இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கவிதாவிற்கு அவன் கம்பெனியில் வேலைக்கு சேர்வதற்கு தயக்கமாக இருந்தது. சம்பளம் மிகவும் குறைவாக இருந்து. தனியார் கம்பெனிகளில், கல்லூரியில் இருந்து புதியதாக வெளியில் வந்த எந்த முன் அனுபவமும் இல்லாதவருக்கு அவ்வளவுதான் தருவார்கள்.
கவிதா அவன் கம்பெனியில் வேலையில் சேரத் தயங்குவதற்கு அது மட்டும் காரணம் இல்லை. அவளை நினைத்து அவளுக்கே பயமாக இருந்தது. காரணம், அவள் மனம் இப்போதெல்லாம் அவனையே சுற்றிச் சுற்றி வருகிறது.
ராஜாவின் உருவம், அவளே நினைக்காத நேரத்தில் கூட மனக்கண் முன் தோன்றும். அவன் ஆண்மைக்கே உண்டான கம்பீரமும், உயரமும், சுருண்ட கிராப்பும், பரந்த நெற்றியும் மட்டும், அவள் மனதைக் கொள்ளை கொள்ளவில்லை. அவன், இவளைப் பார்க்கும் பரிவான பார்வையும் இவள் கன்னங்களை சிவக்க வைக்கும்.
ஆஷாவிடமும் நன்றாகத்தான் சிரித்துப் பேசுவான், ஆனால் சில நேரங்களில் இவளைப் பார்க்கும்போது மட்டும் அந்தப் பார்வை உள்ளத்தை ஊடுருவும். காதோரம் ஏதோ ரகசியம் பேசுவதுபோல் தோன்றும். கவிதா, தன் கோளாறு பிடித்த மனம்தான் அப்படி நினைக்கிறதோ என்று எண்ணினாள்.
ஆனால் ஆஷாவே ஒருநாள், “ஏய், பாஸ் உன்னை லவ் பண்ணுகிறார் என்று நினைக்கிறேன்” என்றாள்.
“சீ உளறாதே” என்று அவளை அடக்கினாலும், அடிக்கடி அதையே சொல்லிக் கொண்டிருந்தாள்.
ராஜா போன் செய்து, “வேலையில் வந்து சேரவில்லையா? உங்கள் தோழி வந்து பணியில் சேர்ந்து விட்டார்கள். உங்கள் இடம் நிரப்பப்படாமல் அப்படியேதான் இருக்கிறது” என்றான் ஆவலுடன்.
ராஜா அவளை மனதிற்குள் அடிக்கடி வியந்து கொள்வான். “குடும்பம் சாப்பாட்டுக் கடையினால்தான் பிழைக்கிறது, வாங்கும் ஸ்டைபண்ட் குடும்பத்திற்கு மிகவும் முக்கியம்” என்று அவள் சொல்லும்போது, இவன் கூட மனதிற்குள், ‘என்ன இவள் குடும்பத்தைப் பற்றியெல்லாம் இவ்வளவு ஓப்பனாகப் பேசுகிறாளே, ஸ்டைபண்ட் தொகை அதிகமாக வேண்டும் என்பதற்காக இப்படி திறந்த மனதுடன் பேசுகிறாளோ‘ என்று கூட நினைத்தான்.
ஆனால் அன்று தாத்தா பாட்டியுடன் கோயிலுக்குப் போய்விட்டு வரும்போது மெஸ்ஸில் அவன் பார்த்த காட்சி அவன் உள்ளத்தை உருக்கியது.
வீட்டில் உள்ள எல்லாப் பெண்களும் அதில் வேலை செய்தார்கள். அதுமட்டுமல்லாமல் அவள் அப்பா ஊன்று கோலுடன் காலை முதல் இரவு வரை கல்லாவில் உட்கார்ந்து வேலை செய்யும் காட்சி அவன் உள்ளத்தை உருக்கியது.
அன்று கவிதா உண்மையை மறைத்து இன்று அதை அவன் நேரில் பார்த்தால் மனம் அவளைப்பற்றி என்ன நினைத்திருக்கும்? உண்மையைப் பேசுவதால் பேசுபவர் மதிப்பு நம் மனதில் எப்படி உயர்கிறது என்று அன்று உணர்ந்து கொண்டான்.
அவள் குணம்மட்டும் அவனுக்கு அவள் பால் ஒரு ஈர்ப்பு ஏற்படக் காரணமில்லை. பூர்ணசந்திரன் போல் வெண்ணிறம், அலை அலையான நீண்ட கருங்கூந்தல், அந்தக் கண்கள், அப்ப்பா! கடல் போல் ஆளை இழுக்கும்.
ஒடிந்து விழுவது போல் ஒல்லியான உடல், லிப்ஸ்டிக் போடாமலே சிவந்த இதழ்கள். ராஜா எத்தனையோ அழகான பெண்களைப் பார்த்திருக்கிறான், ஆனால் கவிதாவைப் போல் எந்த செயற்கையான ஒப்பனையும் இல்லாத அழகான பெண்களைப் பார்த்ததில்லை.
கவிதைபோல் அழகாக அறிவாக இருப்பதால் அவளுக்கு அந்தப்பெயர் மிகப் பொருத்தமே. வாழ்க்கைத் துணை என்று ஒருத்தி வந்தால் அவள் கவிதாவைப்போல் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவன், கவிதாவாகவே இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் அவன் மனதில்.
அதனால்தான் அவனுடைய கம்பெனியில் அவள் வந்து சேரவேண்டும் என்று ஆசைப்பட்டான். அதைச் சாக்காக வைத்துத்தான் பத்து நாட்களுக்கு ஒருமுறை வேலையில் வந்து சேரும்படி போன் செய்தான். ஆனால் கவிதாவிற்கோ, இப்படித் தனியார் கம்பெனியில் தன்னை முடக்கிக் கொள்வதில் விருப்பமில்லை. அதனால் தேடித் தேடி என்னென்ன அரசாங்கப்பணிகள் இருக்கிறதோ, அவ்வளவிற்கும் அப்ளை செய்துக் கொண்டிருந்தாள்.
அவள் அப்பா அவருடைய அண்ணாவின் சுயநலத்தால் அவருடைய கம்பெனியில் சேர்ந்து எல்லாவற்றையும் இழந்து விட்டார். எனவே கவிதா, மாநில அரசாங்கம் நடத்தும் சர்வீஸ்கமிஷன், மத்தியஅரசு நடத்தும் யூனியன் ப்ப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆகிய அரசு நடத்தும் பொதுத்தேர்வுகளில் கலந்து கொண்டாள். ராஜாவிற்கு போன்செய்து தன் நிலையைத் தெரியப்படுத்தினாள்.
“கவிதா, நான் உங்களிடம் கொஞ்சம் தனிமையில் பேச வேண்டுமே” என்றான் ராஜா.
“எனக்கு உங்களுடன் பேச ஒன்றுமில்லை சார். நீங்கள் வேலைக்கு ஆர்டர் அனுப்பியதற்கு நான் ஒத்துக்கொண்டு கையெழுத்தும் போடவில்லையே சார்” என்றாள் புரியாமல்.
“நான் ஒன்றும் உங்கள் வேலை சம்பந்தமாக பேசவில்லை, இது ப்யூர்லி பர்சனல். இன்று மாலை நான்கு மணிக்கு, ஒரு பத்து நிமிடம்தான். அதுவும் உங்கள் வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் பார்க்கில். ஓ.கே?” என்றவன், டக்கென்று போனை வைத்து விட்டான்.
இளையராஜாவிடமிருந்து வந்த போனைப் பற்றி தன் தந்தை பாலாஜியிடம் கூறினாள் கவிதா. ஏனென்றால், அவனைப் பற்றி பாலாஜிக்கு நல்ல அபிப்பிராயம் உண்டு.
“அம்மாவிடம் சொல்ல வேண்டாமென்றும், அவளுக்குத் தெரிந்தால் தேவையில்லாமல் திட்டுவாள்” என்றும் கூறினாள்.
“ராஜா, வேலையில் வந்து சேர வேண்டுமென்று வற்புறுத்தினால் சேர்ந்துக் கொள்ளேன் அம்மா. கடையில் அதிக வேலையிலிருந்தும் தப்பிக்கலாம் இல்லையா? நமக்கும் கொஞ்சம் பணம் வந்தால் உதவியாகத் தானே அம்மா இருக்கும்” என்றார் பாலாஜி.
“வேண்டாம் அப்பா! டிப்ளமா படித்த நீங்கள் ஏதாவது அரசாங்க வேலையில் சேர்ந்திருந்தால், உங்களுக்கும் கௌரவமாக இருந்திருக்கும், நம் நிதிநிலமையும் மோசமாக இருந்திருக்காது. நீங்களும் கௌரவமாக பென்ஷன் வாங்கிக் கொண்டு நிம்மதியாக இருந்திருக்கலாம். இப்படி வயதான பிறகு நீங்களும் அம்மாவும் உழைக்க வேண்டியிருந்திருக்காது. நீங்கள் செய்த தவறை நான் செய்ய மாட்டேன். அந்த உண்மையை அவரிடம் விளக்கிக் கூறிவிட்டு இனிமேல் இப்படியெல்லாம் கூப்பிடாதீர்கள் என்று சொல்லிவிட்டு வந்துவிடுகிறேன் அப்பா” என்று கூறிவிட்டுச் சென்றாள்.
ஆனால் பார்க்கில் அவன் பேசியதோ வேறு விதமாக இருந்தது. தன்னுடைய உண்மையான காதலை அவளிடம் உருக்கமாகத் தெரிவித்தான். அவள் சம்மதித்தால் பெற்றோருடன் வந்து திருமணம் பேசி முடிப்பதாகவும், அதனால் அவள் வெளியில் எங்கும் வேலைக்குப் போகக் கூடாதென்றும் கூறினான். அவன் பேச்சில் கவிதாவிற்கு சிரிப்புதான் வந்தது.
“சார் முதலில் உங்கள் பெற்றோர் என்னைப்போல் ஒரு ஏழைப் பெண்ணை மருமகளாக்க விரும்பமாட்டார்கள். ஏழைகள் என்றும் நம்மிடம் வேலை செய்யலாமே தவிர, நம் வீட்டில் நமக்கு சம்மாக ஒரு போதும் இருக்க முடியாது என்பது பணக்காரப் பெற்றோர்கள் எழுதிக் கொண்ட சட்டம். இது பொதுவான ஒரு ரூல்தான், அதோடு போராடுவது என்னுடைய வேலை இல்லை. நான் வேலைக்கு சேர்ந்து பணம் கொடுத்தால்தான் என் தங்கைகள் படித்து அவர்களும் ஒரு கௌரவமான வேலை தேடிக் கொள்ளமுடியும்.
நான் அவர்கள் கஷ்டத்தில் படித்து, அதன் பலனை அவர்களுக்குக் கொடுக்காமல் என் சுயநலத்திற்கு ஒரு பணக்காரப் பையனைக் கல்யாணம் செய்து கொண்டு போய் விட்டால் அவர்கள் கதி என்ன சார்? அதனால் உங்கள் எண்ணத்தை விட்டுவிட்டு உங்கள் வசதியில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். அதுதான் எல்லோருக்கும் நல்லது. குட் பை” என்று கூறிவிட்டுக் கிளம்பினாள்.
சில அடிகள் எடுத்து வைத்தவள் மீண்டும் அவனிடம் திரும்பி, “சார்… என் அப்பா அடிக்கடி சொல்வார், ‘நம் போன்ற வறுமை என்னும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு நசுக்கப்பட்ட மக்கள் மீண்டும் கல்வி என்னும் சிறகினால்தான் உயரப் பறக்க வேண்டும். நாமெல்லாம் பீனிக்ஸ் பறவைகள் அம்மா. நாம் ஏற்கெனவே வறுமை என்னும் தீயினால் நசுக்கப்பட்டவர்கள். இதில் தேவையில்லாத ஆசையும் மனப்போராட்டமும் சேர்ந்தால் நம்மை அந்தத் தீயில் இன்னும் ஆழமாக அழுத்திவிடும். அதனால் தேவையில்லாத உணர்ச்சிகளை உதறிவிட்டு, அறிவு என்னும் சிறகை விரித்து உயரே பறந்து வா’ என்று சொல்வார். அதனால் எனக்கு இப்போது நான் தேர்ந்தெடுக்கும் பாதையே சரியானது என்று நினைக்கிறேன் சார், வருகிறேன்” என்றவள், அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள்.
அவள் பேசிய பேச்சால் திகைத்து நின்றான் ராஜா. அவனிடம் உறுதியாகப் பேசிய கவிதா, தன் வீட்டிற்குள் நுழைந்ததும் உடைந்து விட்டாள். எத்தனை முறை அவனுடைய உயரத்தையும், அழகையும் மனதிற்குள் ரசித்திருப்பாள். எங்கோ பேசிக் கொண்டிருந்தாலும், அவன் குரலை மட்டும் தனியே ரசித்திருப்பாள். அவன் இல்லாமல் வாழ முடியுமா? அவன் இல்லாவிட்டாலும், அவன் நினைவுகளும் இல்லாமல் வாழ்வதற்குத்தான் முடியுமா என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.
அப்பா சொன்ன பீனிக்ஸ் பறவை வரலாறு ஒரு பக்கம். இவள் பார்த்த எத்தனை சினிமாக்கள், டி.வி. நாடகங்கள் பணக்கார வாலிபர்களை நம்பி, வாழ்க்கை முழுவதும் அவர்களுக்காக அர்பணிக்க தயாராக, அவனையே கடவுளாக நினைத்து வாழத் தயாரான நிலையில், “என் வீட்டில் எங்கள் அந்தஸ்திற்கேற்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள், வெரி ஸாரி” என்று டாட்டா காட்டிவிட்டுப் போய் விடுவார்கள்.
சினிமாவோ இல்லை டி.வி. டிராமோ நல்ல உதாரணம் இல்லையென்றாலும், நல்ல கருத்துக்கள் எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம். அதெல்லாம்தான் கவிதா மனதில் ஓடி அவளை இப்படிப் பேசவைத்தது. ஆனால் வீட்டிற்குள் வந்தவுடனே தனியாக உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தாள்.
அழுது சிவந்த மகளின் முகத்தைப் பார்த்த பாலாஜி, ஏதோ அவள் ஏற்க முடியாத ஒன்று இருவரிடையே நடந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டார்.
ஒவ்வொரு இரவும் சாப்பாட்டுக் கடை மூடியபிறகு, வெளியில் அமைதியான அந்தத் தெருவில் கோயில் கோபுரத்தைப் பார்த்தாற்போல் தெருவாசற்படியில் சிறிது நேரம் கவிதா தந்தையுடன் உட்கார்ந்து பேசுவாள்.
இரவு சாப்பிட்டவுடனே போய் படுக்கக் கூடாது என்பதற்காகவும், அவனால் வாக்கிங் போக முடியாது என்பதற்காகவும் தான் அந்த இரவு நேரப் பேச்சு.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும் – வியாழன் தோறும்)


GIPHY App Key not set. Please check settings