியதோடு, அவன் அப்பாவிடம் திட்டும் வாங்கிக் கொள்கிறான்’ என்று அவனுக்காகப் பரிதாபப்பட்டாள். ராகுல் எதிரில் மற்றொரு நாற்காலயைப் போட்டுக்கொண்டு அமர்ந்தாள் மாதவி.
“தீவிர யோசனையா ராகுல்?” என மாதவி கேட்க, அவளை ஆழ்ந்த சிந்தனையுடன் ஏறிட்டுப் பார்த்தான் ராகுல்.
“நேற்று அந்த சிலோன் பெண்மணி பேசியதைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”
“இன்னும் நினைப்பதற்கு என்ன இருக்கிறது? அதுதான் உண்மையை வெட்டவெளிச்சமாகப் போட்டு உடைத்து விட்டார்களே. எத்தனையோ வருடங்களாக என் அம்மாவுடன் பழகியும், அந்த வலது தாடையில் இருந்த மச்சம் பற்றிய விஷயத்தை எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை. பணம், நேரம், உங்கள் உழைப்பு எல்லாம்தான் வீண்” என்றாள் மாதவி.
“அந்த பெண் பேசியதை நீ நம்புகிறாயா? உனக்கு எந்த சந்தேகமும் தோன்றவில்லையா மாதவி” என்றான் ராகுல் அவளை உறுத்துப் பார்த்து.
“ஏன், அதில் என்ன சந்தேகம்?”
“அவர்கள் உன் அம்மா என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை. எத்தனையோ வருடங்கள் பழகியும் உனக்கு அந்த மச்சம் பெரியதாகத் தெரியவில்லை, ஆனால் சொல்லி வைத்தது போல அந்த லேடி அந்த மச்சத்தைப் பற்றி அவ்வளவு தெளிவாகப் பேசுவது எப்படி? யாருக்கும் அடையாளம் தெரியக்கூடாது என்று மச்சத்தை ஆபரேஷன் செய்து எடுத்து விட்டிருந்தால்? இப்போதுதான் எத்தனையோ பிளாஸ்டிக் சர்ஜரி இருக்கிறதே?” என்றான் ராகுல்.
“ஆனால் என் அம்மாவாக இருந்தால் என்னைப் பார்த்தால் தாய்மை என்ற உணர்ச்சி வராதா? அப்படியா கல் போல் எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருப்பார்கள்?” என்றாள்.
“இரண்டாவது முறை அவர்களைப் பார்க்கப் போகும் போது கண்களில் ஏதோ தூசு விழுந்தாற்போல் தேய்த்துக் கொண்டார்களே, ஞாபகம் இருக்கிறதா? எனக்கென்னவோ அவர்கள் பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொள்ளத் தான் அப்படித் தேய்த்திருப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றான் உறுதியான குரலில்.
“அப்படி என் அம்மாவாக இருந்தால், அவர்கள் பாசத்தை என்னிடம் ஏன் மறைக்க வேண்டும்? நான் என்ன தவறு செய்தேன். சிறு குழந்தையாக இருந்தபோதே தாயின் அரவணைப்போ இல்லை பாசத்தையோ நான் அதிகமாக உணர்ந்ததில்லை, அதற்கு என் அப்பா புண்ணியம் கட்டிக் கொண்டார். பெண்களுக்கு இயற்கையால் ஏற்படும் சில கஷ்டமான நாட்களில் தாய் தான் கூட இருக்க முடியும், நான் அதற்குக் கூட கொடுத்து வைக்கவில்லை” என்ற மாதவி நீண்ட பெருமூச்செறிந்தாள்.
“அது என்ன? பெண்களுக்கு மட்டும் ஏற்படும் இயற்கையான சில கஷ்டமான நேரங்கள்?”
“டேய்… அதெல்லாம் உனக்கு இப்போது புரியாது” என்றாள் நமுட்டுச் சிரிப்புடன்.
“சரி அதை விடு, இப்போது மேற்கொண்டு என்ன செய்வது? அதைச் சொல்”
“மேற்கொண்டு வேறு என்ன முடியும்? டிக்கெட்டைப் பிரீபோன் செய்து இந்தியா திரும்ப வேண்டியதுதான்” என்றாள்.
“எதற்கும் இன்று ஒருமுறை அவர்களை மறுபடியும் போய் பார்த்து விட்டு வரலாமா? நீ இவ்வளவு தூரம் லீவ் போட்டு விட்டு வந்து ஒன்றும் பயனில்லாமல் போவது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்றான் ராகுல்.
“நீங்கள் ஒன்றும் வருத்தப்படாதீர்கள். எது எது எப்போது நடக்குமோ அப்போதுதான் நடக்கும். நாம் ஆசைப்படுவதெல்லாம் கிடைத்து விடுமா, கடவுளும் மனது வைக்க வேண்டும் அல்லவா?”
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)




GIPHY App Key not set. Please check settings