எழுத்தாளர் பாலாஜி ராம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நெடுநேரம் கால் வலிக்க நின்று கொண்டிருந்தவன் அடிக்கடி தன் கைகடிகாரத்தை பார்த்தபடியே ஏதேனும், பேருந்து வருமா என்று கண்களை விரித்து சாலையை பார்த்துக் கொண்டிருந்தான்.
தினமும் சரியான நேரத்தில் வரும் அந்த அரசு பேருந்து இன்று ஏனோ வரவில்லை. அங்குள்ளவர்களிடம் விசாரிக்கும் போது தான் தெரிகிறது இன்று காலை பத்து மணிக்கு அரசியல் பிரச்சாரத்திற்காக அமைச்சர் இவ்வழியாக வருகிறார் என்றும், கூட்டத்தை கட்டுப்படுத்த பேருந்துகள் அமைச்சர் சென்ற பிறகு, இயங்கும் என்றும் தெரியவந்தது.
ஆட்டோவில் செல்லலாம் என்று நினைத்தால் கூட வருவதோ ஓரிரண்டு ஆட்டோக்கள் அதிலும் அமரக்கூட இடமில்லாமல் கூட்டமாக தான் வருகிறது.
என்ன செய்வது என்று யோசித்தவன், நடந்தே செல்லலாமா? வேண்டாம் எவ்வளவு தூரம் செல்வது, பரவாயில்லை காதலுக்காக இது கூட செய்யாமல் இருந்தால் எப்படி? அவள் பத்து மணிக்கெல்லாம் நூலகத்திற்கு வந்து விடுவாள்.
கொஞ்சம் தாமதமானால் கூட அவளை பார்க்க முடியாமல் போய்விடும். வருவாள் மூன்று புத்தகத்தை எடுப்பாள் நூலக உறுப்பினர் அட்டையை கொடுத்துவிட்டு சென்றுவிடுவாள். அவளுக்கென்ன நான்தானே அவள் பின்னாலேயே அலைகிறேன். ஆனால் அவள் ஒருமுறை கூட என்னை திரும்பிப் பார்க்க மாட்டிங்கிறாள்.
ஆர அமர ஒரு புத்தகத்தை படித்தால் தான் என்ன? அப்படி என்ன அவசரமோ அவளுக்கு! என்று தன் வாய்க்குள்ளையே முணறிக் கொண்டான். தன் ஒருதலை காதலுக்காக நடக்க ஆரம்பித்தான்.
சிறிது தூரம் தான் சென்றிருப்பான், அதற்குள் நாவறண்டு, தடுதடுப்பிற்கு ஆளானான். காலையில் உணவு உண்ணாமல் வெயிலில் நடந்ததால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து இருக்கலாம்.
இவை எல்லாம் பொருட்படுத்தாமல் வேகமாக நடக்க ஆரம்பித்தான். நாவரண்டு தொண்டை அடைக்க நடந்து கொண்டிருக்கும்போதே சாலையின் ஓரமாக மயங்கி சுருண்டு விழுந்தான்.
மெல்லிய நீர் துளிகள் தன் முகத்தில் படுவதை உணர்ந்தவன் மெல்ல கண்களை திறந்து நிதானமாக எழுந்து அமர்ந்தான். தன்முன் தண்ணீர் பாட்டிலை கையில் வைத்தபடி ஒரு இளம் பெண் நின்று கொண்டிருந்தாள். நன்கு அடர்ந்த கூந்தல், கனமான உடல், மாநிறம் கொண்ட அவள் அவனை விசாரிக்க தொடங்கினாள்.
அவளை பார்த்த இவனுக்கு இவள் உண்மையாகவே பெண்தானா என்ற சந்தேகம் எழுந்தது. அவள் நடை, உடை, பாவனையெல்லாம் இவனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவளின் பேச்சின் மூலம் உறுதிபடுத்திக் கொண்டான் இவள் ஒரு திருநங்கை என்று.
“என்னாச்சு உடம்பு சரியில்லையா” என்ற அவளின் கேள்விக்கு
வேண்டா வெறுப்பாக “காலையில் சாப்பிடல அதான் தலை சுத்தல் வந்து கீழே விழுந்துட்டேன்” என்றான்.
“நான் சாப்பாடு வாங்கி வரட்டுமா” என்று கரிசனையோடு கேட்டாள் அந்த திருநங்கை.
“அதெல்லாம் வேண்டாம் நான் கிளம்புகிறேன்” என்று எழ முற்பட்டான்.
“டீ பிஸ்கட் வாங்கிட்டு வரேன் அதையாவது சாப்பிட்டு போங்க” என்று அவன் மீது பரிவு காட்டினாள்.
அவள் பேசுவதெல்லாம் இவனுக்கு பயத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்து செல்லவே அவனின் மனது துடித்தது. அதற்கு ஒரு காரணமும் உண்டு, நேற்றைய தினம் பேருந்துக்காக காத்திருந்த போது ஒரு திருநங்கை அத்துமீறி தன்னிடம் இருந்த ஐம்பது ரூபாயை பறித்தது மட்டுமல்லாமல், பொது இடத்தில் எல்லோர் முன்னும் தன்னை அசிங்கப்படுத்தினாள்.
அந்த நினைவு வரவே, இவளையும் தவறாகவே நினைத்தவன் உடனே எழுந்து நின்று “உங்க உதவிக்கு ரொம்ப நன்றிங்க” என்றவன் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான்.
“நில்லுங்க” என்று அவனை வழிமறித்தவள், “இந்த தண்ணியாவது குடிச்சுட்டு போங்க” என்று தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்.
இவள் எதுக்கு முன் பின் தெரியாத எனக்கு இவ்வளவு கரிசனை செய்யணும் என்ற சந்தேக பார்வையில் பார்த்தவன், அவளிடம் இருந்து ஏதும் வாங்க கூடாது என்று முடிவு எடுத்தான்.
“இல்ல வேண்டாம்” என்று கூறி முன்னேறி நடந்தான். அவன் சாலையில் மயங்கி விழுந்ததால் அங்கிருந்த மண் அவன் பின்புற சட்டை, பேண்டுகளில் ஒட்டிருந்தது. இதனை கவனித்தவள் அவன் மீது ஒட்டியிருந்த மணலை தன் கையால் துடைத்தாள். இதனை கண்டு இன்னும் பயமுற்றவன் அங்கிருந்து வேகமாக ஓட ஆரம்பித்தான்.
“தம்பி… தம்பி… நில்லுப்பா…” என்று கத்திக்கொண்டே அவன் பின்னால் ஓடி வந்தாள். வேகமாக ஓட ஆரம்பித்தவன் பத்து அடி கூட எடுத்து வைக்க முடியாமல் கீழே விழுந்தான்.
மீண்டும் அவனை எழுப்பி தண்ணீர் கொடுத்து அவனை பரிவாகப் பார்த்தாள். இந்த முறை தண்ணீரை வாங்கி குடித்தான். அவள் மீது ஒரு நல்ல எண்ணம் இவனுக்கு உண்டாகியது.
அவள் கண்ணில் யாரும் அற்ற தனிமையை பார்த்தான். அன்பிற்காக ஏங்கும் இவளின் மனதை புரிந்து கொள்ளாமல், தானும் இவளை அவமதித்தது எண்ணி துயறுற்றான்.
“நான் உங்களை இவ்வளவு அவமதித்தும் நீங்க ஏன் எனக்கு உதவி செய்கிறீங்க” என்றான்.
“ஏனா நீ என் தம்பி டா” என்றவள், தன்னிடம் இருந்த ஐநூறு ரூபாயை அவனுக்கு கையில் கொடுத்தாள். எவ்வளவு மறுத்தும் அவள் விடுவதாக இல்லை. வேறு வழியில்லாமல் அந்த காசை வாங்கி கொண்டான். இந்த உலகையே விலைக்கு வாங்கிய சந்தோஷத்தில் அங்கிருந்து புறப்பட்டாள் அந்த திருநங்கை.
அவள் கொடுத்த ஐநூறு ரூபாய் நோட்டை உத்து பார்த்தவனுக்கு, அவள் சொன்ன வார்த்தை நினைவு வரவே, அங்கேயே அழ ஆரம்பித்தான். போன வருடம் தன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற தன் அண்ணனின் குரலும், அவன் அடிக்கடி சொல்லும் அந்த வார்த்தையும் நினைவுக்கு வந்தது.
“நீ என் தம்பி டா”
எழுத்தாளர் பாலாஜி ராம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings