in ,

வனிதாவின் ஸ்ரீ ராமச்சந்தர் (சிறுகதை) – அகிலா சிவராமன்

எழுத்தாளர் அகிலா சிவராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அன்றைய பொழுது ரஹீமிற்கு ஆச்சரியமான‌ மற்றும் இன்பமான பொழுதாகவே விடிந்ததென்றே சொல்லலாம்.

ஆம்!! அவனுடைய வனிதா 14 வருடத்திற்கு பிறகு கோமாவிலிருந்து கண்விழித்து கொண்டாள். காலையில் எதிர்பாராத விதமான அவளுடைய இந்த கண் விழிப்பு ரஹீமிற்கு அளவற்ற‌ சந்தோஷத்தை கொடுத்தது.

அன்று அவன் எப்போதும் போல அவளின் காலுக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு குட் மார்னிங் வனு!  என்று சொல்லி விட்டு முதல் நாள் நடந்த கதைகளை பற்றி எல்லாம் கூறிக் கொண்டிருந்தான்.

தீடிரென கால் விரல்கள் அசையவே ரஹீம் பாபுவையும் அனுவையும் அழைத்தான். அவர்களும் அதை பார்த்து உறைந்து விட்டார்கள். பிறகு மெதுமெதுவாக வனிதா கண்களை திறந்தாள். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. பிறகு மெதுவாக மூன்று பேரையும் உற்று பார்த்தாள்.

அவளுக்கு ரஹீமின் முகத்தை தவிர குழந்தைகளின் முகம் நினைவிற்கு வரவில்லை. பிறகு ரஹீம் அனுவை அருகில் நிறுத்தி, பாருமா பாரு, இது யார் தெரியுமா, உன்னோட அனுக் குட்டி, பெரியவளாயிட்டா… 16 வயது ஆயிடுத்து என்றான். பிறகு பாபுவை நிறுத்தி, உன்னோட சின்ன‌ ரஹீம், பாபு சார், சின்ன ஐயா இப்ப காலேஜில் இருக்கார் என்றான்.

வனிதாவிற்கு குழந்தைகளின் முகம் சரியாக நினைவுக்கு வராததால் குழம்பினாள். பிறகு இருவரையும் கட்டி அணைத்து கொண்டாள். அனு இப்போது தான் நினைவு தெரிந்து முதன் முதலாக தன் தாயின் குரலை கேட்டாள். தாயின் மடியிலேயே இப்போது தான் முதன் முதலாக சரிந்து கொண்டாள். எத்தனை வருடத்து ஏக்கம்?? பாபுவும் எதையும் சொல்ல முடியாமல் அம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டு கண் கலங்கினான்.

சரியா 14 வருடத்திற்கு முன்பு நடந்த விபத்தின் காரணமாக கோமாவில் தள்ளப்பட்டாள். அப்ப, அனுவிற்கு இரண்டு வயது, பாபுவிற்கு 6 வயது.. ரஹீமும் வனிதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். ரஹீமிற்கு தந்தை இல்லை, உடன் பிறந்தவர்களும் யாருமில்லை, ஆகவே அவன் தாய் ஒத்துக் கொண்டு விட்டார்.

வனிதாவோ ஐயங்கார் குடும்பத்தை சேர்ந்தவள். ஆகவே அவளுடைய தாய் தந்தையர் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவள் வீட்டை விட்டு வெளியே வந்து ரஹீமை திருமணம் செய்து கொண்டாள். ரஹீமின் தாய் இவர்கள் இருவரையும் அன்போடு வைத்திருந்தார்.

இதைப் பற்றி எல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென அவளுக்கு ரஹீமின் தாய்  ஞாபகம் வந்தது. மெதுவாக ரஹீமை பிடித்துக்கொண்டு பெட் ரூமை விட்டு வெளியே வந்தாள். ஒரு மாற்றம் கூட இல்லை. எல்லா பொருளும்  வைத்த இடத்திலேயே இருந்தது.

அப்படியே, மெதுவாக சமையலறைக்கு சென்றாள். என்ன ஒரு ஆச்சரியம்… சமையலறையிலும் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் எல்லாம் அழகாக அவள் வைத்தது போலவே அடுக்கி இருந்தது.

பிறகு பூஜை அறைக்கு சென்றாள். ரஹீம்,  வனிதாவிற்கு பிடித்தபடி  அவளுக்கென்றே கட்டிய அந்த பூஜை அறையை பார்த்தாள். அவனுக்கு நன்றாகவே தெரியும் வனிதாவிற்கு பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் என்று.  அதைப்போலவே வைத்திருந்தான் இந்த 14 வருடமும். பூஜை ஆறையைப் பார்த்த வனிதாவிற்கு வாய்களில் இருந்து வார்த்தையே வரவில்லை.

பிறகு எல்லா ரூமுக்கும் சென்று அத்தையை தேடினாள். எங்கும் அத்தை இல்லாத காரணத்தினால் அத்தை எங்கே என்று கேட்டாள். ரஹீமும் பாபுவும்  பதில் எதுவும் கூறாமல் அவளை மெதுவாக பிடித்து கொண்டு போய் கட்டிலில் உட்கார வைத்தார்கள்.

ரஹீம்..சொல்லு டா…அத்தை எங்க?? அத்தை எங்க?? என்று ஜோராக கத்தினாள்.

வனுமா, இப்ப தான் நீ எங்களுக்கு திரும்ப கிடைச்சிருக்க.. ப்ளீஸ் அதெல்லாம் அப்பறமா பேசலாம்மா.. ப்ளீஸ் நீ இத்தனை ஸ்ட்ரெஸ் ஆகாதே என்றான் ரஹீம்.

வனிதாவோ விடுவதாக இல்லை, அவனை நச்சரித்து விட்டாள். வேறு வழியில்லாமல் அலமாரியிலிருந்து போட்டோ ரூபத்திலிருக்கும் அம்மாவை காண்பித்தான் ரஹீம.

அய்யோ..எப்படா..

எனக்குன்னு இருந்த என் ஆசை அத்தை போயிட்டாங்களா? இதுக்கு நான் கோமாவிலேயே இருந்திருக்கலாமே.. அத்தை…அத்தை என்று கதறினாள்.

வனு, ப்ளீஸ், கன்ட்ரோல் பண்ணிக்கோ, எனக்கும் குழந்தைகளுக்கும் நீ தேவை மா.. ப்ளீஸ்.

அம்மா, நீ கோமாவில் போன ஒரு மாதத்திலேயே துக்கத்திலேயே உடைந்து போய் இறந்து விட்டார் என்று குமுறி அழுதான் ரஹீம்.

அப்ப, இந்த 14 வருஷமா நீ தனியாகவே நம்ம குழந்தைகளை வளர்த்தியா? என்றாள் வனிதா.

ஹும் என்று தலை ஆட்டினான் ரஹீம்.

எங்க வீட்டில நீ சொல்லலையா.. என்னோட நிலைமையை பத்தி?? என்று கேட்டாள் வனிதா

இல்லை மா.. எப்ப உன்னையே மதிக்காம நேசிக்காம அவங்க தூரத்திட்டாங்களோ அப்புறம் என் பேச்சை யார் கேப்பாங்கனு நான் சொல்லல என்றான் ரஹீம்.

கண்ணீர் பெருக ரஹீமிடம் என்னுடைய மொபைல் இருக்கிறதா?? இல்லை கெட்டு போய் விட்டதா? என்று கேட்டாள்.

ரஹீம் அவளுடைய மொபைலை கொண்டு வந்து கொடுத்தான். அதே மொபைல், அதே நம்பர், பத்திரமாக வைத்திருந்தான். மொபைலை வாங்கி  தன் அப்பா நம்பருக்கு கால் செய்தாள்.

ஹலோ, யார் வேணும்? என்றார் வனிதாவின் தாய்.

ஓ, பெத்த பொண்ணையே மறந்துட்டியா?? என்றாள் வனிதா.

ஓ, வனிதாவா? ஏண்டி, உன் உறவே வேண்டாம்னு நாங்க தான் எப்பவோ தலை மூழ்கிட்டோமே.. இப்ப எதுக்கு இத்தனை வருஷம் கழிச்சு ஃபோன் பண்ணி இருக்க.. என்ன உன் புருஷன் வேற யாரோடு ஓடிட்டானா.. எதா இருந்தாலும் ஆத்துக்கு வந்து நின்னுடாதே என்றார் வனிதாவின் தாய்.

செ..செ.. நான் எதுக்கும்மா அங்க வருவேன். ராமர் வனவாசம் போன மாதிரி நான் ஆக்சிடென்ட் ஆகி 14 வருஷமா கோமாவில் இருந்தேன், இதோ இன்னிக்கு காத்தால தான் எனக்கு நினைவு வந்தது. நான் கோமால போன உடனேயே என்னோட மாமியார் துக்கம் தாங்க முடியாம இறந்துட்டாங்க. நீங்களா பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சிருந்தா கூட அந்த மாப்பிள்ளை  குழந்தைகளை உங்ககிட்ட விட்டுட்டு ஜம்முனு இன்னொரு கல்யாணம் பண்ணி கொண்டிருப்பார். ஆனா என்னோட கணவர் நிஜமாகவே ஒரு ஸ்ரீ ராமச்சந்தர், இந்த சீதா கண் விழிக்கும் வரை குழந்தைகளையும் என்னையும் பத்திரமாக பார்த்து கொண்டார், அதுவும் தன்னந் தனியாக.. இது சொல்ல தான்  நான் கால் பண்ணினேன், bye என்று முகத்தில் அடித்தாற் போல காலை கட் செய்தாள் வனிதா…

எழுத்தாளர் அகிலா சிவராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உன் கண்ணில் நீர் வழிந்தால் ❤ (இறுதி அத்தியாயம்) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    உண்மையான நட்பு (மாணவர்களுக்கான நீதிக்கதை) – அகிலா சிவராமன்