2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“அம்மா அம்மா இங்க கொஞ்சம் வாங்களேன் ..” ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகள் அக்ஷயாவின் குரல் கிச்சனில் பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருந்த கீதாவின் காதில் விழுந்தது.
“என்னடி வேணும் ..இன்னும் கொஞ்சம் வேலை பாக்கி இருக்கு.. முடிச்சுட்டு வரேன் ..”
“வேலையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.. கொஞ்சம் வாங்க. இப்ப படிச்சத கையோட ஒப்பிச்சு காட்டுறேன்” அருகில் புத்தகமும் கையுமாக வந்து நின்ற மகளை ஏறிட்டாள்.
ஆச்சி ஃப்ரீயா தான் இருக்காங்க..ஆச்சி கிட்ட போய் ஒப்பிச்சுக்கோ..”
“ஆச்சிக்கிட்டயா…” என்று மகள் இழுக்க..
” ஆச்சி டீச்சர் வேலை பாத்தவங்க.. அழகா சொல்லி கொடுத்திடுவாங்க.. உங்க அப்பா, சித்தப்பா, அத்தை எல்லாத்துக்குமே ஆச்சிதான் சொல்லிக் கொடுப்பாங்க.. நீ போய் தாராளமா அவங்க கிட்ட ஒப்பிச்சுக்கோ ” என்றாள்.
ரூமில் உட்கார்ந்து ஸ்தோத்திர புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டிருந்த கல்யாணி அம்மாவின் காதில் இது விழ..
“வாம்மா அக்ஷயா நான் சொல்லித் தரேன்” என்றாள் ஆசையோடு ..
ஹாலில் உட்கார்ந்திருந்த பிரபு இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தான்.அப்பா இறந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது .அப்பா இருந்தவரை அப்பா, அம்மா இருவரும் சொந்த ஊரிலே சொந்த வீட்டிலேயே காலம் கழித்து விட்டார்கள்..அம்மாவை அவன் கூட்டி வந்தபோது அம்மா எப்படி இந்த வாழ்க்கைக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்வாளோ என்று பயந்து கொண்டிருந்தான்.இப்போது பரவாயில்லை ஏதோ சமாளித்துக் கொள்கிறாள் என்ற நிம்மதி மனதுக்குள் பிறந்தது .
அக்ஷயாவும்” ஆச்சி ஆச்சி ” என்று ஒட்டிக் கொண்டாள் ..பாடம் ஒப்பிப்பது, பாடத்தில் சந்தேகம் இருந்தால் கேட்பது , என
எல்லாவற்றிற்கும் அம்மாவுக்கு பதில் ஆச்சியை தேடத் தொடங்கினாள் .
மறுநாள் வாசலில் வந்த உதிரி முல்லைப் பூவை வாங்கிய கீதா, பூவை ஹாலில் உட்கார்ந்திருந்த கல்யாணி அம்மாவிடம் கொடுத்து,” அத்தை இதை கொஞ்சம் தொடுத்து தாங்க ” என்றாள் கீதா.
“நான் எப்படி பூவை தொட?” என்று தயங்கினாள் கல்யாணியம்மாள்
” என்னத்த பூ கொண்டு வர்ற பாட்டி உங்களப் போலத் தானே அவங்க பூவ கட்டி கொண்டு வந்து கொடுத்தத நாம வாங்கலையா.. சாமி படத்துக்கு போட்டுட்டு தலையில் தான் வைச்சுக்கலையா.. பரவாயில்ல சும்மா கட்டுங்க” என்றாள்.
இது தொடர்ந்தது..எப்போதும் ” அத்தை இந்த பூண்டை உரிச்சுக் கொடுங்க..இந்த வெங்காயத்தை வெட்டிதாங்க… கீரையை ஆய்ந்து குடுங்க.. துணியை மடிச்சு வைங்க..” என்று எதையாவது ஒரு வேலையை அம்மாவை செய்யச் சொல்லிக் கொண்டிருப்பதை பார்த்ததும் பிரபுவுக்கு மனசு கஷ்டமாக இருந்தது.
பாவம் வயதானவள் இங்க வந்தா கொஞ்சம் நிம்மதியா ஓய்வாய் இருக்கட்டுமேன்னு கூட்டிட்டு வந்தா, அவளை எப்ப பாத்தாலும் வேல வாங்கிகிட்டே இருக்காளே இந்த கீதா ..மனதிற்குள் பொருமினான்..
இவ அம்மா வந்தா இப்படித்தான் செய்ய சொல்லுவாளா? மாமியார் என்பதாலேயே இப்படி நடத்துறா . ஏன் இப்படி மாறிட்டா பொதுவா வேலை பாக்க சளைக்காத கீதா இப்போது எதுக்கெடுத்தாலும் “அத்தை…அத்தை..” என்கிறாள் .மனதில் எரிச்சல் மண்ட அவளிடம் கேட்டு விட வேண்டும் என்று தீர்மானம் பண்ணினான். ஆனால் அம்மா முன் சண்டை வேண்டாம் என்று பொறுமையாக இருந்தான்.
அன்றும் அப்படித்தான் சாப்பிட்டு விட்டு ரூமுக்குள் ஓய்வெடுக்க கிளம்பிய கல்யாணி அம்மாவை தடுத்து நிறுத்தியது கீதாவின் குரல்…
” அத்தை தெருமுனையில் இருக்கிற பிள்ளையார் கோவிலில இன்னைக்கு சங்கடகர சதுர்த்தி பூஜைக்கு கொடுத்திருக்கிறேன். நீங்க சாயங்காலம் கோயிலுக்கு போயிட்டு, அப்படியே பிரசாதம் வாங்கிட்டு வந்துடுவீங்களா? துணைக்கு வேணா அக்ஷயாவை கூட்டிட்டு போங்க..”
” சரிமா சும்மா தானே இருக்கேன்.. சாயங்காலம் வாங்கிட்டு வந்துடறேன்…அக்ஷயா கூட வர வேண்டாம் அவ படிக்கட்டும். நானே போயிட்டு வந்துடுவேன் ” என்றாள் கல்யாணி அம்மா.
அன்று சாயங்காலம் ஆபீஸிலிருந்து வந்த பிரபு அம்மா கோயிலுக்கு போயிருந்ததை தெரிந்து கொண்டதும் கொதித்துப் போனான்.
” ஏன் கீதா.. உனக்கெல்லாம் மனசாட்சிங்றதே இல்லையா? உங்க அம்மாவா இருந்தா இப்படித்தான் வேலை வாங்குவியா? நானும் பாக்கிறேன் வந்த நாளிலிருந்து அம்மாவை ஏதாவது ஒன்னு செய்ய சொல்லிக்கிட்டே இருக்க …உன் மனசுல என்ன நினைச்சுகிட்டிருக்க ..அவ மகன் வீடு அவளுக்கு உட்கார்ந்து சாப்பிட எல்லா அதிகாரமும் இருக்கு ..” என்றான் கோபமாக.
கையில் இருந்த காப்பியை கணவனிடம் கொடுத்தவள் …
” ஏங்க .. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க ..நான் வேலை செய்ய அஞ்சுறவ கிடையாது. உங்களுக்கே அது தெரியும்…மாமா இறந்த பிறகு அத்தைய நாம கூட்டிட்டு வரும்போது எப்படி இருந்தாங்க.. ரொம்ப சோர்வா எந்த நேரமும் படுத்துட்டு..ஒரு விரக்தியா எதையுமே செய்ய புடிக்காம அப்படியே உட்காந்துகிட்டு இருந்தாங்க …
இப்ப எப்படி இருக்காங்க பாருங்க சின்ன சின்ன வேலைய ஆர்வமா செய்றாங்க. அக்ஷயாக்கு பாடம் சொல்லிக் கொடுக்கறாங்க.. இன்னைக்கு அடுத்த ஸ்டெப்பா கோயிலுக்கு போறேன்னு போயிருக்காங்க.. நான் அப்படி அத்தையை செய்ய சொல்றதுக்கு காரணம் அவங்க இந்த வீட்டில சகஜமா புழங்கனும். தன்னைத் தானே தனிமைப் படுத்திக்க கூடாதுங்கற ஒரே காரணத்துக்காகத் தான்.
இப்படிப்பட்டவங்க அனிச்சமலர் மாதிரிங்க ..நாம பேசாம இருந்தோம்னா மனசளவில ரொம்ப சுருங்கிடுவாங்க .. நாளடைவில் நமக்கு பாரமா இருக்கோமோன்னு யோசிக்க ஆரம்பிச்சிடுவாங்க.. அதே நம்ம நடைமுறை வாழ்க்கையில சின்ன சின்ன விஷயத்துல அவங்கள ஈடுபடுத்திக் கிட்டோம்னா அவங்களுக்கும் சந்தோஷமா இருக்கும். தனக்கும் இந்த வீட்ல ஒரு சகஜமான இடம் இருக்குன்னு நினைச்சுக்குவாங்க.
கொடுமையிலும் கொடுமை வயோதிகத்தில் தனிமை… தனியா இருக்கிறவங்க அதுவும் துணையை இழந்தவங்க ரொம்ப வெறுமையாக பீல் பண்ண ஆரம்பிச்சுடு வாங்க .வாழ்க்கையே அர்த்தமில்லாதது போல தோனும்.. நம்மால யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை.. இவங்களுக்கு பாரமா இங்க இருக்கனுமான்னு யோசிக்க தெஆரம்பிச்சுடுவாங்க ..
இப்ப பாருங்க அத்தை கொஞ்சம் கொஞ்சமா சகஜ வாழ்க்கைக்கு திரும்புறாங்க. இந்த வாழ்க்கைய ஏத்துக்கிட்டு, இனி இத அர்த்தமுள்ளதா ஆக்கிகிடுவாங்க .. நம்ம மருமகளுக்கு உதவி செய்யுறோம். பேத்திக்கு பாடம் சொல்லிக் கொடுக்குறோம்ன்னு ஒரு மனதிருப்தி அவங்களுக்கு இருக்கும் .கோயிலுக்கு போனா நாலு பேரோட பேசி சந்தோஷமா இருப்பாங்க அவங்களுக்கும் மனசு ஆறுதலா இருக்கும்.அப்புறம் தானே கொஞ்சம் நேரம் வெளியில போயிட்டு வரேன்னு கிளம்புவாங்க.
இதையெல்லாம் நெனச்சு தான் நான் அத்தை கிட்ட இப்படி நடந்துக்கிறேன்.. வேணாம்னு சொன்னா அவங்கள நான் ஒரு வேலையும் செய்ய விடலை..” என்று கூறி முடிக்கும் முன் தன் கையால் அவள் வாயை மூடினான் பிரபு ..
” எவ்வளவு அழகா சிந்திச்சிருக்க.. அம்மாவ நான் உணர்ச்சி பூர்வமா அணுகுறேன். நீ அறிவுப்பூர்வமா யோசிச்சு செயல்படுற …இது நிச்சயம் அவங்கள அவங்க சோகத்தில் இருந்து.. வெறுமையிலிருந்து.. வெளியே கொண்டு வரும் ” என்றவன் நன்றியுடன் அவள் கைகளை இறுகப்பற்றிக் கொண்டான். இருவர் மனதிலும் ஒரு நிம்மதி பிறக்க உதடுகளில் புன்னகை மலர்ந்தது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings