கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள், இனி கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்…..
இந்த வரிகளை நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்கள் கூறியிருக்கிறார் என நம் எல்லோருக்குமே தெரியும். அவர் கூறிய இந்த வரிகளில் எத்தனை அழுத்தமான உண்மை இருக்கிறது என்று தெரியுமா இளைஞர்களே உங்களுக்கு…
இளைஞர்களே, இந்த காலத்தில் நீங்கள் வெறும் புத்தகப் புழுவாக தான் இருக்கிறீர்கள்.. உங்களுக்கு பிராக்டிக்கலாக எந்த வேலையும் செய்வதற்கான அனுபவம் இருப்பதே இல்லை. நீங்கள் அதை கற்றுக் கொள்வதற்கும் தயாராக இல்லை. புத்தகத்தில் இருப்பதை அப்படியே படிக்கிறீர்கள். அதைத் தவிர ஒரு தொழிலும் உங்களுக்கு தெரிவதில்லை.
இன்றைய காலகட்டத்தில் வேலையில்லா திண்டாட்டம் என்பது ஒரு பெரிய பூகம்பமாகவே இருக்கிறது காரணம் இதுதான்.
ஆகவே, கண்டிப்பாக ஒரு தொழிலை கற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
“ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்பதைப் போல வெறும் புத்தகப் படிப்பு வாழ்க்கைக்கு உதவாது, ஒவ்வொருவரும் ஒரு கைத்தொழிலை தெரிந்து வைத்திருப்பது அவசியமான ஒன்றாகும்.
தொழில் என்றால் நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் உங்களுடைய படிப்பிற்கு சம்பந்தப்பட்ட ஒரு தொழிலை கூட நீங்கள் கற்றுக் கொள்ளலாம். உதாரணத்திற்கு நீங்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், நீங்கள் பாடத்தில் கோடிங், ப்ரோகிராமிங், சாப்ட்வேர் என்று இதைத்தான் கற்றுக் கொள்வீர்கள். ஆனால் நீங்கள் தனியாக ஹார்டுவேர் மற்றும் லேப்டாப் ரிப்பேர் போன்றவற்றை கற்றுக் கொண்டீர்களே ஆனால் உங்கள் வீட்டிலேயே நேரம் கிடைக்கும்போது இந்தத் தொழிலையும் செய்யலாம்.
வேலை வாய்ப்பை மட்டுமே எதிர்பார்த்துக் காத்திருந்தால் ஏமாற்றம் தான் கிடைக்கும். சொந்தமாய்த் தொழில் தொடங்க வேண்டும் என்ற முனைப்போடு ஒரு கைத்தொழிலைக் கற்றுக்கொண்டுவிட்டால், வீட்டிலேயே தொழில் செய்து வருவாய் பெற முடியும் . வெறும் ஒரு வேலையை மட்டும் நம்பி இருந்தால் இந்த காலத்தில் முடியாது. ஆகவே உங்கள் படிப்பிற்கு சம்பந்தப்பட்ட ஒரு தொழிலையும் நீங்கள் கண்டிப்பாக கற்றுக் கொண்டே ஆக வேண்டும். போட்டோ எடுக்கும் தொழிலிலும் advanced method ஐ கற்றுக்கொள்ளலாம். நீங்கள் படித்த கம்ப்யூட்டர் சயின்ஸோடு சில அட்வான்ஸ் டெக்னாலஜிகளை கற்றுக்கொண்டு இரண்டையும் பிணைக்கும் அளவில் ஒரு கோர்சை நீங்கள் படிக்கலாம். இப்படி படிக்கும் போது நீங்கள் தானாகவே ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனியை திறக்கலாம். யாரையும் நம்பி நீங்கள் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
நாளுக்கு நாள் வளரும் டெக்னாலஜிக்கு ஏற்ப நீங்கள் உங்களை வளர்த்துக் கொண்டு அதே சமயத்தில் தனியாகவே ஒரு தொழிலை தொடங்கும் விதத்திலும் முன்னேற வேண்டும் .
உங்களுடைய தந்தை எதாவது ஒரு கடையை வைத்திருந்தால் நீங்கள் படித்த படிப்பை வைத்து அந்த கடையை மேற்கொண்டு எப்படி டெவலப் செய்யலாம் என்று யோசித்து செய்தீர்களேயானால் உங்களுக்கு வாடிக்கையாளர்களும் அதிகமாகவார்கள். நீங்களும் வேற வேலைக்கு செல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. இங்கேயே உங்கள் தந்தையார் கடையையே நீங்கள் நன்றாக டெக்னாலஜியோடு டெவலப் செய்து பலவிதமான வசதிகளை வாடிக்கையாளுக்கு செய்து கொடுத்தீர்களேயானால் லாபம் உங்களைத் தேடி வரும். நீங்கள் படித்த படிப்பும் வீணாகாமல் இருக்கும். இல்லை, நான் படித்துவிட்டு ஏசியில் ஆபீசில் தான் வேலை செய்வேன் என்று நீங்கள் நினைத்தீர்களே ஆனால் அது தவறு. ஒருவேளை உங்களுக்கு வேலை கிடைத்தால் வேலையையும் செய்து கொண்டு உங்கள் தந்தையின் கடையையும் பார்த்துக் கொள்ளலாம்.
அதேபோல உங்கள் பெற்றோர்கள் கிராமத்தில் இருந்தால் அவர்களின் விவசாயத்திற்கு உங்களுடைய நவீன முறையை நீங்கள் எடுத்துச் சொல்லலாம். நீங்களும் அவர்களோடு இணைந்து நவீன முறையில் விவசாயத்தை கையாளலாம். உழைப்பும் நவீனமும் இணையும் போது நிச்சயமாக உங்களுக்கு தோல்வியே வராது.
கைத்தொழிலை ஊக்கப்படுத்தும் நோக்கில் அரசும் பல சலுகைகளை வழங்கி வருகிறது. தொழில் பயிற்சி கூடங்கள் மூலம் கைத்தொழிலுக்கான இலவச பயிற்சியையும் அளிக்கிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி, கைத்தொழில் வளர்ச்சிக்கு நிதி உதவி தந்து ஊக்குவித்தும் வருகிறது. வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் கொடுத்தும் உதவுகின்றன.
இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். வாழ நினைத்தால் வாழலாம் வழியால் இல்லை ஊரிலே என்ற பாடல் வரிகளுக்கேற்ப வழியை தேடினால் நிச்சயம் கிடைக்கும்.
கல்வியை கற்று வகுப்பிலே முதலாவதாக வந்தால் மட்டும் போதாது. ஒரு தொழிலை செய்வதற்கான பயிற்சியும் திறமையும் வேண்டும். பள்ளிக்கூடத்தில் படிப்பில் மக்காக இருந்த எத்தனையோ பேர் சொந்தமாக தொழிலை தொடங்கி அமோகமாக இருக்கிறார்கள். அதைப் போல நான், டாப் 10 ல் இருக்கிறேன், என் லெவலுக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்று தேடிக் கொண்டே காலத்தை வீணடிப்பவர்களும் இருக்கிறார்கள்.
மாணவர்களே, காலம் பொன் போன்றது, ஆகவே படிக்கும் தருணத்திலேயே கூடவே ஒரு உபயோகமான தொழிலை கற்று கொள்ளுங்கள். யாரையும் நம்பி வாழாமல் சுயமாக தொழில் செய்யும் அளவிற்கு உங்கள் திறமையையும் அதற்கான நவீன முறையையும் கற்று கொள்ளுங்கள்..
வருங்கால இந்தியா உங்கள் கைகளில் தான் இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்….
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings