in , ,

அரூபன் (இறுதிப் பயணம்) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

கோவை இரயில் நிலையத்தில் சென்னை போகும் ரயிலுக்காகக் காத்திருந்தான் சஜி ஜேக்கப்.  எர்ணாகுளத்திலிருந்து பஸ்சில் திருச்சூர் வந்து திருச்சூரிலிருந்து பஸ்சில் பாலக்காடு வந்து பாலக்காட்டிலுருந்து பஸ்சில் கோவை வந்து சேர்ந்து கோவையில் சென்னை செல்லும் ரயிலுக்குத்தான் இந்தக் காத்திருப்பு.  

அந்த நேரத்தில் அன்ரிசர்வ்டு பெட்டியில் கூட்டம் அதிகம் இல்லை. உட்காருவதற்கு இடம் கிடைத்தது. நீண்ட நேரப் பயணம் அவனைக் களைப்படையச் செய்திருந்தது. பிரயாணத்தில் பேண்ட்டும் சட்டையும் ஆங்காங்கே கசங்கியிருந்தது.  

எங்கும் தாமதிக்காமல் பயணம் செய்ததால் எதுவும் சாப்பிடக்கூட இல்லை.  நல்லவேளை இரயில் சேலம் வந்தபோது தோசை விற்பவரிடம் இரண்டு தோசை வாங்கிச் சாப்பிட்டு வயிற்றை நிரப்பினான்.  பசித்துச் சாப்பிடும்போது கிடைக்கும் நிறைவை வாழ்வில் முதன் முறையாக அனுபவித்தான்.  பக்கத்தில் இருந்தவருக்கு பொழுது போகவில்லை போலும்.

‘எங்க தம்பி?  சென்னைக்கா?’ என்றார்.

‘அதே’ என்றான் சஜி.

‘ஓ மலையாளியா? எண்ட பேரு பாலகிருஷ்ணன், நாடு பாலக்காடு. தாமசம் சென்னையில்’ என்றார். 

அவர் அவன் பெயர், ஊர், குடும்பம் பற்றி விசாரித்தார்.

‘ஊர் எர்ணாகுளம்… அப்பா ஒரு கார்பெண்டர்.. எனக்கு ஒரு அக்கா, இரண்டு தங்கைகள். அக்காவுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. தங்கைகள் இரண்டு பேரும் படிக்கிறாங்க. எனக்கு படிப்பு வரலை. ஒரு வருசமா அச்சனுக்கு உடம்பு சரியில்லை. வருமானம் இல்ல. அதனால சென்னைக்குப் போய் ஏதாவது வேலை தேடுவதற்குத்தான் போய்க் கொண்டிருக்கிறேன்.’

‘உனக்கு சென்னையில யாரையாவது தெரியுமா? என்ன வேலை தெரியும்?’ என்றார் பாலகிருஷ்ணன்.

‘எனிக்கு யாரும் அறியில்லா சாரே… டிரைவிங் தெரியும். ஆனா லைசன்ஸ் மிஸ் ஆயிடுச்சு’ என்றான் சஜி.

‘என்னப்பா.. சென்னையில யாரையும் தெரியாம இப்படி சட்டுனு கிளம்பி வந்துட்டே. லைசன்ஸ் வேறே இல்லைங்றே.. ம்’ என்றார் பாலகிருஷ்ணன்.  சஜியைப் பார்க்க பாவமாக இருந்தது அவருக்கு.

‘சரி.. ஒரு காரியம் செய்யலாம். நான் சென்னையில ஒரு டிராவல்ஸ் கம்பெனி வச்சிருக்கேன்.  கம்பெனில ஒரு ரூம் இருக்கு.  அதுல தங்கிக்க.. கொஞ்சம் பணம் செலவு பண்ணினா ஒரு மாசத்தில லைசன்ஸ் எடுத்திடலாம். இரண்டாயிரம் வரை செலவாகும். பரவாயில்லயா?  காசு இருக்கா?’ என்றார்.

‘பைசா கொண்டு வந்துட்டுண்டு.. வளர நன்னி சாரே’ என்றான் சஜி. 

சொன்னபடியே பாலகிருஷ்ணன் ஒரு மாதத்தில் சஜிக்கு லைசன்ஸ் எடுத்துக் கொடுத்து விட்டுச் சொன்னார், ‘என் தம்பி பெங்களூரில் கார் மெக்கானிக் ஷாப் வைத்துள்ளான். நல்ல டிரைவர் வேலைக்கு வேணும்னு அவன்கிட்ட‌ இரண்டு மூணு பேர் கேட்டிருக்காங்லாமா.. பெங்களூர் போறியா?’ என்றார்.  

‘வளர நன்னி சாரே’ என்றான் சஜி.

எல்லப்பாவின் அறையில் நுழைந்து வணக்கம் சொன்னான் சஜி.

‘சார், கார் மெக்கானிக் கோபாலன் அனுப்பினார்.  கார் ஓட்ட டிரைவர் வேணுமின்னு சொல்லியிருந்தீங்ளா? ‘.

‘ஆமாப்பா.. எனக்குத்தான் வேணும். சின்னப்பையனா இருக்கே.. நல்லா ஓட்டுவாயா?’ என்றார். 

கேரளாவுக்கே உரிய சிவந்த நிறம். மெல்லியதாக‌ அரும்பிக் கொண்டிருக்கும் மீசை. வலது புறம் வகிடெடுத்து அடக்கமாகத் தலை வாரியிருந்தான் சஜி.  

‘அதே சார்.  ரெண்டு கொல்லம் எக்ஸ்பீரியன்ஸ் உண்டு’ என்றான்.

‘ஓ.. கேரளாவா?  கேரளத்தில் எங்கே?’ என்று அவனின் பேர், ஊர் பற்றி விசாரிக்கத் தொடங்கினார் எல்லப்பா.

டீ வாங்கி வந்த கங்காதர் எல்லப்பாவுக்கும், டைப் அடித்துக் கொண்டிருந்த குமரனுக்கும் டீ கொடுத்தான்.  நின்று கொண்டிருந்த சஜிக்கு டீ கொடுக்கும்போது, ‘வேண்டா, ஞான் குடிக்கில்லா’ என்று மறுத்தான் சஜி.

‘சஜி, இந்தா சாவி.. கீழே நிக்கிற காரை எடுத்து ஓட்டிப்பார். ஹார்ன் சரியா அடிக்கல. தெரியும்னா அதையும் செக் பண்ணு.  கங்காதர், நீனு சஜி ஜதைக்கு ஹோகி பா’ என்றார். 

கீழே கார் புறப்படும் ஒலி கேட்டது. ஐந்து நிமிடம் விட்டு கங்காதரும், சஜியும் மேலே வந்தனர்.  

‘ஹார்ன்க்கு போற ஒயர் லூசா இருந்தது சார்.  இப்ப சரியாயிட்டு உண்டு’ என்றான் சஜி. எல்லப்பா கங்காதரைப் பார்த்தார்.  

குறிப்பறிந்து சொன்னான் கங்காதர்,  ‘சென்னாகி ஓட்டுத்தாரே சார்’.

‘சஜி.. காலையில் எட்டு மணிக்கு இரண்டு குழந்தைகளை ஸ்கூல்ல கொண்டு போய் விடணும். அடுத்து இரண்டு குழந்தைகளை எட்டே முக்கால் மணிக்கு வேறொரு ஸ்கூலில் கொண்டு போய் விடணும். பத்து மணிக்கு என்னை இங்கே ஆபீஸில் கொண்டு வந்து விடணும். இடையில் வீட்ல அம்மா கூப்பிட்டா கடைக்கு போய் வரணும். லஞ்சுக்கு என்னை வீட்ல கொண்டு போய் விடணும். சாயங்காலம் குழந்தைகளை ஸ்கூலில் இருந்து கூட்டி வரணும். இத்தனை நாள் நானே ஓட்டிக் கொண்டிருந்தேன். இப்ப வேலை ஜாஸ்தி ஆயிடுச்சு. என்னால‌ முடியல. மற்றபடி அம்மாகிட்ட கேட்டா இன்னும் உன் வேலை பற்றி விவரமா சொல்லுவாங்க. சம்பளம் அதிகம் கொடுக்க முடியாது. இப்போதைக்கு மாதம் முன்னூறு ரூபாய் வாங்கிக்க… கொஞ்ச நாள் கழித்து பார்க்கலாம்’ என்றார்.

யோசிக்காமல் ‘சரி’ என்றான் சஜி. 

மூவர் கூடல்……….

வேலைக்குச் சேர்ந்து இரண்டு நாட்கள் கழித்து, குமரனும், கங்காதரும் இருக்கும் இடத்திற்கு வந்தான் சஜி.  இந்த இரண்டு நாட்களுக்குள் அவன் மேல் மெல்லிய நட்பும், மரியாதையும் உருவாயிருந்தது இருவருக்கும்.

‘நீங்க ரெண்டாளும் ஒரே முறியிலா தாமசம்?’ (நீங்க இரண்டு பேரும் ஒரே ரூமிலா குடி இருக்கீங்க?) என்றான் சஜி.

ஆம் என்றவுடன், ‘நானும் உங்களோட‌ சேர்ந்து கொள்ளட்டுமா? வாடகை ஷேர் செய்யலாம்’ என்றான்.  கங்காதரின் கண்களில் ஒரு ஆசையின் ஒளி வந்து போனது.

‘அது… வீட்டு ஓனர் அட்வான்ஸ் கேட்பாரே?’ என்று புளுகினான்.  

‘ஞான் கொடுக்கும்’ என்று கூறி பேண்ட் பாக்கெட்டிலிருந்து நூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தான் சஜி.        

‘காசு வேண்டாம்… பாவம்’ என்ற‌ குமரனின் ஆட்சேபணைகளை லட்சியம் செய்யாமல் ரூபாயை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டு கேட்டான் கங்காதர், ‘ ரூமுக்கு எப்ப வர்ரே?’.

‘நன்னி.. வர்ர‌ ஞாயிறாழ்ச்சம் வர்ரேன்’ என்றான் சஜி நிம்மதிப் பெருமூச்சுடன். ரூமுக்கு ரொம்ப அலைந்திருப்பான் போலும்.

சஜி கொடுத்த பணத்தில் ஒரு பகுதி, அன்று இரவு தாக சாந்தி செய்து கொள்ளவும், பிரியாணி சாப்பிடவும் உதவியது. கொஞ்சம் மீறியதும், வழக்கம்போல‌ ‘குமரா… நன் லஷ்மி நன்ன பிட்டு ஹோகிபிட்டவளே.. நானு ஏன் மாடலி?’ என்று கண்ணீர் விடத் தொடங்கினான் கங்காதர்.  ஒரு வழியாக அவனைப் படுக்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது குமரனுக்கு.

சொன்னது போலவே ஞாயிற்றுக்கிழமை வந்து அந்த இருவரோடு மூன்றாவதாக அவர்களின் ஜோதியில் சங்கமம் ஆனான் சஜி. வந்த ஒரு வாரத்திற்குள் ரூமில் பல மாற்றங்களைச் செய்தான்.

துணியை வெளியில் காசு கொடுத்து தேய்க்க வேண்டாம் என்று ஒரு அயர்ன் பாக்ஸ் வாங்கினான்.  துணிகளை துவைத்துக் காயப் போடுவதற்காக மாடியில் ஒரு தூக்கு கட்டினான். ஒரு புதிய மண்ணெண்ணய் ஸ்டவ்வும், அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களும் வாங்கி அறையில் சமைக்கத் தொடங்கினான்.

கங்காதரும், குமரனும் வெங்காயம், காய்கறி வெட்டுதல், பாத்திரம் கழுவுதல் போன்ற வேலைகளைச் செய்து தங்களின் பங்களிப்பைச் செய்தனர். காலையில் நேரத்தில் எழுந்து, குமரனுக்கும், கங்காதருக்கும் டீ போட்டு வைத்துவிட்டு, சமையலைத் தொடங்கினால் ஏழு மணிக்குள் சமையல் முடிந்து விடும்.  

குளித்து விட்டு வந்து ஜீசஸின் முன்பு பிரேயர் செய்வான். முன்பு ராகவேந்திரரும், முருகனும் இருந்த இடத்திற்குப் பக்கத்திலேயே ஜீசஸும் வந்து அமர்ந்து கொண்டார். மூன்று தெய்வங்களும் எல்லா விதமான வழிபாடுகளுக்கும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டனர்.  

பிரேயர் முடிந்ததும் அவசரமாக அவசரமாக சாப்பிட்டுவிட்டு, மூன்று பேருக்கும் மூன்று டிபன் பாக்ஸில் பகல் உணவு போட்டு வைத்து விட்டு முதலாளி வீட்டுக்கு எட்டு மணி டூட்டிக்குக் கிளம்பி விடுவான்.

கங்காதரும், குமரனும் அதே போல் குளித்து, சாப்பிட்டுவிட்டு, மதிய உணவு எடுத்துக் கொண்டு ஒன்பது மணிக்குள் ஆபீஸ் போய் விடுவார்கள்.  முன்பு போல் காசில்லாமல் ஒரு சித்திரான்னம் ஹோட்டலில் வாங்கி பாதி பாதி பங்கு போட்டு மதிய உணவு சாப்பிடும் அவலம் கங்காதருக்கும், குமரனுக்கும் (சஜியின் புண்ணியத்தால்) வரவில்லை.  

இரவு உணவாக உப்புமா, தோசை அல்லது சப்பாத்தி என்று சஜியே தயார் செய்து விடுவான். முன்பு போல் மாதக்கடைசியில் பட்டினி கிடக்காமல் மாதம் முழுதும் மூன்று நேரமும் வயிற்றுக்கு உணவு கிடைத்தது.

இப்படியே இரண்டு மாதம் போனவுடன் சட்ட திட்டங்களைக் கடுமையாக்கினான் சஜி. அதாவது ரூமில் யாரும் புகைக்கக் கூடாது. மாதம் ஒரு முறை மாத்திரம் மது அருந்தலாம். ஒரு முறை மட்டும் சினிமா மற்றும் ஹோட்டலுக்குப் போகலாம்.  சம்பளத்தை அவன் கையில் கொடுத்து விட வேண்டும்.  மாதச் செலவுக்கு பாக்கெட் மணி

அவன் கொடுத்து விடுவான்.  குடும்பச் செலவு முழுவதும் சஜி ஏற்றுக்கொள்வான். இந்த ஏற்பாடு இருவருக்கும் வசதியாகப் படவே குமரனும், கங்காதரும் ஒப்புக்கொண்டனர்.  

அது மட்டுமல்லாது சஜியை அந்த இருவரும் குடும்பத்தின் கடைக்குட்டித் தம்பியைப் பார்ப்பது போலவே பார்த்தார்கள். வயதில் சிறியவனாக இருந்தாலும், அவனின் கட்டளைகளுக்குக் கட்டுப்படுவதில் ஒரு சுகம் இருக்கவே செய்தது… ஒரு தாயின் கண்டிப்பைப் போல.

இடையிடையே ஞாயிற்றுக்கிழமைகளில் லஷ்மிக்குத் தெரியாமல் கங்காதரின் கொழுந்தியாள்கள் கங்காவும், யமுனாவும் ரூமுக்கு வருவார்கள்.  சஜி வைக்கும் சாம்பார் வாசனையை முகர்ந்து கொண்டு, ‘ஏனு சாரு நிம் மனையல்லி? வாசனெ சென்னாகிதே?’ என்று பாத்திரத்தை ஆராய்ச்சி செய்வார்கள்.  

கங்காதர் வாயெல்லாம் பல்லாக, ‘லஷ்மி ஹாக ஈதாளே?’ (லஷ்மி எப்படி இருக்கிறா?) என்பான் வெட்கமில்லாமல். 

ஒரு நாள் கெளரி கேட்டாள், ‘நிம்மள்ளி ஒப்று தமிழு, ஒப்று கேரள், ஒப்று கன்னடா.  நீவு மூரு ஜனா மாத்தாடுவாக யாவு பாஷையல்லி மாத்தாடுத்தீரா?’ (உங்களில் ஒருவர் தமிழ், ஒருவர் கேரளா, ஒருவர் கன்னடம்.  நீங்க மூணு பேரும் பேசும்போது என்ன பாஷையில் பேசுவீங்க?).

‘தமிழல்லி’ என்றான் கங்காதர். கெளரியை வெறுப்பேற்றுவதற்காகவே கூவினான் குமரன்,

‘தமிழ் வாழ்க..’.   

‘இர்ரீ .. வாட்டாள்  நாகராஜத்தர ஹேளுத்தினி ‘ என்றாள் கெளரி கடுப்புடன்.

போகும் போது அவர்களுக்கு சூடேற்ற வேண்டி, கெளரி ராஜ்குமாரின் பாட்டை பாடிக் கொண்டே சென்றாள்,  ‘ கன்னடதா மக்களெல்லா ஒந்தாக பண்ணி..’. 

ஒரு நாள் மூவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது சஜி சொன்னான், ‘இப்ப இருக்கும் கங்கா அம்மா முதலாளிக்கு இரண்டாவது சம்சாரம்.. தெரியுமா? ‘ என்றான்.  

‘முதல் சம்சாரத்தின் பெயர் ‘ரூபவாணி’. அவர் பெயரில்தான் ஃபேக்டரி வைத்தார். இரண்டாவது குழந்தை பிரசவத்தில் ரூபவாணி மேடம் மரிச்சுப் போயி. முதலாளி மறுபடி கங்கா மேடத்தை கல்யாணம் கழிச்சு. கங்கா மேடம் தெலுங்கு.  வேலை கேட்டு ஃபேக்டரி வந்தப்போ லவ் ஆயி முதலாளி கல்யாணம் கழிச்சு’ என்றான் சஜி.

‘இதெல்லாம் உனக்கு எப்படிடா தெரியும்? ‘ என்றான் குமரன்.

‘பெயிண்டர் மணி அண்ணன் பறஞ்சு. மணி அண்ணன் ரூபவாணி மேடத்திற்கு சொந்தமாம்’ என்றான்.

‘கங்கா மேடம் வளர‌ மோசம் கேட்டோ. முதலாளி வெளியூர் போகும்போதெல்லாம், ஆந்திராவிலிருந்து அவரோட சேட்டன் வரும். பை நிறைய பணம், பொருள் எல்லாம் போட்டுக் கொடுத்து ஆந்திராவுக்கு அனுப்பும். நாந்தான் பஸ் ஸ்டேண்ட்ல அவரோட சேட்டனக் கொண்டு போய் விடும். பாவம்.. முதலாளி காசு இப்படிப் போகுது’ என்று பரிதாபப்பட்டான் சஜி. 

இப்படியாக காலம் போய்க் கொண்டிருக்கும்போது, அடுத்த‌ ஒரு வாரத்தில் தீபாவளி வர இருந்தது. அப்பொழுதே துணிக் கடைகளும், பட்டாசுக் கடைகளும் பெங்களூரில் களை கட்டத் தொடங்கின‌.

அந்த ஞாயிற்றுக்கிழமை கங்காதரையும், குமரனையும் கூட்டிக் கொண்டு நகரத்தில் இருந்த பெரிய ஜவுளிக்கடைக்குச் சென்றான் சஜி.  

‘தீபாவளிக்கு ஆளுக்கு ஒரு சர்ட்டும், பேண்டும் எடுத்துக்குங்க’ என்றான்.

அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் கங்காதர் கேட்டான், ‘காசு?’.

‘இத்தனை நாள் நம்ம எல்லாரோட சம்பளத்திலும் நான் மிச்சம் பிடிச்சு வச்ச காசு இருக்கு. இது மாத்திரம் அல்ல.  தீபாவளி அன்றைக்கு ரிலீசாகும் சினிமாவுக்கு நம்ம மூணு பேரும் போகிறோம்.  ஹோட்டலில் நல்லா சாப்பிடறோம். அன்னிக்கு ராத்திரி.. உங்களுக்குப் பிடிச்ச மாதிரி தண்ணி அடிச்சு கொண்டாடறோம்.  சரியா?’ என்றான்.

சிறுவர்களைப் போல தீபாவளி வரும் நாட்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர் அம்மூவரும். எந்தச் சினிமா பார்ப்பது என்று ஒரு கேள்வி வந்த போது கொஞ்சம் தடுமாற்றம் வந்தது.  

கங்காதர் ஹிந்தி சினிமா விரும்பிப் பார்ப்பான். முக்கியமாக அமிதாப் படம். அந்த தீபாவளிக்கு அமிதாப்பின் ‘டான்’ பார்க்கலாம் என்றான்.  

சஜியோ ஏதாவது தமிழ்ப் படம் போகலாம் என்றான்.  கமல் ரசிகன் அவன். கமலின்  ‘குரு’ தீபாவளி ரிலீஸ். அதைப் பார்க்க அவனுக்கு ஆசை. குமரனுக்கு மோகன்லால் என்றால் மிகவும் பிடிக்கும்.  

‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’ தீபாவளி ரிலீஸ் பார்க்க அவனுக்கு ஆசை. இந்தக் குழப்பத்திற்கு ஒரு வழி கண்டு பிடித்தான் சஜி. சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்ததில் ‘டான்’ வந்தது.  முதல் நாளே போய் அட்வான்ஸ் புக்கிங் செய்துவிடுவதாக கங்காதர் மகிழ்சியுடன் ஒப்புக்கொண்டான்.

தீபாவளிக் கொண்டாட்டம் எல்லாம் கழிந்து அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சஜி சமையல் செய்து கொண்டிருக்க, கங்காதர் காய் வெட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கும் போதுதான் அவர்கள் அறைக்கதவு ‘படபட’ வெனத் தட்டப்பட்டது.

குமரன் போய்க் கதவைத் திறந்தவுடன், அவனை நெட்டித் தள்ளிக் கொண்டு மூன்று பேர் உள்ளே நுழைந்தனர்.  வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, சிவந்த நிறம், நல்ல உயரம்.. பார்ப்பதற்கு மூன்று மம்முட்டிகள் நிற்பது போலவே இருந்தது. அவர்களைப் பார்த்ததும் திடுக்கிட்டு எழுந்து நின்றான் சஜி.

‘ம்.. புறப்படு.. பூவாம்’ என்றார் ஒரு மம்முட்டி. சஜியை மிரட்டுவதைப் பார்த்ததும் கங்காதரும், குமரனும் அவர்களைத் தடுக்க முயன்ற போது சஜி குறுக்கிட்டான், ‘அவர்கள் என் மாமன்கள்’ என்றான்.  

சிலைபோல் கங்காதரும், குமரனும் நின்றுகொண்டிருக்க, சஜி ஒரு பையில் தன் துணிமணிகளை அடைத்துக் கொண்டு கிளம்பினான். கிளம்பும்போது முதலாளியின் கார் சாவியை குமரனின் கையில் திணித்தான். கூடவே ஒரு கசங்கிய விசிட்டிங் கார்டும் கொடுத்தான் யாருக்கும் தெரியாமல்.

முன்னாள் ஒரு மம்முட்டியும் நடுவில் சஜியும் பின்னால் இரண்டு மம்முட்டிகளும் செல்ல, வெட்ட இழுத்துச் செல்லப்படும் ஒரு ஆட்டுக்குட்டியைப் போலச் சென்றான் அவர்களின் குட்டித்தம்பி.  

எட்டிப் பார்த்தபோது, கீழே இரண்டு விலையுயர்ந்த படகுக் கார்கள் நின்றிருந்தன. சஜியை ஏற்றிக் கொண்டு நொடியில் இரண்டு கார்களும் பறந்தன.  இது அத்தனையும் ஒரு ஐந்து நிமிடத்துக்குள் சினிமாவில் நடப்பதைப் போல நடந்து முடிந்துவிட்டது.  

சஜி இல்லாமல் அடுத்து வந்த நாட்கள் வெறுமையாகக் கழிந்தன. புரியாமல் அவன் அடிக்கடி கேட்கும்  ‘எந்த? எந்த?’ என்ற கேள்விகள் அறையில் எல்லா திசைகளிலும் எதிரொலிப்பது போலவே இருந்தது.  

ஜீசஸ் மாத்திரம் சஜியோடு போகாமல் எங்களோடு தங்கி விட்டார்.  ஒருவேளை முருகனின் நட்பும், ராகவேந்திரரின் நட்பும் அவருக்கு பிடித்து விட்டதோ என்னவோ?

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் கங்கா, யமுனா சகோதரிகள் வேறு,  ‘கேரளா ஒட்டோயுத்து, தமிழ்நாடு யாவாக ஹோகுவது?’ (கேரளா போயிடுச்சு, தமிழ்நாடு எப்போ போவது?) என்று கலாய்த்தனர்.  

ஆபீஸிலும் நிலைமை மாறத் தொடங்கி விட்டது. ஆர்டர்கள் குறையத் தொடங்கியது. ஆர்டர் கொடுக்கும் அதிகாரிகளுக்கு எல்லப்பா சரியாக கமிசன் கொடுக்காததுதான் காரணம் என்றான் கங்காதர்.  

எல்லா நாளும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த மேஸ்திரியின் ஆட்களும், பெயிண்ட்டரும் வேலையில்லாமல் உட்கார்ந்திருக்கத் தொடங்கினர். சரியாக பத்து மணிக்கு ஃபேக்டரிக்கு வரும் எல்லப்பா எப்போதாவது வரத் தொடங்கினார்.  தபாலில் செக் அல்லது டி.டி. வந்த தகவல் சொன்னால் மாத்திரம் வந்து கையெழுத்துப் போட்டு, பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிடுவார்.  

அவசரமாக அவரின் கையெழுத்து வேண்டுமென்றால் கங்காதரை வீட்டுக்குக் கொண்டு வரச் சொல்லி  கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிடுவார்.  தினமும் ஷீட் கடையில் இருந்து பஷீர் போன் செய்து எல்லப்பாவைக் கேட்பார்.  போனுக்கு அருகில் உட்கார்ந்து இருந்தாலும், குமரனிடம் ஜாடை காட்டி இல்லையென்று சொல்லச் சொல்லி விடுவார்.

பேங்கிலிருந்து மானேஜர் போனில் கூப்பிட்டு ஓ.டி.யைக் கட்டச் சொல்லி கடுமையாகப் பேச ஆரம்பித்து விட்டார்.  மொத்தத்தில் ஃபேக்டரியின் நிதி நிலைமை சரியில்லை என்பது எல்லோருக்கும் வெட்ட வெளிச்சமாகியது.  

காலை பதினொரு மணிக்கு நண்பர்களுடன் ராஜாஜி நகர் பாருக்கு சென்றால் மூன்று மணிக்கே வீட்டுக்கு வருகிறார் என்றும் நண்பர்களுக்கு ஆகும் செலவையும் எல்லப்பாவே செய்கிறார் என்றும் அவரின் சொந்தக்காரர் பெயிண்டர் மணி எங்களிடம் புலம்புவார். 

‘எங்க அக்கா ரூபவாணி போனவுடன் இவருக்கு எல்லாம் போயிடுச்சு.  இப்ப இருக்கும் கங்கம்மா எப்ப வேணுமென்றாலும் சுருட்டிக்கொண்டு ஆந்திராவுக்கு ஓடிவிடுவாள் பார். எல்லப்பாவுக்கு இனிமேல்தான் இருக்கு’ என்று வெறுப்பாய் பேசுவார் பெயிண்டர் மணி.

ஒரு நாள் அதிசயமாக காலை பத்து மணிக்கு ஆபீசுக்கு வந்தார் எல்லப்பா. வழக்கம்போல சாமி கும்பிட்டு விட்டு, குமரன், கங்காதர், மரிகங்கா மேஸ்திரி, பெயிண்டர் மணி அனைவரையும் ஆபீஸ் அறைக்கு வரச் சொன்னார்.  

‘ஃபேக்டரி நிலைமை முன்பு போல இல்லை என்பது உங்களுக்குத் தெரியும்.  இனியும் தொடர்ந்து இதை நடத்த நான் விரும்பவில்லை.  இந்த இடத்தை நல்ல விலைக்குக் கேட்கிறார்கள்.  பேங்கிலும் நான் பேசி விட்டேன்.  ஷீட் கடைக்காரர் பஷீருக்கும் விபரம் சொல்லிவிட்டேன்.  பேங்குக்கும், பஷீருக்கும் மற்ற சில்லறை பாக்கிகளும் கொடுத்தது போக இருக்கும் ஒரு நல்ல தொகையை எடுத்துக் கொண்டு திருமழிசை போய்விடலாம் என்று இருக்கிறேன்.  

இத்தனை நாள் என்னோட இருந்து உழைத்த உங்களுக்கு இரண்டு மாத சம்பளம் கொடுத்து விடுகிறேன்.  சீக்கிரம் வேறு எங்காவது வேலை தேடிக் கொள்ளுங்கள்.  என் தனிப்பட்ட வாழ்க்கையும் சரியாக இல்லை.  கங்கா தன் இரண்டு குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு ஆந்திராவில் இருக்கும் தன் அண்ணன் வீட்டுக்குச் சென்றுவிட்டாள். திருமழிசையில், சிறிய லேத் ஒன்றை வைத்துக் கொண்டு என் இரண்டு குழந்தைகளையும் வளர்த்திக் கொள்கிறேன்.  

மறுபடியும் எல்லோருக்கும் நன்றி.  இப்படி திடீரென்று சொல்வதால் என் மீது கோபப்பட வேண்டாம்.  என் நிலைமை அப்படி..  குமரன்.. நாளை வந்து எல்லோருக்கும் இரண்டு மாத சம்பளத்தை பட்டுவாட செய்திருங்க. காலையில் நான் பேங்குக்குப் போய்விட்டு பணத்தோட வருகிறேன்’  என்று முடித்தார். 

அவரின் முகத்தைப் பார்க்க யாருக்கும் மனம் இல்லை. நெருக்கடியான பல சமயங்களில் அவரிடம் அட்வான்ஸ் வாங்கி பசி போக்கிக் கொண்ட நாட்கள் அனைவருக்கும் ஞாபகம் வந்தது.  

உயரமான இடத்திலிருந்து கீழே விழும்போது ஒரு மனிதனின் மனநிலை எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை குமரன் அறிவான்.  அங்குள்ள யாருக்குமே எல்லப்பாவின் மேல் கோபம் வரவில்லை. மாறாக அவரின் உழைப்பின் மீதும், நேர்மையின் மீதும் ஒரு மரியாதையே தோன்றியது. 

அடுத்து வந்த நாட்களில் பல இடங்களில் வேலை தேடியும் இரண்டு பேருக்குமே வேலை கிடைக்கவில்லை. எல்லப்பா கொடுத்திருந்த பணம் இன்னும் கொஞ்ச நாட்களுக்கே வரும் என்ற நிலையில் கங்காதர் மெதுவாக ஆரம்பித்தான்.

‘ஒரு காரியம் செய்யலாமா? இப்போதைக்கு வேலையோ கிடைக்கிற மாதிரி தெரியல. பேசாம சஜியைப் போய்ப் பார்த்து வரலாமா?’ 

‘சஜியைப் பார்த்து என்ன செய்வது?  அவனே பிழைக்கத்தானே இங்கே வந்திருந்தான்?’ என்றான் குமரன் கோபத்துடன்.

‘இல்லடா குமரா… எனக்கு என்னவோ சஜி ஏழை மாதிரி தெரியல.  அவனைக் கூட்டிக் போக வந்திருந்த காரைப் பாத்தியா? அவனோட மாமன்கள் பணக்காரங்கள்னா எப்படி அவன் ஏழையா இருக்க முடியும்?  எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு.  ஒரு தடவை போய் அவனைப் பார்த்து வரலாம் வா’ என்றான்.  

‘சாரி… நா வரல… நீ வேணும்னா போயிட்டு வா.. அவன்கிட்ட போய் உதவி கேக்க எனக்குப் பிடிக்கல’  என்றான் குமரன்.

‘சரி… நான் போய்ப் பார்த்துட்டு வர்றேன். போகும்போது ஒரு விசிட்டிங் கார்டு ரகசியமா உங்கிட்ட‌ குடுத்துட்டுப் போனானே.. அதைக் கொடு’ என்று வாங்கிக் கொண்டான் கங்காதர்.

ஒரு வாரம் கழித்து எர்ணாகுளத்திலிருந்து திரும்பி வந்தான் கங்காதர்.  அவன் வருவதை எங்கேயோ இருந்து பார்த்துக் கொண்டிருந்த கங்காவும், யமுனாவும் ஆவலுடன் அவன் கூடவே ஒட்டிக்கொண்டு வந்தனர்.

அறைக்குள் நுழைந்தவுடன் குமரன் கேட்பதற்கு முன்பாகவே, ‘மாவா.. சஜி’ன நோடுதரா? சென்னாகிதாரா?’ என்றாள் வாயாடி யமுனா.

‘நான் போனத மேனேஜர் மூலமா தெரிஞ்சுக்கிட்டு சஜி ஓடி வந்துட்டான்.  கட்டிப் பிடித்துக் கொண்டு குமரனை ஏன் கூட்டி வரவில்லை என்று கோபித்துக் கொண்டான். என்ன உபசாரம்.. அப்பப்பா.. இரண்டு நாளும் என்னை விட்டு எங்கும் போகவில்லை.  அடுத்த முறை வரும்போது குமரனை கண்டிப்பாகக் கூட்டி வரச் சொல்லி இருக்கிறான். வரும்போது வேண்டாம் என்று எத்தனை சொல்லியும் என் பாக்கெட்டில் கட்டாயப்படுத்தி பணத்தைத் திணித்து அனுப்பி வைத்து விட்டான்’ என்று கூறி பல நூறு ரூபாய் நோட்டுக்களைக் காண்பித்தான்.  

உடனே அந்தத் தகவலைத் தங்கள் அம்மாவிடம் சொல்வதற்காக கங்காவும், கெளரியும் பறந்து விட்டனர். கங்காதரும் குமரனின் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் குளிக்கும் அறைக்குள் சென்று புகுந்து கொண்டான். 

குமரனுக்கு கங்காதரன் சொன்னது முழுதும் நம்பும்படி இல்லையென்றாலும் அவன் கொண்டு வந்திருந்த பணம் நம்பும்படியாக‌ இருந்தது. அன்று இரவு கங்காதரை அழைத்துக் கொண்டு பாருக்குப் போனான் குமரன்.  தான் கொஞ்சமாகக் குடித்துவிட்டு, கங்காதருக்கு அவன் அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாக கிளாசில் நிரப்பினான்.  கங்காதர் ஒரு நிலைக்கு வந்தவுடன் கேட்டான்,

‘இப்ப சொல்லு.  எர்ணாகுளத்தில் என்ன நடந்தது? ‘ என்றான்.

‘அதுதான் சொன்னேனே.. யாக்கே திருக கேளுத்தியா?’ (ஏன் திரும்பக் கேட்கிறாய்) என்றான்.

‘உனக்குப் பொய் சொல்ல வராது என்று எனக்குத் தெரியும்.  சொல்லு’ என்றான் குமரன் மிரட்டும் தொனியில்.

ஒரே நொடியில் உடைந்து போன கங்காதர் அழத் தொடங்கினான்.  அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக சமாதானப்படுத்திக் கேட்டவுடன் சொல்ல ஆரம்பித்தான்.

‘அந்த விசிட்டிங் கார்டில் இருந்த அட்ரஸ் எர்ணாகுளத்தில் உள்ள மிகப் பெரிய ஏர்கண்டிசன் செய்யப்பட்ட ஷூ கடை. மானேஜரிடம் சஜியைப் பற்றிக் கேட்டவுடன், என்னைப் பற்றி முழுவிபரமும் கேட்டு விட்டு, சஜியை எப்படித் தெரியும் என்பதையும் கேட்டுக் கொண்டார்.  என்னை அவர் அறையில் உட்கார வைத்து விட்டு வெளியில் போய் யாரிடமோ போனில் பேசினார்.  பிறகு வந்து விட்டுச் சொன்னார்

‘தம்பி.. சஜியின் அப்பா எர்ணாகுளத்தில் மூன்றாவது பெரிய பணக்காரர்.  அவருக்கு இது போன்ற ஷூ கடைகளும், ஜவுளிக்கடைகளும், நகைக்கடைகளும் எர்ணாகுளத்தில் நிறைய உண்டு. சஜி அவரின் எல்லாச் சொத்துக்களுக்கும் ஒரே வாரிசு. அதனால் சிறு வயது முதலே அவனைப் பொத்தி பொத்தி வளர்த்தார்.  தனியாக எங்கும் அவன் வெளியே செல்ல முடியாது. ஒரு கட்டுப்பாட்டிலேயே வளர்ந்ததால் அவனுக்கு மற்றவர்களைப் போல எளிமையாக இருக்க வேண்டுமென்ற ஆசை ஆழ் மனதில் பதிந்து விட்டது.  ஒரு வயது வந்தவுடன், அவன் கட்டுக்களைக் களைந்து விட்டு சுதந்திரமாக இருக்க விரும்பி, ஒரு இரவில் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு ஓடி விட்டான்.  

தன் சக்தி முழுதும் உபயோகித்து, வெளியில் விளம்பரப்படுத்தாமல் அவனைத் தேடினார் சஜியின் அப்பா. அப்படியும் ஆறு மாதம் கழித்தே பெங்களூரில் அவனைப் பிடிக்க முடிந்தது.  அவன் கார் டிரைவராக இருந்ததாகச் சொன்னார்கள்.  அவன் வீட்டில் எத்தனை கார்களும், எத்தனை டிரைவர்களும் இருக்கிறார்கள் தெரியுமா? இதையெல்லாம் இவ்வளவு விளக்கமாக நான் ஏன் உங்கிட்ட‌ சொல்றேன்னா இனி எதற்கும் ஆசைப்பட்டு சஜியைத் தேடி நீங்க யாரும் இங்கே வரக்கூடாது என்பதற்காக.  

சஜியின் அப்பா பணக்காரர் மட்டுமல்ல.  இந்த ஊரில் பெரிய தாதாவும் கூட‌.  மீண்டும் இன்னொரு முறை அவர் தன் மகனை இழக்க விரும்பவில்லை.  நான் போனில் அவரிடம்தான் இப்போது பேசினேன்.  இதோ எவ்வளவு பணம் வேணுமோ அவ்வளவு எடுத்துக் கொள்.  எவ்வளவு சீக்கிரம் இந்த ஊரை விட்டுப் போகிறாயோ, அது உனக்கு நல்லது.

சஜி உன்னைப் பார்ப்பதற்கு முன், உன்னை ஊரை விட்டு அனுப்பி விட்டு போன் செய்யச் சொல்லி இருக்கிறார். உயிர் மீது ஆசை இருந்தால் உடனே கிளம்பிவிடு’ அப்படின்னு மிரட்டி அனுப்பிட்டாரு என்றான் கங்காதரன் கண்ணீருடன். அரூபமாகிவிட்ட சஜி இனி கற்பனைப் பாத்திரமாகி விட்டது என்பது குமரனுக்குப் புரிந்தது.

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    திருமணம் தாண்டிய இருமனம் (குறுநாவல் – பாகம் 5) – ஜெயலக்ஷ்மி. A

    நான் இயேசு அல்ல… நரசிம்ஹா… (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு.