in ,

எண் எழுத்து இகழேல் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்  

சாரதாவைத் தேடி தோட்டத்திற்கு வந்தாள் அந்த வீட்டின் எஜமானி  லட்சுமி. சாரதா அந்த வீட்டில் சமையல்காரி. ஆனால் லட்சுமிக்கு அவளை மிகவும் பிடிக்கும். அவள் கை மணம் மட்டும் அல்ல, படிக்காவிட்டாலும் அறிவு பூர்வமான அவள் பேச்சு, அவள் பொறுமை எல்லாம் மிகவும் பிடிக்கும். 

அதனால் மூச்சுக்கு முன்னூறு முறை, “சாரதா, சாரதா” என்று  அவளைக் கூப்பிட்டுக் கொண்டு இருப்பாள்.

கணவனின் ஆதரவற்ற பெண் என்பதாலும், லட்சுமிக்கு அவள் உதவி அடிக்கடி தேவைப்பட்டதாலும், சாரதாவையும், அவள் மகள் மேகலாவையும் அவர்கள் பங்களாவின் அவுட் ஹௌசிலேயே தங்க அனுமதித்திருந்தாள்.

சாரதா, அவளுடைய ஒரே மகள் மேகலாவிற்கு தலை வாரிப் பின்னிக் கொண்டிருந்தாள். மேகலாவிற்கு நீண்ட அடர்த்தியான கூந்தல்.  ஏற்கனவே அவள் நல்ல அழகு. அந்தக் கருங்கூந்தல் அவள் அழகிற்கு மேலும் அழகு சேர்த்தது. அதை வாரி இரட்டைப் பின்னல் போட்டு மடித்துக் கட்டி அவளைப் பள்ளிக்கு அனுப்பிய பிறகு தான் சாரதா நிம்மதிப் பெருமூச்சு விடுவாள்.

அந்த சின்னப் பெண்ணைப் படிக்க வைக்க சாரதா ஏன் அவ்வளவு சிரமப்படுகிறாள் என்பது லட்சுமிக்குப் புரியாத புதிராக இருந்தது.

‘பொம்பளைப் பிள்ளைப் படித்து என்ன ஆகப் போகிறது?’ என்பது அவள் நினைப்பு. பெண் பிள்ளைகளே வேறு ஒருத்தர் சொத்து. அவளை நல்லபடி சீர் செய்து கல்யாணம் செய்து வைத்தாலே போதும். அதிகமாகப் படிக்க வைத்தால் மாப்பிள்ளை பார்ப்பதே கஷ்டம் என்பது தான்லட்சுமியின் கருத்து.

இந்த சாரதாவிற்கு அடுத்த வேளை சாப்பாட்டிற்கே கஷ்டம். படிக்க வைத்து என்ன சாதிக்கப் போகிறாள்? என்று மனதிற்குள் ஏளனத்துடன் சிரித்துக் கொண்டாள்.

லட்சுமி தன் எண்ணங்களை கேலியாக சாரதாவிடம்  வெளிப்படுத்தினாள். ஆனால் அவளோ காலம் கற்றுத் தந்த பாடம் என்று ஒரு பெருமூச்சுடன் தன் எண்ணத்தில் உறுதியாக இருந்தாள்.

லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா. இவளை கான்வென்ட்டில் சேர்த்து படிக்க வைத்திருந்தாள். கல்யாணச் சந்தையில் கான்வென்ட் படிப்பிற்கும், நுனி நாக்கு ஆங்கிலப் பேச்சிற்கும் மதிப்பு அதிகம் என்பதும் லட்சுமிக்குத் தெரியும்.

ஐஸ்வர்யா, மேகலா இருவருக்கும் ஒரே வயது.‌ பள்ளிகள் தான் வேறு வேறே தவிர இருவரும் ஒரே வகுப்பு தான்.

ஆடம்பரத்திற்குத்தான் மகளைக் கான்வென்ட்டில் சேர்த்திருந்தாள் லட்சுமி. டியூஷன் மட்டும் ஏற்பாடு செய்து விட்டு மற்றபடி அவள் படிப்பு விஷயத்தில் ஒன்றும் அக்கறை காட்டுவதில்லை. ஐஸ்வர்யாவும் ஒன்றும் படிப்பில் அதிக ஆர்வம் இல்லை.

ஆரம்பத்தில் ஐஸ்வர்யா மேகலா இருவரும் நல்ல சினேகிதிகள். வயது வளர, ஏழை பணக்காரர் என்ற வேறுபாடும் அதிகமாகும் போல் இருக்கிறது. ஐஸ்வர்யாவின் தோழிகள் எல்லோரும் மிகவும் வசதியானவர்கள். நட்பு பகையாக மாறவில்லை, ஆனால் அலட்சியமாக மாறியது.

அதனால் மேகலா அவளோடு பழகுவது குறைந்து பிறகு நின்றே விட்டது. மேகலாவிற்கு நெருங்கிய தோழிகள் என்று யாரும் இல்லை, அவளொடு படிக்கும் மாணவிகளிடம் நன்றாகப் பழகுவாள்.

மேகலாவை வீட்டிற்கு அருகில் உள்ள கார்ப்பரேஷன் பள்ளியில் தான் சேர்த்து இருந்தாள்.  ஆனால் அந்தப் பள்ளிகளில் கூட இப்போதெல்லாம் மிகவும் நல்ல ரிசல்ட்  வருவதால் ஆசிரியர்களும், மாணவர்களும் நன்றாகக் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள்  என்று சாரதா கேள்விப்பட்டிருக்கிறாள்.

ஆனால் லட்சுமிக்கு படிப்பு என்பது அவ்வளவு அவசியமாகத் தெரியவில்லை.  அவள் பிறந்ததும் வசதியான வீட்டில்.  கணவர் வீடும் பெரிய பணக்காரக் குடும்பம். அதனால் அவளுக்கு பணம் தான் வாழ்க்கையில் எல்லாமாக இருந்தது. 

தலையெழுத்து நன்றாக இருந்தால் வாழ்க்கையில் எல்லாம் நன்றாக இருக்கும் என்று நம்பினாள். எவ்வளவோ பேர் பி.ஏ. எம்.ஏ. படித்தவர்கள் கூட அவள் கணவரிடம் பணம் அவசரத் தேவைக்கு கடனாக வாங்கிப் போவதைப் பார்த்திருக்கிறாள். அதனால் வாழ்க்கைக்கு முக்கிய தேவை பணம் தான் என்று முடிவிற்கு வந்தாள். 

அதனால் திருமணத்தில் ஐஸ்வர்யாவிற்கு இருநூறு சவரன் நகை போட்டு, வெள்ளியில் ஒரு கிலோவும் ஈ.சி.ஆர். ரோட்டில் ஒரு பங்களாவும் கொடுத்து, விலை உயர்ந்த ஒரு பென்ஸ் காரை வரதட்சணையாகக் கொடுத்தால் மாப்பிள்ளை கூட பெண் வீட்டோடு தங்கி விடுவான் என்று கணக்குப் போட்டு வைத்திருந்தாள்.

ஒரு பங்களாவும், லேட்டஸ்ட் ஏ.சி. கார் ஒன்று கொடுத்தால்  மாப்பிள்ளை நம் வீட்டிலேயே காவல் இருப்பான் என்று உறுதியாக நம்பினாள்.

ஆனால் சாரதா அப்படியில்லை. சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, மிகவும் சாதாரணக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டவள். அந்தத் திருமண வாழ்க்கையும் சந்தோஷமாக இல்லை.

தனக்கு ஏற்பட்ட இந்த அவல வாழ்க்கை தன் மகள் மேகலாவிற்கு நேரக் கூடாது என்பதில் சாரதா மிகவும் உறுதியாக இருந்தாள். அந்தக் கடினமான வறுமைக் கடலைக் கடக்க உதவும் ஒரே தோணி படிப்பு மட்டும் தான் என்பதில் மிக உறுதியாக இருந்தாள்.

சாரதா நிறைய இடங்களில் வீட்டு வேலை  செய்திருக்கிறாள். டாக்டர் வீடுகள்,  இஞ்ஜினீயர் வீடுகள் என்று பல இடங்களில் வேலை செய்து இருக்கிறாள். அவர்கள் பிள்ளைகள் யாரும்  நிறைய பணமும் வசதியும் இருக்கிறதென்று படிப்பைக் கோட்டை விடவில்லை.

டாக்டர் பிள்ளைகள் டாக்டர்களாகவும், இஞ்ஜினீயர் பிள்ளகள் இஞ்ஜினீயர்களாகவும், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வேலை செய்து பெரும் புகழும் பணமும் சம்பாதித்து வருவதையும் கேள்விப்பட்டிருக்கிறாள்.

ஆனால் சில பணக்கார வீட்டுக் குழந்தைகள் மட்டும், சரியான வழிக்காட்டுதல் இல்லாததாலும், தங்கள் பணம் தங்கள் தலைமுறைகளையும் காக்கும் என்னும் தவறான போதனைகளாலும் படிப்பறிவில்லாமல் அழிந்து போவதையும் அறிந்திருக்கிறாள்.

அதனால் தான் சாரதா அவள் மகள் மேகலா படிப்பு விஷயத்தில்  மிகவும் தீவிரமாக இருந்தாள். காலம் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது. மேகலா பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றாள். ஐஸ்வர்யா இரண்டு பாடங்களில் தேறவில்லை.

லட்சுமியோ அதைப்பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. ஐஸ்வர்யா சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று உடனடியாக பெரிய பணக்காரப் பண்ணையாரின் மகனைப் பார்த்து திருமணம் முடித்து விட்டார்கள்.

மேகலாவையும் அதிகம் படிக்க வைக்காமல் சீக்கிரம் யாராவது ஒரு பையனைப் பார்த்து கல்யாணம் செய்து கொடுத்த பளுவை குறைத்துக் கொள் என்று சாரதாவிற்கு அட்வைஸ் வேறு.  ஆனால் கொக்குக்குக்கு ஒன்றே மதி என்பது போல் சாரதாவிற்கு மகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பது  ஒரே லட்சியமாக இருந்தது.

மேகலாவின் படிப்பிற்காக கல்லூரிக்கு அருகில் வீடு மாற்றிக் கொண்டு வேறு இடம் வந்து குடியேறினார் சாரதா. அவளுக்கும் வயதானதால் நாள் முழுவதும் லட்சுமியிடம் வேலை செய்ய முடியாததும் ஒரு காரணம். வீடு மாறி வந்த பிறகு இரு வீட்டாருக்கும் தொடர்பு விட்டுபோயிற்று.

படிப்பை முடித்து புகழ்பெற்ற மருத்துவமனையில் டாக்டராகப் பணியில் சேர்ந்தாள் மேகலா.  சாரதாவிற்கு மகளின் மேலான நிலையால் சந்தோஷம்.

ஒருநாள் இரவு மேகலா எமர்ஜென்சி டியூட்டியில் இருக்கும் போது, விலையுயர்ந்த காரில் இருந்து ஒரு பெண்ணை கைப்பிடித்து அழைத்து வரும் போது மருத்துவமனை சிப்பந்திகள் அவளை வீல்சேரில் உட்கார வைத்து அழைத்து வந்தனர்.

அந்தப் பெண்ணைப் பார்த்து மேகலா திடுக்கிட்டாள். அந்தப் பெண் ஐஸ்வர்யா தான். அந்தப் பெண்ணுடன் லட்சுமியும் இன்னும் சிலரும் வந்திருந்தனர்.

ஐஸ்வர்யாவிற்கு தலையில் பலமான அடி. கை, கால்களிலும் காயங்கள். எல்லா காயங்களும் அவள் கணவன் கொடுத்த அன்பளிப்புத் தான். காயங்களுக்கும் மருந்து போட்டு கட்டுக் கட்டி மேகலா அவளுக்கென்று கொடுக்கப்பட்ட தனி அறையில் அமரவைத்து, இரண்டு இட்லியை சாப்பிட வைத்து, காபியை குடிக்க வைத்தாள்.

லட்சுமியின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது. மேகலா அவளுக்கு ஆறுதல் கூறினாள்.

 “சாரதா அப்போதே படிப்பு தான் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் முக்கியமானது என்றாள். நான் தான் பணம் இருந்து பெரிய பணக்கார இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்தால் போதும் என்றேன். ‘எண் எழுத்து இகழேல்’ என்று ஆத்திச்சூடியில் படித்தோமே. மறந்து விட்டீர்களா? என்றாள். நான் ஒழுங்காகப் படித்திருந்தால் என் பெண்ணை நன்றாகப் படிக்க வைத்திருப்பேன். நான் பூஜ்யம். அதனால் தான் என் மகள் வாழ்க்கையும் கேள்விக்குறி ஆனது லட்சுமி தேவியின் அருள் இருந்தால் போதும் என்று நினைத்து, சரஸ்வதி தேவியைப் புறக்கணித்தேன். அதன் பலன் தான் இது“ என்று மூக்கை உறிஞ்சினாள்.

“மாமியார் பவர் எல்லாம் போயே போச்சு. இது மருமகள்கள் காலம் ஆன்ட்டி” என்றாள் மேகலா சிரித்துக் கொண்டு.

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்      

(முற்றும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அம்மா சுட்ட வடை (பிற்பாதி சிறுகதை) – நாமக்கல் எம். வேலு

    அம்மா எடுத்த முடிவு (சிறுகதை) – மீனாக்ஷி சேகர்