in , ,

பீனிக்ஸ் பறவைகள் ❤ (பகுதி 5) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“கும்பகோணத்தில் பாணாதுறையில் தான் இருக்கிறது என்று விசாரித்ததில் தெரிந்தது. ஏன், போய் பார்த்து விட்டு வரலாமா?”

“கட்டாயம் போய் பார்க்க வேண்டும். நாம் வேலை செய்யப் போகும் கம்பெனி என்ன நிலமையில் இருக்கிறது? நமக்கு அதன் மூலம் ஸ்டைபண்ட் மாதம் தவறாமல் வருமா? கம்பெனியின்  நிதிநிலமை பற்றித் தெரிந்து கொள்வோம். நம் ப்ரபஸரிடம் சொல்லிவிட்டே போய் வரலாம்” என்றாள் கவிதா.

“ப்ரபஸர் நம்மைத் தப்பாக நினைத்தால். ’ஐயோ, பாவம் என்று ஒரு பிராஜக்ட் பிடித்துக் கொடுத்தால் இவர்கள் தானம் கொடுத்த மாட்டையே பல்லைப் பிடுங்கப் பார்க்கிறார்களே‘ என்று நினைத்தால்” என்றாள் ஆஷா பயத்தோடு.

“அப்படி நினைக்க மாட்டார். நம்ம ஸ்டூடண்ட்ஸ் படு ஸ்மார்ட் என்றுதான் நினைப்பார். இன்று அவரிடம் சொல்லிவிட்டு நாளை நாம் அந்த கம்பெனிக்கு விசிட் செய்யலாம். எதையும் மூடி மறைத்து செய்ய முயற்சிக்காதே. திறந்த மனதோடு எதையும் செய்தால் நம் மேல் இருக்கும் நம்பிக்கை உறுதியாகும். இந்த பிராஜெக்டில் மட்டும் இல்லை, எல்லா இடங்களிலும் அப்படி இருப்பது நல்லது. இது எனக்கு என் அம்மா சொன்ன பாடம்” என்று முடித்தாள் கவிதா.

“ஆகட்டும் குருவே! இனி நானும் இதையே கடைபிடிக்கிறேன். ரொம்ப ஓப்பன் மைண்டடாக இருப்பதற்கு யாராவது ரெண்டு போட்டால் அதையும் அப்படியே உனக்கும் தருகிறேன்” என்றாள் ஆஷா.

அடுத்த நாளே ப்ரபஸரின் அனுமதியோடு அந்த ராஜா மெக்கானிகல் ஒர்க்‌ஷாப்பிற்கு தோழிகள் இருவரும் அவர்களுக்கு வந்த ‘அக்ஸப்டன்ஸ்‘ கடித்த்தோடு சென்றனர்.

ஆஸ்பெஸ்டாஸ் கூரை. பெரிய இரைச்சலோடு கூடிய சில மெஷின்கள் கன்வேயர் பெல்ட்டுடன் ஓடிக் கொண்டிருந்தது. நுழையும் போது திறந்த வெளிதான். பழைய கார்கள் சில ரிப்பேருக்காகக் காத்திருந்தன. சில கார்களில் உரிமையாளரோ இல்லை டிரைவரோ தெரியவில்லை அவர்களும் காத்திருந்தனர். சில ஸ்கூட்டர்களும் நின்றிருந்தன.

எங்கு பார்த்தாலும் சிறியதும் பெரியதுமாக ஆணிகளும் சிதறிக் கிடந்தன. வெறும் காலோடு செருப்பில்லாமல் நடந்தால் காலைப் பதம் பார்த்து விடும். இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு சென்ற கவிதாவும் ஆஷாவும் சில கார்களுக்கடியில் தொழிலாளர்கள் படுத்துக் கொண்டு காலை மட்டும் நீட்டிக் கொண்டு ஏதோ ரிப்பேர் செய்வதை  கவனிக்கவில்லை.

மிகவும் சுவராஸ்யமாக பேசிக் கொண்டு சென்ற  கவிதா ஒருதொழிலாளியின் கால் இடறி கீழே விழப் போனாள். அப்போது உள்ளேயிருந்து வேகமாக வந்த ஒரு இருபத்தெட்டு வயது மதிக்கத்தக்க வாலிபன் அவளைத் தாங்கிப் பிடித்துத் தூக்கி நிறுத்தினான். அப்படியும் அவள் முழங்காலில் ஏதோ அடிபட்டிருக்கும் போலிருக்கிறது.

“ஹலோ, யார் நீங்கள்? சொல்லாமல் கொள்ளாமல் ஒர்க்‌ஷாப்பிற்குள் வருகிறீர்கள்! இதென்ன பீச்சா? இங்கே எங்கு பார்த்தாலும் துருப்பிடித்த தகடுகளும், ஆணிகளும் கிடக்கும். குத்தினால் செப்டிக்தான் ஆகும். நீங்கள் என்ன ஜாலியாக கையை வீசிக்கொண்டு, கண்ணை ஆகாயத்தில் வைத்துக் கொண்டு வருகிறீர்கள். உங்கள் வண்டி ஏதாவது இங்கே ரிப்பேருக்கு கொடுத்திருக்கிறீர்களா?” என்றான்.

கவிதாவோ நடராஜர் போஸில் நின்று கொண்டு, ஒரு கையால் முழங்காலைத் தேய்த்துக் கொண்டு அவனை உறுத்துப் பார்த்தாள். காக்கிச் சட்டை காக்கி பேண்ட், ஆயிலும் கிரீஸுமாக இருந்தது. இங்கு வேலை செய்யும் மெக்கானிக் போலும் என்று நினைத்துக் கொண்டாள்.

“எங்கள் வண்டியெல்லாம் எதுவும் இங்கு இல்லை. நாங்கள் இஞ்ஜினீயரிங் ஸ்டூடண்ட். ஒரு பிராஜக்ட் ஒர்க் எங்களுக்கு இந்த கம்பெனியிலிருந்து கிடைத்திருக்கிறது. அதற்காக இந்த கம்பெனி ஓனர்ஸை பார்க்க வேண்டும்” கவிதா என்றாள்.

“உங்கள் ஒர்க்‌ஷாப்பை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் எங்களுக்கு புத்தி சொல்கிறாயே ! உங்கள் முதலாளியைக் காட்டு, அந்த ஆளிடம் நாங்கள் பேசிக் கொள்கிறோம்” என்றாள் ஆஷா அதிகாரமாக.

அந்த வாலிபன் அவளை முறைத்தபடி ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த அந்த ஹாலிற்கு அழைத்துச் சென்று அங்கிருந்த இரண்டு ஸ்டீல் நாற்காலிகளில் உட்காரச் சொன்னான். அங்கிருந்த சீலிங் போனை ஓடவிட்டான்.

“கொஞ்ச நேரம் இருங்கள், எங்க பாஸ் வருவார்” என்றவன் அங்கிருந்த ஒரு அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான்.

“ஏய் கவிதா என்னடி இது, ஏதோ மர்ம மாளிகை போல் இருக்கிறது” என்று மெதுவாகக் காதைக் கடித்தாள் ஆஷா.

அப்போது நான்கு காக்கி யூனிபார்ம் போட்ட தொழிலாளிகள் அங்கே வந்து அலமாரியிலிருந்து ஒரு ரெஜிஸ்டரை எடுத்து அதில் கையெழுத்துப் போட்டு விட்டு திரும்பினார்கள்.

“மணி பன்னிரண்டு ஆகிறது. இந்த நேரத்தில் வேலைக்கு வந்து கையெழுத்து போடுகிறீர்களே. இவ்வளவு லேட்டாக வந்தால் என்ன வேலை நடக்கும்? கம்பெனியே டுபாக்கூர் கம்பெனியாக இருக்கும் போல் இருக்கிறதே?” என்று தேவையில்லாமல் ஆஷா அவர்கள் விஷயத்தில் தலையிட்டாள்.

அவர்கள், “அம்மாடி! கம்பெனி நல்ல கம்பெனி தான் . நாங்கள் டீ சாப்பிட்டு வருகிறோம். டீ சாப்பிடப் போகும் போதும் கையெழுத்துப் போட வேண்டும், டீ சாப்பிட்டு வேலை தொடங்கும் போதும் கையெழுத்துப் போட வேண்டும். அநாவசியமாக நேரம் கடத்துவது எங்கள் ஐயாவிற்குப் பிடிக்காது. பேசுவதற்கு முன் யோசித்துப் பேசுங்கள்” என்று இவளுக்கு புத்தி சொல்லிவிட்டுப் போனார்கள்.

“அநாவசியமா ஏண்டி வம்பு பேசி வாங்கிக் கட்டிக் கொள்ளுகிறாய். வெளியில் வந்தால் கொஞ்சம் வாயை மூடிக்கொள்” என்றாள் கவிதா எரிச்சலுடன்.

அதே நேரத்தில் எதிரில் இருந்த அறையின்  கதவைத் திறந்துக் கொண்டு ஒரு வாலிபன் வந்தான். அவன் ஜீன்ஸும் அழகான டீ ஷர்ட்டுமாக வந்தான். அவனைப் பார்த்தவுடன் கவிதா திகைத்து எழுந்து நின்றாள். ஏனென்றால் சற்று முன்பு அவள் கீழே விழும்போது தாங்கிப் பிடித்தானே ஒருத்தன் எண்ணெய் கரை படிந்த காக்கி யூனிபார்மில், அவனேதான் இவன்.

“உட்காருங்கள் மேடம், சற்று முன்பு தான்  உங்கள் ப்ரபொசர் என்னிடம் பேசினார். உங்கள் இருவரில் நீங்கள் கவிதாவா, ஆஷாவா? நான் இளையராஜா” என்றான்.

“வணக்கம் சார், நான் கவிதா” என்றவள் தங்களுக்கு வந்த இன்டர்ன்ஷிப் கடிதத்தை அவனிடம் காட்டினாள்.

“சொல்லுங்கள், உங்களுக்கு எங்கள் கம்பெனியைப் பற்றி என்ன தெரியவேண்டும்? எங்கள் பைனான்ஸ் பொசிஷன் தெரிய வேண்டுமா? உங்கள் ஸ்டைபண்ட் ஒழுங்காகக் கிடைக்குமா என்ற சந்தேகமா?” என்றான்.

“இல்லை, நாங்கள் இன்டர்னாகப் பணியாற்றும் ஒர்க்‌ஷாப் எப்படி இருக்கிறதென்று பார்க்க வேண்டுமென்று ஒரு ஆசை. அதுவுமல்லாமல் இதுவரை எந்த ஒர்கஷாப்பும் பார்த்ததில்லை, அதுதான் ஒரு ஆவல்” என்றாள் கவிதா.

“முன்னே பின்னே செத்தால் தானே சுடுகாடு தெரியும்” என்று ஆஷா அப்போது லூஸ் தனமாக உளறினாள். கவிதா அவள் காலை சட்டென்று மிதித்தாள். இளையராஜாவோ அவளை முறைத்தான்.

“உங்க தோழி ஏன் அபசகுனமாகப் பேசுகிறார்?” என்றான் கோபமாக.

“ஸாரி சார், அவள் பேசத் தெரியாமல் பேசுகிறாள். இதுவரை எந்த மெக்கானிக்கல் ஒர்க்‌ஷாப்பும் பார்த்ததில்லை என்று சொல்ல வருகிறாள்” என்ற கவிதா, பேசும் போதே ஏதோ வலிப்பது போல் முகத்தை சுளித்தாள். தன் முழங்காலை வேறு தேய்த்துக் கொண்டாள்.

“கவிதா, உங்களுக்கு காலில் ஏதாவது அடி பட்டிருக்கிறதா? இந்த அறைக்குள் போய் ‘செக்’ செய்து கொள்ளுங்கள். துருப் பிடித்த ஆணியாக இருந்தால் கஷ்டம். அங்கேயே முதல் உதவிப் பெட்டியும் இருக்கிறது, உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள். ப்ளீஸ், தயங்காதீர்கள்” என்றான் வற்புறுத்தலாக.

ஆஷாவையும் அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்று தன் காலை சோதித்தாள் கவிதா. ஒரு சிறிய ஆணி முழங்காலில் குத்திக் கொண்டு நின்றது, அதிலிருந்து லேசாக ரத்தம் கசிந்திருந்தது. கவிதா அதைப் பார்த்து பயந்து விட்டாள். ஆஷாதான் அந்த ஆணியை வெடுக்கென்று பிடுங்கி எடுத்தாள்.

அருகில் இருந்த அலமாரியில் இருந்த பர்ஸ்ட் எய்ட் பாக்சை திறந்து பஞ்சினால் காயத்தை சுத்தப் படுத்தி டிங்சர் பென்சாயின் என்று எழுதியிருந்த பாட்டிலில் இருந்த மருந்தையும் காலில் மெதுவாகத் தேய்த்தாள். மருந்தின் எரிச்சலால் லேசாக முனகினாள் கவிதா.

அங்கேயே ஒரு ஐந்து நிமிடம் இருந்து விட்டு, கவிதாவை கைத்தாங்கலாக அழைத்து வந்தாள் ஆஷா. அந்த சிறிய ஆணியையும் மறக்காமல் எடுத்து வந்தாள் ஆஷா.

“கீழே விழுந்ததில் அடிபட்டிருக்கிறதா? டாக்டரிடம் போகலாமா” என்றான் பதட்டத்துடன் இளையராஜா.

“அடியெல்லாம் இல்லை சார். ஒரு ஆணி குத்தியிருந்தது, அதை ஆஷா எடுத்து விட்டாள். நான் எங்கள் வீட்டருகில் உள்ள டாக்டரிடம் நாளை இஞ்ஜெக்‌ஷன் போட்டுக் கொள்கிறேன் சார். இப்போது காலில் வலி இல்லை” என்றாள்.

“இன்றைக்கே போட்டுக் கொள்ளுங்கள். நாளை என்று ஒத்தி வைக்கவேண்டாம்” என்றான் இளையராஜா அவளை ஆதரவாகப் பார்த்துக் கொண்டு. அவன் குரலில் இருந்த அக்கறையும் கனிவும் அவளின் கன்னங்களை லேசாக சிவக்க வைத்தன.

“இந்த ஆணிதான் ஸார். நீங்கள் உங்கள் ஒர்க்‌ஷாப்பை கொஞ்சம் சுத்தமாக வைத்துக் கொள்ளலாமில்லையா? உங்களால்தான் நாங்கள் டாக்டரிடம் போக வேண்டியிருக்கிறது” என்றாள் ஆஷா அந்த சின்ன ஆணியைக் காட்டியபடி, குறை கூறும் குரலில்.

“ஹலோ! ஒர்க்ஷாப் என்றால் இப்படித்தான் இருக்கும், நீங்கள் தான் ஜாக்கிரதையாக வர வேண்டும். எங்கோ ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு பீச்சில் நடப்பது போல் நடந்தால் என்ன செய்வது?” என்றான் இளையராஜா.

மேலும் சிறிது நேரம் பேசி விட்டு அவனிடமிருந்து விடை பெற்றனர்.

“எங்கள் கம்பெனி மூலம் புதிய கார்களோ இல்லை நல்ல கண்டிஷனில் இருக்கும் பழைய கார்களோ கூட நாங்கள் கொஞ்சம் விலை குறைவாக வாங்குவதற்கு  உதவ முடியும்” என்று ஒரு அடிஷனல் தகவலும் கூறினான்.

இருவரும் சிரித்துக் கொண்டனர்.

“ஏன் சிரிக்கிறீர்கள்?” என இளையராஜா கேட்க

“கார் வாங்கும் வசதியெல்லாம் இல்லை சார். நாங்களே சாப்பாட்டுக் கடை வைத்துத்தான் பிழைத்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள கொடுக்கும் ஸ்டைபண்ட் எனக்கு மிகவும் தேவையானது. நான் என் குடும்ப நிலையைச் சொன்னதால் உங்களிடம் அனுதாபம் தேடுகிறேன் என்று நினைக்க வேண்டாம். என் குடும்ப நிலை தான் அந்த மாதிரி, ஆனால் ஆஷாவிற்கு நல்ல வசதியான குடும்பம்தான் சார். நாங்கள் இங்கு வந்ததே உங்கள் கம்பெனியின் பைனான்ஸ் பொஸிஷன் தெரிந்து கொள்ளத்தான். மாதம் தவறாமல் எங்களுக்கு ஸ்டைபண்ட் கொடுக்க முடியுமா என்று தெரிந்து கொள்ளத்தான். மற்றபடி பிராஜக்ட் மேல் உள்ள ஆர்வத்தாலோ அல்லது படிப்பின் மீது உள்ள அக்கறையாலோ வரவில்லை சார்” என நீண்ட உரையுடன் முடித்தாள் கவிதா.

அவன் அவளை ஆச்சர்யத்துடன் வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும் – வியாழன் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பீனிக்ஸ் பறவைகள் ❤ (பகுதி 4) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    மறைந்த ஓவியத்தின் மர்மம் (சிறுகதை) – தெனாலி ராமன்