எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சுமித்ராவை ஹாலில் உள்ள சோபாவில் உட்கார வைத்து விட்டு, அவளுடைய இரு பிள்ளைகளான அர்ஜுனும், ஆகாஷும் அவள் அருகில் மற்றொரு சோபாவில் உட்கார்ந்து இருந்தார்கள்.
சுமித்ராவின் மகளான சத்யாவும் அங்கே அருகில் உட்கார்ந்து இருந்தாள். வீட்டிற்கு வந்த இரண்டு மருமகள்களும் போலியான ஒரு பௌவ்யத்துடன் ஓரமாக நின்றுக் கொண்டிருந்தனர் . சுமித்ராவின் முகத்தில் கவலை சூழ்ந்திருந்தது.
சுமித்ரா தான் அந்த வீட்டில் தலைவி. பேருக்குத் தான் தலைவி, சுமார் அறுபது வயதிருக்கும். கணவர் உயிருடன் இருந்தவரை, அவர் சொல்படி தான் நடப்பாள். அவர் கண்டிப்பாக இருந்தாலும் நேர்மைக்குக் கட்டுப்பட்டு நடப்பார். அதனால் வாழ்க்கைச் சக்கரம் சுமுகமாக ஓடியது.
அவர் காலத்திற்குப் பின் அர்ஜுனும் ஆகாஷும் பொறுப்பை எடுத்துக் கொண்டார்கள், ஆனால் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பின்னால் அவர்கள் மனைவிகள்தான் அதிகாரம் மேற்கொண்டிருந்தனர். அதனால் சத்யாவின் சின்னச் சின்ன ஆசைகளுக்குக் கூட தடை விதிக்கப்பட்டது.
நல்லவேளையாக சுமித்ராவின் கணவர், எல்லா அசையும் அசையா சொத்துக்களும் அவர் காலத்திற்குப்பின் சுமித்ராவிற்கே சேரவேண்டும் என்றும் சுயசம்பாத்தியம் ஆனதால் இதில் யார் தலையீடும் இருக்கக் கூடாதென்றும் ஒரு உயிலும் எழுதி, அதைப் பதிவும் செய்து வைத்திருந்தார்.
அவருக்கு அவர் பிள்ளைகள், மனைவி சொல்லைத் தட்டாதவர்கள் என்பதும், வெறும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் என்பதும் நன்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான் இப்படி ஒரு உயில். ஆனால் சுமித்ராதான் பெற்ற பாசத்தால் பிள்ளைகளை அதிகம் நம்பினாள்.
இன்னும் சில நாட்களில் வரப்போகும் தீபாவளியை விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்பது பிள்ளைகள், மருமகள்களின் விருப்பம். அதன் மூலம் சுமித்ராவின் பணத்தை சூரையாட வேண்டும் என்பது மருமகள்களின் விருப்பம்.
பிள்ளைகள் சுமாராகத்தான் படித்திருந்ததால் குறைந்த சம்பளத்தில் வேலை செய்துகொண்டு, பணத்திற்கு அம்மாவின் கையை எதிர்பார்த்திருந்தனர். ஆனால் சத்யா, எம்.எஸ்ஸி; எம்.பில். படித்து பக்கத்து ஊரில் ஒரு கல்லூரியில் உதவிப் பேராசிரியையாகப் பணியிலிருந்தாள்.
சத்யா மிகவும் அழகாக இருப்பதும், விதவிதமாக ஆடைகள் அணிவதும் அண்ணிகள் இருவருக்கும் மிகவும் வயிற்றெறிச்சல். அதனால் சத்யாவைப் பற்றி ஏதாவது அவதூறுகளைப் பரப்பி வந்தனர். அதனால் சத்யாவிற்கு வந்த சில நல்ல வரன்கள் கூட தட்டிப் போய் விட்டது.
அந்த விஷயங்களும் அரசல்புரசாலாக சுமித்ராவின் காதில் விழுந்தது. ஆனால் சத்யா எதையும் கண்டு கொள்ளவில்லை. யாராவது, ஏதாவது சொன்னாலும் ‘ ஒருவருடைய தாலியை மற்றவர்கள் பறிக்க முடியாது’ என்று அலட்சியமாக்க் கூறிவிட்டு ஒரு புன்னகையோடு கடந்து சென்று விடுவாள்.
இப்போது கூடியிருக்கும் இந்த கூட்டத்தில் சுமித்ராவின் பணத்தை தீபாவளி செலவைக் காட்டி கொள்ளையடிப்பது மட்டும் நோக்கமல்ல; சத்யாவின் காதலை அழிக்க வேண்டும்; அவளுடைய வருமானம் இந்த குடும்பத்திற்கு மட்டும் பயன்பட வேண்டும் என்பதும் முக்கிய நோக்கமாகும்.
சத்யா அவள் வேலை செய்யும் ஊரில் காவல்துறை உதவி ஆய்வாளர் நிரஞ்சன் என்பவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள். நிரஞ்சன் இவளை மனதாரக் காதலிக்கிறான். அவர்கள் திருமணத்திற்கு தடையாக இருப்பது ஜாதிப் பிரச்சினை மட்டும்தான்.
நிரஞ்சனின் தந்தை ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. ஜாதி வேற்றுமை மட்டும் இல்லை. பொருளாதார வேற்றுமையும் காரணம் காட்டி இவர்கள் திருமணத்தை பலமாக எதிர்த்தனர்.
பெரிய அண்ணி, “அந்த ஜாதி கெட்ட பையனை திருமணம் செய்து கொள்வதற்கு பதிலாக என் தம்பியைத் திருமணம் செய்து கொள்ளலாமே! அவனும்தான் பி.காம்.பட்டதாரி. அவன் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காத்தால், நிலையாக இன்னும் ஒரு வேலையிலும் இல்லை. என் வீட்டிலும் பணம் கொடுத்து இந்த வருடம் எப்படியாவது ஒரு கவரன்மென்ட் வேலை வாங்கிவிடுவோம். என் தம்பியை திருமணம் செய்து கொண்டால் ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் என்ற கெட்டப் பெயர் இருக்காது, மானமும் போகாது“ என்று பொரிந்து தள்ளினாள்.
சின்ன அண்ணி அதற்கு அப்படியே தலையாட்டினாள். அவளுடைய இரண்டு அண்ணன்களும் மனைவி சொல்லே மந்திரம் என்று வழக்கம் போல் தலையாட்டினார்கள்.
சுமித்ராவிற்கு தன் பிள்ளைகள் மேல் அதீத பாசம் இருந்ததென்னவோ உண்மை. அதற்காக ஒரே மகளின் சந்தோஷத்தை பலி கொடுத்து விடுவாளா? அதனால் எல்லருடைய கருத்தும் கேட்டு, மகளின் வாழ்க்கையைத் தீர்மானிக்க முடிவு செய்தாள். அவளுக்கும் நிரஞ்சனின் அப்பா ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி என்பது மனதை உறுத்தியது.
சுமித்ரா முதலில் சத்யாவிடம்தான் பேசினார். “சத்யா இத்திருமணத்தில் நீ உறுதியாக இருக்கிறாயா? நிரஞ்சன் எல்லாவிதத்திலும் உனக்கு ஏற்றவர்தான், ஆனால் அவருடைய அப்பாவின் தொழிலும் ஜாதியும் தான் மிகுந்த சங்கடத்தை கொடுக்கிறது. ஆனால் நீ உன் விருப்பத்தை மறைக்காமல், தைரியமாக எங்களிடம் சொன்னது மிகவும் சந்தோஷம். நம் உறவினர்கள் எந்த ஒரு விசேஷத்திற்கும் உன்னையோ ,நிரஞ்சனையோ மனம் ஒப்பி அழைக்க மாட்டார்கள். அப்போது உன் மனம் வேதனைப் படாதா? நன்றாக யோசனை செய்து சொல்“ என்றாள்.
சில வினாடிகள் அமைதியாக இருந்தாள். பிறகு, “அம்மா நீயும் அந்த காலத்தில் பத்தாம் வகுப்பு பாஸ் செய்திருக்கிறாய். ’ஜாதிகள் இல்லையடி பாப்பா‘ என்ற பாரதியாரின் பாடலை படித்திருக்கிறாய்” என்று அவள் பேசும்போதே, ”அதெல்லாம் ஏட்டுச் சுரைக்காய்“ என்றாள் சின்ன அண்ணி குறுக்கிட்டு.
அவளைப் பேச வேண்டாம் என்று கையமர்த்தினாள் சத்யா. ”என் அம்மாவிடம் நான் பேசுகிறேன். இதில் நீங்கள் யாரும் குறுக்கிடவேண்டாம்” என்றாள் கடுமையாக.
”அம்மா, அவருடைய அப்பா ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி என்பது உனக்கு சங்கடமாக இருக்கிறது என்றாய். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கனும் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி மகன்தான் என்று படித்ததாக ஞாபகம். செய்யும் தொழிலே தெய்வம் அல்லவா! அவர் திருடவில்லை, அடுத்தவர் பணத்தில் வாழவில்லை. எனக்கு அதில் எந்த சங்கடமும் இல்லை“ என்றாள்.
“நீ நன்றாக சம்பாதிக்கிறாய். அப்பாவின் சொத்து வரும் என்ற எண்ணத்தில் தான் அவன் உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான்“ என்று கத்தினான் பெரிய அண்ணன்.
அப்போது யூனிபார்ம் இல்லாமல் சாதாரண கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட்டும், பிராண்டட் நீல நிற டீ ஷர்ட்டிலுமாக ஆறடி உயரத்தில் கம்பீரமாக நுழைந்தான் நிரஞ்சன். அவன் அழகிய கம்பீரமான தோற்றம் எல்லோருக்கும் கொஞ்சம் பிரமையைக் கொடுத்தது.
“இவன் எப்படி திடீரென இங்கு வந்தான்?” என்று சத்யாவின் இரண்டு அண்ணிகளும் மிரண்டனர்.
“நான்தான் நிரஞ்சனை இங்கு வரச் சொன்னேன்“ என்றார் சுமித்ரா நிதானமாக.
“அவருடைய பிளஸ், மைனஸ் பற்றிப் பேசும் போது அவரும் இங்கு இருக்க வேண்டும் அல்லவா? மேலும் நம் வீட்டுப் பெண்ணின் விருப்பத்தை நாம் ஒரேயடியாக ஆராய்ந்து பார்க்காமல் ஆதரிக்கவும் இல்லை :நிராகரிக்கவும் இல்லை“ என்றார்.
“நம் குடும்ப விஷயம் பேசும் போது இடையில் இவர் எதற்கு?“ என்றாள் பெரிய அண்ணி.
“சத்யாவை விரும்புபவர் அவர்தானே, இப்போது நீங்கள் சொல்லுங்கள். அவரை ஏன் சத்யா திருமணம் செய்து கொள்ள முடியாது?” என்று சுமித்ரா அவர்களிடம் கேட்டாள்.
அவர்கள் அவனுடைய ஜாதியைப் பற்றியும், அவனுடைய அப்பாவின் தொழிலைப் பற்றியும் மட்டமாகப் பேசினார்கள். மேலும் அவளுடைய பரம்பரை சொத்துக்களுக்காகவும், அவளுடைய கணிசமான சம்பளத்திற்காகவும் தான் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான் என்று குறை கூறினார்கள்.
“என் ஜாதியையோ, என் அப்பாவின் தொழிலையே நான் மாற்ற முடியாது. அதனால் நான் பெருமைதான் படுகிறேன். உங்கள் பரம்பரை சொத்து எதுவும் எங்களுக்கு வேண்டாம். சத்யாவின் அழகு, அறிவு, தைரியம் இவைகள் தான் என்னைக் கவர்ந்தது. நானும் ஐ.பி.எஸ். படித்திருக்கிறேன். பணத்திற்கு நான் அடிமையில்லை. நாங்கள் இருவரும் மேஜர். பதிவுத் திருமணம் செய்து கொண்டு உங்களுக்குத் தெரிவித்திருக்கலாம். ஆனால் இரண்டு வீட்டினர் ஆசீர்வாதம் எங்களுக்கு வேண்டும்“ என்று நீண்ட உரையாற்றினான் நிரஞ்சன்.
எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்ட சுமித்ரா, “எனக்கு இந்த திருமணத்தில் பூரண சம்மதம். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டாள்.
“நீங்களே சம்மதம் தெரிவித்த பின் நாங்கள் என்ன சொல்வது? பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி” என்று மற்றவர்களும் ஒப்புக் கொண்டனர்.
சத்யாவும் நிரஞ்சனும் ஒருவரையொருவர் பார்த்து லேசாக சிரித்துக் கொண்டனர். சுமித்ரா ஒரு கணிசமான தொகையைத் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் கொடுத்தாள். அதனால் எல்லோரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
அப்போது சுமித்ரா, “நரகாசுரனை கொன்றதால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நம் வீட்டில் ஜாதி என்னும் நரகாசுரனைக் கொன்று ‘எல்லோரும் ஓரினம் ‘ என்று தீபாவளி கொண்டாடுவோம்“ என்றாள் மிகுந்த மகிழ்ச்சியுடன்.
குழந்தைகள் வெடிக்கும் பட்டாஸ் சப்தம் கேட்டு எல்லோர் முகத்திலும் மத்தாப்புவாக சிரிப்பு.
எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings