எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
விடியற்காலை ஐந்து மணிக்கு வாசல் பெருக்கி, தண்ணீர் தெளித்து விட்டு கோலம் போட வந்தாள் ஷாலினி. அவள் அம்மாவிற்கு அஜீத், ஷாலினி என்றால் மிகவும் பிடிக்கும். அவர்கள் படத்தைப் பார்த்து விட்டுத்தான் இவளுக்கு அந்த பெயர்.
அப்போது அவர்கள் வீட்டு வெளிச் சுவற்றில் ஒரு பையன் ஏதோ ஒரு போஸ்டரை ஒட்டிக்கொண்டு இருந்தான். அருகில் போய் பார்த்தாள் ஷாலினி. அது பிரபல நடிகர் நடித்த இட்லி கடை என்னும் படத்தின் விளம்பரம்.
ஷாலினிக்கு வந்ததே கோபம்! ஏனெனில் அது தனகோடி இட்லி கடை என்று செம்மண்ணால் எழுதப்பட்ட அவர்கள் வீட்டு இட்லி கடைக்கு பக்கத்தில் ஒட்டப்பட்டிருந்தது.
“டேய் எங்கள் வீட்டுச் சுவரில் ஏண்டா ஒட்டினாய்? “ என்று கத்தினாள் ஷாலினி எரிச்சலுடன்.
“அக்கா, இது தான் அக்கா . எங்கள் படத்தின் விளம்பரத்திற்கு சரியான இடம்.. அதுமட்டுமல்ல, உங்கள் இட்லி கிடைக்கும் சரியான விளம்பரம்“ என்றான் அந்த பையன் ஈ என்று தேங்காய் துருவல் பற்களைக் காட்டி சிரித்துக் கொண்டு.
ஷாலினி ஒரு பள்ளியில் பட்டதாரி டீச்சராக வேலைப் பார்க்கிறாள். அவள் அம்மா தனகோடி, இட்லி கடை வைத்துத்தான் அவர்களை வளர்த்தாள். அம்மாவின் பெயர் தான் தனகோடி. ஆனால் அவள் வாழ்க்கையில் வறுமை கோட்டிற்குக் கீழே தான் இருந்தாள். ஆனால் பெயரில் தான் தனகோடி.
.அப்பா குடித்து குடித்தே இவர்கள் வீட்டைத் தெருக்கோடிக்குக் கொண்டு வந்து விட்டார் . மஞ்சள் காமாலையில் இவளுடைய ஏழாவது வயதில் இறந்தார். அப்போது இவள் தங்கை ஆஷாவிற்கு ஐந்து வயது.
அப்பா இறந்தது உண்மையில் இவர்கள் குடும்பத்தை துளியும் பாதிக்கவில்லை. அப்பாவின் இழப்பு அம்மாவைத் தான் பெரிதும் பாதித்தது. அப்பா கொடுக்காத பணத்தை இட்லி கடை கொடுத்தது. எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அன்பு காட்டுவதற்கும் அம்மாவும், இட்லி கடையும் இருக்கவே அப்பாவை விசேஷ நாட்களில் மட்டும் நினைத்து ஒரு பத்து ரூபாய் மல்லிகைப்பூ வாங்கி அவர் படத்திற்குப் போட்டு விட்டு பிறகு அவரை மறந்து விடுவார்கள்.
அம்மா இட்லி கடை வைத்திருந்ததால், ஷாலினிக்குக் காலை உணவு இரண்டு இட்லி; மத்தியானம் சாப்பாட்டிற்கும் நாலு இட்லி கட்டிக் கொடுத்து விடுவாள். இயற்கையிலேயே இவள் கொஞ்சம் குண்டாக இருப்பாள். ஆனால் நன்றாகப் படிப்பாள். முதல் ரேங்க் மட்டும் யாருக்கும் விட்டுத் தர மாட்டாள். அதனால் பொறாமை கொண்ட அவள் வகுப்புத் தோழிகள் அவளுக்கு ‘குஷ்பு இட்லி’ என்று பட்டப் பெயர் சூட்டினார்கள். ஆனால் அவள் வகுப்பில் படிக்கும் பணக்காரப் பிள்ளைகளுக்கு ஒரு சந்தேகம் .
“நாங்கள் முட்டையும், மீனுமாக சாப்பிடுகிறோம். நீ எல்லா வேளையிலும் இட்லி தான் சாப்பிடுகிறாய். வெறும் கார்போஹைட்ரேட் சாப்பிட்டு உன் மூளை எப்படி இவ்வளவு சூப்பராக வேலை செய்கிறது“ என்று கிண்டல் செய்வார்கள்.
அந்த இட்லி கடை தான் அவர்கள் குடும்பத்திற்கு ஆதாரமாக இருந்தாலும் ஷாலினிக்கு அந்த கடை கொஞ்சமும் பிடிப்பதில்லை. பனை ஓலையில் ஆன கூரை. ஈர விறகு அடுப்பு, எப்போதும் ரயில் எஞ்சின் மாதிரி கரிய புகையை கக்கும். அதனால் எல்லோர் கண்களும் எரியும்.
இட்லி வேகும் குண்டான் கன்னங்கரேல் என்று இருக்கும். அதைத் தொடவே இவளுக்குப் பிடிக்காது. அதைச் சொன்னால் அவள் அம்மா உடனே ‘என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே‘ என்று பாட்டுப் பாடத் தொடங்கி விடுவாள்,
இந்த லட்சணத்தில் அம்மா காலையில் குளித்து விட்டு சாமி படத்திற்கு கொஞ்சம் சாமந்திப்பூவைக் கிள்ளி வைத்து விட்டு, இரண்டு வயதானவர்களுக்கு இலவசமாக நான்கு இட்லி கொடுத்து விட்டுத்தான் பிறகு இட்லி கடை வியாபாரம் தொடங்குவாள்.
அவளோடு படிக்கும் அவள் தோழிகளில் ஒருத்தி, ”எங்கள் அம்மா டீச்சர்” என்பாள். ஒருத்தி “எங்கம்மா ஆபீஸில் வேலை செய்கிறார்” என்பாள்.; ஒருத்தி “டாக்டர்” என்பாள். ஷாலினிக்கு அவள் அம்மா இட்லி கடை வைத்து நடத்துகிறார் என்று சொல்லிக் கொள்வது மிகவும் அவமானமாக இருந்தது.
ஆனால் பொதுவாகவே இட்லி கடை என்பது மினி எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச் ஆபீஸ் மாதிரி என்பது அவள் தங்கை ஆஷாவின் அபிப்பிராயம்.
‘நம் நாட்டில் வறுமையில் இருக்கும், விதவைகளுக்கும், அனாதரவாய் நிற்கும் எல்லாப் பெண்களுக்கும் இட்லி கடைதானே வேலை கொடுக்கிறது. அது ஏன் ஷாலினிக்குப் புரியவில்லை. புரிந்தும் புரியாமல் இருப்பது ஏனோ?‘ அவள் அம்மா வருத்தப்படுவாள்.
ஆஷா எதையும் கண்டு கொள்ள மாட்டாள். அவளுக்கு எப்போதும் அவள் ஆஸ்பத்திரியில் உள்ள வியாதிஸ்தர்களைப் பற்றி மட்டுமே பேசுவாள். அவளுக்கு அவள் தொழில் மேல் ஆர்வம் அதிகம். ஆனால் ஷாலினிக்கும் அவள் ஆசிரியர் தொழில் பிடிக்கும். ஆனால் அதை விட ஆடம்பரமாக வாழும் அவள் தோழிகள் வாழ்க்கை மிகவும் பிடிக்கும்.
அந்த ஆர்வத்தில் இன்னும் கொஞ்சம் பணம் சேர்ந்தபிறகு எப்படியாவது இந்த இட்லி கடைக்கு மூடு விழா நடத்தி விட வேண்டுமென்று தீவிரமாக இருந்தாள்.
ஷாலினி வகுப்பில் ஐஸ்வர்யா என்று பணக்கார மாணவி ஒருத்தி படிக்கிறாள். அவள் அப்பா ஏதோ பிஸினஸ் செய்கிறார் என்று சொல்லுவாள். தினம் ஒரு காரில் வருவாள். பள்ளியில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் எல்லாம் அவரை அழைப்பார்கள்.
அந்தப் பெண் தன்னுடன் படிக்கும் மாணவிகளையும் மதிக்க மாட்டாள். ஆசிரியர்களையும் அலட்சியமாகப் பார்ப்பாள். முக்கியமாக ஷாலினியை இட்லி கடை நடத்துபவர் மகள் என்பதால் மிக அலட்சியமாகப் பார்ப்பாள். ஆனால் ஷாலினி போடும் இண்டர்னல் மார்க்குகளுக்காக அவளிடம் கொஞ்சம் பயத்தோடு இருப்பாள்.
ஒரு வாரம் போல் திடீரென்று அந்த ஐஸ்வர்யா பள்ளிக்கு வரவில்லை. போலீஸ் அவள் தந்தையை கைது செய்து விட்டார்கள் என்றும் ஏதேதோ கசமுசா என்று பேசிக்கொண்டார்கள். அடுத்த நாள் செய்தித்தாளில் தான் அரங்கேறியது அந்தப் பெரிய பணக்காரரின் மகத்துவம். வாழ்க்கையின்
தொடக்கத்தில் பஸ் ஸ்டேண்டில் ஒரு டீக்கடை முதலாளியாக இருந்தவர் எப்படியோ அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து பிஸினஸ் மேன் ஆகிவிட்டார்.
நூறு ரூபாய் நல்ல நோட்டை வாங்கிக் கொண்டு இருநூறு ரூபாய் கள்ள நோட்டை வெளியே புழங்க விடுவதுதான் அந்த வியாபாரம். எந்த உடலுழைப்பும் இல்லாமல் ஊரை ஏய்க்கும் வியாபாரம். நாணயமே இல்லாத ஒரு நாணயமாற்று வியாபாரம். உழைக்காமல் சம்பாதித்த பணம், மணல் வீடு மாதிரி சரிந்தது,
ஷாலினிக்கு ஏனோ அந்தப் பெண் ஐஸ்வர்யாவை பள்ளிக்கு அழைத்து வர வேண்டும் என்று தோன்றியது. ஏதேதோ நினைத்து அவள் படிப்பு வீணாகக் கூடாது என்று எண்ணினாள்.
இந்த கலாட்டா எல்லாம் முடிந்த பிறகு ஷாலினி, ஐஸ்வர்யாவை பள்ளிக்கு அழைத்து வர அவளுடைய தோழிகள் இருவரை அவள் வீட்டிற்கு அனுப்பினாள்.
‘அவள் இனிமேல் பள்ளிக்கு வர மாட்டாள் என்றும், தெரிந்த ஒருவர் மூலம் சினிமாவில் சேர்வதற்கு வெளியே போயிருக்கிறாள்’ என்றும் சொல்லி அனுப்பி விட்டார்கள்.
எல்லாவற்றையும் உட்கார்ந்து அமைதியாக யோசித்துக் கொண்டு இருந்தாள் ஷாலினி. உண்மையான உழைப்பும், நேர்முறையில் வந்த பணம் மட்டுமே ஒருவர் குடும்பத்தையே உயர்த்தும். தகாத முறையில் வந்த பணம் குலத்தையே பாழ் பண்ணி விடும் என்ற உண்மை உணர்ந்தாள்.
அடுத்தநாள் காலை ஷாலினி, அவள் அம்மாவிற்கு முன் எழுந்து, முறையாக கடவுளை வழிபட்டு, இட்லி வியாபாரம் தொடங்கி வைத்தாள். அவள் அம்மாவும், தங்கையும் இவளை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
“அம்மா, யாருடைய ஆதரவும் இல்லாமல் உன் கடினமான உழைப்பால் என்னை ஒரு பட்டதாரி ஆசிரியை ஆக்கினாய். சில ஆடம்பர வாழ்க்கையில் சிக்கியவர்கள் வாழ்க்கையை வாழத் தெரியாமல் தவிக்கிறார்கள். அம்மா, நீ வாழ்க, உன் இட்லி கடை வாழ்க“ என்று வாழ்த்தியவள், கண்ணீர் மல்க தாயை அணைத்துக் கொண்டாள்.
‘குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா‘ என்று டி.எம்,எஸ். பாடிய பாடல் எங்கோ ஒலித்தது.
எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings