in

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 24) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

அழைத்தான்...(அத்தியாயம் 24)

செப்டம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

சாமியாரின் பூர்வீகம்

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இணைப்பு

ந்த இளைஞனும், ஜீன்ஸ் பெண்ணும் கேமராமேனுக்கு உதவி செய்தனர். அவசர சிகிக்சை பிரிவில் என்னென்ன செய்வார்களோ அவை அனைத்தும் முயற்சி செய்தனர்.

இளைஞன் லட்சுமியைப் பார்த்து, “இல்லை..” என்றவாறு தலையசைத்தான். ஜீன்ஸ் சூட்காரி சற்றும் யோசிக்காமல், கிடத்தியிருந்த அவன் உடலுக்குள் தன் வாய் வழியாக காற்றை செலுத்தினாள். உடன் வந்த இளைஞன் ஆச்சரியப்பட்டான். அதை வெளிக்காட்டாமல் தற்காத்து நின்றான்.

ஓரிரு நிமிடத்திற்குப் பிறகு, கேமரா மேனின் கண்கள் திறந்தன. மெல்ல நினைவு வந்து கொண்டிருந்தது.

“ரொம்ப தேங்க்ஸ்ங்க..! ரொம்ப சின்ன வயசுன்னு நினைச்சி, நான் கூட ரொம்ப வருத்தப்பட்டேன். கிரேட்..! ரொம்ப நன்றிங்க..!” என்றார் அந்தப் பத்திரிகை நிருபர் மாறன்.

அனைவரும் கேமராமேனை உள்ளே கூட்டிச் சென்று படுக்க வைத்தனர். அந்த டாக்டர் இளைஞன் ஜீன்ஸ் உடுத்தியிருந்த அந்தப் பெண்ணிடம் தன்னை அறிமுகப்படுத்துக் கொண்டான்.

“ஐ அம் டாக்டர் பிரம்மா..! சீப் கைனகாலேஜிஸ்ட் இன் சிதம்பரம். உங்க செயலுக்கு என்னோட பாராட்டுகள். ஒரு பொண்ணு இப்டி தைரியமா இருக்குறத பாக்கிறது ரொம்பவே ஆச்சரியம்…” என்று பேச்சு கொடுத்தான்.

ஜீன்ஸ் பெண், “தேங்க் கியூ… எம் பேரு கடலலை..! நா கார்டியாலஜி பண்ணிட்டிருக்கேன்..!” என்று முடித்தவுடன் படுத்திருந்த கேமராமேன் சிரித்தான்.

“என்ன கா..? உங்க பேரே கடலலை யா? உங்கள எப்டி கூப்பிடுவாங்க? ‘கடலை’ன்னா..!” என்றான்.

அவள் அந்தச் சிரிப்பைப் பெரிதாக கருதவில்லை. அவன் பிழைத்து விட்ட மகிழ்ச்சியில் அவளும் உடன் சிரித்தாள். 

பிரம்மாவும் சிரித்து, “எஸ்.. வாட் எ யுனிக் நேம்..!” என்றான். கடலலை அவனுக்கு லேசாக புன்முறுவல் உதிர்த்தாள்.

நிருபர் குறுக்கிட்டு, “அந்த கடல் என்னடான்னா எல்லாரையு அடிச்சிட்டு போவுது. இந்தக் கடல் காப்பாத்துதே..! உங்கள பத்தி நீங்க எதவாது பகிர்ந்துக்கலாமே..” என்று கொக்கியைப் போட்டான்.

கடலலை அமைதியாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “சரி.. கேளுங்க என் கதைய..! நான் எங்க பொறந்தேன்னு எனக்கே தெரியாது. நாகப்பட்டினத்துல மீன் பிடிக்குறவங்க வலைல நான் மாட்டினேன். அப்ரோ அவங்க என்ன போலீஸ்க்கு சொல்லி, ஒரு காப்பகத்துல சேத்தாங்க. அது சமூக ஆர்வலர்கள் ஒன்னா சேர்ந்து நடத்துறது. கவர்மெண்ட் ஃபண்ட்லாம் வராது. பெரும்பாலும் வெளிய இருந்து வர பணம் தான். அப்டித்தான் நான் படிச்சேன்..” இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கையில் கேமராமேனுக்கு மாறன் சைகை காட்ட, கேமரா கடலலைப் பக்கம் திருப்பப்பட்டது.

யமுனா, லட்சுமியோடு உடனிருந்தவர்கள் கூட ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். 

கடலலைத் தொடர்ந்தாள். “எனக்கு அந்தக் காப்பகத்துல இருந்த அம்மா தான் பேரு வெச்சாங்க. நா கிடைச்ச இடம் தா அதுக்கு காரணம்னு நினைக்குறேன். நா அந்த காப்பகத்துல இருந்த வரிக்கும், அவங்கள நிஜமாவே அம்மாவா தான் நினைச்சேன். எம்.பி.பி.எஸ் பண்ண வேலூர் சி.எம்.சி’க்கு வந்தேன். அஞ்சு வருஷத்தோட கடைசி நாள், நான் அவங்கள பாக்க போறப்போ, அவங்களோட உடல், கண்ணாடி பெட்டியில இருந்தது. அத என்னால இப்போவும் மறக்க முடில..” என்று விழிகளைத் துடைத்தாள்.

கேட்டுக் கொண்டிருந்த அனைவர் முகத்திலும் சலன ரேகை.

அவள் தொடர்ந்தாள்… “காப்பகத்துல இருந்தா, அம்மா நியாபகமாவே இருக்குன்னு வெளியே வந்துட்டேன். எம்.டி சிதம்பரத்துல தான் பண்ணனும்னு நினைச்சி வந்தேன். காப்பகத்துல வேலை செய்றவங்க, ரொம்ப சாதாரணமா இருப்பாங்கன்னு எல்லோரும் நினைக்கலாம். ஆனா என் அம்மா கொஞ்ச வித்தியாசமானவங்க. எனக்கு நிறைய ஹிந்து கோயில்கள் பத்தி சொல்லிருக்காங்க. நிறைய புத்தகம் படிப்பாங்க. சாகுறதுக்கு கொஞ்ச நாள் முன்ன கூட, எம்.ஏ ஹிஸ்ட்ரீ பட்டம் வாங்குனாங்க. அவுங்களுக்கு பாராசயின்ஸ்ல நாட்டம் அதிகம். புத்தகத்த படிச்சி, அதுல இருக்குற இடங்களுக்குப் போய் பாத்துட்டு வந்து, என்னையும் கூட்டிட்டு போவாங்க..! அப்படி அவுங்க பாத்து வியந்து அடிக்கடி சொல்ற கோயில்ல சிதம்பரம் ஒன்னு…” என்று முடிக்க, மற்றவர்கள் கதை முடிந்தது போல் விலகத் தொடங்கினர்.

ஆனால், நிருபர் அப்படி செல்லவில்லை. சரியாக பாயிண்டைத் தொட்டான். “உங்க அம்மா, அதாவது உங்கள வளத்த அந்தப் பெண்மணியோட மரணம் சாதாரணமானது தான் நீங்க நம்புறீங்களா? என்னால முடில. ஏன்னா ஒரு பெண் தனியா, இத்தனை கோயில்கள பத்தின ஆராய்ச்சில இறங்குறது ரொம்ப பெரிய விஷயம். அதுனால, அவங்க நிறைய இன்னல்கள சந்திருச்சிருக்கலாம். அதுல ஏதாவது ஒரு இன்னல், இப்படி அவுங்க சாவுக்கு காரணமா இருக்கலாம்னு எனக்கு தோணுது..” என்று முடிந்த கதைக்கு ஒரு பலமான முடிச்சு போட்டான். 

அதைக் கேட்ட கடலலை ஆடிப் போனாள். அவள் உடம்பெங்கும் வியர்வைப்பூ…..

குடியேற்றம்..! 

பார்வதி சமையல் செய்து கொண்டிருக்க, எதிர்வீட்டுப் பாக்கியம் ஓடி வந்து, “அத்தே.. சிதம்பரத்துல பெரிய பேரலை வந்து, நடராஜர் தேரோட்டம் நிலைக்கு வந்துட்டாம். உங்க மகனும் மருமகளும் கூட டி.வில வர்றாங்க பாரு..” என்று தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். 

பாக்கியம் வீட்டில் தொலைகாட்சி ஓடிக் கொண்டிருக்க, பார்வதி தன் விழிகளை நன்றாக துடைத்துக் கொண்டு பார்த்தாள். அவளுக்கு முதலில் கண்ணில் தெரிந்தது பாலச்சந்தர் தான்.

“எம் மய கிருஷ்ண பத்திரமாத்தா இருக்கான் போல..! நல்லது..! வூட்டுக்கு வரச் சொல்லி இப்போ லெட்டர் போட முடியுமா?” என்றாள்.

அதற்குப் பாக்கியம், “இல்ல அத்தே.. எல்லா போக்குவரத்தும் நின்னு போச்சு.. கரண்ட்டும் போயிடுசுன்னா அவ்ளோதான்..” என்றாள். 

பார்வதி தன் மகன், மருமகள், பாலச்சந்தர் மூவரையும் பார்த்துக் கொண்டு, “ராமா..!” என்று கை கூப்பினாள். கேமரா காற்றில் திசை திரும்பி தேர் நிலைக்கு நிறுத்தப்பட்டிருக்கும் இடம் நோக்கி சாய்ந்தது. 

இப்போது தொலைகாட்சியில் நடராஜர் உருவம். வீட்டில் உள்ள அனைவரும் “நடராஜா நடராஜா..!” என்று கை கூப்பினர். உடனிருந்த ராதா, “கடவுள் ஏன் கல்லானார்? மனம் கல்லாய் போன மனிதர்களாலே..!” என்ற பாட்டை முணுமுணுத்தான்…….

ர்வோதயா..! 

மாறன் அப்படி கேட்பான் என்று கடலலை எதிர்நோக்கவில்லை. காற்றின் உதவியோடு, தன் வியர்வையைத் துடைத்தாள். பின்பு, மிகுந்த கவனத்தோடு சொன்னாள்.

“என்னிகாவது யாராவது இப்படி கேக்கணும்னு நானும் எதிர்ப்பாத்து தான் இருந்தேன். என்னோட அம்மாவோட சாவு கத்தி, குத்து சண்டைன்னுலா நிகழல. மேலும், நீங்க நினைக்குற மாதிரி, அவுங்களுக்கு சமுதாயத்துல எந்த தடையும் ஏற்படல. என்ன பொருத்த வரிக்கும், அவுங்க இந்தப் பேய், கடவுள் எல்லாத்தையும் ரொம்ப நம்புனாங்க..” 

யமுனா குறுக்கிட்டு, “என்னமோ சொன்னீங்களே.. ஹான்..! ‘பாராசயின்ஸ்… சயின்ஸ் கேள்விப்பட்டிருக்கேன். இது என்ன பாரா..?” என்று கேட்டாள்.

கடலலை மெதுவாக சொன்னாள். “நம்ம உடம்ப பத்தி படிக்குறது சயின்ஸ். அந்த உடம்பு, இயற்கையோட எந்த அளவு ஒன்றி இருக்குன்னு படிக்குறது பாராசயின்ஸ். இதுல, ஆன்மாக்கள், நம்ம எண்ணங்கள் எல்லாமே அடங்கும்…” என்று பட்டென்று அழகாக புரியும்படி சொல்லவும் எல்லோரும் மூக்கில் விரல் வைத்தார்கள்.

மேலும் அவள் பேசினாள். “எங்கம்மா ராசராசன் திறந்த கதவை, திரும்பவும் திறக்கணும்னு ஆசைபட்டாங்க. நான் +2 படிக்கும் போதே, அதுக்காக, அர்ச்சகர்கிட்ட நிறைய கெஞ்சுனாங்க.. அது நடக்கல..! அந்த எண்ணத்தோடே போய் சேர்ந்துட்டாங்க..! அப்ரோம்.. இப்போ இந்த சாமியாரைப் பத்தி பேசிட்டிருக்காங்களே இப்போ.. அவரும் எங்க ஆசிரமத்துல வளர்ந்துவரு தான். சிதம்பரம் கோவில்ல அறநிலையத்துறைல்ல வேலை கிடைச்சதும், அதே ஆசிரமத்துல தன்னோட இருந்த ஒரு பொண்ண, தங்கச்சியா தத்தெடுத்து கிட்டாராம், கிரேட் இல்ல. ஆனா இப்போ ஏன் இப்படி ஆயிட்டாருன்னு தெரில..” என்று மோவாயின் மேல் ஆள்காட்டி விரலை வைத்தாள்.

யமுனாவிற்கும் லட்சுமிக்கும் தூக்கி வாரிப் போட்டது. உறைந்து விட்டார்கள் இருவரும்..! குறிப்பாக, யமுனா. ஆனால், எதையும் வெளிக்காட்டவில்லை. 

இப்போது கேமராமேன் முந்திக் கொண்டான். “ஆமா! உங்கம்மா.. அந்த கதவை எதுக்கு திறக்கணும்னு சொன்னாங்க?” இது கடலலை எதிர்பார்த்த ஒன்று தான்.

“தேவார ஏடுகள் பத்தி எல்லோருக்கும் தெரியும். நம்பியாண்டார் நம்பி, பொல்லாப் பிள்ளையார் உதவியோட ராசராச சோழன் காலத்துல, தேவார மூவர்களோட படிமங்களை உருவாக்கி, ஏடுகளை மீட்டெடுத்தாங்க. என் அம்மாவின் ஆராய்ச்சிபடி, அந்தக் காலத்து தமிழர்கள் ஜோதிட சாஸ்திரத்துக்கு பேர் போனவர்கள். ஏன் நம்பியாண்டார் நம்பியை எடுத்துக் கொள்ளுங்களேன்? சின்ன வயசுலே, கடவுளை உணவு உண்ணச் செய்து, அற்புதம் செய்தவர் இல்லியா? அதுபோல, அவர்கள் எழுதிய நூல்களிலும் வருங்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் இருக்கக்கூடும்னு நினைச்சாங்க; வருங்காலத்தில இப்போது ஏற்பட்டிருக்குற பேரழிவுகள் போல நோய்கள் மூலமாவும் பேரழிவு வரலாம்னு தெரிஞ்சிக்கிட்டாங்க. அத பத்தியெல்லாம் கூட அந்த அறையில உள்ள ஏடுகள்ல இருக்கலாம்னு நம்புனாங்க. ஆனா, முயற்சி அயற்சியாகி இப்போது மீளாத் தூக்கத்தில் இருக்காங்க..” என்று சொல்லி முடித்தாள்.

அவள் பேச்சில் தன்னை மறந்தவர்கள் போல் அனைவரும் மெய் சிலிர்த்துப் போயினர். யமுனா ஆச்சரியத்தின் விளிம்பில் இருந்தாள். “உங்க கிட்ட ஒன்னு கேக்கலாமா? உங்களுக்கு அந்த சாமியாரப் பத்தி வேறென்ன தெரியும்..?” என்று பதூசாகத் தன் விஷயத்தைத் தொட்டாள்.

இன்னொரு ஆச்சரியமான விஷயத்தை, மிகவும் அலட்சியமாக கடலலை சொல்லலானாள்.

“அட நீங்க வேற? அவர பத்தி கேட்கவும் தான் எனக்கே விதி மேல நம்பிக்கை வந்தது. அவரு பொறக்கும் போது, அம்மா அப்பாவோட தாங்க பிறந்திருக்காரு. அதாவது பக்கத்து பெட்ல ஒரு பெண்மணியோட குழந்தை இறந்து போச்சு. கூடவே அந்தப் பெண்மணியும் போய் சேந்துட்டாங்க. அந்தப் பெண்மணிக்குக் கூட யாரும் வரல. நர்ஸ் அம்மா தெரியாம மாத்தி சொல்லிச்சு. இந்த சாமியாரை பெத்த தம்பதிகளும், தன்னோட கொழந்த தான் செத்து போச்சுன்னு அழுதிட்டே போய்ட்டாங்க. அப்பா அம்மா இல்லாத குழந்தைன்னு சொல்லி, அந்தக் கொழந்தைய எங்க காப்பகத்துல சேர்த்தும் விட்டாங்களாம் அந்த நர்ஸ். ஒரு ரெண்டு மூணு வருஷத்துக்கு முந்தி தான் நர்ஸ் இந்த விஷயத்தைப் பத்தி எங்க காப்பகத்துக்குச் சொன்னாங்க. தாய்கிட்டேர்ந்து பிள்ளையைப் பிரிச்சிட்டேன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க. நான் இந்த ஊருக்கு வர, இவரும் ஒரு வகையில காரணம்..” என்று வரலாற்றினுள் வரலாறு சொல்ல, யமுனா மயக்கம் போட்டே விழுந்து விட்டாள். 

லட்சுமி அவளை எழுப்பி ஆசுவாசப்படுத்தினாள். “நீங்க வாங்க யமுனா. கத கேட்டது போதும்.! வாங்க..! முன்ன மாறி வெளிய போய் எல்லாருக்கும் உதவியே பண்ணுவோம்..” என்று அங்கிருந்து அவளைப் பற்றிச் சென்றாள். அப்படி ஒரு அரவணைப்பு யமுனாவிற்கும் அப்போது தேவைப்பட்டது.

(தொடரும் – வெள்ளி தோறும்)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இணைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கானல் நீர் (சிறுகதை) – ✍ ருக்மணி வெங்கட்ராமன்

    காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 12) – ✍ விபா விஷா, அமெரிக்கா