in , ,

பீனிக்ஸ் பறவைகள் ❤ (பகுதி 6) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“என்ன சார் அப்படிப் பார்க்கறீங்க? அறிமுகமே இல்லாத ஒரு ஆளிடம் குடும்ப நிலையைச் சொல்கிறேனே என்று  நினைக்கிறீர்களா? இதில் கௌரவம் பார்த்து என்ன செய்யப் போகிறேன்” என்றவள், மென்மையாக சிரித்து விடைபெற்றாள்.

ஆஷா அவளை முறைத்தாள். அந்த முறைப்பிற்கு ‘நம் குடும்ப நிலையையெல்லாம் மூன்றாவது மனிதரிடம் சொல்ல வேண்டுமா’ என்று தான் அர்த்தம்.

ஆனால் கவிதா எதைப்பற்றியும்  சிந்திக்கவில்லை. எப்போதுமே எதையுமே மறைத்துப் பேசவோ, தன் குடும்ப நிலவரத்தைப் பற்றி தேவையானால் வெளியில் சொல்லவும் அஞ்சுவதில்லை.

“வறுமை என்ன சாபமா? குடும்பத்தில் கஷ்டம் என்பது வண்டிச் சக்கரம் போல எல்லோர் வாழ்விலும் வருவது தான்” என்பாள்.

ஆஷா தான் வழி நெடுக திட்டிக்கொண்டே வந்தாள். “தேவையில்லாமல் ஏன் நம் தனிப்பட்ட விஷயங்களை பொது விஷயம் ஆக்க வேண்டும்?” என்றாள்.

இவர்கள் இருவரும் ராஜா மெக்கானிகல் ஒர்க்‌ஷாப்பிற்குப் போய் இளையராஜாவை சந்தித்துப் பேசியதைப் பற்றிப் புரபசரிடம் கூறினார்கள். அவருக்கும் அது சந்தோஷம்.

கும்பகோணம் என்றாலே கோயில்கள்தான். சிறிய கோயில் என்றோ கும்பேஸ்வரர் கோயில், சாரங்கபாணி கோயில் போன்ற பெரிய கோயில் என்றோ அங்குள்ள மக்களிடம் வித்தியாசம் இருப்பதில்லை. தினம் ஏதாவது விசேஷம் தான். தினமும் கூட்டம்தான். தினம் ஏதாவது ஒரு பண்டிகை தான்.

அன்றும் கவிதா வீட்டருகில் உள்ள பிள்ளையார் கோயிலில் சங்கடஹரசதுர்த்தி விசேஷ பூஜை. சங்கடஹரசதுர்த்தி சிறப்புப் பாடல்கள் மைக்கில் பலமாக ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் நாதஸ்வரமும் தவிலும் காதைப் பிளந்தன.

கோயிலிற்கு கூட்டம் அதிகமாக வருவதும் போவதுமாக இருப்பதால் பாலாஜி நடத்தும் லட்சுமி சாப்பாட்டுக் கடை மெஸ்ஸிற்கும் வரும் மக்கள் கூட்டமும் அதிகமாகவே இருந்தது. முக்கியமாக வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்த மெஸ் சாப்பாடு மட்டும் தான்  உடம்பிற்கு ஒத்துக் கொள்கிறது என்று அவர்களைச் சேர்ந்த பெரியவர்களும் மனதில் எண்ணம் கொண்டுள்ளதால், கூட்டம் எப்போதும் குறையாமல் இருக்கும்.

சில மாதங்களுக்கு முன்பு, டிபன் சாப்பாடு எல்லாம் பார்ஸலில் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் ஆபீஸ்  பள்ளிக்கூடம் என்று போகிறவர்கள், போகும் வழியில் சூடாக ருசியாக உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்ற வேண்டுகோளிற்காக, இவர்கள் வீட்டிற்குள்ளாகவே நீண்ட மர பெஞ்சுகளும் டேபுள்களும் போட்டு, ஒரு சின்ன ஹோட்டல் போல் அலங்கரித்து விட்டனர்.

சங்கடஹரசதுர்த்தி பூஜை செய்வதற்காக வந்த ஒரு சிறிய மாருதிகார் அன்று இவர்கள் லட்சுமி சாப்பாட்டுக் கடை வாசலில் வந்து நின்றது. கூட்டம் சமாளிக்க முடியாமல் போனதால், அம்பிகா மற்ற இரண்டு பணியாளர்களுடன் சேர்ந்து கவிதாவும் சாதனாவும் உதவி செய்துக் கொண்டிருந்தனர். காரிலிருந்து இறங்கிய வாலிபன் தன்னுடன் வந்த பெரியவர்களை மிக கவனமாக படியேற்றி உள்ளே அழைத்து வந்தான்.

காரில் வந்தவன் கவிதாவைப் பார்த்து, “ஹலோ கவிதா மேடம்” என்று அழைக்கவும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த கவிதா ஆச்சர்யமடைந்தாள்.

வந்தவன் வேறு யாருமில்லை, அவளை இன்டர்னாக ஏற்றுக் கொண்ட ராஜா மெக்கானிக்கல் ஒர்க்‌ஷாப் ஓனர் இளையராஜாதான்.

“ஹலோ சார், வாங்க உட்காருங்கள்” என்றவள் தந்தையுடன் அவனை அறிமுகப்படுத்தினாள்.

“இவர்கள் என் தாத்தா பாட்டி, இன்று கோயில் விசேஷத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தார்கள். மிகவும் வயதாகி விட்டது, களைத்து விட்டார்கள். அதனால் ஒரு பில்டர் காபி வாங்கிக் கொடுத்து விட்டுப் போகலாமென்று அழைத்து வந்தேன்” என்றான் இளையராஜா. பாலாஜி அம்பிகா இருவரும் சந்தோஷத்துடன் உபசரித்தனர்.

“வெறுமனே காபி சாப்பிடாமல், கொஞ்சம் பொங்கலும் ஒரே ஒரு மெதுவடையும் சாப்பிட்டு விட்டு காபி சாப்பிட்டால் நிறைவாக இருக்கும்” என்ற அம்பிகா, பொங்கல் தனியாகவும் சட்னி சாம்பார் தனியாகவும் கொண்டு வந்து வைத்தாள்.

பொங்கல் நெய் மணக்க நிறைய முந்திரியுடன் பார்க்கவே மிக அழகாக இருந்தது. பக்கத்தில் கண்ணைப் பறிக்கும் சூடான மெது வடை வேறு.

கவிதா வேறு சுடச்சுட மல்லிப்பூ மாதிரி இரண்டு இட்லி வேறு கொண்டு வந்து வைத்தாள். “ஐயோ, இது வேறு எதற்கு?” என்றாள் பாட்டி.

“இட்லியென்றால் ஆவியில் வெந்தது, உடம்பிற்கு நல்லது. பொங்கல் நெய் சேர்ந்தது, வயதானவர்களுக்கு நெய் ஒத்துக் கொள்ளவில்லையென்றால் இட்லி சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று அப்பாதான் கொடுத்தனுப்பினார்” என்றாள் கவிதா.

“ஆமாம் பாட்டி, இட்லி சாப்பிடுங்கள் பொங்கல் வேண்டாம்” என்றான் இளையராஜா.

“டேய், வீட்டில் தினமும் அதே இட்லியும் சாம்பாரும் இல்லையென்றால் கோதுமை உப்புமா, இல்லாவிட்டால் கஞ்சி. இன்றைக்காவது வாய்க்கு ருசியாய் இந்த நெய் மணம் கமகமக்க இருக்கும் பொங்கலை சாப்பிட்டு விட்டு பிறகு போகலாம்” என்ற பாட்டி, யார் அனுமதிக்காகவும் காத்திருக்காமல் சாப்பிடத் தொடங்கி விட்டாள். அவளைப் பார்த்து சிரித்தபடியே தாத்தாவும் சாப்பிட்டார்.

“நீங்களும் ஏதாவது சாப்பிடுங்கள் சார்” என்றாள் கவிதா.

“நோ நோ, எனக்கு வெறும் காபி மட்டும் போதும்” என்றவன், பணம் கட்ட பாலாஜியிடம் சென்றான். இவ்வளவு நேரம் அவன் பாலாஜியை சரியாக கவனிக்கவில்லை.

அப்போது தான் அவன் இருக்கைக்கு அருகில் ஒரு ஊன்றுகோல் இருப்பதைப் பார்த்தான் மனம், ‘திக்’கென்றது. அதனால்தான் கவிதா அன்று முதன் முதலாக அவனுடைய ஒர்க்‌ஷாப்பிற்கு வருகை தந்தபோது குடும்பத்தின் நிலை பற்றியும், தனக்கு ஸ்டைபண்ட் மிகவும் முக்கியம் என்றும் கூறினாளோ என்று நினைத்துக் கொண்டான். மனம் திறந்து பேசிய அவளிடம் மதிப்பும் கூடியது.

பாலாஜி பணம் வாங்க மறுத்தான், ஆனால் இவன் விடவில்லை. தொந்தரவு செய்து கொடுத்துக் கொண்டிருந்தான். அவர்கள் விவாதத்தை தொலைவில் இருந்து பார்த்த அம்பிகா, அவர்கள் அருகில் சென்றாள்.

“சார், இன்று தானே முதன் முதலில் எங்கள் ‘மெஸ்’ஸிற்கு வருகிறீர்கள். இதுவரை காரில் வரும் யாரும் எங்கள் மெஸ்ஸிற்கு வந்ததில்லை. இது ஒரு நடுத்தர மக்களின் சாப்பாட்டுக் கடையே. மேலும் இவ்வளவு வயதான தாத்தா பாட்டியை அழைத்து வந்து சாப்பிட வைத்திருக்கிறீர்கள். அது எங்கள் கடைக்குக் கிடைக்கும் ஒரு சான்றிதழ் என்றுதான் நினைக்கிறோம், அதனால் இந்தப் பணம் வேண்டாமே” என்றாள் அம்பிகா.

“இல்லை ஆன்ட்டி, நீங்கள் இப்படித் தேவையில்லாத சென்டிமென்ட் எல்லாம் பார்த்தால் கடை நடத்துவது கஷ்டம். நீங்கள் இந்த சாப்பாட்டிற்கானப் பணத்தை பெற்றுக் கொண்டால் தான் அடுத்த முறை எங்களால் இங்கு வந்த சாப்பிட முடியும்” என்று வாதிட்டு பணம் செலுத்திவிட்டு மீண்டும் தன் பாட்டியின் அருகில் வந்தான். அவன் தாத்தா கவிதாவிடமும், சாதனாவிடமும் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தார்.

“கவிதா, தாத்தா என்ன சொல்கிறார்?” என்று சிரித்துக் கொண்டு கேட்டான் இளையராஜா.

“நாங்கள் ஏன் படிக்காமல் மெஸ்ஸில் வந்து வேலை செய்கிறோம் என்று கேட்டார். நாங்கள் முழு நேரமும் இங்கு வேலை செய்வதில்லை. கூட்டம் அதிகமாக இருக்கும் போது மட்டும் இங்கு வந்து இவர்களுக்கு உதவி செய்கிறோம் என்று சொன்னேன்” என்றாள் அவளும் சிரித்துக் கொண்டு.

“இந்தக் குழந்தைகள் இருவரும் நல்ல புத்திசாலிகள். பெரியவள் இஞ்ஜினீயரிங் படிக்கிறாளாம், சின்ன பெண் ஆங்கில இலக்கியம் படிக்கிறாளாம். ஷெல்லியையும் கீட்ஸையும் பற்றி அவ்வளவு அருமையாகப் பேசுகிறாள்” என்று மனமாரப் புகழ்ந்தார்.

இளையராஜா ஒன்றும் சொல்லாமல் கவிதாவை ஆழமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு லேசாக சிரித்தான். அந்தப் பார்வையும் சிரிப்பும் கவிதாவை எங்கோ ஆழ் கடலில்  மூச்சுத் திணற அடித்துச் செல்வதைப்போல் உணர்ந்தாள். எதேச்சையாக அங்கே வந்த அகிலாவும் அதைப் பார்த்தாள்.

’என்ன பார்வை உந்தன் பார்வை‘ என்று சீட்டி அடித்துப் பாடிக்கொண்டு வந்து அருகில் நின்றாள. ராஜா திடுக்கிட்டு அவளைப் பார்த்தான்.

“இவள் என் கடைசி தங்கை அகிலா” என்று அறிமுகப் படுத்தினாள் கவிதா.

“ஏய் ரௌடி, விசிலடித்துப் பாடுகிறாய்?” என்று கண்டித்தாள் சாதனா.

“ஆமாம், ஏதோ மனதில் தோன்றியது பாடினேன்” என்றாள் இளையராஜாவைப் பார்த்து கண்ணைச் சிமிட்டியபடி.

“கொழுப்புடி உனக்கு” சாதனா முனகினாள்.

வயதானவர்களைக் கையைப் பிடித்து மெதுவாக அழைத்துச் சென்றான் ராஜா. ஆம், அவன் வீட்டில் இளையராஜாவை அப்படித்தான் அழைப்பார்கள். பெரியவன் பாரதிராஜாவை ‘பாரதி‘ என்று அழைப்பார்கள். இனி நாமும் அவ்வாறே அழைக்கலாம்.

அவர்களுடன் காரில் ஏறும் போது வாழையிலையில் கட்டி ஒரு பொட்டலம் மாதிரி ஒன்றை பாட்டியிடம்  கொடுத்தாள் அம்பிகா. அவளும் பத்திரமாக வாங்கி வைத்துக் கொண்டாள்.

“ஐயோ, என்னங்க இது?” என்றான் ராஜா.

“ஒன்றுமில்லை சார், மெதுவடை தான் ஒரு நான்கு கட்டி கொடுத்திருக்கிறேன். வேண்டாமென்று சொல்லாதீர்கள் ப்ளீஸ்” என்று சொல்லிவிட்டு கடைக்கு திரும்பினாள்.

மெஸ்ஸிலிருந்து அவர்கள் போனபிறகு கவிதா அகிலாவிடம், “ஏண்டி விசிலடித்து அந்தப் பாட்டைப் பாடினாய்?” என்றாள் மெதுவாக.

“ஆமாம், அந்தப் பார்வை ‘அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்’ என்ற காட்சியைத்தான் கண் முன்னே விரித்தது, அதனால் தான் பாடினேன்” என்றாள் குறும்புடன்.

அவள் தலையில் ‘நறுக்’கென்று குட்டி, “இப்போது என்ன தெரிகிறது பார்” என்றாள் கவிதா. சாதனா கலகலவென்று சிரிக்க, “வேலை செய்யுமிடத்தில் என்ன சிரிப்பும் விளையாட்டும்” என்று பாட்டியிடம் டோஸ் வாங்கினாள்.

அதிலிருந்து ராஜாவின் தாத்தாவும் பாட்டியும் முக்கியமான நாட்களில் அவனை கார் எடுக்க சொல்லி கோயிலுக்கு வருவதும் தவறுவதில்லை. கவிதாவின் சாப்பாட்டுக் கடைக்கும் வருவது தவறுவதில்லை.

இது ராஜாவிற்கும் கவிதாவிற்கும் நெருங்கிப் பழக ஒரு சந்தர்ப்பமானது. ஆனால் இருவருமே அந்த சந்தர்ப்பத்தை தவறாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. முக்கியமாக கவிதா தன் குடும்ப நிலை உணர்ந்து மிகவும் எச்சரிக்கையுடனே பழகினாள்.

கவிதா இன்டர்னாக வேலையும் செய்து கொண்டு இறுதி ஆண்டு தேர்வும் எழுதி விட்டாள். சாதனாவும் பி.ஜி. கோர்ஸில் சேர்ந்து விட்டாள். வாயாடி அகிலாவோ அரும்பாடு பட்டு பி.ஏ. பொருளாதாரத்தில் சேர்ந்து விட்டாள். அவள் வாங்கிய மதிப்பெண்ணிற்கு அந்த கோர்ஸ் கிடைத்ததே அதிர்ஷ்டம் என்று தான் சொன்னார்கள்.

கவிதா இறுதி ஆண்டுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களோடு முதல் வகுப்பில் தேறி, நல்ல வேலைக்காக ஒவ்வொரு ‘ஆப்’பாக ஆராய்ந்துக் கொண்டிருந்தாள். அவள் இன்டர்னாக பணிபுரிந்த ‘ராஜா மெக்கானிக்கல் ஒர்க் ஷாப்பிலும் அவளுக்கும் ஆஷாவிற்கும் இன்டர்வியூ கடிதம் வந்தது. ஆஷா மட்டும் உடனே வேலையில் சேர்ந்து விட்டாள்.

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும் – வியாழன் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பனி விழும் மது வனம்❤️ (அத்தியாயம் 6) – பவானி உமாசங்கர்