“சூரியனின் மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள சில இரசாயன மாற்றத்தால் இந்த காந்தப் புயல் உருவாகியுள்ளது.
அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் இந்தப் புயலுக்கு ‘அரோகா’ என பெயர் சூட்டியுள்ளனர்
இந்தப் புயல் பூமியில் அண்டார்டிகா பகுதி வழியே கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பூமியின் புவியீர்ப்பு காரணமாக ஈர்க்கப்பட்டு, பூமியின் அனைத்து பகுதிகளையும் தாக்க வாய்ப்புள்ளதாகவும், அதன் தாக்கம் பல நாட்கள் நீடிக்கலாம் எனவும் அமெரிக்க அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
தற்சமயம் புயல் 7,500 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.விஞ்ஞானிகளின் கணிப்புபடி, ஐந்து நாட்களில் பூமியை சூழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது முற்றிலும் வித்தியாசமான ஒரு காந்தப்புயல். மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. மேலும் இதன் தாக்கம் எப்படி இருக்குமென்று கணிக்கப்பட முடியாத நிலை உள்ளது என ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது”
‘கட்டுமரம்’ தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான செய்தியை கேட்டபடியே பதட்டத்துடன் அமர்ந்திருந்தான் அசோக்
இந்த காந்தப் புயலின் தாக்கங்கள் எப்படி இருக்குமென்று தெரியாத நிலையில், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் ஊரடங்கு பிறப்பித்தது
இந்த காந்தப் புயலால் உலகம் அழியும் என வாட்ஸ்அப்பிலும், பேஸ்புக்கிலும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அதனைப் பார்த்துக் கொண்டிருந்தான் அசோக்.
காந்தப் புயலை பற்றி தான் அறிந்த விஷயங்களை பற்றி தன் வீட்டாரிடம் பேசிக் கொண்டிருந்தாள் அசோக்கின் மனைவி திவ்யா
சென்னையின் முக்கிய நகரான கே.கே.நகரில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் வசித்து வந்தான் அசோக்
தொலைக்காட்சியை அணைத்துவிட்டு தன் வீட்டின் பால்கனியில் இருந்து, அந்த ஊரின் சூழலை பார்க்கலானான்
மாலை நேரம், சூரியன் மறைந்து இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. அருகே முக்கிய சாலை, அதில் பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருந்தன
அப்போது செல்போன் அழைக்க, எடுத்து “ஹலோ” என்றான்
மறுமுனையில் அவன் பணிபுரியும் நிறுவனத்தின் மேனேஜர், “ஹலோ, அசோக், ஒரு வாரத்துல காந்தபுயல் உலகத்தை தாக்கப் போகுது” என்றார்
“தெரியும் சார்” என்றான்
“அரசாங்கம் யாரையும் பணிக்கு வர வேண்டாம்னு உத்தரவு போட்டுருக்காங்க. அதனால, முக்கிய பைல்ஸ் எல்லாத்தையும் இன்னும் அரை மணி நேரத்துக்குள்ள மெயிலுக்கு அனுப்பு” என்றார்
“எல்லாத்தையும் அனுப்பணும்னா ரொம்ப நேரமாகும் சார்” என்றான்
“பரவால்ல அனுப்பு, இன்னைக்கு எல்லாத்தையும் சரி பாத்துக்குறேன்” என்றதுடன் இணைப்பைத் துண்டித்தார் மேனேஜர்
“ஊர்ல யார் யாருக்கோ சீக்கு வந்து சாகுறாங்க, இவனுக்கு ஒன்றும் ஆக மாட்டேங்குது” என மனதிற்குள் புழுங்கிய அசோக், மடிகணினியை எடுத்து தகவல்களை அனுப்பத் தொடங்கினான்
அதே நேரம், குழந்தை அங்கும் இங்கும் ஓடி விளையாடியது, வேலை தடைபட அதட்டினான் அசோக்
“சாப்பிடுறீங்களா?” என மனைவி திவ்யா கேட்க
“இல்ல இல்ல” என்று சொல்லிட்டு மும்மரமாக வேலையை தொடர்ந்தான்
சாதாரணமாக ஐ.டி.கம்பெனி வேலையில் தினமும் மன அழுத்தம் இருக்கும். தற்போது, வீட்டிலிருந்தபடியே வேலை என்பதால் கூடுதல் மன அழுத்தம் ஏற்படுவதற்கு உணர்ந்தான் அசோக்
எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் சமாளிப்பான். காரணம், மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளம். உள்ளூரிலேயே இரண்டு லட்ச ரூபாய் வாங்குவது சும்மா இல்லை.
ஆனால் வேலைப்பளுவால் வீட்டில் மனைவி, குழந்தையை சரி வர கவனிக்க இயல்வதில்லை. தாய், தந்தையை கூட கவனிக்க இயலாமல், இரண்டு வருடங்களுக்கு முன் முதியோர் இல்லத்தில் சேர்த்து இருந்தான்
தன் இயந்திர வாழ்க்கை நிலையை நினைத்து அவன் வருத்தம் கொண்டதில்லை.
வேலை இல்லாத நேரங்களில் செல்போனில் முகநூலை பார்த்தபடி முழ்கி போவான். இப்படியான வாழ்க்கையை தான் இன்று பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது கசப்பான நிதர்சனம்
“வரப் போகும் காந்தப்புயலின் தாக்கம் எப்படி இருக்குமோ?’ என திவ்யா தனக்குத் தானே புலம்பினாள்
வேலையை முடித்து போனில் முகநூலை பார்த்து கொண்டிருந்தான் அசோக், அதிலும் காந்தபுயல் பற்றிய செய்திகளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அதில் ‘காந்தபுயலின் தாக்கம் உலக மக்களை சாம்பலாக்கும்’ என்று சில ஸ்டேட்டஸ் பார்த்து அதிர்ந்தான்
“இது அரோகா அல்ல…அரோகரா” என மீம்ஸ் பறந்தது
திடீரென ஏதோ தோன்ற, எந்த கவலையுமின்றி விளையாடிக் கொண்டிருந்த தன் மகனை இழுத்து அணைத்துக் கொண்டான் அசோக்
அறைக்குள் இருந்த மனைவியை அழைத்து தன் அருகில் அமரச் செய்து அன்பாய் அளவளாவினான்
“ஒரு ஊர்ல பிரச்சனைனா வேற ஊருக்கு போலாம். ஒரு நாட்ல பிரச்சனைனா வேற நாட்டுக்கு அகதியா கூட போய் வாழலாம். ஆனா உலகம் மொத்தத்துக்கும் பிரச்சினைனா எங்க போறது. நாளைக்கு உயிரோட இருப்பமானு கூட தெரியவில்லை. அதுக்குள்ள ஒரு வாட்டி எங்கம்மா அப்பாவை பாக்கணும்னு தோணுது திவ்யா” என கண்ணில் நீருடன் கூறினான் அசோக்
சொன்னதோடு நில்லாமல், அன்றே முதியோர் எல்லாம் சென்று பெற்றோரை அழைத்து வந்தான்
உலகமே கவலையில் ஆழ்ந்தது. ‘இன்றே கடைசி’ என பலர் கூத்தும், கும்மாளமுமாய் இருந்தனர். பலர் தன் குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்தனர். பல நாடுகளில், பல இடங்களில் எதிர்மறையான நிகழ்வுகளும் அரங்கேறின
பலர் தாங்கள் விரும்பியதை உண்டு மகிழ்ந்தனர். பலர் பிறரது ஆசைகளை நிறைவேற்றி மகிழ்ந்தனர் அல்லது தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டனர்
அந்த நாளும் வந்தது. அன்று மாலை 4 மணிக்கு காந்த புயல் தாக்கியது. மஞ்சள் கலந்த கருமையான நிறத்தில் மேகங்கள் மாறின. அது வேற மாதிரியான சூழ்நிலையை உருவாகியது
திடீரென இன்டர்நெட், மொபைல் சேவை எதுவுமே செயல்படாமல் போனது. ஆனால் மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்கள் மற்றும் இயற்கைக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அது ஒரு வித்தியாசமான காந்தப்புயலாக இருந்தது.
பாதிப்பை குறைக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். யாரும் வீட்டை விட்டு வெளியில் வராத காரணத்தால், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது.
இன்டர்நெட் சேவை இல்லாததால் யாரும் அலைபேசி, இண்டர்நெட், சமூக வலைதளங்கள் பயன்படுத்த முடியாமல் போனது
சில முகநூல் பைத்தியங்கள், முகநூல் போராளிகள் ஸ்டேட்டஸ் போட இயலாமல், மற்றவருக்கு தகவல் பகிர முடியாமல் தவித்தனர். தொலைக்காட்சியும் இயங்கவில்லை
இரண்டு நாட்கள் இதே சூழ்நிலை நீடித்தது. அதன் பின், “காந்தபுயலால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று உணர்ந்ததும் மக்கள் இயல்பாக வெளியில் நடமாட தொடங்கினார்கள்.
இன்டர்நெட், தொலைத்தொடர்பு சேவைகள் தடைபட்டு, நாட்டின் நிலவரம் தெரியாத சூழல் உருவானது. அலைபேசி கம்பெனிகளில் வேலை இழப்பு ஏற்பட்டது. அனைத்தும் பெரும் நட்டத்தை சந்தித்தது. உலகில் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு. 30 வருடங்களுக்கு முந்தைய நிலைக்கு சென்றது.
அதாவது 1990ம் ஆண்டு காலகட்டத்தில் வாழ்ந்த வாழ்க்கை திரும்பியது
காந்தப்புயலால் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் அழிந்து, முதலில் இருந்த வாழ்க்கை போல் அனைவரின் வாழ்க்கையும் தொடங்கியது.
பத்து நாட்களுக்கு பிறகு, பழைய கேபிள் இணைப்பு முறையில் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆனது
காந்தபுயல் தாக்கத்திற்கு அஞ்சி, வீட்டில் ஏ.சி, பிரிட்ஜ் மற்றும் அனைத்து அறிவியல் சாதனங்களும் அணைத்து வைக்கப்பட்டன
இந்த நிலையில், அசோக்கிற்கும் வேலை இழப்பு ஏற்பட்டது. இன்டர்நெட், கணினி சேவை இல்லாததால் காந்த புயல் தாக்கம் குறையும் வரை கணினி, இன்டர்நெட் சார்ந்த ஐடி நிறுவனங்கள் முடங்கின.
தந்தையின் ஆலோசனைப்படி, “கிராமத்திற்கு சென்று, நிலைமை சீரான பிறகு இங்கு வரலாம்” என்று முடிவெடுத்தான் அசோக்
திடீரென உலகமே மாய உலகமாக மாறியது. இயற்கை உணவுகளும், உணவுப் பொருட்களும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டன.
பாஸ்ட்புட் உணவுகளை மக்கள் வாங்கி உண்ண அஞ்சினர். கெமிக்கல் உணவுகள், அறிவியல் சாதனங்கள் என அனைத்தையும் மக்கள் உபயோகிக்க பயந்தனர்
பொழுதுபோக்குக்காக மக்கள் பூங்காக்களை பயன்படுத்தினர்
வாட்ஸ்அப் குழுவில் உரையாடி வந்தவர்கள், அண்டை வீட்டாரிடம் நட்புறவுடன் மணிக்கணக்காக உரையாடினார்.
காலையில் உடற்பயிற்சி செய்யவும், நண்பர்களோடு நேரில் சென்று பேசவும் நேரத்தை செலவிட்டார்கள்
வீட்டு குழந்தைகள்,பக்கத்து வீட்டு குழந்தைகளோடு விளையாடி மகிழ்ந்தனர்.
இப்படியே பல மாதங்கள் நீடித்தன. அலைபேசி, இன்டர்நெட் இல்லாத வாழ்க்கையை மக்கள் மறந்தனர். புதிய வாழ்க்கை வாழ்வது போல் அனைவரும் உணர்ந்தனர்.
பேருந்து நிலையங்களில், வெளியில் அலைபேசியை பார்த்தபடி செல்லும் மக்களுக்கு மத்தியில், தற்சமயம் பக்கத்தில் இருப்பவர்கள் யாராயினும் அவர்களோடும், உடன் இருப்பவரோடும் மகிழ்ச்சியாக நலம் விசாரித்து பேசுகின்றனர்.
செய்தித்தாள் வாசிக்கின்றனர், பலர் புத்தகங்கள் வாசிக்க தொடங்கினர்.
நிலைமை சற்று சீராக, மீண்டும் கம்பெனிகளில் வேலைக்கு ஆட்கள் எடுக்க தொடங்கினார்கள்
அசோக்கிற்கும் அதே நிறுவனத்தில் வேலை கிடைத்து சென்றான். அவனின் மாற்றம், வீட்டில் உள்ளவர்களை ஆச்சரியப்படுத்தியது.
அலைபேசி மூலம் கையிலேயே உலகத்தை கண்டு, வெட்டி பந்தாவாய் இருந்த நிலை மாறி இருந்தது
அதேப் போல், “பீட்ஸா, பர்கர்” என விதவிதமான உணவு உண்டவன், “என்ன இருந்தாலும் வாழை இலை சாப்பாடு மாதிரி வருமா?” என்றான்
நினைத்துப் பார்த்தால், எல்லாமும் ஒரு மாயையாய் தோன்றியது அசோக்கிற்கு
“இது தான் உண்மை. முன்பு வாழ்ந்தது நிழல் வாழ்க்கை” என உணரத் தொடங்கினான்.
மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத காந்தப்புயல், இன்டர்நெட், தொலைதொடர்பு சேவைகளை தடைப்படுத்தி, மனிதத்தை உணரச் செய்தது
ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் காந்தபுயல் பாதிப்பு ஏற்படாத புதுவகை கணினி, அலைபேசியை கண்டுபிடிக்க மும்மரமாக செயல்படத் துவங்கினர்
(முற்றும்)
சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
எழுத்தாளர் சஹானா கோவிந்தின் நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
Malthusian Theory of population says , that if you’re not going to take preventive checks , nature will take positive checks . Nice.