in , ,

அரூபன் (பயணம் 3) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

சென்னையிலுருந்து பெங்களூரை நோக்கி விரைந்து கொண்டிருந்த அந்த ரயிலில் உட்கார்ந்து கொண்டிருந்த கங்காதருக்கு, ரயில் மெதுவாகப் போவது போலவே இருந்தது. அவனின் மனவேகத்திற்கு அந்த ரயிலின் வேகம் ஈடுகொடுக்கவில்லை.  

பெங்களூர் போய் இறங்கி, கையிலிருந்த பொருளை உரியவரிடம் சேர்த்தபிறகு கிடைக்கும் பெரும் பணம் அவனுக்குள் கிளர்ச்சியை ஊட்டியது. முன்பு பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தபோது, மனைவி லஷ்மியும் அவள் வீட்டுக்காரர்களும் அவனுக்குக் கொடுத்த அவமரியாதையே அவனுக்கு ஏதாவது வகையில் பணம் சம்பாதித்து இழந்த மரியாதையை மீட்க வேண்டும் என்ற வெறியைத் தூண்டியது.

அந்த வேகத்திலும், கோபத்திலும்தான் ஆடிட்டர் மஞ்சுநாத் இந்தக் கடத்தல் தொழில் பற்றிச் சொன்னபோது மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான்.  வேலை பெரிதாக ஒன்றும் இல்லை. பெங்களூரிலிருந்து சென்னை, மும்பை, கல்கத்தா போன்ற ஊர்களுக்கு கொடுக்கும் பொருளை கொண்டு போய்ச் சேர்த்து, அவர்கள் கொடுக்கும் பொருளைத் திரும்ப பெங்களூர் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.

இந்த வேலையை போலீசில் மாட்டாமல் செய்ய வேண்டும். அப்படி மாட்டினாலும் அவன் தான் ஜெயிலுக்குப் போகவேண்டும். யாரையும் காட்டிக் கொடுக்கக் கூடாது. பழைய பையில் தான் பொருள் கொண்டு போக வேண்டும். அன்ரிசர்வ்டு பெட்டியில்தான் பயணம் செய்ய வேண்டும். சட்டையும், பேண்டும் பழையதாக இருக்க வேண்டும்.  

எந்த வகையிலும் மற்றவர்களைக் கவரும் வகையில் அவனின் உடையோ, நடத்தையோ இருக்கக் கூடாது. முக்கியமாக காவல் துறையின் கவனம் அவன் திசைப்பக்கம் வரவே கூடாது. 

ஏதோ ஒரு ஸ்டேசனில் இரயில் இரண்டு நிமிடம் நின்று பின் கிளம்பியது. வேலையை விட்டு வந்த அன்று, மனைவியும், அவள் வீட்டாரும் வார்த்தைகளால் அவனைச் சாடியதும், அதற்குப் பின் அவனுக்கு வீட்டில் தினசரி நேர்ந்த அவமதிப்புகளும், முக்கியமாக மனைவி லஷ்மியின் கோபமான‌ வார்த்தைகளும் கங்காதரின் நினைவில் வந்து முட்டின.

‘ஏனு, க‌ல்சா பிட்பிட்றா? ஏனாயித்து?’ (என்ன? வேலய விட்டுட்டீங்ளா? என்னாச்சு?) என்றாள் உரத்த குரலில் லஷ்மி அதிர்ச்சியுடன்.

அவளின் சப்தமான குரல் கேட்டு லஷ்மியின் குடும்பத்தினர் அனைவரும் என்னவோ ஏதோவென்று கங்காதரைச் சூழ்ந்து கொண்டனர். லஷ்மிக்குப் பக்கத்தில் அவளின் அம்மா, அம்மாவுக்குப் பக்கத்தில் லஷ்மியின் தங்கை சரஸ்வதி, சரஸ்வதிக்குப் பக்கத்தில் இரட்டைகளான கங்கா, யமுனா, அவர்களுக்குப் பக்கத்தில் கடைக்குட்டி ரமேஷ். நல்லவேளை, மாமனார் இறந்துவிட்டதால் அவர் இல்லை.  

‘வேலய விட்டுட்டு வந்துட்டாரம்மா… இனி என் ஒருத்தி சம்பாத்தியத்லதான் எல்லோரும் சாப்பிடணுமா? நானே சேட்டு வீட்ல பாத்திரம் கழுவி, வீடு தொடச்சு, அழுக்குத்துணி தொவச்சு காசு கொண்டு வரேன். தேவரே.. ஈக நானு ஏன் மாடுவது?’ என்று உலகமே அழிந்து விட்டதுபோல் கதறினாள் லஷ்மி.

அவளின் பருத்த உடல் அழுகையில் குலுங்கிக் குலுங்கி அசைந்தது. அதற்குப் பிறகு அவன் மேல் அந்தக் குடும்பத்தார் நடத்திய என்கொயரி கமிசன் கொடுமையானது. கல்யாணமாகி நான்கு வருடங்கள் ஆகியும் கங்காதருக்கும், லஷ்மிக்கும் குழந்தை இல்லாததைச் சுட்டிக் காட்டி தினமும் புலம்பும் மாமியாருக்கு இப்போது இந்த அவலும் கிடைத்து விட்டது மெல்லுவதற்கு.

‘தேவுரே.. இஷ்டு ஜனா ஹெண் மக்களு இட்கொண்டு நானு ஏன் மாடலி?’ (இத்தனை பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன்?) என்று கதறினார் மாமியார்.  

‘என்னவோ என்னைக் கேட்டுப் பெற்றுக் கொண்டது போல இந்தக் கிழவி ஏன் கூப்பாடு போடுகிறது?’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் கங்காதர். அப்போதுதான் மாமியார் வீட்டோடு நிரந்தரமாய் தங்கி இருந்த‌ தன் மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டான் அவன். 

பெங்களூர் சிட்டி ஸ்டேசன் வரை வரக் கூடாது என்றும் அதற்கு முன்பே கிருஷ்ணராஜபுரம் ரயில்நிலையத்தில் இறங்கி, நடந்துசென்று, பேருந்து பிடித்து, கொடுக்கப்பட்டிருக்கும் முகவரிக்குச் செல்ல வேண்டும் என்பதும் அவனுக்கு இடப்பட்ட உத்தரவு.

அன்ரிசர்வ்டு பெட்டியில் வந்ததினால் ஏற்பட்ட சங்கடமும், வேர்வை நாற்றமும், அணிந்திருந்த அழுக்கேறிய பழைய துணிகளும் அவனுக்கு அவன் மேலேயே வெறுப்பு வந்தது.  ஆனாலும் கிடைக்கப் போகும் பணத்துக்காக அத்தனையும் சகித்துக் கொண்டும் கொடுக்கப்பட்ட முகவரியில் பொருளைக் கொடுத்தான். 

கங்காதர் கொடுத்த‌ பையை லேசாகத் திறந்து பார்த்த அந்த அறிமுகமில்லா மனிதன் மற்றொரு கையில் பணம் அடங்கிய கவர் ஒன்றை எடுத்து கங்காதரின் கையில் அவசரமாகத் திணித்துவிட்டு கதவைப் படாரென்று மூடினான்.

கொஞ்ச தூரம் வந்ததும், அக்கம் பக்கம் பார்த்துவிட்டு ஒருவரும் இல்லை என்று உறுதி செய்து, லேசாக கவரைத் திறந்து பார்த்தான் கங்காதர்.

கிட்டத்தட்ட ஐயாயிரம் ரூபாய் இருக்கும் அளவிற்கு கரண்சி நோட்டுக்கள் இருந்தன. அவனின் மனமும், உடலும் உற்சாகத்தில் துள்ளியது. அன்று வீட்டுக்குள் கம்பீரமாக நுழைந்தான் கங்காதர்.

‘லஷ்மி.. லஷ்மி’ என்று அதிகாரமாக மனைவியை அழைத்தான். கொஞ்சம் தயக்கத்துடனும், குழப்பத்துடனும் வந்து நின்ற லஷ்மியிடம் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து, ‘வீட்டுக்குத் தேவையான ரேசன் எல்லாம் வாங்கிப் போடு. எனக்கு ‘ரெப்ரசண்டேட்டிவ்’ வேலை கிடைச்சிருக்கு’ என்றான் கெத்தாக.

கொஞ்ச நேரத்தில் வீடே அமர்க்களப்பட்டது. மாமியார் வாயெல்லாம் பல்லாக ‘மாப்ள உங்களுக்கு பிரசிடெண்ட் வேலை கிடச்சிருக்காமே..’ என்றாள். எல்லோரும் சிரித்துவிட்டனர்.  

சரஸ்வதி குறுக்கிட்டு, ‘அம்மா, அது பிரசிடெண்ட் இல்ல.. ரெப்ரசெண்ட்டேடிவ் ‘ என்றாள்.  

அவனைச் சுற்றி அனைவரும் இருக்கும்போதே, அடுத்த ஃஃபுல் டாஸ் வீசினான் கங்காதர்.

‘லஷ்மி, இந்தா இதில் ஆயிரம் ரூபாய் இருக்கு. நாளைக்கு எல்லோரையும் ஜவுளிக்கடைக்கு கூட்டிக்கொண்டு போய் டிரஸ் எடுத்துக்கொடு. நீயும் புடவை எடுத்துக்கோ.  இன்னு ஜாஸ்தி துட்டு பேக்காதரே நன்னத்ர‌ கேளு, கொடுத்தினி..’. என்றான். 

அடுத்து வந்த நாட்களில் வீட்டில் ராஜஉபசாரம் கிடைத்தது கங்காதருக்கு. எப்போதும் சிடுசிடுக்கும் லஷ்மி கூட கொஞ்சலாகக் கேட்டாள், ‘அடுத்த டூர் எப்பங்க?’.  

ஆரம்பத்திலேயே ஆடிட்டர் மஞ்சுநாத் கண்டித்துச் சொல்லியிருந்தார், மாதம் ஒரு முறை தான் அவனுக்கு டூர் செல்லும் வாய்ப்பு என்று. காரணம் அவன் முகம் காவல்துறையின் கண்களில் அடிக்கடி பட்டு பிரபலமாகக்கூடாது என்பதால்.

அடுத்த மாதம் அவனுக்கு டெல்லி போகும் வாய்ப்பு கிடைத்தது. இந்த முறையும் சிக்கல் இல்லாமல் காரியம் முடிந்து கை நிறைய பணத்தோடு வீட்டுக்கு வந்தான் கங்காதர்.  

லஷ்மி மாத்திரம் அத்தனை பணத்தைப் பார்த்து மிரண்டு போய் கேட்டாள், ‘நீவு ஏனும் தப்பு கல்சா மாடில்வல்லா?’ என்று.  தங்கத்தில் இரண்டு பவுன் சங்கிலி அவளுக்கு வாங்கிக் கொடுத்தவுடன் கேள்வி கேட்பது நின்றுவிட்டது.  

மூன்றாவது முறை பம்பாய்க்கு போகும் வாய்ப்பு வந்த போது, கங்காதர் தன்னம்பிக்கையின் உச்சியில் இருந்தான்.  ஆடிட்டர் மஞ்சுநாத்தின் எச்சரிக்கைகளை காற்றில் பறக்க விட்டான். டிப்டாப்பான உடையுடன், ஷீ அணிந்துகொண்டு, விலையுயர்ந்த சூட்கேசுடன் முதல் வகுப்பில் ரயில் பிரயாணம் மேற்கொண்டான்.  

பெங்களூரிலிருந்து ரெய்ச்சூர் வரும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை.  ரெய்ச்சூரில் வண்டி நிற்கும்போது இரண்டு ரயில்வே காவலர்கள் வந்து ஒவ்வொருவரின் உடைமைகளையும் பரிசோதனை செய்து வந்தார்கள்.  

கங்காதரின் சூட்கேசைத் திறந்து பார்த்த ஒரு காவலர் மற்றொரு காவலருக்கு சிக்னல் செய்தார்.  சூட்கேசை எடுத்துக் கொண்ட காவலர்கள் கங்காதரையும் ரெயிச்சூர் ஸ்டேசனில் இறக்கினர். 

மூன்று வருட ஜெயில் தண்டனை கங்காதரின் உருவத்தில் பல மாறுதல்களை ஏற்படுத்தி இருந்தது.  ஜெயிலை விட்டு வெளியே வரும்போது அவனின் கன்னங்கள் ஒட்டியும், உடம்பில் உள்ள தோல் சொரசொரப்படைந்தும், கண்கள் இரண்டும் உள்வாங்கியும் இருந்தன. தலை முடி பாதி கொட்டியிருந்தது.

நிர்வாணப்படுத்தப் பட்டு பிட்டத்தில் கொடுக்கப்பட்ட‌ அடியின் தழும்பு மறையாமல் இன்னும் இருந்தது.  ஜெயிலில் இருந்தபோது அவன் குடும்பத்தினர் யாரும் பார்க்க வராதது அவனுக்கு மேலும் மனச்சோர்வை அளித்திருந்தது.  ஜெயிலின் வாசல் கதவைத் திரும்பிப் பார்த்து மனதுக்குள் சூளுரைத்துக் கொண்டான், இனி செத்தாலும் ஜெயிலுக்கு வருவதில்லை என்று.

உள்ளே வராமல் வாசலில் நின்று கொண்டிருந்த கங்காதரைப் பார்த்து ‘த்தூ ‘ என்று காரித் துப்பிவிட்டுச் சென்றாள் லஷ்மி.  மூன்று வருடத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் சதை போட்டிருந்தாள். வீட்டில் உள்ள யாரும் எதுவும் பேசவில்லை.

மயான அமைதிக்கு மத்தியில் மாமியார் மாத்திரம் புலம்பினாள், ‘மானா மரியாதை எல்லா ஒட்டோயித்து.  ஈக ஏனுக்கு பந்திதானே இல்லி.  ஒரகட‌ ஹோகக்கு ஏளு அவன ‘ (மானம், மரியாதை எல்லாம்போச்சு. இப்ப எதுக்கு இங்க வந்திருக்கிறான்? வெளியே போகச்சொல்லு அவனை).  

தெருவில் இறங்கி மெளனமாக நடந்தான் கங்காதர்.  தெருவின் கடைக்கோடியில் தன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார் கிருஷ்ண ராவ். கமர்சியல் டேக்ஸ் டிபார்ட்மெண்ட்டில் பணி செய்து ஓய்வு பெற்ற நல்ல மனிதர். தளர்ந்த நடையுடன் கையில் பையுடன் வரும் கங்காதரைப் பார்த்துக் கேட்டார்,

‘என்ன கங்காதர், இப்படி ஆயிடுச்சு? சரி..சரி.. ஏதோ கெட்ட நேரம் விடுங்க.. எங்க பையுடன் கிளம்பிட்டீங்க?’.

அந்த வீதியில் உள்ள தன்மையான மனிதர்களில் அவரும் ஒருவர். அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் தொண்டையை அடைக்க‌ தனக்கு மாமியார் வீட்டில் கிடைத்த மரியாதையை கங்காதர் அவரிடம் கொட்டித் தீர்த்தான்.

‘உங்க மாமியார்க் கிழவி யாரையும் சேர்ந்து சந்தோசமா இருக்க விட மாட்டாளே? ‘ என்றார் கடுப்புடன். ‘சரி, இப்ப எங்க கிளம்பிட்டீங்க?’ என்றவுடன் விரக்தியுடன் உடைந்த குரலில் சொன்னான் கங்காதர், 

‘தெரியலீங்க சார்.. எங்காவது போகணும்’.  இப்படியே விட்டால் அவன் ஏதாவது செய்து கொள்வானோ என்ற சந்தேகம் வந்தது கிருஷ்ண ராவுக்கு.  இரக்க குணம் வாய்ந்த அந்த நல்ல மனிதர் கொஞ்ச நேரம் யோசனை செய்தார்.

‘நான் ஒரு யோசனை சொல்றேன் கேளுங்க‌. என் வீட்டு மாடியில் உள்ள அறையில் இரண்டு மூன்று பேர் தங்கலாம். இப்போதைக்கு நீங்க தங்கிக்கிங்க. இன்னும் உங்க நண்பர்கள் ஒன்றோ இரண்டு பேரையோ சேர்த்திக் கொண்டு வாடகையை ஷேர் பண்ணிக்குங்க.. மேலேயே லெட்ரின், பாத்ரூம் எல்லாம் இருக்கு. ஆனால் வாடகை மாதம் அறுபது ரூபாய். அட்வான்ஸ் அறுபது ரூபாய்’ என்றார்.

கங்காதருக்கு அது நல்ல யோசனையாய் தோன்றியது. அதே தெருவில் இருக்கும்போது அடிக்கடி லஷ்மியைப் பார்க்க முடியும். மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பும் கிடைக்கக் கூடும். பேசாமல் அறுபது ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டு, துணிமணிகள் உள்ள பையை ரூமில் வைத்துவிட்டு குளித்துவிட்டுக் கிளம்பினான். 

தன் முன் தலைகுனிந்து நின்றிருந்த கங்காதரைப் பார்த்துக் காட்டுக் கத்தல் கத்தினார் ஆடிட்டர் மஞ்சுநாத்.  

‘உனக்குப் படிச்சுப் படிச்சு சொன்னேன். நல்ல டிரஸ் போட்டுக்காதே, ரிசர்வ்டு பெட்டியில் ஏறாதேன்னு.. கேட்டியா? இப்ப அனுபவி… எதுக்கு இங்க வந்தே?  செய்யறதெல்லாம் செஞ்சுட்டு தலையைக் குனிஞ்சு நின்னா சரியாய் போயிடுமா?’.

‘தப்புத்தாங்க சார்… அதுக்குத்தான் மூணு வருசம் அனுபவிச்சிட்டேன். அடிச்சப்ப கூட யார் பேரையும் நான் சொல்லல. பழியை நானே ஏத்துக்கிட்டேன். இப்ப நீங்க ஏதாவது வேலை வாங்கி தந்தா கொஞ்சம் உதவியா இருக்கும்’.

‘நீ படிச்சிருக்கிற படிப்பிற்கு தும்கூர் கலெக்டர் வேலை காலியிருக்காம். போறயா?’ என்று வெறுப்பை உமிழ்ந்தார் ஆடிட்டர் மஞ்சுநாத்.

தலை குனிந்து நிற்கும் அவனைப் பார்க்க அவருக்கு கொஞ்சம் இரக்கம் தோன்றியது. அப்பாவியான அவனின் இன்றைய நிலைமைக்குத் தானும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்ச்சி குத்தியது.

‘எந்த வேலையாய் இருந்தாலும் கெளரவம் பார்க்காமல் செய்வியா?’ என்றார்.  சரி என்று தலை அசைத்தான் கங்காதர்.

‘எல்லப்பா என்ற என் கஸ்டமர் ஒருவர் ஆபீஸ் பாய் வேண்டும் என்று ரொம்ப நாளா கேட்டுக்கிட்டிருக்கார். இரு கேட்டுச் சொல்கிறேன்’ என்று கூறிவிட்டு போனில் கொஞ்ச நேரம் பேசினார்.  

பிறகு கங்காதரிடம் திரும்பி, ‘உன்னைப் பற்றி எல்லா விபரமும் சொல்லிவிட்டேன்.  அவர் கேட்டால் நீ எதையும் மறைக்க வேண்டாம். எனக்காக, உனக்கு வேலை கொடுக்க ஒத்துக் கொண்டார்.  இந்தா அவரின் விசிட்டிங் கார்டு. நாளைக்கே போய் வேலைக்கு சேர்ந்து கொள்’ என்றார்.

‘ரொம்ப நன்றிங்க சார்’ என்று கூறி விடை பெற்றான் கங்காதர்.

தளர்ந்த நடையில் அவன் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு, குற்ற உணர்ச்சியின் சுமை கொஞ்சம் குறைந்தது போல் தோன்றியது.

‘ரூபவாணி இன்டஸ்ட்ரீ’சில் கங்காதர் சேர்ந்து ஒரு வாரத்துக்குள் குமரனும் கங்காதரும் நெருங்கிய நட்பானார்கள்.  கங்காதரின் வெகுளித்தனம் குமரனுக்குப் பிடித்திருந்தது. (முக்கியமாக அவன் லஷ்மியுடன் கொண்டிருக்கும் பிணக்கு வரை எல்லாவற்றையும் ஒரே வாரத்தில் பங்கிட்டுக் கொண்டது).  

அதேபோல் குமரனின் நேர்மையும், வெளிப்படையான பேச்சும் கங்காதருக்குப் பிடித்திருந்தது. (கங்காதர் டீ வாங்கியது போக கொண்டு வரும் மீதமுள்ள காசைக் கூட நோட்டில் கணக்கு வைத்து முதலாளியிடம் கொடுப்பது).  

இருவருக்கும் குறைந்த சம்பளம் என்பதால், கங்காதரின் யோசனைப்படி சேசாத்திரபுர அறையைக் காலி செய்துவிட்டு, கங்காதரின் ரூமுக்குக் குடியேறி மாதம் முப்பது ரூபாயை மிச்சப்படுத்தினான் குமரன்.  சம்பளம் கிடைக்கும் முதல் வாரத்தில் கொஞ்சம் ஜாலியாக இருந்து விட்டால் இருவரின் சம்பளமும் முதல் இருபது நாட்களுக்கு மேல் வருவதில்லை.  

அதுவும் மனைவியைப் பிரிந்து சோகத்தில் இருப்பதாகக் கூறி கொஞ்சம் அதிகமாகவே ஊற்றிக் கொள்வான் கங்காதர். எப்போதெல்லாம் மது உள்ளே போகிறதோ அப்போதெல்லாம் லஷ்மியை நினைத்து கண்ணீர் விடத் தவறமாட்டான் கங்காதர்.

படிப்பறிவு குறைவாக இருந்தாலும், கங்காதர் எல்லா மொழிகளும் சரளமாகப் பேசும் திறமை பெற்றிருந்தான். குமரனிடம் எப்போதும் தமிழில் பேசும் அவன், சோமபானம் உள்ளே போய்விட்டால் மட்டும் கன்னடத்திலேயே பேசுவான்.

‘குமரா… நன் லஷ்மி நன்ன பிட்டுபிட்டு ஹோகிபிட்டா.. நன்கு யாரு இல்லா’ (என் லஷ்மி என்னை விட்டு விட்டுப் போய் விட்டாள். எனக்கு யாரும் இல்லை) என்பது அவனின் வழக்கமான டயலாக்.  

உடனே தமிழில் பாட ஆரம்பித்து விடுவான், ‘அவள் பறந்து போனாளே.. என்னை மறந்து போனாளே..’.  

குமரனுக்கு அவனைப் படுக்க வைக்க பெரும் சிரமமாகிவிடும்.  அது போன்ற சமயங்களில் கங்காதரைப் பார்க்க சிலசமயம் பரிதாபமாகவும், சில சமயம் எரிச்சலாகவும் இருக்கும்.

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வாராயோ வெண்ணிலாவே (பாகம் 1) – சுபாஷினி பாலகிருஷ்ணன்

    தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 13) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை