2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
நான் பெங்களூர் வந்த புதுசு. பெங்களூர் ஏன் வந்தேன்றீங்களா ,அது சொல்லணுமா? சரி சொல்றேன். நான் பரமேஸ்வரன் டெல்லில செகரடேரியட்ல வேலை பாத்துட்டிருந்தேன்.
பசங்க மூணு பேரு, ரெண்டு பொண்ணு, ஒரு பையன். வேலைல இருக்கறப்பவே பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சாச்சு. பவானி ஆஸ்திரேலியால, சரசா கனடால.
இப்ப ரமேஷு பெங்களூர்ல ஒரு ஆடோமோடிவ் கம்பெனில டிசைன் இன்ஜினியர்.
டில்லி ஃபிளாட்டை வாடகைக்கு விட்டுட்டு பெங்களூர் வந்துட்டோம் நானும் சுசீலாவும்(குழந்தை ஹோட்டல்ல சாப்பிட்டு வயித்தை கெடுத்துண்டுடுவானாம்)
‘ நாகரபாவி ‘ தெரியுமா, போயிருக்கீங்களா? அது எங்கே இருக்கா? சிடில இருந்து வெஸ்ட் பங்களூர்ல மைசூர் ரோடு, மகதி ரோட் ஜங்ஷன் ஃபிளைஓவர்க்கு கீழே வாங்க.இதுதான் இப்ப நம்ம ஏரியா. அட்டிகுப்பே மெட்ரோ ஸ்டேஷன்ல இருந்து 4 கிலோமீட்டர்தான். அதுல “பவன் பிளாட்ஸ்” ஒரு 4 மாடி குடியிருப்பு. எங்க ஃபிளாட் 3 வது மாடில. பில்டிங்ல ஒரு குட்டி லிஃப்ட் உண்டு ஒரே நேரத்துல நாலு பேர்தான் போகலாம். எனக்கு இப்ப 68 வயசு நடக்கறது,சுசிலாக்கு 64. லிப்ட் இல்லைன்னா படி ஏறர வயசு இல்லை.
எங்க ரமேஷு 8.30 மணிக்கு டிபன் சாப்டுட்டு தன் பைக்ல வேலைக்கு கிளம்பிடுவான். அப்பறம் நானும் சுசீயும்தான் வீட்ல. எவ்வளவு நேரம் புஸ்தகம் படிக்கறது, டி.வி. பாக்கறது. எனக்கு இங்கே பிரண்ட்ஸ் கூட நிறைய கிடையாது.
ரெண்டாவது மாடி நம்ம வீட்டுக்கு நேர் கீழே இருந்து அப்பப்ப ஒரு குழந்தை அழற சத்தம் வரும். அது தொந்தரவா இருக்காது எங்களுக்கு, இனிமையாதான் இருக்கும்.
ஒரு நாள் காலிங் பெல் சத்தம் கேட்டு கதவை திறந்தா, ஒரு 25 வயசு பொண்ணு, “அங்கிள் மாமி இருக்காங்களானு” தமிழ்ல கேட்டா. உள்ளே வாம்மானு கூப்பிட்டு ஹால்ல உக்காரச் சொல்லிட்டு சுசீயை கூப்டேன்.
சுசீ அவ கூட கீழே போயிட்டு வரேன்னு போனா. ஒரு அரை மணி நேரத்துக்கு அப்பறம் ஒரு குழந்தையை இடுப்புல தூக்கிண்டு, புஸ், புஸ்னு மூச்சு விட்டுண்டு சுசீ வந்தா. முதல்ல நான் குழந்தையை கவனிக்கலை சுசீயை ஆசுவாசப் படுத்தி சோஃபால உக்கார வச்சேன்.
அப்பறம் அவனை கவனிச்சேன் ஒரு வயசு கூட இருக்காது, மேல் வரிசைல ரெண்டு முத்துப் பற்களோட மோகனப் புன்னகை புரிந்தான். கொஞ்சம் நிறம் மட்டுதான், ஆனால் கொழுகொழு உடல், கருகரு முடி, காந்தக் கண்கள், சிரிக்கும் முகம் இவற்றால் உடனே உள்ளத்தை கொள்ளை கொண்டான்
உடனே வாரி அணைத்து தூக்கிக் கொண்டேன், புது முகம் அதுக்கு தெரியலை, மம்,மம்னு ஏதோ சொல்லிக் கொண்டே தன் பிஞ்சுக் கரங்களால் கழுத்தை சுத்திக் கொண்டான். உலகில் இந்த இன்பத்துக்கு ஈடு இணை வேறொன்று உண்டோ. கன்னத்தில் மிருதுவாக முத்தமிட்டேன்.
சுசீ,” தாத்தா சொல்லுடா செல்லம்” என்றாள்.
அவளை திரும்பி ஒரு வினாடி பார்த்து விட்டு மீண்டும் என் கழுத்தில் கரம் போட்டு அணைத்து கால்களால் இடுப்பை இறுக்கிக் கொண்டான்.என்ன ஒரு மகிழ்ச்சி என் மனதில். “யாருடி சுசீ இந்த சில்வண்டு? ரெண்டாவது மாடில இருந்து வந்தாளே, அவ குழந்தையா?”
“ஆமாம், ஆஸ்பத்திரிக்கு போறாளாம், ஒரு அரை மணி நேரம் இங்கேயே இருந்து குழந்தையை பாத்துக்க முடியுமானு கேட்டா, எங்க வீட்டுக்கே கொண்டு போறேன், அவருக்கும் குழந்தைகள் பிடிக்கும்னு தூக்கிட்டு வந்துட்டேன்”
ஒரு முக்கால் மணி நேரம் அந்த சுட்டியோட கொஞ்சி விளையாடினோம். அப்பறம் அந்த பொண்ணு வந்து தேங்க்ஸ் சொல்லிட்டு தூக்கிட்டு போயிட்டா.வீடே திடீர்னு களை இழந்தது.
கிட்டத்தட்ட இப்ப ஒண்ணரை வருஷமா, அந்த வாண்டுப் பயல் நம்ம வீட்டுக்கு வரான், எங்க குழந்தைகளைக் கூட இப்படி கூர்ந்து கவனிச்சதில்லை,படிப் படியா இந்த குழந்தையோட வளர்ச்சியை கவனிச்சிட்டு வரோம். ரெண்டா இருந்த முன் வரிசைப் பல், இப்ப சின்ன சின்ன முத்துக்களை கோத்தாப்பல மேலயும், கீழயும். இடுப்புல நிக்காம கீழே இறங்கி தடுமாறித் தவழ்ந்து, தத்தக்கா புத்தக்கானு சுவரைப் பிடிச்சு நடந்து, கொஞ்சம் பிடிக்காம நடந்து, இப்ப பிடிக்க முடியாம எங்க ஹால் பூரா ஓடறான். கைல அகப்பட்டதை இழுத்து கீழே வீசறான். எங்களுக்கு கோபம் வரலை ரசித்து சிரிக்கறோம்.
இப்பல்லாம் தன் மழலை மொழியில் ஓரிறு வார்த்தைகள் சொல்றான். நான் தாத்தாவாம், சுசீ மாமியாம், ரமேஷு அண்ணாவாம். உன் பேர் என்னடான்னா, அர்சன் னு சொல்வான். (அவன் பெயர் வர்ஷன்) அம்மா பேரு அஸ்மி (அவங்க பேர் ராஷ்மி), அப்பா பேரு ஆம்ஜு (ராமராஜ்), எல்லாருக்கும் செல்லம் அவன். ஆனா ஒரு அரை மணி நேரம் விளையாடுவான், அப்பறம் அவன் அம்மா ஞாபகம் வந்துடும்.
“தாத்தா அம்மா கிட்ட” னு முழங்காலை வந்து கட்டிப்பான். கொஞ்சம் கவனிக்காம விட்டா, தொடர்ந்து அம்மா கிட்ட, அம்மா கிட்டனு மெதுவா அழுகைக் குரல்ல அம்மா மந்திரம் ஆரம்பமாயிடும்.அவனுடைய அந்த பிடிவாத அழுகை கூட அழகா ரசிக்கும் படி இருக்கும்.
இந்த மாசத்துல ஒரு நாள், காலங்காத்தால, காலிங் பெல் சத்தம் என்னை படுக்கையிலிருந்து உசுப்பி எழுப்பியது. யாரது 6 மணிக்கே பெல் அடிக்கறது? பால்காரனா?, இந்த சுசீ எங்கே போனா?
தட்டுத் தடுமாறி படுக்கைல இருந்து எழுந்து போய் வாசக் கதவை திறந்தேன்.வர்ஷன் குட்டியோட கீழ் வீட்டு ராஷ்மி பொண்ணு.
மாமா,…மாமி இல்லையா? கேக்கறப்பவே சுசீ வந்தா, “ என்னடா கண்ணுனு”
“மாமி, இந்த வர்ஷனை கொஞ்சம் பாத்துக்க முடியுமா, நான் அம்மா ஆத்துக்கு மல்லேஸ்வரம் வரை கொஞ்சம் போயிட்டு ஓடி வந்துடறேன் அம்மாக்கு கொஞ்சம் முடியலையாம்”.
சுசீ “அதனால என்னம்மா விட்டுட்டுப் போ, சீக்கிரமா வந்துடு,குழந்தை உன்னை விட்டுட்டு ரொம்ப நேரம் இருக்க மாட்டான்.”
வர்ஷன் தாத்தானு, என் கிட்ட தாவி வந்தான். ராஷ்மி சிரிச்சிண்டே கீழே போயிட்டா.
ஒரு மணி நேரம் என் கூட கொஞ்சம், சுசீயோட கொஞ்சம், ரமேஷோட கொஞ்சம்னு விளையாடினான். திடீர்னு உதடு பிதுங்கினது, கன்னம் உப்பியது, “அம்மா கிட்ட” னு மெதுவா ஆரம்பிச்சான்.சுருதி கொஞ்சம் கொஞ்சமா கூடிச்சு, அடுத்த ஐந்து நிமிஷத்துல ஒரே அலறல் அம்மா கிட்ட, அம்மா கிட்டனு.
என் மனக் குதிரை 65 வருஷத்துக்கு முன்னால ( இங்கே பின்னாலேனு சொல்லணுமா?) போச்சு, ‘கொண்டலாம்பட்டி’ ஒரு சின்ன கிராமம் சேலம் நகரத்துக்கு பக்கத்துல. அங்கே என் தாத்தா, பாட்டி வீடு. ரொம்ப விசாலமான பழங்கால வீடு. வீட்டுக்குள்ள போக வாசல் படிகள் மட்டுமே ஆறடி அகலம் ஏழு விசால படிகள். உள்ளே நீங்களே பழைய கால வீடுகளை ஞாபகப் படுத்திக்கோங்க. குடும்பம் அப்ப ரொம்ப பெரிசு. அத்தைகள், சித்திகள், சித்தப்பாக்கள் அவங்க குழந்தைகள்னு.
என் அப்பா சேலத்துல கோவாபரேடிவ் பட்டு உற்பத்தி தொழிற்சாலையோ எதுவோ அதுல வேலை.சொற்ப வருமானம்தான், ஆனா வேலை பளு அதிகம்.அம்மா தனியே எங்களை சமாளிக்க என்ன பாடு பட்டாளோ. அதாவது நானு என் ரெண்டு அக்காக்களை.
ஏதோ ஒரு போதாத நேரம், அப்பாவோட மில்லுல வேலை நிறுத்தம்.அந்த ஏப்ரல் மாதம் என் சகோதரிகளை அம்மாவோட பெற்றோர் வீட்டிலும், என்னை தன் பெற்றோர் வீட்டிலும் “கொஞ்ச நாள் குழந்தையை பாத்துக்கங்க” னு தன்மானம் தலைதூக்க, தலை குனிந்து என்னை அங்கே விட்டுட்டு போனார்.
அப்ப ஒண்ணும் தெரியலை வீடு பூரா கலகலனு இருந்ததால. அன்னிக்கு சாயந்தரமே என் அக்காக்களை மிஸ் பண்ணினேன், லேசா நெஞ்சை அடைத்தது, அடுத்த அரை மணி நேரம் எனக்கு அப்பா இப்பவே வேணும். தாத்தா நான் தனியா ஒரு தூண் பக்கம் சாஞ்சு கால் நீட்டி உக்காந்து ஏதோ பேப்பர்களை கிழித்த வண்ணம் உக்காந்திருந்ததை பாத்து “என்னடா கண்ணா எல்லார் கூடவும் விளையாடாம தனியா உக்காந்திருக்கேனு” கேட்டவுடனே அடக்கி வச்சிருந்த அழுகை வெடித்து சிதறியது, “ அம்மா கிட்ட போகணும்” விக்கி அழுத என்னை தூக்கிக் கொண்ட தாத்தாவின் நினைவு இப்ப வந்தது. அந்த நாள் அப்பா என்னை விட்டுட்டு போன துக்கம் இன்னிக்கும் மறக்கலை.
இந்த குழந்தையின் பிஞ்சு மனமும் அப்படித்தான் வேதனைப் படுமோ? அந்த பிஞ்சு வர்ஷனை தூக்கிண்டேன் “வாடா போகலாம்னு” நல்ல வேளை அதிகம் நேரமாக்காமல் ராஷ்மி வந்து சேர்ந்தாள். அழுகையும், சிரிப்பும் சேந்த கலவையான முகத்தோட வர்ஷன் தன் அம்மா கிட்ட தாவினதை எப்படிச் சொல்ல.
நாட்கள் உருண்டன. இப்பவும் வர்ஷன் வருகிறான். அரை மணி நேரத்தில் ‘அம்மா கிட்டே’னு ஓடிப்போறான்.இப்பல்லாம் சுசீக்கு கொஞ்சம் உடம்பு படுத்தறது. அவளுடைய சுறுசுறுப்பு மெல்ல குறைஞ்சது. கொஞ்ச நேரம் சமையலறையில் வேலை பார்த்தாலும் களைப்பு மேலிட போய் படுத்துக்கறா.
தை வெள்ளிக் கிழமைனு தலைக்கு குளிச்சு லட்சுமிகரமா வந்த சுசீ பூஜை அறையில் அரை மணி நேரம் எல்லா கடவுள்களையும் எல்லாருக்காகவும் வேண்டிண்டா. சோஃபால, ஃபேனை போட்டுண்டு உக்காந்து ஏதோ ஸ்லோக புஸ்தகத்தை கையில் எடுத்துண்டா.
புஸ்தகத்தில் எழுத்துக்கள் மங்கலா தெரிஞ்சது. ஓ கண்ணாடி எங்கே வச்சேன், தேடினா. எதிர்ல டீவி பாத்துண்டிருந்த என்னை கூப்டு “ ஏன்னா, என் கண்ணாடியை எங்கயாவது பாத்தீங்களா?”
முதலமைச்சர் ஏதோ புது கட்டிடங்களை ரிமோட் வைத்து திறப்புவிழா நடத்திக் கொண்டிருந்ததை தவிர்த்து நான் நிமிர்ந்து பாத்தேன். “ என்னாச்சு சுசீம்மா நீதான் கண்ணாடி போட்டுண்டிருக்கயே”
“ஓ போட்டிருக்கேனே, ஏன் புஸ்தகத்துல எழுத்து மங்கலா…… சொல்லிண்டே மெதுவாய் சோஃபாவில் சரிந்தாள்.
நான் சட்னு எழுந்து போய், “என்ன சுசீம்மா என்ன பண்றது”
ஒரு சின்ன புன்முறுவல் உட்காரச் சொன்னா, மடில தலை வச்சிண்டா, ஒரு நிம்மதி பெரு மூச்சு.அதுவே கடைசி மூச்சுனு நம்பவே முடியலை.
வர்ஷன் வந்தான், மாமின்னான், திகைப்பில் அமர்ந்திருந்த நான் உன் மாமி போயிட்டாடா அவ,”அம்மா கிட்ட”
குழந்தை , “ அம்மா கிட்ட, அம்மா கிட்டனு” கைதட்டி சிரிக்கறான்.
என் அப்பா என்னை கொண்டலாம்பட்டி வீட்டில் விட்டுட்டு போனார், என் சுசீ என்னை நாகரபாவி வீட்ல விட்டுட்டு போயிட்டாளே அவ ‘அம்மா கிட்ட’
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings