in ,

என் கருப்பு நிலா (சிறுகதை) – அகிலா சிவராமன்

எழுத்தாளர் அகிலா சிவராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

சதாசிவம் வாசற்திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ஆகாயத்தையே வெறிக்க வெறிக்க பார்த்து கொண்டிருந்தார்.  அன்று பௌர்ணமி, இரவு 7 மணி ஆகி விட்டதால் முழுநிலா பிரகாசத்தோடு பளபளவென ஜொலித்து கொண்டிருந்தது. சதாசிவம் வைத்த கண்ணை எடுக்காமல் அந்த ஆகாயத்தையே பார்த்தார். அவர் அதில் தன்னுடைய நிலாவை தேடிக் கொண்டிருந்தார்.

ஆனால் அவருடைய நிலாவோ சற்று கருப்பு நிறத்தில் இருப்பாள், அழகென்றால் அத்தனை அழகு, தேன் சொட்டும் அழகு, கருப்பு நிறத்திற்கு நகை போட்டு அழகு பார்க்க வேண்டும் என்ற வசனத்திற்கு எடுத்துக் காட்டாக இருந்தாள்.

சதாசிவத்திற்கு எல்லாமே அந்த கருப்பு நிலா தான். ஆம்,  அவருடைய மனைவியின் பெயரும் நிலா தான். சதாசிவம் அவளை ஆசையோடு அடி என் கருப்பு நிலாவே என்று தான் அழைப்பார். இன்றோடு அவள் இறந்து ஐந்து வருடமாகி விட்டது. அவள் பௌர்ணமி அன்று தான் இறந்தாள். ஆகவே தான் சதாசிவம் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் தன் நிலாவை அந்த முழுநிலவில் தேடிக் கொண்டிருப்பார்.

அவர் நிலாவையே பார்த்து மெய்மறந்த சமயத்தில் தீடிரென பேரன் குரல் கேட்கவே திரும்பி பார்த்தார். அவருடைய பிள்ளை வயிற்று பேரன்  4 வயது வாண்டுப் பயல் தாத்தா தாத்தா என்று ஓடி வந்தான்.

தாத்தா…தாத்தா.. என்ன பார்க்கற? என்று தன் மழலை பேச்சால் கேட்டான்.

அதுவாடா செல்லம், என்னோட நிலாவை தேடறேன் என்றார் சதாசிவம்.

அய்யைய்ய ..தாத்தா … உனக்கு இது கூட தெரியல, இதோ இருக்கு பாரு, பெரிசா என்று குட்டி கைகளால் தன் தலையில் அடித்து கொண்டே சொன்னான் வாண்டுப் பயல்.

அது இல்லை டா என்னோட நிலா, என்னோட நிலா யார் தெரியுமா? உன்னோட பாட்டி டா என்றார் தாத்தா.

பாட்டியா?? அவங்க எப்படி இருப்பாங்க? மேலே தான் இருக்காங்களா?? என்று தன் மழலை பேச்சால் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டான் சுட்டி பயல்.

ஆமாண்டா இங்க தான் மேலே இருக்கா, பேசாமல் இரு என்றார் தாத்தா.

சரி தாத்தா, நான் பார்த்தா உன்கிட்ட சொல்றேன் என்று சொல்லி விட்டு சிறிது நேரத்திற்கெல்லாம் தாத்தாவின் மடியிலேயே தூங்கி விட்டான் குழந்தை.

குழந்தையை தேடி வெளியே வந்த மருமகள் ராதிகா, என்ன மாமா?? வழக்கம் போல அத்தையை தேடுகிறீர்களா? என்று கேட்டு விட்டு குழந்தையை தூக்கி கொண்டாள்.

மாமா, மணி 8.30 ஆகிறது, சாப்பிட வாங்க என்றாள்.

எனக்கு பசிக்கலைமா, நீயும் அவனும் சாப்பிடுங்கோ,  எனக்காக கொஞ்சமா டைனிங் டேபிளில் வைத்து விட்டு நீ போய் தூங்கு, நிறை மாத பிள்ளைதாச்சி நீ, போம்மா போ, எனக்கு எப்ப பசிக்குமோ அப்ப சாப்பிட்டு கொள்கிறேன் என்றார் சதாசிவம்.

குழந்தையை தூங்க வைத்துவிட்டு ராதிகாவும் ரமேஷும் சாப்பிட வந்தார்கள். ராதிகா ரமேஷிடம் அப்பா எப்போதும் அம்மாவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு சிறிது மாற்றம் தேவை. ஆகவே அவரை நாம் ஏன் லலிதா வீட்டிற்கு அனுப்பக் கூடாது என்று கேட்டாள்.

நீ சொல்வது சரிதான். ஆனால் நம் அப்பு அப்பா இல்லாமல் இருக்க மாட்டான். அதானால் தான் என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கூறினான்.

அதற்கு ராதிகா அப்புவுக்கு ஸ்கூல் இப்போது முடிந்து விடும் அடுத்த வாரத்தில். அப்போது அப்பாவையும் அப்புவையும் லலிதா வீட்டிற்கு அனுப்பி விடலாம், எனக்கும் அடுத்த மாதம் டெலிவரி நேரம், என் அம்மாவும் அடுத்த வாரம் வந்து விடுவார்கள் என்று கூறினாள்.

சரி, நாளைக்கு நான் அப்பாவை கேட்டுவிட்டு டிக்கெட் புக் செய்கிறேன் இப்பொழுது தூங்கு என்று கூறிவிட்டு ரமேஷ் தூங்கச் சென்றான்.

காலையில் அப்பாவை கேட்டான்.  சரி போய்விட்டு வருகிறேன் என்று  அப்பா கூறினார். ராதிகா, அப்புவிடமும் நீ அம்மா இல்லாமல் இருப்பாயா? அத்தை வீட்டுக்கு போகிறாயா? என்று கேட்டாள். அந்தச் சுட்டிப் பயலும் நான் போகிறேன் என்று கூறிவிட்டான்.

ரமேஷ் ஒரு வாரம் கழித்து மதுரையில் இருக்கும் தன் தங்கை வீட்டிற்கு அப்பாவையும் அப்பையும் கொண்டு போய் விட்டுவிட்டு உடனே திரும்பி வந்தான்.

லலிதா வீடு வந்த சில நாட்களுக்கு பிறகு, மறுபடியும் பௌர்ணமி வந்தது. சதாசிவம் வழக்கம்போல திண்ணையில் உட்கார்ந்து கொண்டு நிலாவை பார்த்துக் கொண்டிருந்தார்.

அன்று சரியாக இரவு மணி எட்டு இருக்கும் ரமேஷின் ஃபோன் வந்தது, லலிதா ஓடி வந்து எடுப்பதற்குள் சுட்டிப் பயல் போனை எடுத்து விட்டு ஹலோ!! ஹலோ!!! என்று கத்தினான்.

டேய் அப்பு, நான் அப்பா பேசுறேன் டா.. உங்க தாத்தாகிட்ட சொல்லு,  அவருடைய கருப்பு நிலா வந்தாச்சுன்னு.. எங்கடா உன் தாத்தா அவர்கிட்ட ஃபோனை கொடு என்றான் ரமேஷ்.

அப்பு வேகமாக ஓடி வந்து தாத்தா உன் கருப்பு நிலா வந்தாச்சாம், அப்பா லைன்ல இருக்காரு பேசு என்றான்..

சதாசிவம் வேகமாக ஃபோனை வாங்கி என்னடா, என்ன ஆயிற்று? கருப்பு நிலா அது இது என்கிறான் எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்றார்.

அப்பா ராதிகாவுக்கு டெலிவரி ஆகி விட்டது, இப்போது தான் குழந்தை பிறந்தது,  நம்ம அம்மாவே வந்து பிறந்து இருக்கிறார்கள், அப்படியே அம்மாவை உறித்து வைத்து பிறந்திருக்கிறாள் அதான் கருப்பு நிலா வந்தாச்சுன்னு சொன்னேன் என்றான்.

அவ்வளவுதான் சதாசிவத்திற்கு தலை கால் தெரியவில்லை, சந்தோஷத்தில் வாயில் இருந்து வார்த்தையும் வரவில்லை. டேய்!! நான் நாளைக்கே கிளம்பி வருகிறேன் டா, நீ ராதிகாவை பத்திரமாக பார்த்துக்கொள் என்று கூறி ஃபோனை வைத்து விட்டார்.

மறுநாள் மாப்பிள்ளை தன் காரிலேயே சதாசிவம், பேரன் மற்றும் மனைவியை எடுத்துக் கொண்டு சென்னைக்கு கிளம்பினார்.

சதாசிவமும் சென்னை எப்போது வரும், சென்னை எப்போது வரும் என்று இருப்புக் கொள்ளாமல் இருந்தார். ஒரு வழியாக வீட்டை வந்து அடைந்தார்கள் பிறகு உடனேயே கிளம்பி ஆஸ்பத்திரிக்குச் சென்று கருப்பு நிலாவை பார்த்தார் சதாசிவம்.

நடுங்கும் கைகளால் கருப்பு நிலாவை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டார். ரமேஷ் கூறியது போலவே அந்த குழந்தை அப்படியே அவருடைய கருப்பு நிலாவை  அச்சடித்தது போல் இருந்தது. தாத்தாவின் பின்னால் இருந்த பேரனும் மெதுவாக அந்த கருப்பு நிலாவைப் பார்த்தான்.

தாத்தா, நீ இத்தனை நாளா மேலே பார்த்து கருப்பு நிலாவை தேடின,  ஆனா அது இத்தனை நாளா உனக்கு தெரியாம அம்மா வயிற்றில் இருந்திருக்கிறது என்று சொன்னான் குட்டி பையன். அதைக் கேட்ட தாத்தாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

தாத்தா மட்டும் இல்லாமல் அங்கு உள்ள அனைவருமே குட்டி பையனின் பேச்சைக் கேட்டு கொல் என்று சிரித்தார்கள். ராதிகாவும் சதாசிவத்தை பார்த்து மாமா, இனிமேல் ஆகாயத்தை பார்த்து உங்கள் கருப்பு நிலாவை தேட மாட்டீர்களே என்றாள் கிண்டலாக…..

எழுத்தாளர் அகிலா சிவராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பெண்களுக்கேற்ற உயர்கல்வி (கட்டுரை) – அகிலா சிவராமன்

    பணப்பேய் பிடித்த மருமகள் (சிறுகதை) – அகிலா சிவராமன்