எழுத்தாளர் அகிலா சிவராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ராஜீ அவசரஅவசரமாக வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் அன்று ஆபீஸில் ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது இதற்கிடையில் காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. ஓடி வந்து கதவை திறந்தாள். வெளியே வீட்டுஓனர் நின்று கொண்டிருந்தார் உள்ளே வாங்க சார் என்று அழைத்தாள்.
அவர் ஏதோ சொல்ல வந்திருக்கிறார். சொல்ல முடியாமல் தலையை சொரிந்து கொண்டிருந்தார். சார், எதற்காக வந்திருக்கிறீர்கள், ப்ளிஸ் சீக்கிரம் சொல்லுங்கள், எனக்கு ஆபீஸிற்கு லேட்டாகுது சார் என்றாள் ராஜீ.
ஒன்றுமில்லை அம்மா என்னுடைய நண்பனின் பெண்ணிற்கு அவசரமாக வீடு தேவைப்படுகிறது, அவன் இன்று ஃபோன் செய்தான், ஆகவே நீ தயவு செய்து பத்து நாளைக்குள் காலி செய்தால் எனக்கு நன்றாக இருக்கும் என்றார் ஓனர்.
சரி சார், நான் ட்ரை பண்றேன் இப்ப எனக்கு மணி ஆயிடுத்து என்றாள் ராஜீ. அவரும் ஓகே என்று சொல்லி விட்டு வெளியே போய் விட்டார்.
மாலை ஆபீசில் இருந்து வந்ததும் ராஜீ தெரிந்தவர்களுக்கெல்லாம் ஃபோன் போட்டு வீடு வேண்டும் என்று சொன்னாள்.
நான்கு நாள் கழித்து ஒரு வழியாக ஒரு வீடு கிடைத்தது ஆபீசிலிருந்து அரை மணி நேரம் தான் தூரம். ஓனரிடம் ஃபோன் போட்டு சொன்னாள். அவரும் அட்வான்ஸை திருப்பிக் கொடுத்தார் இவளும் உடனடியாக காலி பண்ணி புது வீட்டுக்கு சென்று விட்டாள்.
ஒரு வாரம் கழித்து மறுபடியும் பழைய ஓனரிடமிருந்து ஃபோன் வந்தது, அம்மா அவங்க வரல என்று கூறி விட்டார்கள் நீ மறுபடியும் காலி செய்து கொண்டு இங்கேயே வா என்றார் அவர்.
சார் அது எப்படி முடியும் நான் வந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை, புது ஓனர் எப்படி எனக்கு அட்வான்ஸ் திருப்பி கொடுப்பார்கள் என்று கேட்டாள் ராஜீ.
அதற்கு அவர், நீ உன்னுடைய விலாசத்தை கொடு நான் வந்து உன் புது ஓனர்கிட்ட பேசுகிறேன் என்றார். இவளும் விலாசத்தை கொடுத்தாள்.
மறுநாள் பழைய ஓனர் அந்த வீட்டிற்கு வந்து புது ஓனரை பார்த்து என்ன பேசினார் என்று தெரியாது அவரும் வாங்கின அட்வான்ஸை திருப்பி கொடுத்து விட்டார். மறுநாள் இவளும் பழைய வீட்டிற்கு வந்து விட்டாள் இவளுக்கு ஒன்றும் புரியவில்லை குழப்பமாகவே இருந்தது.
இரண்டு நாள் கழித்து எதிர்த்த வீட்டு கமலா மாமி இவளிடம் வம்பு பேச ஆரம்பித்தார்.
என்னடி ராஜீ, ஒரு வாரமாக ஆளைக் காணோம், ஊருக்கு போயிருந்தியா என்று கமலா மாமி வம்பை ஆரம்பித்தார்.
இல்லையே மாமி… என்றாள் ராஜீ
பின்ன ஏண்டி ஒரு வாரமாக ஆளையே காணோம் என்று மாமி எல்லாம் தெரிந்து கொண்டே வேண்டுமென்றே கேட்க நடந்த கதையை கூறினாள் ராஜீ.
அய்யய்யோ, பெருமாளே.. இது என்னடி கூத்து.. செல்வம்(ஓனர்) ஏண்டி உன்கிட்ட இத்தனை பெரிய நாடகமாடியிருக்கிறான் என்று கமலா மாமி கேட்டார்.
என்ன சொல்றேள் மாமி, என்றாள் ராஜீ..
வேண்டாம் வேண்டாம் எனக்கெதுக்கு வம்பு, நான் போகிறேன் என் வேலையை பார்க்க என்று கிளம்ப ஆரம்பித்தாள் கமலா மாமி.
மாமி, நில்லுங்கோ, சொல்ல வந்ததை சொல்லி விட்டு போங்கோ, நான் சத்தியமாக யாரிடமும் சொல்ல மாட்டேன் என்றாள் ராஜீ.
பிறகு மாமி நடந்ததை எல்லாம் பிட்டு பிட்டு வைத்து விட்டார்.
அதாவது என்ன நடந்ததென்றால் ஒரு வாரத்திற்கு ராஜீயை அனுப்பிவிட்டு செல்வம் அந்த வீட்டிலேயே தங்கி இருந்திருக்கிறார். இரவு நேரத்தில் தூங்கி விட்டு காலை எழுந்து கதவை மூடி விட்டு தன் வீட்டிற்கு சென்று விடுவார். இப்படியே ஏழு நாட்களுக்கும் செய்திருக்கிறார். கமலா மாமி இதை ஒழிந்திருந்து பார்த்திருக்கிறார் ஆனால் மாமிக்கும் காரணம் தெரியாது.
எல்லாவற்றையும் கேட்டு கொண்டு சரி விடுங்க மாமி, என்று சொல்லி விட்டு ராஜீ உள்ளே வந்து விட்டாள். அவளுக்கு குழப்பம் இன்னும் அதிகமானது.
ஆனாலும், தன்னுடைய அன்றாட வேலைகளின் பளு காரணமாக அவள் இந்த விஷயத்தை மேற்கொண்டு யோசிக்காமல் விட்டு விட்டாள்.
மறுபடியும் ஒருநாள் ஓனர் ஏதோ ஒரு வேலை காரணமாக ராஜீயை தேடி வந்தார். இந்த தரவை ராஜீயிடம் தனக்கு ஒரு வீடு வாடகைக்கு வேண்டுமென்று கேட்டார். ராஜீக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
சார், உங்க வீட்டை விட்டுட்டு எதற்கு வாடைகைக்கு போக வேண்டும் என்று கேட்டாள். செல்வம் பதிலே கூறாமல் மௌனமாகவே இருந்தார்.
சார், எனக்கு அப்பவே சந்தேகமாக இருந்தது, எதற்காக என்னை போக சொல்லிவிட்டு மறுபடியும் அழைத்தீர்கள் என்று சொன்னாள் ராஜீ..
ஒன்னுமே இல்லைமா.. நீ ப்ளீஸ் சீக்கிரமா ஒரு வீட்டை பார் என்றார் செல்வம்.
சார், நீங்க ஏதோ சொல்லவரீங்க ஆனால் மறைக்கிறீர்கள் ப்ளீஸ் உண்மையை சொல்லுங்கள் சார் என்றாள் ராஜீ.
பிறகு செல்வம் தன் சொந்தக் கதையை சொல்ல ஆரம்பித்தார் .
ஒரு மாதத்திற்கு முன்பு அவருடைய மகனும் மருமகளும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பி வந்து விட்டார்கள். செல்வம் தன்னுடைய உழைப்பினால் மூன்று நான்கு வீடுகள் கட்டியிருக்கிறார், அதைத் தவிர நிறைய நகைகளையும் சேர்த்து வைத்திருக்கிறார்.
செல்வத்திற்கு ஒரே மகன் தான். இந்தியாவிற்கு திரும்பி வந்த உடனேயே அவருடைய மருமகள் எல்லா சொத்தையும் செல்வத்தின் மகன் பேரில் எழுதுமாறு வற்புறுத்தினாள்.
ஆகவே அவரும் அதை எழுதி கொடுத்து விட்டார். எழுதி வாங்கின உடனேயே அந்த மருமகள் அவரை அங்கு இருக்க தரவில்லை ஆகவேதான் அவர் போன மாதம் ராஜீயை வெளியே அனுப்பிவிட்டு அந்த இடத்தில் அவர் தங்கி இருந்தார். அவருடைய மருமகள் வேலைக்காரியையும் நிறுத்திவிட்டாள்.
செல்வம் பகல் நேரத்தில் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு இரவில் இங்கு வந்து தூங்கிருக்கிறார். அதை ஒரு நாள் அவருடைய மருமகள் பார்த்து விட்டாள் நான் உங்களை திண்ணையில் தானே படுத்துக்கொள்ள சொன்னேன், நீங்கள் அந்த வீட்டில் தூங்குகிறீர்கள், அந்த வீட்டில் வாடகையில் இருந்தவர் எங்கே? என கேட்டாள். செல்வம், நான் தான் மா காலி பண்ண சொல்லி விட்டேன் என்றார்.
அதற்கு அவள் அவரை கன்னாபின்னாவென திட்டி இருக்கிறாள், பதிலுக்கு செல்வம், மூன்று வீட்டை வாடகைக்கு விட்டேன், அதில் ஒரு வீட்டில் நான் தங்கினால் என்னம்மா என்று கேட்க
மருமகள், shut up, இது உங்க வீடில்லை இனி, மரியாதையாக நான் சொல்வதை கேளுங்கள், நாளைக்குள் இந்த வீட்டில் யாராவது வாடகைக்கு வர வேண்டும், இல்லையென்றால், என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று அதட்டி இருக்கிறாள். ஆகவே தான் செல்வம் மறுபடியும் ராஜீயை உடனடியாக அழைத்திருக்கிறார்.
இப்போதோ அவரின் மருமகளின் கொடுமைகளை சகித்து கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து விட்டதாகவும் ஆகவே தான் உன்னை நாடி வந்திருக்கிறேன் என்றும் ராஜீயிடம் கூறினார்.
ராஜீ சிறிது நேரத்திற்கு எதோ யோசனை செய்து விட்டு, சார், நீங்கள் இங்கேயே இருங்கள், நான் வந்து கூப்பிடும் வரை வெளியே வராதீர்கள் என்று கூறி விட்டு செல்வத்தை உள்ளே வைத்து வெளியே பூட்டிக்கொண்டு சென்று விட்டாள்.
அங்கிருந்து நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றாள். செல்வத்தின் மருமகளைப் பற்றி ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுத்தாள், கூடவே அந்த SI யையும் கூட்டிக் கொண்டு வந்தாள். முதலில் நேராகச் சென்று தன் வீட்டு கதவை திறந்தாள்.
SI இடம் செல்வத்தை காண்பித்து, சார், இவர் தான் நான் சொன்ன ஓனர் என்று கை காட்டினாள்.
செல்வத்தை பார்த்த SI, சார் நீங்களா !!!! என்று சல்யூட் அடித்தார். இவரை உங்களுக்குத் தெரியுமா என்று ஆச்சரியத்தோடு கேட்டாள் ராஜீ.
இவர் ரிட்டையர்டு இன்ஸ்பெக்டர் மா, இவரை எப்படி தெரியாமல் இருக்கும்? இவரையே அவரோட மருமகள் இந்த பாடு படுத்திருக்காங்க, சார், வாங்க சார், இப்பவே போய் ஒரு வழி பண்ணுகிறேன் என்று கூறி அவரை கட்டாயப்படுத்தி கூட்டிக்கொண்டு செல்வத்தின் வீட்டிற்கு சென்றார் SI.
செல்வம் வீட்டிற்குக்கு வெளியிலேயே நின்று கொண்டார். ராஜீயும் SIயும் உள்ளே சென்றார்கள்.
இவர்களைப் பார்த்து உள்ளிருந்து வெளியே வந்த மருமகள் எதற்காக போலீசை கூட்டிக் கொண்டு வந்திருக்கிறாய்? என்றாள்.
உங்க மேல் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க மேடம் என்றார் SI.
என்ன கம்ப்ளைன்ட்? என்றாள் மருமகள்.
மேடம் நீங்க உங்க மாமனாரை வெளியே துரத்திட்டீங்க…. அதான் கம்ப்ளைன்ட்.
சார், இது என் வீடு, நான் என்ன வேணுமானாலும் செய்வேன். அதைக் கேக்க இந்த ராஜீ, after all, வாடகைக்கு இருக்கா, இவ யாரு? அவள் பேச்சை கேட்டுக் கொண்டு நீங்களும் வக்காலத்து வாங்க வந்துட்டீங்களா?? மரியாதையாக இரண்டு பேரும் கிளம்பிச் செல்லுங்கள் என்று கத்தினாள்….
கொஞ்சம் வாயை மூடுமா … உன் மாமனார் யாருன்னு தெரியுமா உனக்கு?
யாராக இருந்தாலும் எனக்கு என்ன சார்?
உங்க மாமனார் ஒரே ஒரு கம்ப்ளைன்ட் பண்ணினா போதும் உன்னை காலத்துக்கும் ஜெயிலில் நான் போட்டு விடுவேன் என்றார் SI..
என்ன மிரட்டுறீங்களா என்றாள் மருமகள்.
மேடம் முதல்ல உங்க மாமனார் யாருன்னு தெரிந்து கொள்ளுங்கள் அவர் retired இன்ஸ்பெக்டர். அவர் மட்டும் நினைத்திருந்தால் உங்களை எப்பவோ உள்ளே தள்ளி இருக்கலாம். ஆனால் தன் குடும்ப கௌரவ பிரச்சனைக்காக இத்தனை நாளாக ஒன்றும் கூறாமல் நீங்கள் கொடுத்த டார்ச்சர் அனைத்தையும் தாங்கிக் கொண்டார் என்றார் SI.
அதற்குள் செல்வத்தின் மகன் வெளியே வந்தான்.
SI அவனை பார்த்து வாங்க சார்
நீங்க தான் செல்வத்தோட மகனா ரொம்ப நல்லா பண்ணீங்க சார், உங்க அப்பா இன்ஸ்பெக்டர் தெரிஞ்சும் எத்தனை தைரியம் உங்களுக்கு என்றார்…..
அதற்கு செல்வத்தின் மகன் சொன்னான், சார் என் தப்பு எதுவும் இல்ல சார் இவதான் சார், பணத்தாசையில் என்னை மிரட்டி இந்த மாதிரி எல்லாம் செய்தாள். என்னை மன்னித்து விடுங்கள் சார் என்று காலில் விழுந்து அழுதான் செல்வத்தின் மகன்.
அதற்குள் செல்வமும் உள்ளே வந்தார். செல்வத்தின் காலில் மருமகளும் விழுந்தாள். மாமா ப்ளீஸ்….. என்னை மன்னித்து விடுங்கள், பணப்பேய் பிடித்து, உங்களை நான் தவறான முறையில் நடத்தி விட்டேன் என்று கதறினாள்.
அவளுக்கு இதுவரை செல்வம் இன்ஸ்பெக்டர் என்றே தெரியாது. இருவரும் அமெரிக்காவில் காதலித்து தானாகவே registered marriage செய்து கொண்டு விட்டார்கள். இவள் கொஞ்சம் பணத்தாசை பிடித்தவள். அவளுடைய கணவன் தன் அப்பாவை பற்றி கூற வரும் போதெல்லாம் அதை பற்றி கேட்காமல் நிராகரித்து விட்டு இப்போது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறாள்..
செல்வமும் பரவாயில்லை, நீங்கள் இருவருமே என்னுடைய குழந்தைகள் தானே நான் உங்களை மன்னித்து விட்டேன். பிறகு மருமகளிடம், அம்மாடி, சொத்து இப்போதும் என் மகன் பேரில் தான் இருக்கும். அது உங்க இரண்டு பேருக்குதாம்மா, எனக்கென இருப்பது நீங்கள் இருவரும் தானே என்று கூறிக் கொண்டு இருவரையும் கட்டி அணைத்து கொண்டார். வந்த வேலை முடிந்தவுடன் SI யும் சென்று விட்டார்.
எழுத்தாளர் அகிலா சிவராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings