எழுத்தாளர் அகிலா சிவராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மாணவர்களே… உங்களுக்கான ஒரு குட்டி கதை பார்க்கலாமா…
ராகுலும் விக்ரமும் ஒரே பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்கள். இருவரும் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய வீடும் பக்கத்து பக்கத்தில் தான் இருக்கிறது. இவர்கள் இருவரும் பள்ளிக்குச் செல்லும்போதும் சரி திரும்பி வரும்போதும் ஒன்றாகவே போய் வருவார்கள் இவர்களுடைய பள்ளி வீட்டிற்கு அருகிலேயே இருந்தது. ஆகவே இவர்கள் தினமும் ஒன்றாகவே போய் ஒன்றாகவே வருவார்கள்.
ஒரு நாள் யாராவது ஒருவர் லீவ் போட்டால் கூட அடுத்தவனுக்கு சிரமமாகிவிடும். அத்தனை நட்பாக இருந்தார்கள். இதுவரை இருவருக்கும் இடையில் சண்டை என்று வந்ததே இல்லை. ஆனால் இவர்களிடம் ஒரு வேறுபாடு மட்டும் இருந்தது.
ராகுல் வகுப்பிலேயே முதல் மாணவனாக திகழ்ந்தான் எப்பொழுதும் அவன் தான் first rank வாங்குவான். விக்ரமோ சுமாராகத்தான் படிப்பான் அவனுக்கு வீட்டில் கற்றுக் கொடுப்பதற்கு ஆட்களும் இல்லை அவனால் டியூஷனுக்கும் செல்ல முடியாது காரணம் அத்தனை பணம் அவர்களிடம் இல்லை.
விக்ரம் இரண்டு மூன்று தடவை ராகுலிடம் தனக்கும் கற்பிக்குமாறு உதவி கேட்டான். ராகுலோ மறுத்து விட்டான். இல்லை, எனக்கு நேரம் இருக்காது ஆகவே என்னால் முடியாது என்று கூறிவிட்டான்.
ஆனாலும் விக்ரம் அதை தவறாக எடுத்துக் கொள்ளாமல் பரவாயில்லை, நம் இரண்டு பேரில் நீ நல்ல மார்க் வாங்கினால் என்ன? நான் நல்ல மார்க் வாங்கினால் என்ன? எனக்கு சந்தோஷம் தான் பரவாயில்லை என்று கூறிவிட்டான்.
காலாண்டு தேர்வு முடிந்து விட்டது தேர்விற்கான report card-ஐ ஆசிரியர் கூப்பிட்டு எல்லோருக்கும் கொடுத்தார். ராகுல் எல்லா பாடங்களிலும் 95, 100 என மதிப்பெண்களை பெற்று இருந்தான். ஆனால் விக்ரமோ எல்லா பாடங்களிலும் ஜஸ்ட் 40 மதிப்பெண்கள் எடுத்து பாசாகி இருந்தான். இந்த டீச்சருக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம் இருந்தது, இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தானே ஏன் ராகுல் விக்ரமுக்கு உதவி புரிவதில்லை என்று.
டீச்சர் ராகுலை கூப்பிட்டு வகுப்பு முடிந்தவுடன் நீ மட்டும் தனியாக என் அறையில் வந்து பார் என்று கூறினார். ராகுலும் வகுப்பு முடிந்தவுடன் விக்ரமை வெளியே காத்திருக்க சொல்லிவிட்டு டீச்சரை பார்க்கச் சென்றான்.
டீச்சர் ராகுலிடம் உள்ளே வந்து உட்கார சொன்னார். ராகுலும் வந்து உட்கார்ந்தான்.
விக்ரமும் நீயும் நெருங்கிய நண்பர்கள் தானே என்று பேச்சை ஆரம்பித்தார் டீச்சர்.
ராகுலும் அதற்கு ஆமாம் டீச்சர் என்றான்.
பின்பு, நீ மட்டும் ஏன் நல்ல மதிப்பெண் வாங்குகிறாய்? விக்ரம் வாங்குவதில்லை? அவன் உன்னிடம் வந்து சந்தேகம் எதுவும் கேட்பதில்லையா?? நீ அவனுக்கு சொல்லிக் கொடுப்பதில்லையா என்று கேட்டார்.
ராகுல் அதற்கு இல்ல டீச்சர் வந்து டீச்சர் என்று இழுத்தான்.
எதுக்கு ராகுல் இழுத்தடிக்கிற, அவன் உன்கிட்ட கேட்கறது இல்லையா? ஏன் அவனுக்கு படிக்க மனசு இல்லையா என்ன சொல்லு என்றார்.
இல்ல டீச்சர் …. அவன் எத்தனையோ வாட்டி என்கிட்ட வந்து சொல்லி குடுன்னு கேட்டான் நான்தான் எனக்கு முடியாதுன்னு சொல்லிட்டேன்.
ஓ, உங்கிட்ட வந்து அவன் கேட்டானா பின்னே நீ ஏன் பா முடியாதுன்னு சொல்லிட்ட.. தப்பு இல்லையா இது? சரி, நீ முடியாதுன்னு சொன்னியே அதுக்கு அவன் கோபித்துக் கொள்ளவில்லையா என்றார் டீச்சர்.
இல்ல டீச்சர், பாவம் அவன் ஒன்னும் சொல்லல…நீ மார்க் வாங்கினா என்ன நான் மார்க் வாங்கினா என்ன எல்லாம் ஒன்றுதான் அப்படின்னு சொல்லிட்டு போயிட்டான் டீச்சர் என்றான் ராகுல்.
பாரு.. எத்தனை நல்ல நண்பன் அவன்.. ஆமா நீயே அவனுக்கு சொல்லிக் கொடுக்க மறுத்து விட்டாய்? இதுக்கு பதில் சொல்லு என்றார் டீச்சர்.
அது வந்து டீச்சர் அவனுக்கும் சொல்லிக் கொடுத்து விட்டு நானும் படிச்சா எனக்கு நேரம் இருக்காது. அப்புறம் ஏன்னுடைய மதிப்பெண்ணும் குறைய ஆரம்பித்துவிடும் அதனால் தான் அப்படி சொன்னேன் டீச்சர் என்றான் ராகுல்.
தப்பு பா தப்பு …இது தப்பான நோக்கம். நீ என்ன படிக்கிறாயோ அதை அவனையும் பக்கத்தில் உட்கார்ந்து விட்டுக்கொண்டு அவனுக்கு புரிய வைத்துக் கொண்டே படித்தால் உனக்கும் நல்ல மதிப்பெண் வரும் அவனுக்கும் மதிப்பெண் வரும். இதில் நேரம் இங்கு வீணாகும்? உன்னை போலவே அவனும் நல்ல மதிப்பெண் வாங்குவான் என்றார் ஆசிரியர்.
டீச்சர், ப்ளீஸ்! என்னை மன்னித்து விடுங்கள்.. நான் தவறு செய்து விட்டேன், அவன் நிஜமாகவே நல்ல நண்பன். நான் முடியாது என்று சொன்ன போதிலும் அவன் ஒரு நாள் கூட என்னை கோபித்துக் கொள்ளவில்லை. இன்னிலிருந்து கண்டிப்பா நான் அவனை பக்கத்தில் உட்கார வைத்து சொல்லிக் கொடுப்பேன் டீச்சர் என்றான் ராகுல்.
குட்,வெரி குட், இதைத்தான் உன்னிடம் இருந்து நான் எதிர்பார்த்தேன். சரி, வீட்டுக்கு கிளம்பு, அடுத்த பரீட்சையில் விக்ரமும் நல்ல மார்க் வாங்கணம் சரியா என்றார் டீச்சர்.
சரி, டீச்சர் என்று தலையாட்டி விட்டு வெளியே வந்தான் ராகுல்.
இவனுக்காக வெளியில் காத்துக் கொண்டிருந்தான் விக்ரம்.
என்னடா, என்ன ஆச்சு? எதுக்கு டீச்சர் உன்னை கூப்பிட்டாங்க? என்றான் விக்ரம்.
ஒன்னுமில்லை டா, பக்கத்து செக்ஷ்னோட ரிப்போர்ட் கார்டில் கொஞ்சம் டோட்டல் கூட்டி போட சொன்னாங்க என்று மழுப்பினான் ராகுல்.
இருவருடைய வீடும் வந்து விட்டது. ராகுல் விக்ரமிடம், டேய், விக்ரம், கை கால் கழுவிட்டு எதாவது சாப்பிட்டு விட்டு பிறகு புத்தகத்தை எல்லாம் எடுத்துண்டு என் வீட்டுக்கு வந்துடு. இன்னியிலிருந்து படிக்கும் போதும் ரெண்டு பேரும் சேர்ந்து தான் படிப்போம்… சரியா என்றான்.
விக்ரமிற்கு அளவில்லாத மகிழ்ச்சி, சரிடா என்று சொல்லிக் கொண்டே சந்தோஷத்தில் துள்ளி ஓடினான்.
மூன்று மாதங்களுக்கு பிறகு அரையாண்டு தேர்வும் முடிந்தது. இந்த தேர்வில் விக்ரம் எல்லா பாடங்களிலும் 70 மதிப்பெண்ணிற்கு மேல் வாங்கி இருந்தான். அவனடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அவனடைந்த சந்தோஷத்தை பார்த்த ராகுலும் மகிழ்ச்சி அடைந்தான்.
ஆகவே, மாணவர்களே!! நட்பு என்பது வெறும் பேச்சு வார்த்தையிலும் விளையாட்டிலும் மட்டுமல்ல. தக்க சமயத்திலும், தேவைப்படும் நேரத்திலும் நீங்கள் உங்களுடைய நண்பனுக்கு தகுந்த உதவியை புரிய வேண்டும். அதுதான் உண்மையான நட்பாகும்.
எழுத்தாளர் அகிலா சிவராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings