அன்றும்!!! இன்றும்!!! அதிகமானது எது?? குறைந்து இல்லாமலேயே மறைந்தது எது??
அந்த நாட்களில் எது குறைவாக இருந்ததோ அது அதிகமாகிவிட்டது… ஆனால் எது அதிகமாக இருந்ததோ அது இல்லாமலேயே போய்விட்டது.
அன்றைய நாட்களில் குறைவாக இருந்தது எதுவென்றால் வசதியும் நாகரீகமும் தான். முதலிலே மக்கள் விறகு அடுப்பில் சமைத்தார்கள். ஒலை குடிசையில் இருந்தார்கள். வெளியில் தான் காற்றோட்டமாக தூங்கினார்கள் மின்விசிறியும் இல்லை, விளக்கும் இல்லை, கைகளிலேயே மாவை அரைத்தார்கள். உடலை மூடுவதற்காக மட்டும் என்று எண்ணி எளிமையான முறையில் உடையை உடுத்தினார்கள் காலை எழுந்து வயலுக்குச் சென்று விட்டு பிறகு அந்தி சாய்ந்த பிறகு வீட்டுக்கு வருவார்கள். உணவை உண்டு விட்டு தூங்கி விடுவார்கள். அவ்வளவு தான் வாழ்க்கை… எந்தவிதமான கெட்ட சிந்தனையும் கிடையாது.. டென்ஷனும் இல்லை. தன் வயலில் விளைந்த காய்கறிகளையும் அரிசியையும் வைத்தே சாப்பிடுவார்கள். பட்டணத்திற்கு சென்று அதை விற்கவும் செய்வார்கள். இதுதான் அப்போதைய சூழ்நிலை. என்ன ஒரு ஆனந்தமான வாழ்க்கை அப்போது.. போட்டி பொறாமை என்று எதுவுமே இல்லை நிறைவான வாழ்க்கை இருந்தது. மகிழ்ச்சியான வாழ்க்கை இருந்தது துன்பமில்லாத வாழ்க்கை இருந்தது..
ஆனால் இப்போது வசதிகள் அதிகமாகி விட்டன.. படிக்கத் தெரியவில்லை என்றால் கூட கைபேசியை உபயோகப் படுத்துகிறார்கள். கைபேசி இல்லாத உலகத்தை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.. எத்தனை பணம் வந்தாலும் சமாளிக்க முடிவதில்லை. பணம் பணம் பணம் என்று நாள் முழுவதும் அதன் பின்னாலேயே ஓடுகிறார்கள். ஃபிரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின், கார், மொபைல், லேப்டாப் என நம்முடைய தேவைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. அதற்கு ஏற்றவாறு சம்பாதிக்க வேண்டும். நிம்மதி என்பது இல்லாமலே போய் விட்டது..
குழந்தைகள் பிறந்தவுடனேயே பள்ளிக்கூடத்தில் அட்மிஷனுக்கு புக் பண்ண வேண்டியதாக இருக்கிறது. அதற்குப்பிறகு நர்சரியில் இருந்தே டியூஷன் ஆரம்பமாகி விடுகிறது. இந்த டியூஷன்…அந்த டியூஷன்… இதுக்கு போ, அதுக்கு போ என்று அந்த குழந்தைகளுக்கு கூட நிம்மதி இல்லாமல் போய்விட்டது. விளையாடும் வயதிலேயே பொதி மூட்டையை சுமந்து கொண்டு செல்கிறார்கள். குழந்தைகளால் குழந்தைப் பருவத்தை கூட சரியாக அனுபவிக்க முடிவதில்லை..
இப்போது புரிந்ததா உங்களுக்கு? அதிகமாக எது இருந்ததோ, அது இல்லாமலேயே போய் விட்டது.. அது எது என்று??
ஆம்!! நாம் தொலைத்தது நம் நிம்மதியை.. சந்தோஷத்தை… அமைதியை.. ஆரோக்கியத்தை..
வசதிகளும் சொகுசு முறைகளும் அதிகமாகி நிம்மதியையும் ஆரோக்கியத்தையும் அடியோடு அழித்து விட்டது.
நாகரீகம் நாகரீகம் என்ற பெயரில் முழு நிம்மதியை தொலைத்து விட்டோம்.. சந்தோஷத்தை இழந்து விட்டோம்.. நிம்மதியும் சந்தோஷமும் அமைதியும் எங்கே போனது என்றே தெரியவில்லை.. ஆரோக்கியமும் போய் விட்டது.
இது மட்டுமா.. நாம் எல்லோரும் நம்முடைய மனதில் பொறாமையையும் கர்வத்தையும் ஆணவத்தையும் புதைத்து வைத்திருக்கிறோம். எதற்கெடுத்தாலும் போட்டி. போட்டி இல்லாத உலகமே இல்லை இப்போது..
குழந்தைகளை நர்சரி வகுப்பில் சேர வேண்டும் என்றால் கூட போட்டி.. கார் வாங்குவதில் போட்டி… வீடு கட்டுவதில் போட்டி.. அவன் இரண்டு பெட்ரூம் கட்டியிருக்கிறான் அப்படி என்றால் நான் மூன்று பெட்ரூம் கட்டுவேன் என்று போட்டி போட்டுக் கொண்டு எக்கச்சக்கமாக கடனை வாங்கி அதற்கான வட்டியை கட்ட முடியாமல் திக்கு முக்காடி கட்டி அதற்குள் வாழ்க்கையே முடிந்து விடுகிறது.
இந்த ஆடம்பரம் எதற்காக?? யாருக்கு காண்பிக்க வேண்டும்?? எதற்கு இத்தனை பெரிய வீடு வேண்டும்?? தங்குவதற்கு ஒரு இடம் வேண்டும். உண்பதற்கு உணவு வேண்டும். உடுத்துவதற்கு சாதாரணமான உடை போதுமே. அத்தியாவசிய தேவைகளை தவிர அனாவசியமான தேவைகளின் எண்ணிக்கை தான் இப்போதைய சூழ்நிலையில் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதன் விளைவு தான் நிம்மதியும் சந்தோஷமும் காணாமல் போய்விட்டன. இனி அவற்றை தேடி கண்டுபிடிப்பது மிகவும் கடினம். மாறின இந்த உலகத்தை இனி மாற்றுவது என்பது முடியாத காரியம். எல்லோருமே இந்த மாயை உலகத்தில் தான் இப்போது மூழ்கி இருக்கிறார்கள்.
ஆனாலும் நாம் முயற்சி செய்யலாம். தனி மனிதனால் இதை மாற்ற முடியாது, இருப்பினும் நம்மால் முடிந்தவரை நாகரீகத்தை குறைத்துக் கொண்டு அடுத்தவர்களுக்கும் எடுத்துரைக்கலாம். இளைய தலைமுறையினருக்கும் இதைப் பற்றி எடுத்துரைத்து இந்த நிம்மதி இல்லாத வாழ்க்கை முறையில் இருந்து அவர்களை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். அவர்களுக்கு முடிந்த வரை எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து ஆரோக்கியத்தோடு இருக்க கற்றுக் கொடுங்கள். ஆடம்பரமான வாழ்க்கையில் இருந்து சிறிதளவு விலகி இருக்க அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும். விடுமுறை நாட்களில் அவர்களை கிராமத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருக்கும் வாழ்க்கை முறையைப் பற்றி அவர்களுக்கு நேரடியாக காண்பிக்கவும். விவசாயத்தைப் பற்றியும் எடுத்துரைத்தும் விவசாயிகளின் கடின உழைப்பை பற்றியும் புரியவைக்க முயற்சி செய்யுங்கள்.
இவையெல்லாம் ஒரே நாளில் நடந்து விட முடியாது. ஆனால் சிறு துளி பெருவெள்ளம் என்பதற்கு ஏற்றவாறு கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற முயற்சித்தால் ஒருவேளை மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஒருவர் முயற்சித்தால் மட்டும் முடியாது. முழு சமுதாயமும் ஒத்துழைக்க வேண்டும். எல்லோரும் சேர்ந்து கூடிய வரை அனாவசியமான ஆடம்பரத்தை குறைத்து எளிமையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முயற்சி செய்வோமாக!!
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings