எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சுமித்ராவை பார்த்து தலை அசைத்துவிட்டு ராகவன் வெளியே கிளம்ப, முன்னறையில் அவள் செல் கூப்பிட்டது.
ஹாலைக் கடக்கையில் அம்மாவும் சித்தார்த்தும் பேசிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது. சுவாரஸ்யமாக கதை ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள் போலிருக்கிறது.
“அப்பாடி ! தப்பித்தேன் சுமித்ராவிடமிருந்து”, என்று எண்ணியபடியே காரைக் கிளப்பினான் அவன்.
மனைவியின் ஆதிக்க மனப்பான்மை மனதைக் கீறியது. அவளுக்கு எப்போதும் தான் நினைத்தது தான் நடக்க வேண்டும். மற்றவர்களின் எண்ணங்களைப் பற்றியோ உணர்வுகளைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் சர்வாதிகாரி மாதிரியே நடந்து கொள்வாள். அதிலும் மாமியார் என்றால் இன்னும் கொஞ்சம் மோசமாகத்தான் குரல் வரும்.
பாக்குவெட்டியில் மாட்டிக்கொண்டதைப் போல அம்மா தவிப்பதை அவனும் சில சமயங்களில் கவனித்ததுண்டு. அவனாலும் எதுவும் செய்யமுடியாது. கூரான வார்த்தைகளையே ஆயுதமாகக் கொண்டு சாட்டையாக நாக்கைச் சுழற்றும் அவளிடம் எதைப் பேசி என்ன பயன்?
சிக்னல் அருகே வண்டி தடைப்பட்டது. வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த சிக்னல்கள் இருப்பது மாதிரி மனதின் கட்டுப்பாடற்ற போக்கையும் கட்டுக்குள் கொண்டு வர ஏதாவது சிக்னல் ,வேகத்தடை இருந்தால் தேவலை. ராகவன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.
திருமணமான புதிதில் சுமித்ரா ஓரளவுக்கு அமைதியாகத்தான் இருந்தாள். நாளாக நாளாகத்தான் அவள் போக்கே மாறிவிட்டது.
எதற்காவது எப்போதாவது சீறுவது என்று இருந்தவள் எதற்கெடுத்தாலும் சீறுவது என்று ஆரம்பித்தாள். ஆண்கள் பாவம், வெளிப்படையாகப் பார்க்கும் போது அவர்கள் தான் சந்தோஷமாக இருப்பது போலத் தோன்றும். உண்மையில் தாய்க்கும் தாரத்துக்கும் இடையில் மாட்டிக் கொண்டு இயல்பாக இருக்க முடியாமல் திணறும் கணவன்மார்கள் தான் அதிகம்.
நல்ல வேளையாக அம்மா அப்படிப் பட்டவளல்ல. தன்னால் எந்தப் பிரச்சினையும் வரக் கூடாது என்று ஒதுங்கியே போய் விடுவாள். எதையும் ராகவனிடம் கூட வந்து சொல்ல மாட்டாள். இவனிடம் சொல்லி என்ன பயன் என்று நினைக்கிறாளோ என்று கூட நினைத்து ராகவன் வேதனைப்பட்டதுண்டு.
திருமணத்துக்கு முன் எல்லாவற்றையும் அம்மாவிடம் பகிர்ந்துகொள்வதுதான் அவன் வழக்கமாக இருந்தது. முதன் முதலில் வேலை கிடைத்து அவன் போகும் போது கூட ஆசிர்வதித்த அம்மாவைக் கட்டிக் கொண்டு ‘இனி மேலாவது நீ நிம்மதியா இருக்கணும்மா!’ என்றவன்.
அம்மா அவனுக்காக பட்ட சிரமங்கள் அத்தனையும் உணர்ந்தவன். அதனாலேயே அம்மாவின் மீது அவனுக்கு அலாதியான பாசம் உண்டு. கிராமத்தில் ஒதுங்கியே இருந்தவளை இங்கு கூட்டி வந்து இரண்டு மாதம் தான் ஆகிறது. அதற்குள் ஆயிரம் பேதங்கள், பிரச்சினைகள். ஒரு நாள் கடப்பதே பெரும்பாடு என்று ஆகிவிட்டது.
என்னதான் மனதில் வைத்திருப்பாளோ தெரியாது! எதற்கெடுத்தாலும் ஏடாகூடமாக வரும் பேச்சு மனிதனின் நிம்மதியையே கெடுத்து விட்டது.இப்போது புதிதாக ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறாள்.ஒரு வேளை அதைத்தான் அவள் நினைத்துக் காய் நகர்த்துகிறாளோ என்று தோன்றியது.
அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டுமாம். உயிர் கொடுத்தவளை எப்படி உதற முடியும்! இதயத்தில் இருந்து தூக்கி எறிய சொல்கிறாள். இதயத்தை தூக்கி எறிந்து விட முடியுமா என்ன? அது பாட்டுக்கு சத்தமில்லாமல் அதன் வேலையை செய்து கொண்டு தானே இருக்கிறது!
மனதுக்குள் பலவும் நினைத்து மறுகினான் அவன். அம்மாவும் அவளால் இயன்றவரை அனுசரித்துத் தான் போகிறாள். சொல்லப் போனால் சித்தார்த்துக்கு பாட்டியிடம்தான் கொள்ளைப் பிரியம்.
சிடுசிடுக்கும் அம்மாவை விட சிரித்து கதை சொல்லும் பாட்டி அவன் மனதில் அதிகம் பதிந்தாள். ஸ்கூல் விட்டு வரும் போதே பாட்டி என்று கூப்பிட்டுக் கொண்டே தான் வருவான். போதாதா சுமிக்கு!
இதோ அதோ என்று முடிவெடுக்க வேண்டிய தருணம் கடைசியில் வந்தே விட்டது.சுமித்ராவை சமாளிக்கவே முடியவில்லை. எந்த நேரமும் எல்லைப் படையில் இருப்பதைப் போல அவள் தீவிரம் காட்டினாள்.
யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான் ராகவன். அவள் இஷ்டப்படியே அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவது.அம்மாவின் நாட்களாவது அமைதியில் கழியும்.
சித்தார்த்தை மாதம் ஒருமுறை கொண்டு போய் காட்டிக் கொள்ளலாம்..
அன்றே போய்ப் பார்த்து கணிசமாக ஒரு தொகையை முதலீடாக கொடுத்து அம்மாவை மறுநாள் கொண்டு வந்து விடுவதாக சொல்லி வந்தான்.எத்தனையோ சமாதானங்கள், சால்ஜாப்புகள்.
உத்தியோக விஷயமாக தான் வெளியூர்களுக்கு அடிக்கடி போக வேண்டி இருப்பதால் அம்மாவை கூட வைத்துக் கொள்ள முடியவில்லை என்று சொல்லிக் கையெழுத்திடும் போது தன்னை அறியாமலே கண்ணீர் விட்டான் அவன்.
அலுப்பும் களைப்புமாக அவன் வீடு திரும்பிய போது சுமித்ரா வீட்டில் இல்லை. வெளியே எங்கோ போயிருந்தாள். சித்தார்த்துக்கு கதை சொல்லிக் கொண்டிருந்த அம்மாதான் வந்து கதவைத் திறந்தாள்.
காபியைக் குடித்துவிட்டு சோஃபாவில் சாய்ந்த போது சித்தார்த்தும் அம்மாவும் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. தானும் போய் அவர்களுடன் கலந்து கொள்ளலாம் என்று எண்ணமிட்டவன் அசதியில் தன்னை மீறி கண்ணயர்ந்து விட்டான்.
அவன் கண் விழித்த போது சித்தார்த்தின் குரல் கணீரென்று கேட்டது.
“ஏன் பாட்டி, ராஜா அந்த தவளையை அரண்மனை உள்ளே விடணும்? இளவரசி தெரியாமல் சொல்லி விட்டாள் என்று சொல்லியிருக்கலாமே! இல்லை என்றால் தவளையை தூக்கிப் போடுவதா கஷ்டம்! ஈஸியாக செய்திருக்கலாமே!”
அந்த கதை அவனுக்கும் தெரியும். இளவரசி விளையாடிக்கொண்டிருந்த பந்து குளத்தில் போய் விழுந்து விடும். எடுத்து தருவதாக சொன்ன தவளையை தன்னுடன் வைத்து பாதுகாப்பதாக உறுதி கொடுக்கும் இளவரசி அதை ஏமாற்றிவிட்டு பந்தை மட்டும் வாங்கிக் கொண்டு அரண்மனைக்குள் போய்விடுவாள். தவளை வந்து அரசனிடம் நீதி கேட்பதாக வரும் அந்த கதை அவன் மனதில் விரிந்தது.
சித்தார்த்தின் கேள்வி ராகவனுக்கு சிரிப்பை வரவழைத்தது. இதற்கு அம்மா என்ன பதில் சொல்கிறாள் பார்ப்போம் என்று ஆர்வத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தான் அவன்.
“முன்னெல்லாம் வாக்கு, சத்தியம் அதற்கெல்லாம் நிறைய மதிப்பு உண்டு. உயிரையே விட்டாலும் சொன்ன சொல்லைக் காப்பாற்றியே ஆக வேண்டும். அப்படி ஒரு மனப்பான்மை. அப்படி ராஜாக்கள் இருந்தால்தான் அற்ப ஜந்துக்கள் கூட போய் நியாயம் கேட்க முடிந்தது. பாதுகாப்பும் இருந்தது. பிரச்னையை சமாளிப்பதை விட அதையே தூக்கி எறிந்து விட்டார் என்று அன்றைக்கு கனவில் கூட நினைக்க மாட்டார்கள்.”
நிதானமாக பேரனுக்கு புரியும் வகையில் மெதுவாக சொன்னவள் தொடர்ந்தாள்.
“அதோடு அடைக்கலம் என்று வந்ததை காப்பாற்றுவது மன்னன் கடமை ஆயிற்றே! கடமையிலிருந்து நழுவ எந்த காரணமும் கண்டு பிடிக்க மாட்டார்கள் இந்த கால மக்களைப் போல!”
கேட்டுக் கொண்டிருந்த ராகவன் மனதில் இடி இடித்தது.
அம்மா ! நீ சொல்றதெல்லாம் சரிதான். ஆனா அன்னிக்கு பிரஜைகளும் நியாயமா நடந்துகிட்டாங்களே! இப்போ அந்த மாதிரி யாருமே இல்லையே!
என்ன செய்வது என்றே தெரியாமல் குழம்பியவனாக அம்மாவிடமே கேட்கலாம் என்று தளர்வுடன் நடந்தான் அவன்.
எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings