2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
‘என்னைக்கு தீர்த்தக்காவடி எடுத்துக் கிளம்பறோம்டா சுரேசு?’ என்றாள் அங்காயி பேரனைப் பார்த்து.
‘ஆத்தா, இன்னைக்கு புதன்கிழமை.. வெள்ளிக்கிழமை காலைல கொடுமுடி காவிரி ஆத்தில தீர்த்தம் எடுத்துக்கிட்டு கிளம்பினா, திங்கட்கிழமை காலைல உத்திரத்தன்னைக்கு பழனி போயிடலாம்’ என்ற பேரன் ‘இத முந்தாநாள்தானே என்கிட்ட கேட்டே ஆத்தா?’ என்றான்.
‘வயசாயிடுச்சில்ல.. அதான் மறந்து போச்சு’ என்றவளிடம் பேரன், ‘அதனால்தா அப்பா உன்னை தீர்த்தகாவடிக்குப் போக வேண்டாம்னு சொல்றாரு. அதான் நாங்கெல்லாம் போறமில்ல?’ என்றான். இரண்டு பேரன்களில் சுரேஷ் மாத்திரம் பேச்சிலும், நடத்தையிலும் பொறுமையும், நிதானமும் கொண்டவன்.
‘சின்ன வயசிலிருந்து வருச வருசம் பங்குனி மாசம் தீர்த்தத்தோடு நடந்து போய் உத்திரத்தன்று எஞ்சாமி முருகனை தரிசனம் செஞ்சு பழக்கமாயிடுச்சு. போகலேன்னா மனசு கேக்காது. நடக்க முடியற வரை போய் வாரேன். நம்மூர்க்காரங்க, என்னோட வயசுக்காரிகள்ளெல்லாம் வாராங்க. நீயும் வர்ரே.. அப்புறம் என்ன?’ என்று பேச்சை முடித்தார்.
அந்த ஊரில் உள்ள சிறுசிலிருந்து பெருசு வரை பழனிக்கு உத்திரத்தன்று தீர்த்தக் காவடி எடுத்துச் சென்று பழனி முருகனை வழிபட்டு வருவது தொன்றுதொட்டு நடக்கும் பழக்கம். கொடுமுடியில் புறப்படும் காவடிக்கூட்டம் கால்நடையாக தென்னிலை, சின்னதாராபுரம், தொப்பம்பட்டி வழியாக பழனி சென்று சேரும். காவடி எடுக்கும் பங்குனி மாதம் முழுவதும் அந்த ஊரில் யாரும் புலால் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
அந்த ஊரில் இருக்கும் நூறு குடும்பங்களில் வீட்டுக்கு ஒருவரோ அல்லது இருவரோ தாமாகவே வந்து கலந்து கொள்வர். ஒரு மாதம் முன்பே ஊர் கூடி தீர்த்தக்காவடிக்குத் தேவையான ஏற்பாடுகளுக்கு குழுக்கள் அமைத்து, பொறுப்பு பகிர்ந்து கொடுக்கப்படும். சிலர் காவடி எடுக்காமல், அவரவர்களின் வேண்டுதல் பிரகாரம் கோமாளி, குறவன் குறத்தி போன்ற வேசம் இட்டு காவடியுடன் ஆடி வருவார்கள்.
இசைக்கருவிகள் வாசிப்பவர்கள், முருகன் மேல் பாட்டுப் படிப்பவர்கள், சமையல் செய்பவர்கள் போன்றவர்கள் காவடியுடன் வருவார்கள். நல்ல வெயில் நேரத்தில், ஆங்காங்கே போகும் வழியில் உள்ள ஊரில் தங்கி இளைப்பாறி, உடன் வரும் சமையல்காரர்கள் சமைக்கும் உணவை அருந்தி, ஆடல் பாடல் கேட்டு ஓய்வெடுத்துப் பின் வெயில் தணிந்தவுடன் பயணம் தொடங்குவர்.
இரவுப் பயணம் அதிகமாக இருக்கும். உடன், சமையல் செய்யும் பொருட்கள் கொண்டு வர ஒரு மாட்டு வண்டியும், இடையில் நடக்க முடியாமல் காலில் கொப்புளம் வந்தவர்களும், வயதானவர்களும் பயணம் செய்ய ஒரு டெம்போவும் பயணிக்கும். அங்காயி போன்ற நடக்க முடியாத வயதானவர்கள் காவடியுடன் பயணம் செய்ய, ஆட்களின் எண்ணிக்கையைப் பொருத்து டெம்போக்கள் ஏற்பாடு செய்வார்கள். செலவுகள் அனைத்தும் காவடியில் கலந்து கொள்ளும் அந்த ஊர்க்காரர்களால் பகிர்ந்து கொள்ளப்படும்.
பேரன் சுரேஷ் போனபிறகும் அங்காயிக்கு காவடி நினைவுகளிலிருந்து மீண்டு வர முடியவில்லை. இன்னும் இரண்டு நாட்களில் பயணம் கிளம்ப வேண்டும் என்பதே அவளின் கடந்த கால பழைய நினைவுகளைக் கிளறி விட்டது.
கணவன் முத்துச்சாமி இருக்கும்போது வருடா வருடம் தீர்த்தம் கொண்டு போவதற்கு அவனின் துணை இருந்தது. அங்காயிக்கும் முத்துச்சாமிக்கும் கல்யாணம் நடந்து இரண்டு வருடம் வரை, முத்துச்சாமி மாத்திரம் காவடிக்குச் சென்று வந்தான். இரண்டு வருடங்கள் கடந்தும் அங்காயிக்கு கருத்தரிக்காததால் மாமியார்க்கிழவி புலம்பலைத் தொடங்கினாள்.
காவடிக்கு அங்காயி போகாததுதான் கருத்தரிக்காததற்குக் காரணம் என்று சககிழவிகளிடம் புலம்ப ஆரம்பித்து விட்டாள். அதன் பிறகுதான் அங்காயியும் கணவனுடம் தீர்த்தக் காவடி எடுக்கத் தொடங்கினாள்.
கிழவியின் வாக்கை மெய்ப்பிப்பதைப் போல அந்தப் பழனியாண்டவன் அருளால் அடுத்த வருடமே கருக்கொண்டு நான்கு வருடத்தில் ஒரு பெண்ணும் ஒரு பையனும் பிறந்தார்கள் அங்காயிக்கு. அன்று தொடங்கிய தீர்த்தக்காவடிப் பயணத்தை இந்த அறுபது வயதிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறாள் அங்காயி.
ஏனோ காவடி நினைவு வரும்போதெல்லாம், தவறாமல் கணவன் முத்துச்சாமியின் நினைவு வரத் தவறுவதில்லை அவளுக்கு. கணவனின் போட்டோவின் முன் நின்று அவனோடு வாழ்ந்த வாழ்க்கையை மனத்திரையில் ஓட்டிப் பார்த்தாள் அங்காயி.
தன்மையுள்ள, மென்மையான மனம் கொண்டவன் கணவன் முத்துச்சாமி. காவடிக்குச் செல்லும்போது அவளைத் தன் கண் பார்வையிலேயே வைத்திருந்து பத்திரமாகக் கூட்டி வருவான். இதை அவனின் மற்ற நண்பர்கள் கேலி செய்யும்போது கூட புன்முறுவலுடன் அதைப் பெருமையாக ஏற்றுக் கொள்வான்.
பையனுக்கும், பெண்ணுக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்து முடித்து வைத்து, கொஞ்சம் ஓய்வு எடுக்கும் காலத்தில் காலன் அவனை வித்தியாசமாக தன்னிடம் அழைத்துக் கொண்டான்.
கட்டுத்தரையில் மாடுகளுக்குக் குனிந்து வைக்கோல் போட்டுக் கொண்டிருக்கும்போது, புதிதாக வாங்கி வந்திருந்த மாடு மிரண்டு கொம்பை அசைக்க, அது சரியாக அவனின் வயிற்றில் குத்தி, குடல் வெளிவந்து ஐந்து நிமிடத்தில் அவன் பிணமானான்.
போட்டோவிலிருந்த முத்துச்சாமி, ‘தைரியமா காவடிக்குப் போயிட்டு வா அங்காயம்மா அந்த பழனியாண்டவன் துணையிருப்பான்’ என்று கூறுவதுபோல் இருந்தது.
ஊரில் எல்லோரும் அவள் பெயரைச் சுருக்கி ‘அங்காயி’ என்று கூப்பிடும்போது அவன் மாத்திரம் ‘அங்காயம்மா’ என்று முழுப்பெயரோடு கூப்பிடுவான். அதன் காரணத்தை ஒரு நாள் அவள் கேட்டபோது, ‘உன்னோட அப்பா, அம்மா உனக்கு உங்க குலதெய்வத்தின் பெயரை விரும்பி வெச்சுருக்கறாங்க… அதை வாய் நிறைய கூப்பிட்டா புண்ணியம் தானே’ என்று சிரிப்பான்.
‘என்ன பண்ணிக்கிட்டிருக்கிறே அங்காயி?’ என்ற குரல் கேட்டு பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டு திரும்பி வாசலை நோக்கினாள். பக்கத்து வீட்டுப் பொன்னம்மாள் வந்து கொண்டிருந்தாள். சம வயதுத் தோழி. இருவருக்கும் இரண்டு மாத வித்தியாசத்தில்தான் திருமணம் நடந்தது.
‘காவடிக்கு இன்னும் இரண்டு நாள்தானே இருக்கு. அதைப் பத்தித்தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். நீ எல்லாம் தயார் பண்ணிட்டயா?’ என்றாள் அங்காயி.
‘ம்.. என்னமோ நடக்குது. வருசா வருசம் போறதுதானே? ஆமா.. சுரேசு தீர்த்தச்சொம்புக்கு கலர் கயிறும், கலர் துணியும் வாங்கியாந்துட்டானா?’ என்றாள் பொன்னம்மா.
‘ உனக்கும் சேர்த்து வாங்கியாந்துட்டான். இந்தா..’ என்று கயிற்றையும், துணியையும் எடுத்துக் கொடுத்தாள்.
தீர்த்தச் சொம்பில் தீர்த்தம் நிரப்பியவுடன், சொம்பின் வாயில் கலர்த்துணியை வைத்து கலர்க் கயிற்றால கட்டுவார்கள். கயிற்றின் இரு முனையிலும் கலரில் குஞ்சம் வைக்கப் பட்டிருக்கும். கலசம் தலையில் ஏறியவுடன் இருபுறமும் தொங்கும் குஞ்சத்தோடு கூடிய அந்தக் கயிற்றை இரு கரங்களாலும், இரு புறமும் பிடித்து கலசம் கவிழாமல் பிடித்துக் கொள்வார்கள்.
புறப்படுவதற்கு முதல் நாள் வியாழக்கிழமை பவளாயியின் மகன் ஓடி வந்தான்.
‘பாட்டி, அம்மா இந்த ரூபாயை பழனியில உண்டியல்ல போடச் சொன்னாங்க..’ என்று நூற்றியொரு ரூபாயை நீட்டினான். பணத்தை வாங்கி எண்ணிக்கொண்டே கேட்டாள் அங்காயி
‘ஏண்டா.. உங்கம்மா வரலையா? நேற்றுக்கூட வர்ரதா சொன்னாளே?’.
‘என்னமோ தெரியல.. கோவிலுக்கு வரக்கூடாதாம்..’ என்று அவன் சொன்னவுடன் புரிந்து கொண்டாள், பெண்களுக்கே உண்டான தீட்டு என்பதால் வரவில்லையென்று. பணத்தை பத்திரமாக சுருக்குப்பையில் வைத்து இடுப்பில் செறுகிக் கொண்டாள் அங்காயி.
வெள்ளிக்கிழமை அதிகாலை கொடுமுடியில் காவிரி தீர்த்தம் எடுத்துக்கொண்டு அந்த ஊர்க் காவடி கிளம்பியது. முன்னால் வாத்திய கோஷ்டியும், கோமாளி மற்றும் வேசம் கட்டிய ஆட்டக்காரர்களும் அதற்குப்பின் நடையில் செல்லும் இளைஞர்களும், அதற்குப்பின் டெம்போக்களில் நடக்க முடியாத வயதானவர்களும், அதன் பின் சமையல் பாத்திரங்களுடன் மாட்டு வண்டியும் உற்சாகமாகச் சென்றனர். இடையிடையே எழும்பிய ‘கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா’ என்ற கோஷமும் வானைப் பிளந்தன.
காவடிக்கூட்டம் தொப்பம்பட்டியில் உணவிற்காக நின்றபோதுதான் காளியம்மா அங்காயியைப் பார்த்துக் கேட்டாள், ‘என்ன அங்காயி, காதில தொங்கும் தோட்டைக் கழட்டி வைக்க மறந்திட்டயா? கோயில்னு கூடப் பாக்காமா காதோடு சேத்தி பிச்சுக்கிட்டுப் போயிடுவானுக திருட்டுப் பசங்க..’ என்றாள்.
திடுக்கிட்டு காதைத் தொட்டுப் பார்த்தாள் அங்காயி. நினைத்து நினைத்து ஒவ்வொன்றையும் செய்தவள் எப்படி காதுத் தோட்டை மறந்தாள்? மொத்தம் நான்கு பவுன். இன்றைய ரேட்டுக்கு ஒண்ணேமுக்கால் லட்சம்.
மகள் வயிற்றுப் பேரன் தங்கராசு அந்தப்பக்கம் வருவதைப் பார்த்ததும் கூப்பிட்டாள் அங்காயி, ‘டேய் தங்கம்.. மறந்துட்டு காது தோடு போட்டுக்கொண்டு வந்துட்டண்டா.. கழட்டித் தாரேன். பத்திரமா வெச்சிருந்து ஊருக்கு வந்து கொடுக்கிறயா?’
‘அம்மாச்சி.. பாருங்க நானே சட்டையும், டவுசரும் போட்டிருக்கறேன். எங்கே வைக்கிறது நீங்க எப்பவும் ஒரு சுருக்குப் பை வச்சிருப்பீங்களே.. அதுல போட்டு வச்சுக்குங்க’ என்று நல்ல யோசனை சொன்னான்.
காதுத் தோட்டைக் கழட்டி சுருக்குப்பையில் போடும்போதுதான் கையில் தட்டுப்பட்டது பவளாயி உண்டியலில் போடச் சொல்லிக் கொடுத்திருந்த பணம். ‘மறக்காமல் போடோணும்.. இல்லன்னா தெய்வக்குத்தம் ஆயிடும்’ என்று தானே முணுமுணுத்துக் கொண்டாள் அங்காயி.
அந்த வருடம் பழனியில் எண்ணிலடங்காத கூட்டம். பாதிக்கு மேல் கேரள பக்தர்கள். முருகன் மேற்கு நோக்கி தங்கள் நாட்டைப் பார்த்துக்கொண்டிருப்பதால், முருகனை தங்களின் இஷ்டதெய்வமாக, ஐயப்பனின் சகோதரனாக ஏற்றுக்கொண்ட சேர நாட்டு மக்கள். தமிழகத்தின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் வந்திருந்த காவடிக் கூட்டம்.
எங்கும் ‘அரோகரா’ என்ற பக்த கோஷம். அங்காயி தன் கால் கொண்டு நடக்க வில்லை. கூட்டம் அவளைத் தள்ளிக்கொண்டு போயிற்று. வயிற்றுப் பக்கம் கூட்டம் நெருக்கும்போதெல்லாம் சுருக்குப் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள் அங்காயி.
உண்டியலில் பணம் போடுவதற்கு சுருக்குப் பையை எடுப்பதற்குக் கூட கூட்ட நெரிசல் விடவில்லை. ஒரு வழியாக தோடு வெளியே விழாமல் நூற்றியொரு ரூபாயை மட்டும் எடுத்து உண்டியலில் போட்டு விட்டு, சுருக்குப் பையை கவனமாக மீண்டும் சொருகிவிட்டு நிமிரும் போது கூட்டம் அவளை வெளியில் தள்ளிக் கொண்டு வந்து விட்டது.
மலையிலிருந்து கீழே இறங்கி வந்து சிற்றுண்டி சாப்பிட ஹோட்டலில் உட்கார்ந்திருந்த போதுதான் காளியம்மா ஆரம்பித்தாள்,
‘அப்பா என்ன கூட்டம்… ஆனாலும் இத்தனை வருசம் இல்லாத ஒரு தரிசனம் இந்த வருசம் கெடச்சுது. என்ன ஒரு அழகு.. சிரித்த முகத்துடன் கம்பீரமாக..’ என்றாள்.
‘இத்தனை வருசம் இல்லாத தரிசனம்னாயே.. அது என்ன?’ என்றாள் கூட்டத்திலிருந்த பொன்னுத்தாயி.
‘நான் இதுவரை வந்த சமயங்களிலெல்லாம் கிடைக்காத முருகனின் ‘ராஜ அலங்கார’ தரிசனம் இன்னைக்குத்தான் கெடச்சுது. கொடுத்து வெச்சுருக்கோணும்’ என்றாள் காளியம்மா.
திடுக்கிட்டாள் அங்காயி. அப்போதுதான் உறைத்தது அவளுக்கு, சுருக்குப்பையின் மேல் இருந்த கவனத்தில் தான் முருகனையே பார்க்கவில்லை என்பது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings