in , ,

பீனிக்ஸ் பறவைகள் ❤ (பகுதி 2) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

பாலாஜி அன்று சீக்கிரமே வீட்டிற்குச் சென்றான். அம்பிகாவிடம் தன் நிலமையை எடுத்துச் சொன்னான். தன்னுடைய சம்பளம், வாடகை இல்லாத வீடு, ப்ரீ எலக்ட்ரிசிடி, தண்ணீர் வசதி எல்லாவற்றையும் அவளிடம் பட்டியலிட்டான்.

எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லிவிட்டு, “அண்ணிக்கு தினம் கொஞ்ச நேரம் போய் உதவி செய்ய முடியுமா?” என்று கேட்டான்.

“நீங்கள் என்னிடம் இந்த லிஸ்டெல்லாம் சொல்ல வேண்டாம். நான் யாருக்கு உதவி செய்யப் போகிறேன்? உங்கள் அண்ணிக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் தானே. ஒரே வீட்டில் இருந்தால் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துக் கொள்வோமில்லையா, இதற்கு ஏன் இவ்வளவு தயங்குகிறீர்கள்?” என்றாள் அம்பிகா மனதில் எந்த விகல்பமும் இல்லாமல்.

“உனக்கு என் அண்ணியைப் பற்றித் தெரியாது. அட்டைப் பூச்சி தெரியுமா? அந்தப் பூச்சியும் அவர்களும் ஒன்று”

அம்பிகா புரியாமல் அவனை உறுத்துப் பார்த்தாள். “என்ன நான் சொல்வது உனக்கு விளங்கவில்லையா? என்றான் நமுட்டுச் சிரிப்போடு.

“செடிகள் புற்கள் நிரம்மியிருக்கும் இடத்தில் கறுப்பாக கொஞ்சம் அகலமாக ஒன்று ஊர்ந்து வரும். அது மனிதர்கள் மேல் ஒட்டிக் கொண்டால் அவ்வளவு தானாம். மொத்த ரத்தத்தையும் உறிஞ்சுக் கொள்ளுமாம். ஒட்டிக் கொண்ட அட்டைப் பூச்சியை அதன் மேல் நெருப்பு வைத்தால் தான் சுருண்டு வந்து விழும் என்று பார்த்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்றான்.

“அதற்கும் அண்ணிக்கும் என்ன சம்பந்தம்?”

“இன்னுமா புரியவில்லை? அவ்வளவு மக்கா நீ? ஒரு நாளைக்கு மேக்ஸிம்ம், அதாவது நீ மயங்கி விழும் அளவிற்கு எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வாங்கிக் கொண்டுதான் உன்னை நம் வீட்டிற்கே அனுப்புவார்கள். வேலை முடிந்து வரும் போது நீ குத்துயிரும் கொலை உயிருமாகத்தான் வருவாய், அதெற்கெல்லாம் தயாராக இருந்தால் அங்கே போ” என்றான்.

“ரொம்ப பயமுறுத்தாதீர்கள், அவர்கள் இவ்வளவு கனமான உடம்பில் புசுபுசுவென்று மூச்சு வாங்கிக் கொண்டு வேலை செய்வதைப் பார்த்தால் ரொம்பப் பாவமாக இருக்கிறது. ஏதோ என்னால் முடிந்த உதவியை அவர்களுக்கு செய்து விட்டு வந்து விடுகிறேன். மேலும், உங்கள் பெண்டாட்டி ஒன்றும் ரொம்ப ஏமாந்தவள் இல்லை. என்னை வருத்திக் கொண்டு ஒன்றும் ஊருக்கு உழைக்க மாட்டேன். அதுவுமில்லாமல் உங்களுக்கு செய்யும் எந்த வேலையிலும் குறை வைக்க மாட்டேன்” என்றாள் கிண்டலாக.

“உனக்கெல்லாம் தானாகவும் தெரியாது, சொன்னாலும் மண்டையில் ஏறாது. இது வீண் பிரச்சனைக்குத் தான் வழிவகுக்கும். எக்கேடோ கெட்டு ஒழி” என்று கூறிவிட்டு கோபமாக வெளியே சென்று விட்டான்.

முதல் வாரம் வேலை சுமுகமாகவே சென்றது. ஆனால் அடுத்த வாரம், “அம்பிகா, வனிதாவிற்கு (அவர்கள் முதல் பெண்) நீ செய்யும் காரச் சட்னியும் புதினா சட்னியும் மிகவும் பிடித்திருக்கிறது. என்னை எதுவும் செய்யக் கூடாது என்று சண்டை போடுகிறாள். அம்பிகா சித்தி செய்யும் டிபன் நன்றாக இருக்கிறது என்கிறாள். அதனால் தினமும் காலையில்  நீ ஒரு ஏழு மணிக்கெல்லாம் வந்து பிரேக் பாஸ்ட் செய்து கொடுத்து விடு” என்றாள்.

இதைக் கேட்டவுடன் அம்பிகாவிற்கு அப்படியே உச்சி குளிர்ந்து விட்டது. பைத்தியம் மாதிரி அதையே திரும்பத் திரும்ப பினாத்திக் கொண்டிருந்தாள். இப்படியே நைசாகப் பேசிப் பேசியே அம்பிகாவை நாள் முழுவதும் அவள் வீட்டிலேயே தங்க வைத்து முழு நேர வேலைக்காரியாக மாற்றிக் கொண்டாள்.

கடைசியில் பாலாஜிக்குத் தான் சில பணிவிடைகள், உதாரணமாக காலை பிரேக் பாஸ்ட் போன்றவைகள் நிறுத்தப்பட்டன. பாலாஜி கம்பெனி கான்டீனில் சாப்பிடத் தொடங்கினான்.

ஆனால் அவன் அண்ணா, “நீ நம் வீட்டில் சாப்பிடு” என்றான்.

அம்பிகாவும், “உங்கள் அண்ணா வீடு தானே, நான் தானே சமைக்கிறேன்” என்றாள்.

ஆனால் அண்ணி வாயைத் திறந்து ஒரு நாளும் இவனைச் சாப்பிடச் சொல்லவில்லை. பாலாஜிக்கு அவளைப் பற்றி நன்றாகத் தெரியும், அதனால் மறந்தும் கூட அவர்கள் வீட்டில் கை நனைக்க மாட்டான்.

‘கடவுளே இதற்கெல்லாம் ஒரு விடிவு எப்போது வருமோ தெரியவில்லை. அவர்கள் வீட்டு அவுட்ஹௌசில் இல்லாமல் வேறு எங்காவது தனி வீடு பார்த்துக் கொள்ளலாம்‘ என்று கூட நினைக்கத் தொடங்கினான்.

அப்போது தான் அம்பிகா  திருமணமாகி இரண்டு வருடங்களாகிய பிறகு முதன் முதலாக கர்பமானாள். வழக்கம் போல் வாந்தி மயக்கம் எல்லாம் இருந்தன. இங்கே இருந்தால் அண்ணி நைசாகப் பேசியே இவளைச் சாகடிப்பாள். ஆகவே அம்பிகாவை அவள் அம்மா வீட்டில் இரண்டு மாதம் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டு வந்தான். அவளுடைய பராமரிப்பிற்குத் தேவையான பணமும் அவர்களுக்கு அனுப்பி விடுவான்.

அண்ணி கூட, “கர்பமாக இருக்கும்போது தான் நன்றாக ஓடியாடி வேலை செய்யவேண்டும். எங்களுக்கு வேலை செய்யக் கூடாது என்பதற்காகவே அம்மாவீட்டிற்கு அனுப்பியது போல் இருக்கிறது” என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

அப்போதுதான் அண்ணி தன் சுயரூபத்தைக் காட்டினாள். “உங்களால் எங்களுக்கு எந்த உதவியும் இல்லை. நீங்கள் ஏன் வாடகை இல்லாமல் கரண்ட் சார்ஜ் , தண்ணீர் பில் எதுவுமில்லாமல் இங்கே இருக்க வேண்டும். வேறு வீடு பார்த்துக் கொள்ளுங்கள்” என்று திட்ட வட்டமாகக் கூறிவிட்டாள்.

வழக்கம் போல் அவன் அண்ணன் சிவராஜ் வாய்மூடி மௌனியாக இருந்து விட்டான். பாலாஜியும், ‘இதுவே நல்ல சந்தர்ப்பம், தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்‘ என்று நினைத்துக் கொண்டு, அண்ணா வீட்டிலிருந்து வெகு தொலைவில் வீடு பார்த்துக் கொண்டான்.

அது சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியாதலால், வாடகை குறைவாக இருந்தாலும், வீடு கொஞ்சம் பெரியதாக, அருகில் வசிக்கும்  மக்கள்  ஒருவர்க்கொருவர் உதவி செய்பவர்களாகவும் இருந்தனர்.

கிராமத்தில் வசிப்பது போன்ற சூழ்நிலை, சுத்தமான காற்று, மலிவான விலையில் காய்கறி கீரைகள் எல்லாம் கிடைப்பதால், பாலாஜிக்கும் அம்பிகாவிற்கும் நன்றாகப் பிடித்து விட்டது.

கூடவே உதவிக்கு அவள் அம்மாவையும் கொண்டு வந்து வைத்துக் கொண்டாள். அப்போது தான் கவிதா, சாதனா, அகிலா என்று மூன்று பெண் குழந்தைகள், ஒவ்வொருவரும் இரண்டு  ஆண்டுகள் இடைவெளியில் பிறந்தனர்.

குடும்பம் பெரியதாகியதே தவிர, அவன் அண்ணா சம்பளம் ஒன்றும் ஏற்றித் தரவில்லை. மாமியார் வீட்டிலிருந்து அம்பிகாவின் அண்ணா அனுப்பும் அரிசி, பருப்பு ஆகியவை செலவை சமாளிக்கக் கை கொடுத்தன.

அப்போதுதான் பாலாஜி, “கம்பெனியில் சேர்ந்து கிட்டத் தட்ட பத்து வருடங்கள் ஆகியும் வேலைக்கு ஏற்ற சம்பளம் கிடைக்கவில்லை” என்று முறையிடலானான்.

அண்ணா சிவராஜ், “ஒரு பெரிய ப்ராஜெக்ட் தாம்பரத்திலிருந்து சில மைல்கள் தூரத்தில் கையெழுத்தாகப் போகிறது. அது நவீன வசதிகளுடன் கூடிய பத்து அடுக்கு மாடியுடன், நான்கு பிளாக்குகளாகக் கட்ட வேண்டிய பெரிய பிராஜக்ட். அதற்கு அனுமதி வாங்குவதற்குத்தான் நம்   இஞ்ஜினீயர்கள் சி.எம்.டி.ஏ.விற்கு அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஒப்புதல் வாங்குவதற்குள் உயிர் போய் விடும்போல் இருக்கிறது. நாம் போட்ட பிளானையே மாற்றி மாற்றிப் போட வைக்கிறார்கள்.

இதனால் நமக்கு வரும் லாபமே நிறைய அடி வாங்குகின்றது. இந்த ப்ளான் சி.எம்.டி.ஏ.வில் அனுமதி பெற்ற பிறகுதான் வாட்டர்கனெக்‌ஷன், பவர் கனெக்‌ஷனும் மற்ற கனெக்‌ஷன்களும் கிடைக்கும். நீயும் அதில் வேலை செய்யப் போகிறாய். அப்போது உன் சம்பளம் கூட்டித் தரப்படும். அந்தப் பிராஜக்ட், நீ இப்போது வசிக்கும் வீட்டிற்கு கொஞ்சம் அருகில்தான். அதனால் கவலைப் படாதே, நீ நினைப்பது போலவே நடக்கும்” என்றான் ஆறுதலாக.

அந்தப் பத்து அடுக்கு அபார்ட்மென்டில் பவர் கனெக்‌ஷனுக்காக எலக்ட்ரிகல் இஞ்ஜினீயருடன் முழு பாதுகாப்புடன் வேலை செய்து கொண்டிருந்தான் பாலாஜி. அதன் கைப்பிடிச் சுவரில் சாய்ந்து நின்றுக் கொண்டிருக்கும் போதுதான் அது யாரும் எதிர்ப்பார்காகாத போது சரிந்தது.

தன்னிலை உணரும் முன்பே கீழே போய் விட்டான் பாலாஜி. ஆனால் நல்ல வேளையாக மூன்றாம் அடுக்கில் அமைக்கப்பட்டிருந்த சாரம் பிரிக்காமல் இருந்ததால், உடம்பெங்கும் அடிப்பட்டு அதில் தொங்கிக் கொண்டு நின்றான். நினைவும் இல்லை. உடன் பணிபுரியும் தொழிலாளிகள்  வீட்டிற்கும் அவனுடைய அண்ணாவிற்கும் தெரியப்படுத்திவிட்டு ஆம்புலன்ஸ் வரவழைத்து அவனை ஆஸ்பத்திரியிலும் சேர்த்து விட்டனர்.

அண்ணா நேரே மருத்துவமனைக்கு வந்து விட்டான். அம்பிகா அழுது புரண்டு குழந்தைகளுடன் வந்து விட்டாள். மருத்துவச் செலவு முழுவதும் இன்ஷயூரன்ஸ் ஏற்றுக் கொண்டது. 

நல்லவேளையாக சாரத்தில் மாட்டிக் கொண்டதால் தலையிலோ, முதுகெலும்பிலோ அடியில்லை. அதனால் உயிருக்கு ஆபத்தில்லை என்றார்கள் மருத்துவர்கள்.

ஆனால் எங்கு எப்படி அடிப்பட்டது என்று தெரியவில்லை, அவனது வலது கால் முட்டி எலும்பு மட்டும் கண்ணாடி போல் உடைந்திருக்கிறது என்று சொல்லி முட்டி எலும்பை ஆப்பரேஷன் செய்து சரி செய்யப் பார்த்தார்கள். காலைத் தாங்கித் தாங்கி தான் மெதுவாக நடக்க முடிந்ததே தவிர வேறு எந்த வேலையும் செய்ய முடியாமல் போனது.

அம்பிகாவோ, அவள் கணவன் உயிரோடு வந்து, அவள் தாலியைக் காப்பாற்றியதும், அவள் குழந்தைகளுக்கு அப்பாவாக இருப்பதுமே போதும் என்று அந்த கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தாள்.

சிவராஜ் இதற்குப் பிறகு பாலாஜி தன் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனியில் வேலை செய்ய முடியாதென்று எழுத்து பூர்வமாக அறிவிப்புக் கொடுத்து விட்டு, உதவித் தொகையாக இரண்டு லட்சம் ரூபாயும் கொடுத்தான்.

“அண்ணா, வேலையுமில்லாமல் மனைவி மூன்று பெண் பிள்ளைகளோடு எப்படி இரண்டு லட்சம் ரூபாயோடு வாழமுடியும்?” என்றான் பாலாஜி அழாத குறையாக.

சிவராஜ் அப்போது ஒரு பெரிய பைலை எடுத்து அவன் எதிரில் போட்டான். எல்லாம் பாலாஜியின் மருத்துவச் செலவுகள். ஆரம்பத்திலிருந்து இறுதி வரை எந்த ஒரு சிறிய செலவும் விடாமல் நீட்டாக டைப் செய்யப்பட்டு பைல் பண்ணப் பட்டிருந்தன. அதையே பாலாஜியிடமும் ஒரு நகல் கொடுத்தான். மொத்தமாக பத்து லட்சம் ரூபாய்க்கு கணக்கு காட்டப்பட்டிருந்தது.

“அண்ணா, வேலையில்லாமல் நான் எப்படி சென்னையிலோ அல்லது அதன் அருகிலோ இருக்க முடியாது. அதனால் கும்பகோணத்தில் நம் அப்பா அம்மா வாழ்ந்த வீட்டில் போய் வாடகை இல்லாமல் இருந்து கொண்டு ஏதாவது ஒரு வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன். அதனால் அந்த வீட்டின் சாவியை கொடுங்கள்” என்றான்.

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும் – வியாழன் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மனதில் உறுதி வேண்டும் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    பனி விழும் மது வனம்❤️ (அத்தியாயம் 2) – பவானி உமாசங்கர்