2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“அம்மா… நான் ஸ்கூலுக்குக் கிளம்பிட்டேன். போயிட்டு வரேன் மா” பையை முதுகில் மாட்டிக் கொண்டு பூரிப்போடு கிளம்பினாள் செல்வி.
“பாப்பா, இங்க பாரு, இவ்வளவு நாள் இருந்த மாதிரி இப்ப இல்ல. பெரிய பிள்ளையாயிட்டே. பார்த்து கவனமா இருந்துக்கணும், என்ன…”
“சரிம்மா, நிறைய தடவை சொல்லிட்டே. நான் பார்த்துக்கறேன்.”
“அப்படியில்ல பாப்பா, இவ்ளோ நாள் நீ சின்னப்புள்ள. இப்ப வயசுக்கு வந்துட்டே. யாருகிட்ட பேசினாலும் கவனமா இருக்கணும். தேவையில்லாம யாருகிட்டயும் நின்னு பேசிட்டிருக்காதே. தனியா எங்கேயும் போகாதே. நேரே ஸ்கூலுக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்துடணும்.”
“தெரியும் மா.”
தலையை ஆட்டிவிட்டுக் கிளம்பினாள் செல்வி. பெரியவளாகி ஒரு வாரமாக வீட்டில் இருந்ததால் அவள் முகத்திலும் உடம்பிலும் புதிதாக ஒரு பூரிப்பு மெருகேறியிருந்தது.
ஆறாவது முடித்து ஏழாவது போகப் போகிறாள் செல்வி. அதற்குள்ளாகவே வயதுக்கு வந்து விட்டாள். முகத்தில் இன்னும் குழந்தைத்தனம் கொஞ்சம் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது. முகத்தில் மட்டுமல்ல அவளின் செய்கைகளிலும் குழந்தைத்தனம் மாறவில்லை.
செல்வியின் அம்மா கமலத்திற்குத் தான் இவ்வளவு நாட்கள் இல்லாத கவலை வந்து மனதில் ஒட்டிக் கொண்டது.
“விளையாட்டுப் பிள்ளையா இருந்துச்சு… கவலை இல்லாம இருந்தேன். இப்படி இவ்வளவு சீக்கிரம் வயசுக்கு வந்துட்டாளே… இனிமே தினம் தினம் வயத்துல நெருப்பைக் கட்டிட்டிருக்கணும்” என்று தன் அக்கம்பக்கம் வீட்டார்களிடம் புலம்பிக் கொண்டே இருந்தாள்.
செல்வின் அம்மா கமலமும் அப்பா முருகேசும் கட்டட வேலை செய்பவர்கள். ஆசைமகள் செல்வியைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தார்கள். அவளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று ஆசை. அருகில் இருந்த அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார்கள்.
வீட்டிலிருந்து கிளம்பிய செல்வி வழக்கம் போல் தெருமுக்கில் இருக்கும் அண்ணாச்சி கடைக்கு வந்து தன் தோழிகளுக்குக் கொடுப்பதற்காக சாக்லேட் வாங்கிக் கொண்டாள்.
“என்ன பாப்பா, ஒரு வாரமா ஸ்கூலுக்கு வரலையா?” என்று ஒரு மாதிரியான சிரிப்புடன் கேட்டுக் கொண்டே சாக்லேட்டை அள்ளி செல்வியின் கையில் திணித்தான் முத்தண்ணாச்சி.
செல்வி பதில் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டாள். சாக்லேட்டை பையில் போட்டுக் கொண்டு காசை நீட்டினாள். மீதி சில்லறையைக் கொடுக்கும் போதும் வேண்டுமென்றே செல்வியின் கையைத் தொட்டுத் தடவியபடியே கொடுத்தான் முத்து.
“பாப்பா, இந்தா… வழக்கம் போல உனக்காக ஸ்பெஷலா ரெண்டு சாக்லேட் கூடுதலா கொடுத்திருக்கேன். சாப்பிடு,” என்று அதே சிரிப்புடன் சொன்னான்.
ஒரு நிமிடம் உடலெல்லாம் கூசியது செல்விக்கு. எதுவும் பேசாமல் குழப்பத்துடனே பள்ளியை நோக்கி நடந்தாள்.
இவ்வளவு வருடங்களாக இதே முத்து அண்ணாச்சி கடையில் தான் சாக்லேட், முறுக்கு, பிஸ்கட் என்று எல்லாம் வாங்குவாள். “பாப்பா” என்று செல்லமாகக் கூப்பிட்டு, அவளுக்கென்று கூடுதலாக ஒன்றிரண்டு சாக்லேட்டுகளைக் கொடுப்பதும், புதிதாக வந்த பிஸ்கட்டை எடுத்துக் கொடுப்பதும், கையைப் பிடித்துக் கொண்டு விடாமல் சீண்டுவதும் என்று எல்லாம் செய்திருக்கிறான் முத்து.
இவ்வளவு வருடங்களில் அதையெல்லாம் விளையாட்டாகத் தான் நினைத்துக் கொண்டிருந்தாள் செல்வி. ஆனால் இன்று ஏனோ முத்துவின் கை ஒவ்வொரு முறை இவள் கையில் பட்டபோதும் பயமும் கூச்சமும் குழப்பமும் அவள் உடலில் பரவியது. அவன் சிரிப்பில் கூட ஒரு அருவருப்பு தென்பட்டது.
‘அப்போ இவ்வளவு நாளும் முத்தண்ணாச்சி என் கையைப் புடிச்சதெல்லாம் தப்பா? நான் தான் அண்ணன் தானேனு விளையாட்டா அதெல்லாம் கண்டுக்காம விட்டுட்டேனா? இன்னைக்கு மட்டும் ஏன் எனக்கு இது அருவருப்பா தெரியுது? அந்த அண்ணா சிரிப்பே அசிங்கமா இருக்கு. பார்வையே ஒரு மாதிரி இருக்கு. அந்த அண்ணன் எப்போதும் போல நல்லவராத் தான் இருக்குதா? எனக்குத் தான் தப்பா தெரியுதா? இல்ல… இவ்வளவு நாள் இதே மாதிரி இருந்து, எனக்குத் தான் அதைப் புரிஞ்சுக்கத் தெரியலையா…?’
அவளுக்குள் ஆயிரம் கேள்விகள் வரிசைகட்டி வந்தன. அதே குழப்பத்தோடு பள்ளிக்கூடம் வந்து சேர்ந்தாள். ஸ்கூல் வாசலில் நின்று கொண்டிருந்த மலர்விழியின் தாத்தா செல்வியைப் பார்த்ததும் கூப்பிட்டார்.
மலர்விழி, செல்வியுடன் ஒரே வகுப்பில் படிப்பவள். மலர்விழியை சைக்கிளில் அழைத்துப் போகும் வேளையில், சில சமயம் செல்வியையும் சைக்கிளில் முன்னால் உட்கார வைத்து அழைத்துப் போவார் மலரின் தாத்தா.
“என்ன செல்வி…. அதுக்குள்ள பள்ளிக்கூடம் வந்துட்டியா? நீ வயசுக்கு வந்துட்டியாமே…? ஒரு வாரமா ஸ்கூலுக்கு வரலன்னு மலர் சொல்லுச்சு. அதுக்குள்ள அவசரமா உனக்கு….?” கேட்டபடியே தன் காவிப் பற்கள் தெரிய சிரித்து, கன்னத்தைக் கிள்ளிவிட்டு தோளில் கை வைத்து அழுத்தினார். பயத்தில் செல்வியின் உடல் நடுங்கியது.
சட்டென்று அவர் கையைத் தள்ளிவிட்டு, பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து கொண்டாள். வகுப்பில் தன் இடத்தில் போய் உட்கார்ந்த பிறகும் அவள் உடலில் அந்த நடுக்கம் இருந்தது.
‘மலருக்கு தாத்தான்னா எனக்கும் தாத்தா தானே? எவ்வளவோ நாள் இதே மாதிரி என் தோள்ல கை வச்சிருக்கார். என் இடுப்பைப் புடிச்சு சைக்கிள்ல தூக்கி உட்கார வச்சிருக்கார். அப்பெல்லாம் எனக்கு உடம்பு இப்படி நடுங்கலையே…? தாத்தா தானேன்னு சாதாரணமாத் தானே இருந்தேன். இன்னைக்கு அந்தத் தாத்தாவோட சிரிப்பும் பார்வையும் என்னை பயமுறுத்துது.
அப்போ இந்தத் தாத்தாவும் கெட்டவரா? அதனாலதான் சைக்கிள் ஓட்டும்போது நான் சரியா உட்காரலைன்னு என் மார்பு மேல கை வச்சு நேரா உட்கார வைக்கற மாதிரி வேணும்னே தொடுவாரா?
யூனிஃபார்ம் ஸ்கர்ட் காத்துல பறக்குதுன்னு இழுத்து விடற மாதிரி தொடைல கை வைப்பாரே…. இதெல்லாம் தப்பா? இவ்வளவு நாள் ஏன் எனக்கு இதெல்லாம் தெரியல? தாத்தா தானேன்னு சாதாரணமாத் தானே நினைச்சேன்.
இப்போ இனிமேலும் தாத்தான்னே நினைக்கணுமா? இல்ல மலரோட தாத்தாகிட்ட பேசாம இருக்கணுமா? அந்த தாத்தா மலர்கிட்டயும் இப்படித் தான் நடந்துப்பாரா? மலர்கிட்ட இதை நான் கேட்கணுமா? அவளையும் கவனமாக இருக்கச் சொல்லணுமா?’
தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தாள் செல்வி. ஒரு வாரமாக வராமல் இன்று பள்ளிக்கு வந்திருக்கும் செல்வியை அவளது தோழிகள் சூழ்ந்து கொண்டு உலுக்கி எடுத்தார்கள். ஆனாலும் செல்வியால் சகஜமாக இருக்க முடியவில்லை.
“ஏய்… என்னடி இவ… இப்படி வெட்கப்படறா. செல்வி, இதுக்குப் போய் ஏண்டி வெட்கப்படறே? ஆனா நல்லா அழகா ஆயிட்டே டி செல்வி. முகம் எல்லாம் பளபளன்னு இருக்கு. நம்ம ஜோதியும் ஏஜ் அட்டென்ட் பண்ணிட்டு ஸ்கூலுக்கு வந்தப்போ இப்படித்தானே இருந்தா? நீ அழகி டீ செல்வி” என்று ஆளுக்கொன்று சொன்னாலும் செல்வியால் எதையும் ரசிக்க இயலவில்லை.
இடைவேளையின் போது அவள் வகுப்பில் இருக்கும் ராஜா வழக்கம்போல் செல்வியிடம் வந்து பேசினான்.
“செல்வி, ஒரு வாரமா நீ வரல. கணக்குல ஏதாவது சந்தேகம் இருந்தா கேளு. வழக்கம்போல நான் சொல்லித் தருவேன். என்கிட்ட வழக்கம்போல பேசலாம் செல்வி. நீயும் நானும் எப்பவுமே ஃப்ரண்ட்ஸ் தான், சரியா…”
வெள்ளந்தியாகச் சொல்லிவிட்டுப் போன ராஜாவை அதே குழப்பத்துடன் பார்த்தாள் செல்வி. இவனை நண்பன் என்று நினைத்து தொடர்வதா? இல்லை இவனும்….???
ஒன்றும் பிடிப்படவில்லை அவளுக்கு. யாரை நம்புவது, யாரை நம்பக் கூடாது? இவ்வளவு நாட்கள் நடந்ததையெல்லாம் சாதாரணமாக நினைத்துக் கொள்வதா? இல்லை இப்படி தன் அறியாமையை சாதகமாக்கி தன்னைத் தவறான கோணத்தில் அணுகியதை நினைத்து கவலைப்படுவதா?
இதை அம்மாவிடம் சொல்வதா? தோழிகளிடம் சொல்வதா? அப்பாவிடம் சொல்வதா? யாரிடமும் சொல்லாமல் மறைத்து விடுவதா? இனிமேல் அவர்களிடம் எப்படிப் பழகுவது?’
குழப்பமும் கலக்கமும் தான் செல்வியை ஆட்கொண்டது. உடல்ரீதியாக ஏற்பட்ட ஹார்மோன் மாற்றத்தைப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப தன் மனதைத் தயார்படுத்திக் கொள்வதற்குள் இப்படி மனதளவில் பெரிய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதை அந்தப் பிஞ்சு உள்ளம் அறிந்திருக்கவில்லை. அதற்கான பக்குவமும் அவளுக்கு இப்போது இல்லை.
செல்வி போல் தான் ஏராளமான பிஞ்சுகள் இன்றைய சூழலில் சிக்கித் தவிக்கின்றனர். என்னதான் பெற்றோர்களும், வீட்டுப் பெரியவர்களும், சமூக ஊடகங்களும் எல்லா அறிவுரைகளையும் சொன்னாலும், குழந்தை உள்ளத்தோடு இருக்கும் செல்விகளுக்கு இது போன்ற தொடுதல்கள் தவறுதலாய்த் தெரிவதில்லை.
தன் அப்பா போல், தன் அண்ணன் போல், தன்னுடைய தாத்தா போல், தன்னுடைய மாமா போல் என்று அதே கோணத்தில் தான் இந்தத் தொடுதல்களை நினைத்துக் கொள்கிறார்கள். அவை சீண்டல்களாகத் தெரிவதில்லை.
ஆனால் உடல் அளவில் மாற்றம் வந்து, பருவத்தை எட்டியவுடன் தானாகவே வந்து ஒட்டிக்கொள்கிற கூச்சமும், ஒரு ஜாக்கிரதை உணர்வும் தான் இதில் உள்ள தவறான கண்ணோட்டத்தை செல்விகளுக்கு அடிக்கோடிட்டுக் காண்பிக்க ஆரம்பிக்கின்றன.
அந்த நேரத்தில் எது சரி, எது தவறு, எதை ஏற்றுக் கொள்வது, எதை விடுவது, இவ்வளவு நாட்கள் நடந்தவைகளை எப்படிக் கடந்து செல்வது என்ற குழப்பமும் பயமும் மனதில் மேலோங்குகின்றன.
அதை வீட்டில் சொன்னால் உறவுகளுக்குள் சிக்கல் வருமா, தன்னைப் பற்றித் தவறாக நினைத்து விடுவார்களா, சொல்லாமல் விட்டால் இந்தச் சிக்கல்களுக்கு எப்படித் தீர்வு கண்டுபிடிப்பது என்றெல்லாம் அந்தப் பிஞ்சு வயதில் தீர்மானிக்க முடிவதில்லை.
இந்த உளவியலை வயதில் மூத்தவர்கள் புரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல சிறுமிகளை அணுக வேண்டும். அவர்களுக்கான ஆறுதலைத் தர வேண்டும். அப்போதுதான் இது போன்ற சீண்டல்களில் இருந்து செல்விகளைக் காப்பாற்ற முடியும்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings