in ,

உடையது விளம்பேல் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

வசந்தி தான் வாங்கி வந்த பொருள்களை எல்லாம் எங்கள் வீட்டு ஹாலில் கடை பரப்பி வைத்து அவள் தோழிகளான எதிர் வீட்டு, பக்கத்து வீட்டுப் பெண்களிடம் அவள் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தாள். எல்லாம் கடனில் தவணை முறையில் வாங்கியது தான்.

வசந்தி என் மனைவி. தமிழக அரசின் ஒரு இலாக்காவில் ஒரு இளநிலை எழுத்தாளர். அரசாங்க ஊழியர் என்பதால் பெரிய வருமானம் என்பதில்லை. சிக்கனமாக வாழ்ந்தால் மாதக் கடைசி வரை கடனில்லாமல் வாழலாம். கொஞ்சம் நாம் ஆசைப்பட்டபடி வாழலாம் என்றால் வழுக்கு மரம் போல் வாழ்க்கைக் கடனில் தள்ளி விடும்.

நானும் அதே அரசாங்க ஊழியர் தான்,  இருவர் சம்பளமும் இருப்பதால் வாழ்க்கை எனும் வண்டி கடனில்லாமல் ஓடுகிறது.  ஆனால் வசந்தி அதைப் புரிந்து கொள்ளவே  மாட்டாள்.

இப்போதெல்லாம் ஒன்றாம் தேதி சம்பளம் கிடையாது. அந்த மாதக் கடைசியில், வங்கியில் சம்பளம் டெபாசிட் ஆனவுடன், வங்கிக் கணக்கில் இருவர் சம்பளத்தையும் சேர்த்து கூட்டிப் பார்த்து தன்னை ஒரு அம்பானி உயரத்திற்கு நினைத்துக் கொண்டு மகிழ்வாள் என் தர்மபத்தினி.

எதையும் பக்கத்து வீட்டுப் பெண்களுடனோ, அல்லது எதிர் வீட்டில் உள்ளவர்களோடு ஜம்பம் அடித்துககொள்வதில் ஒரு பெரிய மகிழ்ச்சி. அவர்கள் கேட்டு பொறாமை அடைவதும் பின்னால் கேலி செய்வதும் உண்டு. இந்த சேதாரம் கொஞ்சம் கம்மி.

அவளுடைய உறவினர்களிடம் சொன்னால், அவர்கள் இவளை ஏற்றி இறக்கிப் பேசி அந்தப் பணத்திற்குப் ஏதாவது உபயோகமில்லாத செலவை இழுத்து விடுவார்கள். என் சொந்தக்காரர்களிடம் சொன்னால் நமக்கும் அந்தப் பணத்திற்கும் சம்பந்தமேயில்லாத ஏதாவது மேஜர் செலவை வைத்து விடுவார்கள்.

அந்த நேரத்தில் வங்கியில் பிக்ஸட்  டெபாசிட் செய்திருந்த பணம் மெட்சூரிட்டி அடைந்து சில லட்சங்கள் சேர்ந்திருந்தது. அத்துடன் பி.எப்.பிலும் கொஞ்சம் லோன் போட்டு எல்லாவற்றையும் சேர்த்து ஒரு கணிசமான தொகையாக சேமிப்பு வங்கிக் கணக்கில் வைத்தேன்.

அத்தனை இலட்சங்களைச் சேர்ந்தாற்போல் நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை. அந்த சந்தோஷம் என் முகத்திலும் என் செயல்களிலும் வசந்திக்குத் தெரிந்திருக்க வேண்டும். அந்தப் பணத்தினால் என் வீட்டுக் கடனை கொஞ்சம் குறைக்க முடியும்.

இந்தப் பணத்தைப் பற்றி வசந்தியிடம் மூச்சுக் கூட விடக் கூடாது என்று நினைத்தேன். நாம் நினைப்பது ஒன்று. விதி நினைப்பது வேறு ஒன்று அல்லவா !

“சார், இன்றைக்கு என்ன ரொம்ப சந்தோஷமாக இருக்கிறீர்கள்? என்னிடம் சொன்னால் நானும் சந்தோஷப்படுவேன்“ என்றாள் வழக்கம் போல் நெருங்கி உட்கார்ந்து.

“உன்னிடம் சொல்வதற்கு பயமாக இருக்கிறது.  நீ உடனே ஊர் கூட்டித் தம்பட்டம்  அடித்து விடுவாய் என்று தான் பயமாக இருக்கிறது“ என்றேன்.

“நான் உங்கள் பெட்டர் ஹாப் இல்லையா! அதனால் நீங்கள் சொல்ல வேண்டாம் என்று நினைத்தாலும் தூக்கத்தில் உளறிவிடுவீர்கள். அப்போது நான் தெரிந்து கொள்வேனே“ என்று கை கொட்டி சிரித்தாள் வசந்தி.

தூக்கத்தில் உளறும் பழக்கம் எனக்கு இருக்கிறது என்று என் அம்மா கூட சொல்லியிருக்கிறார். அதனால் நான் அவளிடம் யாரிடமும் சொல்லக்கூடாது என்று ஆயிரதிஎட்டு உறுதி மொழி வாங்கிக் கொண்டு சேமிப்புக் கணக்கில் வைத்த சில லட்சங்களையும் சொல்லி, அதனால் வீட்டுக் கடன் அடைக்க வேண்டும் என்றும் கூறினேன்.

நான் வசந்தியை நம்பாமல் சில ஆயிரங்களை குடும்ப செலவிற்கு நிறுத்திக் கொண்டு மீதிப் பணத்தை வங்கியில் வீட்டுக் கடனுக்கு கட்டிவிட்டு வந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.

அன்று மாலையே என் பாசமலர், என் அக்கா வந்து விட்டாள். கல்லூரியில் படிக்கும் அவள் மகளுக்கு செமஸ்டர் பீஸ் கட்டிய வேண்டும் என்றும், அவள் கணவர் வெளியூர் போயிருப்பதால், அவளிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும் கூறினாள்.

உடனே பணம் வேண்டும் என்றும், அவர் வந்தவுடன் முதல் வேலையாகத் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் கூறினாள். அவளே ரெயில்வேயில் கிளார்க்.  என் மாமாவும் கூட்ஸ் ரயிலில் டிரைவர் . இருவருக்கும் எங்களைவிட் சம்பளம் அதிகம் . ஆனால் என் அக்கா எப்போதும் ‘இல்லை’ என்ற பஞ்சப் பாட்டுத் தான் பாடுவாள்.

மாமாவோ கொஞ்சம் பணம் சேர்ந்தாலே உடனே ஏதாவது ஒரு அடுக்கு மாடியில் ஒரு பிளாட்(flat) வாங்கிப் போட்டு விடுவார். அதில் வரும் வாடகையில் அந்த வீட்டு கடனை அடைப்பார். இவ்வளவு வருமானம் இருந்தும் அவளுக்கு என்னை காலியாக்குவதில் ஒரு திருப்தி.

இதேபோல் பல்வேறு காரணங்களைச் சொல்லி பல முறை வாங்கிச் சென்றிருக்கிறாள். ஒரு முறையும் பணம் திரும்பியதில்லை. அவளுக்கு அம்மாவின் சப்போர்ட் வேறு. கூடப் பிறந்தவளுக்கு செய்வதில் கணக்குப் பார்க்கக் கூடாது என்பாள் என் அம்மா.

வசந்தியிடம் தனியாக, “அக்காவிற்கு என்னிடம் பணம் இருப்பது எப்படி தெரியும்? நீ தான் சொல்லியிருப்பாய்“ என்றேன் கடுப்பாக. 

“ஆமாம் நான் தான் சொன்னேன். படிப்பு விஷயம் மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமல்லவா?“

“படிப்பு விஷயம் முக்கியம் தான். நீ ஒரு ஓட்டை வாய். அக்காவும், மாமாவும் நிறைய சேவிங் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.  உன்னை முட்டாளாக்கி விஷயத்தை போட்டு வாங்கி, என்னிடம் இருந்து பணம் வாங்கிக்கொண்டு போய் விட்டாள் என் அக்கா“ என்று பல்லைக் கடித்தேன்.

 “பணம் வைத்துக் கொண்டு யாராவது மற்றவர்களிடம் கேட்பார்களா? அக்கா கேட்டது மிகவும் பரிதாபமாக இருந்தது. அதனால் தான் நான் உங்களிடம் பணம் இருப்பதைச் சொன்னேன்“ என்றாள் பரிதாபமாக.

“தாட்சண்யம் தன் நாசம் என்று ஒரு பழமொழி இருக்கிறது ? உனக்குத் தெரியுமா?”  என்றேன்.

’உம்’ என்று முனகினாள்.

 “நீ ரொம்ப நாளாகக் கேட்டிருந்தாயே கல் வைத்த குடைஜிமிக்கி அதை இந்தப் பணத்தில் வாங்கிக் கொடுக்கலாம் என்று நினைத்தேன். உன் தலையில் நீயே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டாய்” என்றேன் எரிச்சலாக.

“மாமா, எப்படியும் இன்னும் கொஞ்சம் பணம் வைத்திருப்பீர்கள் இல்லையா? அதில் குடை ஜிமிக்கி வாங்கிக் கொடுங்களேன்” என்றாள். ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்றால் ‘மாமா’ என்று கூப்பிட்டு ஐஸ் வைப்பாள். நானா அதற்கெல்லாம் மயங்குவேன் !

“போடி போ ! குடை ஜிமிக்கி இல்லை ஒரு குடை கூட அந்தப் பணத்தில் செலவு செய்ய முடியாது. கையில் இருக்கும் கொஞ்சம் பணமும், ஏதாவது எமர்ஜன்ஸி செலவிற்குத் தான். அந்த நேரத்தில் நான் யாரிடமும் போய் கை ஏந்த முடியாது“ என்றேன் கறாராக. என் பதில் எனக்கே கொஞ்சம் எரிச்சலாகத் தான் இருந்தது. அவள் பரிதாபமாக என்னைப் பார்த்தாள்.

 “வசந்தி, நீ ஔவையார் எழுதிய ஆத்திச் சூடி படித்திருக்கிறாயா? அதில் ‘உடையது விளம்பேல்‘ என்று ஒரு வரிக் கவிதை வரும். ஆத்திச் சூடிப் படித்தாலே போதும், நாம் வாழ்க்கைக்கு வேண்டிய எல்லா தத்துவங்களையும் கற்றுக் கொள்ளலாம்“ என்றேன்.

“ஆமாம்“ என்று ஆமோதித்தாள் என் இல்லத்தரசி.

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்      

(முற்றும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஆட்டுமந்தை மனிதர்கள் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்

    அப்பாவின் சைக்கிள் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி