மகாகவி பாரதியார் அவர்கள் பெண்களின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் நிறைய கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார். பெண்கள் அடிமை இல்லாமல் கல்வி கற்று எல்லா துறையிலும் தேர்ச்சி பெற்று ஆண்களுக்கு நிகராக இருக்க வேண்டும் என்பது தான் மகாகவி அவர்களின் நீண்ட நாள் ஆசையாகவும், கனவாகவும் இருந்தது.
அவருடைய கனவு பலித்ததா?? கண்டிப்பாக பலித்தது. இன்றைய சமுதாயத்தில் நம் இந்திய பெண்மணிகள் இடம் பெறாத துறை எது? இந்தியாவில் மட்டுமா?? வெளி நாடுகளிலும் நம்முடைய இந்திய பெண்மணிகள் தங்களுடைய கால் பதிவை எப்போதோ பதித்து விட்டார்கள்; அது மட்டுமா.. விண் வெளியிலும் சாதனை படைத்து இருக்கிறார்கள்.
உடுத்தும் உடையையும் ஆண்களுக்கு நிகராக உடுத்துகிறார்கள். பயம் என்பதே இல்லாமல் நெஞ்சை நிமிர்த்தி நடக்கிறார்கள். அஞ்சிய காலமெல்லாம் பறந்தோடி போய் விட்டது.
வெறும் அடுப்பங்கறையில் மட்டுமே இருந்த பெண்கள் இன்று விமானம், இரயில், வாகனம் என அனைத்தையும் ஓட்டுகிறார்கள்.
மெக்கானிகல் இன்ஜினியரிங்க், பைலட், ஏரோநாட்டிக்ஸ் போன்ற படிப்புகளை குறிப்பாக ஆண்கள் தான் படித்து கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றோ ஏட்டிக்கு போட்டியாக பெண்களும் அதில் தலை சிறந்து விளங்குகிறார்கள். காவல்துறையிலும் அவர்களின் வளர்ச்சி பெருக்கெடுத்து ஓடுகிறது.
முன்பெல்லாம் திருமண நிகழ்வின் போது பிள்ளை வீட்டார்கள், பெண் வீட்டாரை பார்த்து உங்கள் மகளுக்கு என்ன தெரியும் என்று கேட்பார்கள். அந்த காலமெல்லாம் எப்போதோ மலையேறி விட்டது. இப்போதோ என் மகளுக்கு தெரியாதது என்று எதுவுமேயில்லை என்று பெற்றோர்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்.
ஆக மொத்தத்தில், நிச்சயமாக பாரதியார் கண்ட கனவு பிரகாசமாக பளிச்சென்று பலித்து விட்டதென்று சொன்னால் அது மிகையாகாது. பாரதியார் மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால், அவர் நிச்சயமாக ஆனந்தம் அடைந்திருப்பார்.
ஆனால், பெண்களை பொருத்த வரையில் இன்னமும் ஒரு சில கட்டுபாடுகளும் வருத்தம் தரக் கூடிய நிகழ்வுகளும் இருக்கத் தான் செய்கின்றன. அவைகள் என்னென்ன என்பதை பார்க்கலாமா..
பாதுகாப்பு பிரச்சினை:
இந்த பிரச்சினை ஆனது இன்னுமும் தலை விரித்தாடுகிறது என்றே சொல்லலாம். அரசாங்கமும் மற்ற தொண்டு நிறுவனங்களும் இணைந்து எத்தனையோ திட்டங்களை தீட்டி பாடுபட்ட போதிலும் ஒரு பெண் தனியாக இரவு நேரத்தில் உலவுவது பாதுகாப்பா? என்ற கேள்வி இன்றளவும் இருக்கத் தான் செய்கிறது.
இந்த நிலைமையும் கண்டிப்பாக மாற வேண்டும். பெண்கள் பயமின்றி சுதந்திரமாக உலவ வழி வகுக்க வேண்டும். எப்படி எல்லா துறையிலும் பெண்களின் கால் பதிவதற்கு இந்த சமுதாயம் ஒத்துழைப்பு கொடுத்ததோ, அதைப் போல இதற்கும் கொடுக்க வேண்டும்.
பெற்றோர்கள் பெண் குழந்தைகளுக்கு எப்படி எல்லாவற்றையும் எடுத்து சொல்லி வளர்க்கிறார்களோ, அதைப் போலவே கண்டிப்பாக ஒரு ஆண் மகனுக்கும் சொல்லித் தர வேண்டும். ஒரு பெண்ணை எப்படி நடத்த வேண்டும், எந்த விதத்தில் உதவி செய்யலாம் என்பதை எல்லாம் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஒரு பெண்ணை எப்போதும் தவறான நோக்கத்தோடு பார்க்க கூடாது என்பதை உறுதியாக எடுத்துரைக்க வேண்டும்.
பெண் குழந்தைகளுக்கு எப்படி ஒழுக்கமாக உடை அணிந்து கொண்டு தான் செல்ல வேண்டும் என்று கட்டளை இடுவது போல ஆண் மகனுக்கும் ஒரு பெண்ணை பார்க்கும் விதத்தை பற்றி கண்டிப்பாக எடுத்துரைக்க வேண்டும்.
ஆண், பெண் என்கிற வேறுபாடு:
இந்தியாவில் ஒரு சில குடும்பங்களில் இந்த வேறுபாடு இன்றளவும் இருக்கத் தான் செய்கிறது. இந்த வேறுபாட்டை தாய்மார்களே பார்க்கிறார்கள் தங்களுடைய குழந்தைகளிடம்.
ஆண் குழந்தை என்றால் என்னவோ அவர்களுக்கு தன்னுயிரை விட உயர்ந்தது என்று நினைக்கிறார்கள். இன்னும் சில தாயமார்கள் ஆண் மகனை ஒரு சிறிய வேலையை செய்வதற்கு கூட அனுமதிப்பதில்லை. ஏன் இந்த பாகுபாடு? இரண்டு பேரையுமே தாய்மார்களாகிய பெண்கள் தானே வயிற்றில் சுமக்கிறார்கள்… இருவரையுமே பத்து மாதம் வயிற்றில் வைத்திருக்கும் பட்சத்தில் இது எவ்வாறு நியாயமாகும்? ஆகவே இந்த பாகுபாடும் அறவோடு அழிய வேண்டும்.
இரண்டு குழந்தைகளுக்குமே எல்லா வேலைகளையும் செய்ய சரி சமமாக கற்றுக் கொடுக்க வேண்டும். இக்காலத்தில் ஆண், பெண் இருபாலருமே வேலைக்கு செல்கிறார்கள். இரண்டு பேரும் சேர்ந்து சம்பாதித்தால் தான் குடும்பத்தை நடத்த முடியும் என்கிற பட்சத்தில் கணவன் மனைவிக்கு ஒரு சில ஒத்தாசைகள் செய்யும் போது அந்த மனைவிக்கு எத்தனை நன்றாக இருக்கும்.. யோசித்து பாருங்கள்…
பெண்கள் தான் வீட்டு வேலை செய்ய வேண்டும் என்று சொன்னால் அது இக்காலத்திற்கும் எப்படி சாத்தியமாகும்? வேலைக்கு சென்று களைத்து போய் வருவது பெண்களும் தானே? வீட்டிலிருந்த பெண்கள் எப்படி வேலைக்கு போய் குடும்ப சுமையை குறைக்க பங்கெடுக்கிறார்களோ அதைப் போல ஆண்களும் வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்யலாமே?? சரி சமமாக பகிர்ந்து செய்தால் இருவருக்குமே நல்லது தானே..
தாய்மார்கள் தான் இன்றைய ஆண் குழந்தைகளுக்கு இதை பற்றி எல்லாம் எடுத்துரைக்க வேண்டும். நிச்சயமாக இன்றைய ஆண் குழந்தைகள் புரிந்து கொண்டு எல்லாவற்றையும் மாற்றி பெண்களுக்கு பாதுகாப்பாகவும், உற்ற துணையாகவும் இருப்பார்கள் என்ற நம்பிக்கை ஆணித்தரமாக இருக்கிறது…
மேலும் பாரதியார் அவர்கள் கனவு கண்ட இந்த புதுமை பெண்களை பாதுகாக்கும் பொறுப்பு நம் எல்லோர் கைகளிலும் தான் இருக்கிறது!!!
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings