எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அபராஜித் வேலையிழந்து ஒரு மாதம் ஆயிற்று. அவன் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டதாரி. ஆனால் ஐ.டி.யில் வேலை செய்தால் இலட்சங்களில் சம்பாதிக்கலாம் என்று C, C++, Clouds என்று என்னென்னவோ படித்து ஒரு வழியாக ஒரு புதியதாகத் தொடங்கிய ஐ.டி.கம்பெனியில் சேர்ந்து இரண்டு வருடங்களாக வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தான்.
அதற்குள் A.I. என்று சொல்கிறார்களே அந்த சனியன் பிடித்த ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜன்ஸால், இருநூறு ஜூனியர் இஞ்ஜினீயர்களை வேலையை விட்டுத் தூக்கி விட்டார்கள். அதில் அபராஜித்தும் ஒருவன்.
அவனுக்குத் திருமணம் ஆகிவிட்டது. அவன் மனைவி சுநீதாவும் கம்ப்யூட்டர் இஞ்ஜினீயர் தான். ஆனால் அவள் நல்ல வேளையாக ஐ.டி. கம்பெனியில் வேலை செய்யவில்லை. ஒரு தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் ஆசிரியர் பணியில் சேர்ந்து விட்டாள்.
அபராஜித் அவளிடம் பல முறை வற்புறுத்திக் கூறியும், இரண்டு பேருடைய சம்பளமும் நிறைய இருக்கும் என்று சொல்லியும் மறுத்து விட்டாள்.
“இருவரும் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு கம்ப்யூட்டரில் வேலை செய்து விட்டு இராத்திரி பத்து மணிக்கு வீடு வந்தால் நம் இரண்டு குழந்தைகள் கதி என்ன? வேலைக்காரியைத் தான் அவர்களுக்கு அம்மாவாகத் தெரியும். நாளடைவில் என்னையும் பிடிக்காது, நான் செய்யும் வேலையும் பிடிக்காது.
அதுவே ஆசிரியர் வேலை என்றால் பணம் கொஞ்சம் குறைவாகவே இருந்தாலும், அவர்களோடே இருப்பது போல் இருக்கும். அவர்களுக்கு பள்ளியில் விடுமுறை நாட்களில் எனக்கும் விடுமுறையாகத்தான் இருக்கும். அதனால் குழந்தைகளின் நெருக்கத்தை நான் இழக்க மாட்டேன். நீங்கள் மட்டும் ஐ.டி.யில் இருங்கள். நான் ஆசிரியர் தொழிலில் இருக்கிறேன்” என்று தீர்மானமாக சொல்லி விட்டாள்.
சுநீதா, பிடிவாதமாக அப்படிப் பேசியது, அபராஜித்திற்கு அப்போது கொஞ்சம் கோபம் கூட வந்தது. ஆனால் வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்டான். இப்போது மனதிற்குள் சுநீதாவிற்கு நன்றி சொல்லிக் கொண்டான்.
சுநீதா கல்லூரிக்கும், பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கும் சென்ற பிறகு அபராஜித்திற்கு வீட்டில் மிகவும் போர் அடித்தது. இப்படியே இருந்தால் தன் உடலும் மூளையும் துருப்பிடித்து விடும் என்று யோசித்தான்.
வீட்டில் இருந்து எல்லோரும் கல்லூரிக்கும், பள்ளிக்கும் சென்ற பிறகு வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே காலாற நடந்து வரலாம் என்று அந்தத் தெருவில் நடந்து மெதுவாக பார்வையை ஓட்டிக் கொண்டு சென்றான்.
அப்போது தான் அவன், பழைய பள்ளி மாணவன் மாணிக்கத்தைப் பார்த்தான். அபராஜித்திற்கு அவனை மிகவும் பிடிக்கும். மனதில் நினைப்பதை தைரியமாக சொல்பவன். அவன் தப்பே செய்தாலும், மறைக்காமல் தன் தவறை ஒத்துக் கொள்வான். மாணிக்கமும் இவனைப் பார்த்து பிரமித்து நின்றான். அபராஜித் ஓடிப் போய் அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டான்.
மாணிக்கம், “அபராஜித், நான் ஒரு சாதாரண மெக்கானிக். நீ ஒரு பெரிய இஞ்ஜினீயர். என் சட்டையெல்லாம் ஒரே அழுக்காகவும், ஆயில், கிரீஸ் கரையாகவும் இருக்கிறது. என்னைப் போய் கட்டிப் பிடிக்கிறாயே“ என்றான் கூச்சத்துடன்.
“டேய் மாணிக்கம், நீ மெக்கானிக் என்றால் நான் மெக்கானிக்கல் இஞ்ஜினீயர். அவ்வளவு தான். ஆனால் என் படிப்பெல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய் தான். உன்னைப் போல் களத்தில் இறங்கி ஒரு காரைக் கூட ரிப்பேர் செய்ய எனக்குத் தெரியாது“ என்றான்.
சிறிது நேரம் பேசிக்கொண்டபோது, நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று ஐ.டி.கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து, இப்போது வேலை இல்லாமல் சுற்றிக்கொண்டு இருப்பதாகவும் கூறினான்.
மாணிக்கம், அவனைப் பற்றிக் கூறும் போது, “வறுமையினால் எட்டாம் வகுப்புடன் படிப்பு நிறுத்தி, ஒரு ஒர்க் ஷாப்பில் இரண்டு வருடங்கள் வேவை செய்து பிறகு, இந்த ஒர்க் ஷாப்பை நான் சொந்தமாகத் தொடங்கினேன். இதில் நல்ல வருமானமும் கிடைக்கிறது. நாலு பேருக்கு வேலையும் கொடுத்து இருக்கிறேன். அதனால் நல்ல மனநிறைவும் இருக்கிறது“ என்று அருகில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பைக் காட்டினான்.
‘மாணிக்கம் பணி மனை‘ என்று ஒரு பெயர் பலகையுடன் இருந்தது அவன் ஒர்க் ஷாப். உள்ளே இரண்டு கார்களும், ஒரு லாரியும், சில டூ வீலர்களும் இருந்தன. நான்கைந்து ஆட்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர். அதைப் பார்த்து அபராஜித் பிரமித்தான்.
மாணிக்கம் வழக்கம் போல், “நான் ஒரு படிக்காத முதலாளி. நீ ஒரு பட்டதாரி தொழிலாளி. வேடிக்கையாக இருக்கிறது“ என்று சிரித்தான்.
“வேலையில்லாத பட்டதாரித் தொழிலாளி“ என்ற அபராஜித்தும் அவனோடு சேர்ந்து சிரித்தான்.
அப்போது அபராஜித்திற்கு ஒரு எண்ணம் வந்தது. இவனிடம் தொழிலாளியாக சேர்ந்து வேலை கற்றுக் கொண்டு நாமும் ஒரு ஒர்க் ஷாப் வைத்து நாலு பேருக்கு வேலை கொடுக்கலாம் என்று. அவன் கருத்தை மாணிக்கத்திடம் கூற அவன் முதலில் கொஞ்சம் தயங்கினான்.
“எனக்கு சம்மதம் தான். ஆனால் நீ ஐ. டி, கம்பெனியில் பல ஆயிரங்களில் சம்பளம் வாங்கி யிருப்பாய். என்னால் அவ்வளவு தர முடியாதே“ என்றான்.
“உன்னால் கொடுக்க முடிந்ததைக் கொடு. ஆனால் இங்கு அப்ரென்டீசாக வேலை கொடு. இத்தனை நாள் வேலை செய்து விட்டு இப்போது வீட்டில் அடைந்து கிடப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது“ என்றான் கெஞ்சுதலாக.
“அபராஜித், நீ இப்படியெல்லாம் கெஞ்சுதலாகக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இது உன் ஒர்க் ஷாப். நீ எப்போது வேண்டுமானாலும் வேலையில் சேரலாம்“ என்றான் மாணிக்கம்.
வீட்டில் சுநீதாவிடம் தன் எண்ணத்தைக் கூறினான் அபராஜித்.
அவளோ, “எனக்கு ஒன்றும் கஷ்டம் இல்லை. ஆனால் நீங்கள் இத்தனை வருடம் ஏர்கண்டிஷன் அறையில் ஒயிட் காலர் ஜாப் பார்த்து விட்டு இந்த வேலை சரிப்படுமா?“ என்றாள்.
“இத்தனை ஆண்டுகள் சாப்ட்வேரில் வேலை செய்தேன். இனி ஹார்ட்வேரில் வேலை செய்ய வேண்டும். தியரி ஆப் ஸர்வைவல். அவ்வளவு தான்” என்றான் சிரித்துக் கொண்டு.
இரண்டு ஆண்டுகள் முடிந்தன. வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு காலி மனையை வாடகைக்கு எடுத்து, மாணிக்கத்தின் ஆசீர்வாதத்துடன் ஒரு ஒர்க் ஷாப் தொடங்கினான் அபராஜித்.
உள்ளூர் செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்து பத்தாம் வகுப்பு படித்தால் போதும் என்று இரண்டு ஆட்களை வேலையில் வைத்துக் கொண்டான். முதலில் மாணிக்கம் மூலம் வேலை வாய்ப்பு வந்தது. பிறகு இவன் திறமைக்காகவும், காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் வேலை முடித்து தருவதாலும் நிறைய வண்டிகள் ரிப்பேருக்காக வந்தது.
அபராஜித் இப்போது வீட்டிலும் சந்தோஷமாக எப்போதும் சிரித்துக் கொண்டும், பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டும் இருந்தான்.
“முதலாளி சார், இப்போது மிகவும் மாறி விட்டார்“ என்று சுநீதா கூட கிண்டல் செய்தாள்.
“எப்போது போய்விடுமோ இந்த வேலை என்ற பயமில்லை. மேலும் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யாமல் ஓடி ஆடி வேலை செய்வதால் உண்டாகும் உற்சாகம். எல்லாப் பெருமையும் என் நண்பன் மாணிக்கத்திற்கே” என்றான் நன்றியோடு அபராஜித்.
“ஆம்“ என்று தலையசைத்த சுநீதா, “நீங்களும் ஔவையார் ஆத்திச்சூடியில் ‘ஊக்கமது கைவிடேல்’ என்று கூறியது போல் ஓய்வின்றி பாடுபட்டீர்கள், வெற்றி பெற்றீர்கள்“ என்றாள் பெருமையுடன்.
எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)




GIPHY App Key not set. Please check settings