in ,

அந்த இடம்..! (சிறுகதை) – கோவை தீரா

எழுத்தாளர்  கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

பால் வாங்கிக்கொண்டு வரும்போது அந்த வழியைக் கடந்த பின் தான் ஞாபகம் வந்தது. ‘அந்த இடத்தைப் பார்க்கவில்லையே’ என்று.

மேகலாவிற்கு அந்தவழி நடக்கும்போதெல்லாம்  அந்த இடம் ஒரு கனவு போலவும் மாயை போலவும் தோன்றும். அவள் வீட்டிலிருந்து நடந்து, கொடைக்கானல் போகும் நெடுஞ்சாலை கடந்து, ஆற்றுப்பாதையாக மூன்றுமைல் ஒற்றையடிப் பாதை ஒன்று நீண்டு போகும்.

அந்தப் பாதையில் ஒன்றரை மைல் கடந்ததும் பால்காரன் பைரவன் வீடு இருக்கிறது. அவன் இப்போதெல்லாம் பால் ஊற்றப் போவதில்லை. அவனது அம்மாவுக்கு பக்கவாதம் வந்ததிலிருந்து கூடவே இருந்து பார்த்துக் கொள்கிறான். அவன் வீட்டிற்குச் சென்று பால் வாங்கிக்கொள்வது மேகலா வழக்கம்.

நான்கு மாதங்களாக இப்படித்தான் மாலை பள்ளி முடிந்ததும் இங்கு வந்து பால் வாங்கிக் கொண்டு போவாள்.  இருட்டம்பட்டி அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்க்கிறாள்.

அவளுக்கு இந்த வழியே வருவதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, மரங்களும் புதர்ச்செடிகளும், கோரைப்புற்களும் வழியெங்கும் பரவி கிடக்கும்,  அந்தப் பாதையில் சற்று தள்ளி தெளிவற்று தெரிந்த அந்த காடு போன்ற இடம்.

மற்றொன்று, பைரவன் வீட்டுப் பசும்பால். மெல்லிய இளம் மஞ்சளில் அளவான பதத்தில் இருக்கும் அந்தப்பால், அவளது பத்து வயது மகள் சங்கவிக்கு கண்ணாடித் தம்ளரில் ஊற்றி விளம்பரத்தில் வருவது போல் குடிக்கப் பிடிக்கும்.

அப்படி அந்தப் பாதையில் பால் வாங்க வந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு தான் அந்த இடத்தைப் பார்த்திருந்தாள். பாதையை ஒட்டி ஒரு பெரிய பாறை இருந்தது. அதன் பின்புறம் சோலை போல அடர் மரங்கள் சூழ்ந்த சிறு காடு இருந்தது. அதற்குள் தெளிவாக இல்லாவிட்டாலும் குழந்தைகள் சத்தம் கேட்டது.

நின்று கவனித்தாள். ஒரு சிறு டெண்ட் போடப்பட்டிருந்தது தெரிந்தது. ‘நாடோடிகளாக இருக்குமோ?’ இதைப்பற்றி பைரவனிடம் கேட்டபோது தெரியாது என்றுவிட்டான். 

அவளுக்கு அங்கிருந்து அந்த இடத்தைப் பார்க்கையில் ஏதோ மாயை போல தோன்றும். விளையாடும் குழந்தைகளின் சத்தங்கள், மேலுயரும் புகை, அதட்டும் பெண்ணின் குரல். தெளிவாகத் தெரியாத அந்த இடம் ஏனோ அவளுக்குக் கவனிக்கவும் அதைப்பற்றி ஏதேதோ யோசிக்கவும் தோன்றியது. ஆனால் அங்கு போய் பார்க்கவேண்டும் என்று தோன்றவில்லை.

மாலை பால் வாங்கிவிட்டு வரும்போது லேசாக வெயில் மங்கிவிடும். சங்கவி காத்திருப்பாள். அதனால் அங்கு போவது நடக்காது. விடுமுறை நாட்களில் வீட்டு வேலைகள் சரியாக இருககும். அதனால் அன்றும் பாலை வாங்கிவிட்டு வந்துவிடுவாள்.

‘ஒருநாள் அங்கு சென்று பார்க்கவேண்டும்’ நினைத்துக்கொண்டாள். சிலநாட்கள எந்த சத்தமும் இருக்காது. கொஞ்சநேரம் நின்றுகூட பார்த்திருக்கிறாள். நிசப்தமாக இருக்கும். அது அவளை சங்கடப்படுத்தும். சத்தங்களிலிருந்து தான் அந்த இடத்தை அவள் யோசிக்க ஆரம்பித்தாள் என்பதால் அந்த நிசப்தம் அவளுக்கு பிடிப்பதில்லை.

அப்படியிருக்க ஒருநாள் பால் வாங்கப்போகும் வழியில் அந்தப் பாறையில் நின்று கொண்டு ஒரு பையன் கீழே யாரையோ பார்த்து கைகளை ஆட்டிக்கொண்டிருக்க, கீழே ஒரு குட்டிப்பெண் நின்று அவனை நோக்கி கைகளை ஆட்டிக் கொண்டிருந்தாள்.

மேகலா கவனிப்பது கண்டதும் அவர்கள் ஓடிப்போய் விட்டார்கள். அவள் பால் வாங்கிவிட்டு வரும்போது பாதையோரத்து அரைநெல்லிக்கா மரத்தடியில் காய்களை பெருக்கிக் கொண்டிருந்தாள் அந்தக்குட்டி.

அவளைக் கண்டதும் ஓட முறைப்படுத்த, ‘ஏய் பாப்பா! இங்கவா’ என்று கூப்பிட்டாள் மேகலா.

தயங்கி நின்ற அந்தக் குட்டிப்பெண் ‘என்ன’ என்பது போல பார்த்தாள்.  

மேகலா தன் ஹேண்ட்பேக்கிலிருந்து இரண்டு சாக்லெட்டுகளை எடுத்து நீட்டினாள். ‘இந்தா பாப்பா, வாங்கிக்க, உங்க அண்ணனுக்கும் குடு’. அவள் தயங்கித் தயங்கி வந்து வாங்கிக் கொண்டாள்.

‘உன் பேரென்ன?’ 

‘தேனு’ தேனு! அப்படி ஒரு பெயரா? ஒருவேளை தேன்மொழியோ மற்றோ இருக்கலாம். செல்லப் பெயரோ?!

‘உங்க வீடு எங்க பாப்பா இருக்கு?’

அந்தக் காட்டை நோக்கி அங்க’ என்பது போல கை காட்டினாள்.

‘நான் உங்க வீட்டுக்கு வரட்டா?’ அந்தச் சிறுமி ஒன்றும் பேசவில்லை. மேகலா மீண்டும் கேட்க, ‘அம்மா திட்டும், நா போதேன்’ என்று சொல்லிவிட்டு பாறை பக்கமாக ஓடிப்போனாள். தனக்குள் வாஞ்சையாக சிரித்துக்கொண்டாள் மேகலா.

தொடர்ந்த நாட்களில் அவளுக்கு விடைத்தாள் திருத்தும் பணி இருந்ததால், பால் வாங்க வரும்போது பட்டும்படாமல் அந்த இடத்தைப் பார்த்துவிட்டு கடந்தாள்.

ஒருவாரத்திற்குப் பிறகு அன்று அந்த வழி வருகையில் தான் அந்த இடத்தைப் பார்க்காமல் ஏதோ சிந்தனையில் கடந்து வந்திருந்தது தெரிந்தது.

நாளைக்கு சனிக்கிழமை. ரொம்பநாள் கழித்து வேலைகளின்றி விடுமுறை கிடைத்திருக்கிறது. காலையிலேயே பால் வாங்க வருவதாக பைரவனிடம் சொல்லி விட்டிருந்தாள். அந்த இடத்திற்குப் போகவேண்டும்’ நினைத்துக்கொண்டாள்.

அடுத்த நாள் அநதப் பிள்ளைகள் கையில் கொடுப்பதற்காக சாக்லெட் பார் இரண்டை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். அவள் அந்தப் பாறையேறி இறங்கிச் சென்று அந்த இடத்தை அடைந்த பொழுது அங்கு யாரும் இருந்த தடம் தெரியவில்லை.

இதென்ன மாயம்? இளம் நிற டெண்ட் தெரிந்தது இந்த இடத்தில் தானே?! அந்தப் பிள்ளைகளைக் கூட பார்த்திருந்தேனே?! ஒருவேளை என் மனது கற்பனை செய்து கொண்ட தோற்றம் தானோ எல்லாம்?!

குழப்பமாக அவள் அங்கும் இங்கும் தேடினாள். கரிபிடித்த இரண்டு செங்கற்கள் கிடந்தது. அடுப்பாக இருந்திருக்கும்! சுற்றும் முற்றும் பார்த்த போது சற்றுத் தொலைவில் ஒரு வயதானவர் சீமக்கருவேல மரத்தை வெட்டிக் கொண்டிருந்தது தெரிந்தது. அவரை நோக்கி நடந்தாள். 

‘அய்யா!’ அவள் சத்தம் கேட்டு அவர் திரும்பிப் பார்த்தார்.

‘அய்யா! இங்கன ஒரு டெண்ட் கட்டி இருந்தாங்கள்ல்ல… ரண்டு புள்ளைக..ஒரு பையன், ஒரு பொண்ணு…’ 

ஆமாம்’ என்பது போல அவர் தலையாட்டினார்.  ‘அவங்கள காணோமே….’ இழுத்தாள்.

‘அவங்க வேறெங்கயோ மாறிப்போய்ட்டாக! தெருவுல சர்க்கஸ் போட வந்தவுக. ரெண்டுநாள் முன்னாடி சட்டி சாமானையெல்லாம் எடுத்துட்டு காலி பண்ணி போய்ட்டாங்க’

அவளுக்கு ஏனோ வருத்தமாக இருந்தது. திரும்பி நடக்கையில் மனது கனத்து, கண்ணோரம் ஈரமாவதை உணர்ந்தாள். 

எழுத்தாளர்  கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தோழா…தோழா.. (சிறுகதை) – கோவை தீரா

    வலிமை (ஒரு பக்க கதை) – ஸ்ரீவித்யா பசுபதி