எழுத்தாளர் பாலாஜி ராம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சோகமே வடிவமாய் நின்று கொண்டிருந்தவள் தான் செல்லும் பேருந்து வந்ததும் ஏறி, இருவர் அமரும் இருக்கையின் சன்னலோரத்தில் அமர்ந்தாள் ஜானகி. தன் அருகில் வேறொரு பெண் வந்து அமர்ந்தது கூட தெரியாமல் ஏதோ ஒரு ஆழமான சிந்தனையில் தன்னையே ஆழ்த்தி மனவேதனைக்குள்ளானாள்.
அவள் சிந்தனைக்குள்ளே ஆயிரம் கேள்விகள்? இன்று காலையில் தான் வேலை செய்யும் கம்பெனிக்குள் நுழையும்போதே, மேனேஜர் மாதவன் செய்த செயல் ஜானகியை மிகவும் சங்கடத்திற்குள்ளாகியது.
மேனேஜர் மாதவனுக்கு கீழ் ஜானகியும், சீத்தா என்ற வேறொரு பெண்ணும் வேலை செய்கிறார்கள். இருவரில் ஜானகியை மட்டும் அதிகம் வேலை வாங்குவது, எப்போதும் வசை பாடுவது, அவசரத்திற்கு விடுமுறை தராமல் இருப்பது போன்ற பாகுபாடுகளை பார்த்தான் மாதவன். இதற்கு ஒரு காரணமும் உண்டு.
சீத்தா வேலைக்கு சேர்ந்தது முதல் மாதவனுக்கு அவள் மீது ஒரு கண். எவ்வளவு கெஞ்சி பார்த்தும் இவனது காதலை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்காக சீதாவை கவரும் வகையில் பல செயல்களை செய்தான்.
இருந்தாலும் இதற்கெல்லாம் சீத்தா மசிவதுபோல் தெரியவில்லை. சில நேரங்களில் மாதவன் செயலால் மனவேதனை அடையும் சீத்தாவிற்கு மனதைரியம் ஊட்டி ஆறுதல் வழங்குவது ஜானகி தான்.
இதனை பார்த்த மாதவன், ஜானகிதான் தன் காதலுக்கு எதிரியாக உள்ளாள் என்று தவறாக புரிந்து கொண்டு அவளை கஷ்டப்படுத்த ஆரம்பித்தான். ஆனால் இன்றோ அவனின் செயல் மிகவும் மோசமாக இருந்தது.
என்றும் இல்லாது இன்று வேலைக்கு தாமதமாக வந்தாள் ஜானகி. அதை போல் என்றும் இல்லாது இன்று சீக்கிரமாகவே வந்தான் மாதவன். எப்போதும்போல் ஜானகி மேல் வெறுப்பு காட்டுபவன் இன்று அவளின் உருவத்தை கேலி செய்யும் அளவிற்கு பேசினான். அவளின் மனது சற்று பலமாகவே பாதித்தது.
“உன் உருவத்திற்கு வேகமா நடந்து வந்தால், பூமி அதிரும்னு பொறுமையா வந்தியா” இந்த சொல் அவள் மனதில் மீண்டும் மீண்டும் ஒளித்தது.
“நிறம், வடிவம், அழகு இதெல்லாம் நாமே தேடிக் கொள்வதா என்ன? அந்தப் பாவி கடவுள் ஒருவனை ஒல்லியாகவும் மற்றொருவனை குண்டாகவும் படைத்திருக்கானே அவனை சொல்லணும், அவன் தானே என் வசதியை குறைச்சி, என் உடலை பெருத்தும் படைச்சிருக்கான்” என்று அந்தக் கடவுளை நொந்து கொண்டவள் பேருந்து சன்னலில் சாய்ந்தாள்.
அவள் மீது ஒரு கரம் படுவதை மெல்ல உணர்ந்தவள், அந்தக் கரம் அருகில் அமர்ந்திருந்த பெண்ணின் கரம் என்று தெரிந்து அவளைப் பார்த்து, “என்ன வேண்டும்?” என்றாள் ஜானகி.
“ஒரகடம் ஊரு வர எவ்வளவு தூரம் இருக்கு?” என்று வினவினாள் அந்த பெண்.
“அடுத்த ஸ்டாப்பிங் ஒரகடம் தான்” என்றாள் ஜானகி.
“நீ எந்த ஊரு?” என்று பேச்சை வளர்த்தாள் அந்தப் பெண்.
“நான் ஒருத்தி போகணும், நீங்க இறங்கின அடுத்த ஸ்டாப்பிங் தான் நான் இறங்குவேன்” என்று பதில் அளித்தாள் ஜானகி.
மீண்டும் தன் கேள்விகளை தொடர்ந்தாள் அந்தப் பெண்.
“உன் பேரு என்ன?”
“என் பேரு ஜானகி”
“நீ என்ன பண்ற?”
“நான் வேலைக்கு போகிறேன், சரி இதெல்லாம் நீங்க எதுக்கு கேக்குறீங்க?” என்றாள் ஜானகி.
“எதுக்கு வாங்க போங்கன்னு பேசுறீங்க எனக்கும் உங்க வயசு தான் இருக்கும் வா! போ! என்றே பேசுங்க என்னை மாதிரி” என்று அந்த பெண் சொன்னதும் பேருந்து நின்றது.
“இதுதான் நீங்க இறங்க வேண்டிய ஒரகடம் ஸ்டாப்பிங்” என்றாள் ஜானகி.
“சரி நான் இறங்குறேன் அதுக்கு முன்னாடி ஒன்னு சொல்லணும், நீங்க அழகா இருக்கீங்க என் அக்காவை போல!” என்று சொன்னவள் வேகமாய் இருக்கையை விட்டு எழுந்து சென்றாள்.
இந்த சொல் ஜானகியின் மனதை இலகுவாக்கியது. திடீரென்று நினைவு வந்தவளாய் “உன் பேரு என்ன?” என்று அவளுக்கு கேட்கும் படியாக சத்தமாக கேட்டாள்.
“மாதவி” என்று பதில் சொல்லிக்கொண்டே பேருந்தை விட்டு இறங்கி சென்றாள். பேருந்து மெல்ல நகர்ந்தது. அவள் சொன்ன வார்த்தைகள் ஜானகி மனதை மாற்றியது.
மாதவனின் சொல்லால் காயப்பட்டவள் மாதவியின் சொல்லால் குணமடைந்தாள். வழிபோக்கில் வந்தவள் தன் மனவலியை தீர்த்து சென்றாள். பழமையெல்லாம் தூக்கி எறிந்தவளாய் தன் மனதில் புதுமையை நுகர்ந்தாள் ஜானகி.
எழுத்தாளர் பாலாஜி ராம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings