எழுத்தாளர் பாலாஜி ராம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
காற்றில் அலை மோதாமல் ஒரே நேராக, இருபக்கமும் யானைகள் இருக்க அதன் மத்தியில் தங்ககுடத்தை கையில் வைத்த லட்சுமிதேவி உருவம் பொறிக்கப்பட்ட நெல் விளக்கு ஒன்று ஒரு வயது குழந்தையின் படத்திற்கு முன் எரிந்து கொண்டிருந்தது.
படத்திற்கு முன் வாழையிலை போடப்பட்டு பலகாரங்கள், பழங்கள், இனிப்புகள் படைக்கப்பட்டிருந்தது. பிறந்து ஒரு வருடத்தில் தன் குழந்தையை பறிக்கொடுத்த அந்த பாவி தலையில் முக்காடிட்டபடி அழுது கொண்டிருந்தாள்.
கணவன் தன் மனைவிக்கு ஆறுதல் சொல்லும் விதமாக அவளின் தோளை இறுக பற்றிக் கொண்டிருந்தான். பிறந்த வீடு சொல்லும் அளவிற்கு வசதியில்லை, அதனால் எட்டாம் வகுப்பு வரை படித்திருந்தாள் சாந்தி.
அப்பா அவளுக்கு 19 வயது ஆனதுமே தங்கள் ஊரிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கிராமத்தில் வசித்து வரும் ரகு என்ற வாலிபனுக்கு திருமணம் முடித்து வைத்தார். ரகு படிப்பறிவு இல்லாதவன். தன் பாட்டன் நிலத்தில் விவசாயத்தை தொழிலாக கொண்டவன். விதை விடுவது முதல் அறுவடை செய்யும் வரையிலுள்ள அனைத்து வேலைகளும் இவனுக்கு அத்துபடி.
ரகு, சாந்தி இவர்கள் இல்லற வாழ்க்கை நல்லறமாக இருந்தது. இருப்பினும் குழந்தை பேரு மட்டும் ஒரு குறையாகவே இருந்து வந்தது. இந்தக் குறையை தீர்த்து வைக்க 18 வருடம் தேவைப்பட்டது. காலம் கழித்து பிறந்த குழந்தை என்பதால் கண்ணும் கருத்துமாக பார்த்து வந்தனர்.
குழந்தை பிறந்து ஒரு வருடமானது. இந்த தம்பதியினர் தங்கள் செல்வத்தை இழந்த நாள் வந்தது. அன்று மதிய வேளையில் தன் குழந்தைக்கு சோறு ஊட்டி தூங்க வைத்தாள் சாந்தி. அந்நேரம் தன் வயலில் அறுவடை செய்வதற்காக அறுவடை இயந்திரம் வந்தது.
வயலில் தன் கணவன் இருந்தபோதிலும் அவனுக்கு அறுவடை வேலைகளில் உதவுவதற்காக வீட்டிற்கு பின்புறம் உள்ள வயலுக்கு சென்றாள் சாந்தி. திடீரென கண் விழித்த குழந்தை மெல்ல நகர்ந்து வீட்டின் வாசற்படியை தாண்டி வெளியே வந்தது. ஏதும் அறியாத அந்த பச்சிளம் பாலகன் தண்ணீர் முழுவதும் நிரப்பப்பட்டிருந்த பெரிய அன்னக்கூடையில் தவறி விழுந்தது.
குழந்தை நீரில் முழுவதும் மூழ்கியது. அந்த குழந்தை தண்ணீரை அதிகம் குடிக்க ஆரம்பித்ததோடு, மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து போனது.
இன்று, அந்த குழந்தை இறந்து ஒரு வருடமாகிறது. நீண்ட நேரம் குழந்தை படத்திற்கு முன் அழுது கொண்டிருந்த சாந்தியை சமாதானபடுத்தி சாப்பிட வைத்தான் ரகு. பிறகு, சென்னையில் வசிக்கும் தன் மாமா மகள் சொன்ன யோசனையை மனைவியிடம் சொன்னான் ரகு.
“குழந்தை இல்லாமல் பல வருடம் கழித்து நமக்கு அந்த பாக்கியம் கிடைத்தது. அதுவும் எந்த புண்ணியம் தராது போனது. எத்தனை நாள் தான் இதே நினைப்போடு இருப்பது, அதனால நாம் வேறு குழந்தையை பெத்துக்கலாம்” என்றான்.
“அது எப்படிங்க முடியும்? குழந்தை பிறந்து உடனே கர்ப்பப்பை பலவீனமாக இருக்கு அடுத்த கருவை தாங்கும் சக்தி உனக்கு இல்லை என்று, குடும்ப கட்டுப்பாடு செய்து விட்டார்களே” என்று குமுறினாள்.
“அதுக்கு ஒரு வழி இருக்கு. சென்னையில் இருக்க என் மாமா மகள் வீட்டுக்கு பக்கத்திலேயே ஏதோ கருத்தரிப்பு மையம் என்று ஒன்று உள்ளதாம். அங்கே போனால் குழந்தை கண்டிப்பாக பிறக்குமாம், வா… சாந்தி அங்கு போய் பார்ப்போம். எனக்கு பிறகு இந்த வீடு, நிலத்தை ஆள எந்த ஒரு வாரிசும் இல்லாமல் போனால் எப்படி?” என்று மனம் நொந்து பேசினான். மறுநாளே சென்னையை நோக்கி பயணித்தனர்.
குடும்ப கட்டுப்பாடு செய்தவர்களுக்கு கூட கருப்பப்பையை திருப்பி போட்டு பலருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்திருக்கு, உங்களுக்கும் குழந்தை பிறக்கும் என்ற அந்த கருத்தரிப்பு மையத்தின் வார்த்தைகள் இருவருக்கும் நிம்மதியை அளித்தது. சந்தோஷத்தில் இருவரும் பறந்தனர்.
அறுவை சிகிச்சை செய்ய இரண்டு லட்சம் தேவைப்படும் என்றது அந்த மையம். தான் இதுவரை சேர்த்து வைத்திருந்த பணத்துடன் தங்களிடம் உள்ள நகைகளையெல்லாம் விற்று பணமாக்கி கொண்டு வந்தனர் அந்த தம்பதியினர்.
அறுவை சிகிச்சையும் நல்ல விதமாக நடந்து முடிந்தது. உள்காயம் ஆற ஆறு மாதமாகும். அதன் பிறகு, கரு கண்டிப்பாக உருவாகும் என்று உறுதி தந்தது கருத்தரிப்பு மையம். உள்காயம் ஆறுவதற்கு மாதமாதம் மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிட வேண்டும், இதற்கு மாதம் 5000 ரூபாய் செலவாகும் என்றது அந்த மையம். அவர்கள் சொன்னதையெல்லாம் முறையாக பின்பற்றி வந்தனர். மூன்று வருடம் ஆகியும் கரு தங்கவில்லை.
செயற்கைமுறையில் கரு கருத்தரிக்க முடியும். உங்கள் உயிர் அணுக்களை உங்கள் மனைவியின் கருப்பையில் வைத்து அறுவை சிகிச்சை செய்தால், குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்று ஆசையை மீண்டும் தூண்டியது அந்த கருத்தரிப்பு மையம்.
தங்களுக்கு குழந்தை பிறக்கும் என்ற ஆசையில் இருந்தனர் அந்த தம்பதியினர். ஐந்து லட்சம் செலவாகும் என்றது அந்த கருத்தரிப்பு மையம். ஐந்து லட்சத்திற்கு வழியில்லாதவன் வாரிசின் மீதான ஆசையால் தன் சொத்துக்களை விற்று பணம் எடுத்துக்கொண்டு தன் மனைவியை சிகிச்சைக்கு அழைத்து வந்தான்.
சிகிச்சையும் நல்ல வண்ணம் முடிந்தது. இந்த மாதம் கண்டிப்பாக கரு தங்குமென்று வாக்களித்தது கருத்தரிப்பு மையம். அதற்கு மாறாக இந்த மாதமும் மாதவிடாய் வந்தது. தீராத குழந்தை மேலிருந்த ஆசை நிற்கதியானது.
“எங்களால் முடிந்த வரை அனைத்து சிகிச்சையும் செய்தோம். ஆனால் கரு நிற்கவில்லை, இனி கடவுள்தான் உங்களுக்கு துணை” என்று கை விரித்தது கருத்தரிப்பு மையம்.
தனக்கு வாரிசு கிடைக்கும் என்ற ஆசை ஏமாற்றத்தை தந்ததை ஏற்க முடியாமல் தன் வயிற்றை வேகமாக குத்திக்கொண்டு அழுதாள் சாந்தி. நகை, பணம், சொத்தையெல்லாம் இந்த கருத்தரிப்பு மையத்திற்கு மொய் எழுதிவிட்டு வீட்டிற்கு திரும்பினர் இந்த ஏழை தம்பதியினர்.
“எனக்கு நீ.. உனக்கு நான்.. என்று காலம் முழுதும் வாழ்ந்து இருக்கலாம். அதை விட்டுவிட்டு எங்கெங்கோ சென்று உடலை கெடுத்து, பணத்தை விட்டதுதான் மிச்சம், இனி நமக்கென்று எந்த குழந்தையும் வர போவதில்லை” என்று இதுநாள் வரை அடக்கி வைத்திருந்த தன் மனக்குமுறலை கொட்டித் தீர்த்தான் ரகு.
“இல்ல நமக்கு பிறகு நம்மை பாத்துக்க ஒரு வாரிசு வரும்” என்றாள் சாந்தி. “இனியும் நீ நம்புறியா சாந்தி…”
“ஆமாங்க இது நடக்கும்” என்றாள்.
மறுநாள், இருவரும் சென்னையை நோக்கி பயணித்தனர். பலரை விசாரித்து ஒரு கட்டிடத்திற்குள் நுழைந்தனர். அந்த கட்டிடத்திற்கு மேல் “அன்பு கரங்கள் அனாதை இல்லம்” என்று எழுதியிருந்தது.
எழுத்தாளர் பாலாஜி ராம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings