இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“ஏன் அப்படிக் கேட்கிறாய் ரக்ஷிதா?” என்றாள் மாதவி வியப்புடன்.
“அண்ணி, இந்த நாட்டில் இலங்கைத் தமிழர் நிறையவே இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும் இல்லையா? நேற்று அவர்களுடைய கலைநிகழ்ச்சிக்கு என் நண்பர்களோடு சென்றிருந்தேன். அங்கே நடனமாடிய ஒரு பெண், உங்களுடைய ஜெராக்ஸ் காப்பி போலவே இருந்தாள். வயது தான் கொஞ்சம் அதிகம். அதனால்தான் உங்களுக்கு அக்கா யாராவது உங்களைப் போலவே இருக்கிறார்களா என்று கேட்டேன்”
“என்னிடம் நீ மிகவும் பிரியமாக இருப்பதால் உனக்கு அப்படி ஒரு மனப்பிரம்மையோ?” என்றாள் மாதவி கேலியாக சிரித்துக் கொண்டே.
“என்னைப் பைத்தியம் என்று சொல்கிறாயா அண்ணி? நான் அந்த பெண்ணோடு பேசினேன். நன்றாக சிரித்து சிரித்துப் பேசினார்கள். உங்களிடம் கேட்ட அதே கேள்வியைத்தான் அவர்களிடமும் கேட்டேன். அவர்களுக்கு யாரும் சகோதரியே கிடையாதென்று அவர்களும் சொன்னார்கள். அதுமட்டுமில்லை, அவர்கள் தமிழ்நாட்டிற்கே வந்ததில்லை என்று சொன்னார்கள்” என்றாள் ரக்ஷிதா.
“அந்தப் பெண்ணின் போட்டோ ஏதும் உள்ளதா?”
“இல்லை அண்ணி. அந்த லேடி செல்பி எடுக்கக்கூட அனுமதிக்கவில்லை” என்றாள் ரக்ஷிதா ஆற்றாமையோடு.
“சரி, நீ ஒன்றும் ரொம்ப கவலைப்படாதே. ஒருத்தரைப்போல் ஏழு பேர் இருப்பார்கள் என்று சொல்கிறார்களே, அதில் இது ஒரு ஆளோ என்னவோ” என்றாள் கேலியாக.
தினமும் இரவு ஒன்பது மணிக்கு போன் செய்யும் ராகுல், திடீரென்று இரண்டு நாட்களாக போன் செய்யவில்லை. மாதவி செய்த போனை முதல் நாள் எடுக்கவில்லை. அடுத்த நாள் எடுத்தும், அவன் மிகவும் குழப்பத்தில் இருப்பதாகவும், நாளை அவனே கூப்பிடுவதாகவும் கூறி விட்டான்.
“அடப்பாவி… இவன் வேலை செய்வது இவன் சொந்தக் கம்பெனியில், இவனுக்கென்ன குழப்பம். தேவையில்லாமல் எல்லாவற்றிற்கும் சின்னக் குழந்தை மாதிரி ‘டென்ஷன்’ ஆகி விடுவான். இவனெல்லாம் கல்யாணம் செய்து குழந்தைகள் பெற்று எப்படி சமாளிக்கப் போகிறான் என்று நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.
அடுத்த நாள் அவனே போன் செய்தான். “மாதவி, நீ உடனே லண்டன் வர வேண்டியதாகயிருக்கும்” என்றான்.
“ராகுல், நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நான் உன்னைப்போல் என் சொந்தக் கம்பெனியிலா வேலை செய்கிறேன்? இப்போது இருக்கும் பொருளாதார நிலையில் யாருக்கு எப்போது வேலையிருக்கும், எப்போது போய்விடும் என்றே தெரியாது. உனக்கு என்னைப் பார்க்க அவ்வளவு ஆசையாக இருந்தால் நீ வேண்டுமானால் லீவ் போட்டுவிட்டு வா” என்றாள்.
“ஏய் அவசரக்குடுக்கை, நான் ஒன்றும் அதற்காகவெல்லாம் லீவ் போட்டு வரச்சொல்லவில்லை. உன்னிடம் ரக்ஷிதா ஒரு சந்தேகம் கேட்டாள் அல்லவா? அதே இலங்கை அகதிகள் ட்ரூப் நான் இருக்கும் ஏரியாவிலும் கலைநிகழ்ச்சிகள் நடத்தினார்கள். அதைப் பார்த்துத் திகைத்து விட்டுத்தான் என்னால் இரண்டு நாள் உன்னுடன் போனில் பேசமுடியவில்லை” என்றான்.
“ராகுல், உனக்கு என்னைப் பற்றித் தெரியாதா? நான் ஒரே பெண் என்பதால்தானே என் அப்பா என்மேல் ரொம்ப பொஸ்ஸஸிவ்வாக இருக்கிறார். காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்கும் வரை என்னுடைய ஒவ்வொரு அசைவும் அவர் கன்ட்ரோலில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். ரக்ஷிதாவிற்குத் தான் என்னைப் பற்றித் தெரியாது. உன்னைப் போலவே அக்கா இருக்கிறாளா தங்கை இருக்கிறாளா என்று கேட்கிறாள், நீயுமா?” என கேலியாக சிரித்தாள்.
“நிஜமாகவே நீ ரொம்ப…” என்று இழுத்து, முடிக்காமல் சிரித்தான் ராகுல்.
“ஏய், சொல்ல வந்ததை ஏன் முடிக்காமல் நிறுத்திவிட்டாய்? புத்திசாலி என்கிறாயா முட்டாள் என்கிறாயா?”
“அதை நீயே முடிவு செய்துக்கொள். எதுவாக இருந்தாலும் இந்த வயதிற்கு மேல் மாறப்போவதில்லை. எப்படியிருந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்ள நான் தயார். இப்போது வாட்ஸ்ஆப்பில் நான் அனுப்பியிருக்கும் போட்டோவை நன்றாக கவனித்துப் பார். பத்து நிமிடம் கழித்து நான் மீண்டும் கூப்பிடுகிறேன்” என்றவன், போனை வைத்து விட்டான்.
மாதவி வாடஸ்ஆஃப் சைட்டைத் திறந்து, ராகுல் அனுப்பிய போட்டோவைப் பார்த்து திடுக்கிட்டாள். இவளையே யாரோ அருகில் நின்று போட்டோ எடுத்ததுபோல் இருந்தது, ஆனால் புல் மேக்-அப். மாதவி நிறைய மேக்கப் போட மாட்டாள். வயதை மறைக்க போட்டோவில் இருந்த பெண் தலைக்கு ஹேர்டை எல்லாம் போட்டிருந்தாள்.
“உருவ ஒற்றுமை வேண்டுமானால் இருக்கலாம். ஏற்கனவே பெரியவர்கள் சொல்லவில்லையா? ‘ஒரே மாதிரி உருவ ஒற்றுமை உடையவர்கள் ஏழு பேர் இருக்கிறார்கள்’ என்று. உங்களுக்கு இதில் என்ன அதிர்ச்சி?” என்றாள் கோபமாக.
“ஏய்… நான் ரக்ஷிதாவைப் போல் தொலைவில் நின்று போட்டோ எடுக்கவில்லை. அவர்கள் ‘ஷோ’ முடிந்த பிறகு அருகில் சென்று, பேச்சு கொடுத்துக் கொண்டேதான் இந்த போட்டோ எடுத்தேன்” என்றான்.
“ராகுல்… வரவர ராமாயணம் மாதிரி கதையை வளர்க்கிறாய். சரி, இதனால் நீ சொல்ல விரும்பும் கருத்து யாது?” என்றாள் மாதவி கிண்டலாக.
“அடிப்பாவி! இன்னுமா புரியவில்லை. ஒருவேளை உன் அம்மாவாக இருக்கலாம் என்ற சந்தேகம் கூட உனக்கு வரவில்லையா? நாம் தேடிக் கொண்டு இருக்கும் உன் அம்மா தான் இந்த போட்டோவில் இருப்பவர் என்பதுதான் என் தாழ்மையான கருத்து” என்றான் ராகுல்.
“ரக்ஷிதா பேசும்போது அந்த போட்டோவில் உள்ள பெண் தமிழ்நாட்டிற்கே வந்ததில்லை என்று சொன்னது மறந்து விட்டதா ராகுல். அதுவிமில்லாமல் என் அம்மா எந்த அழகு சாதனமும் உபயோகிப்பதில்லை. என் அப்பாவிற்கு சந்தேகப் பேய் பிடித்தவுடன், முகத்திற்கு எல்லோரும் சாதாரணமாக உபயோகப்படுத்தும் பௌடர் கூட அதிகமாகப் போடுவதில்லை. புடவைக்குப் பொருத்தமான பிளௌஸ் கூடப் போடுவதில்லை என்று லதா சித்தி சொல்வார்கள். ஆனால் போட்டோவில் உள்ள பெண் தூங்கும் போது கூட மேக்அப்பை மறக்க மாட்டாள் போலிருக்கிறதே. அப்பா… எவ்வளவு பௌடர், எவ்வளவு லிப்ஸடிக், பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது” என்றாள் தோளகளை குலுக்கியவாறு.
“அதுதான் எனக்குக் கூட ஆச்சர்யமாக இருக்கிறது .மேக்கப்பால் தன்னை அழகுப்படுத்திக் கொள்வதற்கு பதில் அலங்கோலப்படுத்திக் கொண்டால் என்ன அர்த்தம்?” என்றான் யோசனையோடு.
“என்ன அர்த்தமாம்?” மாதவி புரியாமல் கேட்டாள்.
“தன்னை வெளிஉலகத்திலிருந்து மறைத்துக் கொளகிறார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது”
“எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?”
“நீ ஒரு பதினைந்து நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு வந்தால் நாம் உண்மையை ஓரளவிற்குத் தெரிந்து கொள்ள முடியும்”
“தேவையில்லாமல் என் விடுமுறை நாட்களை செலவழிக்கச் சொல்கிறாய். அந்த போட்டோவில் உள்ள பெண் என் அம்மாவே இல்லை என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். அந்த விடுமுறை நாட்களை உன்னோடு ஜாலியாக் கழிப்பதென்றால் கூட நான் வருவேன். இப்படி சம்பந்தமேயில்லாத யாரோ ஒரு பெண்ணைப் போய் ஆராய்ச்சி செய்து நதிமூலம் ரிஷிமூலம் பார்ப்பதற்கு என் விடுமுறை நாட்களை வீணாக்க வேண்டுமா?”
“ஹலோ… நான் சொல்வதை கொஞ்சம் பெரியமனது வைத்து, குறைந்தது ஒரு பத்து நாட்களாவது விடுமுறை எடுத்துக்கொண்டு வா. அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும்” என்று கோபத்துடன் போனை பட்டென்று வைத்து விட்டான் ராகுல்.
வேறு வழியில்லாமல் மாதவியும் பத்து நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு லண்டன் ஹீத்ரூ ஏர்போர்ட்டில் போய் இறங்கினாள். ராகுல், ரக்ஷிதா இருவரும் மாதவியை ஏர்போர்ட்டில் வந்து பிக்அப் செய்து கொண்டனர். அவள் தங்குவதற்காக ரிட்ஸ் என்னும் ஸ்டார் ஹோட்டலில் ரூம் ஏற்பாடு செய்து வைத்திருந்தனர். அறை மிகவும் ஆடம்பரமாக இருந்தது.
”வாடகையே மிகவும் அதிகமாக இருக்கும் போல் இருக்கிறதே, எனக்கு எதற்காக இவ்வளவு காஸ்ட்லியான ஹோட்டலில் ரூம் புக் செய்திருக்கிறீர்கள்? உங்கள் இருவர் அறையிலேயே தங்கியிருக்கலாம் இல்லையா?” என்றாள்.
“அண்ணி, நீ எப்படி எங்கள் அறையில் தங்க முடியும்? நான் இருப்பதோ கல்லூரி ஹாஸ்டலில், அங்கே ஸ்டூடண்ட்ஸ் தவிர வேறு யாரும தங்க முடியாது. ராகுல் அண்ணா இருப்பதோ அவருடைய ஆபீஸ் கெஸ்ட் ஹௌஸில், அங்கே போய் நீங்கள் தங்கினால் டீசன்ட்டாக இருக்காது. நீங்கள் எங்கள் இருவருக்குமே மிகவும் முக்கியமான வி.வி.ஐ.பி. இல்லையா? அதனால் தான் பணம் செலவானாலும் பரவாயில்லை என்று இந்த ஸ்டார் ஹோட்டல் ரூம்” என்றாள் ரக்ஷிதா, கலகலவென்று சிரித்துக் கொண்டு.
“ஆனால் என்னால் தனியாக இந்த ஹோட்டல் ரூமில் உட்கார்ந்துகொண்டு இருக்க முடியாது” என்றாள் மாதவி.
“நீயே விரும்பினாலும் உன்னைத் தனியே விட எங்களால் முடியாது. நானோ இல்லை ரக்ஷிதாவோ கட்டாயம் உன்னுடன் இருப்போம்” என்றான் ராகுல் ஆறுதலாக.
“இதற்கு முன் நீ லண்டன் வந்திருக்கிறாயா மாதவி?” என்று ஆர்வமாகக் கேட்டாள் ரக்ஷிதா.
‘இல்லை’ என்று தலையாட்டிய மாதவி, “நாங்கள் எங்கள் நாட்டின் எல்லைகளாக கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே அரபிக் கடலும் என்று படிப்போம். அதேபோல் நானும் இதுவரை அந்த எல்லைக் கோடுகளைத் தாண்டியதில்லை. இப்போது தான் முதன்முதலில் லண்டன் வந்திருக்கிறேன்” என்று சொல்லிச் சிரித்தாள் மாதவி.
“அண்ணா… முதலில் அண்ணியை லண்டனில் உள்ள பத்து முக்கியமான இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டலாம். என்ன சொல்கிறீர்கள்?” என்றாள் உற்சாகத்துடன்.
“ஹலோ… நான் என்ன இந்த ஊருக்கு டூரிஸ்டாகவா வந்திருக்கிறேன்? இலங்கை அகதிகள் ட்ரூப்பில் இருக்கும் ஒரு பெண்ணை அடையாளம் காட்ட வரச் சொல்லியிருக்கிறீர்கள். அதற்காகத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். மேலும் என்னுடைய விடுமுறை பத்து நாட்கள் மட்டுமே. இதெல்லாம் மனதில் வைத்து என்னை நீங்கள் வழிநடத்துங்கள்” என்றாள்.
“நீ சொல்வது ரொம்ப சரி மாதவி. நீ இங்குள்ள முக்கியமான இடங்களையும் பார்க்க வேண்டும். இலங்கை அகதிகள் எந்த இடங்களில் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்களோ, அந்த இடத்தின் அருகில் உள்ள முக்கியமான இடத்தைப் பார்க்கலாம். இன்று ஓய்வு எடுத்துக் கொள். நீ இங்கிருக்கும் பத்து நாட்களும் நான் உன்னுடன் தான் இருப்பேன். என் கம்பெனி வேலைகளை என்னுடைய இரண்டு மேனேஜர்களிடம் பிரித்துக் கொடுத்துள்ளேன். நானும் ரக்ஷிதாவும் நீ எந்த இடங்களுக்கு போகலாம் என்று லிஸ்ட் போட்டு, நாளை முதல் முக்கியமான இடங்களையும் இலங்கை அகதிகளையும் பார்க்கலாம்” என்றான் ராகுல்.
மதியம் லஞ்ச் முடித்த பிறகு, ரகஷிதா “பிராஜெக்ட் வொர்க் இருப்பதால் போக வேண்டும். இலங்கை மக்கள் நிகழ்ச்சிகளை எங்கே நடத்தப் போகிறார்கள் என்று தெரிந்து கொண்டு, அதற்கேற்ப ஊர் சுற்றலை வைத்துக் கொள்ளலாம்” என்றாள்.
“நீ உன் புரோக்ரமைத் தெரிவிக்கும் வரை நான் என்ன செய்வதாம்?” என மாதவி கேட்க
“அண்ணாவை கலாட்டா செய்து என்ஜாய் பண்ணுங்க அண்ணி” என்றாள் ரகஷிதா குறும்பாக.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)




GIPHY App Key not set. Please check settings