2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அந்த மளிகைக் கடையில் நான் போய் நின்றபோது, என்னையும் சேர்த்து மொத்தம் மூன்று பேர்தான். கடைப்பையன் பொட்டலம் கட்டிக்கொண்டிருந்தான். ஆனாலும் அவன் தன் காதோடு காதாக மொபைலை வைத்துக்கொண்டு யாருடனோ பேசிக்கொண்டே வேலை செய்து கொண்டுமிருந்தான்.
எதேச்சையாக என்னை பார்த்தான். நமக்குத் தேவையானதை இப்போதே சொல்லிவிடலாமென்று எண்ணி, ‘ தம்பி, ஒரு கிலோ கல் உப்பு கொடுப்பா… ‘ என்றேன். ஐம்பது ரூபாய் நோட்டையும் நீட்டினேன்.
அப்போது கொஞ்சம் தள்ளி நின்றிருந்த பெண்மணி, ‘ ஏம்பா… நான் வந்து எவ்வளவு நேரமாகுது… என்னை முதல்லே அனுப்புப்பா… இன்னும் மஞ்சள் தூள் மட்டும்தானே பாக்கி… இடையில இடையில மத்தவங்களுக்கும் கொடுக்கறே, போனும் பேசிக்கறே… ’ என்று சிடுசிடுத்தார்.
ஆனாலும் அவன் போனை கட்பண்ணாமல், ‘ கொஞ்சம் இருங்கக்கா ‘ என்றுவிட்டு போனை மேஜைமேல் அப்படியே வைத்துவிட்டு என்னிடமிருந்து பணத்தை வாங்கிக் கல்லாவில் போட்டுவிட்டு, ‘ அண்ணே… கொஞ்சம் இருங்க, அந்தக்காவுக்கு ஒரு ஐட்டம்தான் பாக்கி… குடுத்துட்டு வந்துடறேன்… ‘ என்றுவிட்டு மஞ்சள்தூள் பாக்கெட்டை எடுத்து வைத்துவிட்டு, மடமடவென பில் போட்டு அந்தம்மாவிடம் கொடுத்து பணத்தையும் வாங்கிக்கொண்டு பையையும் கொடுத்தனுப்பினான்.
அதற்குள் ஒரு சிறுமி அங்கே வந்தாள். ‘ அண்ணா, ஒரு ஸ்கேல் குடுங்க…’ என்றாள். ஸ்கூல் யூனிபார்மில் இருந்தாள்.
‘ ஸ்டீலா, மரக்கட்டையா… ’ என்றான். ‘ ஸ்டீல் ‘ என்றாள் அவள். ஸ்டீல் ஸ்கேல் ஒன்றை எடுத்துக் கொடுத்துவிட்டு காசை வாங்கிப் போட்டுக்கொண்டான். உடனே மறுபடியும் போனை எடுத்து பேச்சைத் தொடர்ந்தான்.
நான், ‘ என்னப்பா ஆச்சு… ‘ என்று சைகையில் கேட்டேன். அதேநேரம் பக்கத்திலிருந்தவர், ‘தம்பி, நான் முன்னேயே வந்துட்டேன்… எவ்வளவு நேரம் நிற்கிறது… என் லிஸ்டையும் பாருப்பா… ‘ என்றார். கொஞ்சம் வயதானவர்தான் அவர்.
போனை காதில் வைத்தபடியே, ‘ என்ன கேட்டீங்க ‘ என்று அவன் அவரிடம் கேட்க, ‘ தம்பி, சாக்லேட் டப்பாமேல என் லிஸ்ட் இருக்கு பார்ப்பா… அஞ்சு ஐட்டம்தான்… ‘ என்றார் அவர்.
நான் குறுக்கிட்டு முன்னெச்சரிக்கையாக, ‘ தம்பி, என்கிட்டேயிருந்து முதல்லேயே பணம் வாங்கிட்டே, ஞாபகம் வச்சிக்க… ‘ என்றேன். ‘ கொஞ்சம் பொறுங்கள்… ‘ என்பது போல எனக்கு சைகை காட்டினான்.
அதற்குள் ஒரு பெண்மணி பரபரப்புடன் ஓடிவந்து, ‘ தம்பி என் பை ரெடியா ‘ என்று கேட்டாள். ஏற்கனவே அந்தம்மாவுக்குண்டான சாமான்களை போட்டுத் தயாராக வைத்திருந்திருப்பான் போல. ஒரு பெரிய பையை எடுத்துக் கொடுத்தான், அவளும் வாங்கிக்கொண்டு போய்விட்டாள்.
இப்போது, என்னைப் பார்த்து ‘ அண்ணே என்ன கேட்டீங்க ‘ என்றான்.
‘ உப்புப்பா… கல் உப்பு ஒரு பாக்கெட்… ‘ என்றேன்.
பக்கத்திலிருந்த பெரியவர், ‘ தம்பி எவ்வளவு நேரம் ஆகும்னு சொன்னியானா, நான் வீட்டுக்குப் போய்ட்டு அப்புறமாக்கூட வருவேனே… பொறுமையா…’ என்றார் கொஞ்சம் நக்கலாய்.
‘ கோவிச்சுக்காதீங்க சார்… இந்த அண்ணாவுக்கு ஒரே ஒரு ஐட்டம்தான் கொடுத்துட்டு உங்களோடதையும் போட்டுடறேன்… ‘ என்றுவிட்டு கல்லுப்பு பாக்கெட்டை எடுத்து வந்தான். அப்போது என்னை லேசாய் இடித்தபடி ஒரு பெண்மணி ஓடிவந்து நின்றாள்.
வந்து நின்றவள் உடனே திரும்பி, ‘ ஆப் பண்ணுங்க… வந்துடறேன்… ‘ என்றாள். புரியாமல் திரும்பிப் பார்த்தேன், ஒரு ஆட்டோ உறுமிக்கொண்டே நின்றிருக்கவும், அது அவள் வந்த ஆட்டோவாக இருக்கவேண்டும், அவனைத்தான் ஆப் செய்யச் சொல்லியிருக்கிறாள் என்று புரிந்து கொண்டேன்.
உப்பு பாக்கெட்டை என்னிடம் கொடுத்துவிட்டு, ‘ அண்ணே முப்பது ரூபா கொடுங்க… ‘ என்றான் கடைப்பையன். எனக்கு செம கடுப்பாகிப் போனது.
அதற்குள் அந்தப் பெண்மணி, ‘ தம்பி, ஆட்டோ நிக்குது, ரெண்டு ஐட்டம் மட்டும்தான்… ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ கோதுமை மாவு… ‘ என்று குறுக்கிட்டாள் அவசரத்தை வார்த்தைகளில் கலந்து.
முதலிலேயே காசை வாங்கிப் போட்டுக்கொண்டு இப்போது மறுபடியும் கேட்கிறான், இதில் அந்தம்மாவேறு குறுக்கிடுகிறது என்ற கடுப்பில், ‘ என்னப்பா விளையாடறியா… ஒரு கிலோ கல் உப்பு கொடுப்பான்னு கேட்டுட்டு கூடவே பணத்தையும் நீட்டினேன். போனைக் காதுல வச்சிக்கிட்டே பணத்தை வாங்கி கல்லாவுலப் போட்டுட்டு, அதுக்கப்புறம் ரெண்டு மூணு பேருக்கு சாமான் போட்டுட்டு, இப்போ திரும்பவும் பணம் கேட்டா நான் எங்கே போவேன்… அதில்லாம நீ மறந்துடக் கூடாதுங்கறதுக்காக இடையில ஒருதடவை, ‘என்கிட்டேயிருந்து பணம் வாங்கிட்டே, ஆனா உப்பு இன்னும் தரலைனு ஞாபம் வேற படுத்தினேன்… என்ன வியாபரம் பண்றே நீ… ‘ என்று கடுப்பேத்தினேன்.
அந்தப் பெரியவரும், ‘ ஒருத்தர்கிட்டே வியாபாரம் முடிச்சிட்டு அப்புறமா அடுத்தவங்களை கவனிப்பா… இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம்னு ஏன் வேலை பார்க்கறே, போனைவேற காதுல வெச்சிக்கிட்டே வேலை பண்றே… எனக்குப் பின்னாடி வந்த ரெண்டு பேருக்கு சாமான் கொடுத்துட்டே… ‘ என்றார்.
‘ நீங்களே நியாயத்தைக் கேளுங்க ஸார்… ‘ என்றேன் பெரியவரைப் பார்த்து.
தலையை சொறிந்துகொண்டே, என்னையும் கல்லாவையும் மாறி மாறிப் பார்த்தான் கடைப்பையன். அதற்குள் போன் அடித்தது. போனை எடுக்கப் போனான் அவன்.
‘ ஏம்பா… முதல்லே என்னை அனுப்பிச்சிட்டு போனை எடு ‘ என்றேன்.
‘ எவ்வளவு கொடுத்தீங்க ‘ என்றான்.
‘ நீ எவ்வளவு வாங்கினே என்கிட்டேயிருந்து…’ என்றேன்.
‘ கொடுத்தது நீங்கதானே, உங்களுக்கு தெரியாதா ‘ என்றான்.
‘ வாங்கினது நீதானே, உனக்குத் தெரியாதா ‘ என்றேன், நானும் விடாமல்.
தலையை சொறிந்துகொண்டே போய், கல்லாவிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான். திகைப்புடன் அதை வாங்கி சட்டைப் பையில் வைத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினேன்.
திடீரென்று சிரிப்பு வந்தது. யோசித்தேன். வழியில் ஒரு கோவில் இருந்தது. அதன் வாசலில் ஐந்து பிச்சைக் காரர்கள் உட்கார்ந்திருப்பதையும் கவனித்தேன். ஒருவனிடம் ஐம்பது ரூபாயைக் கொடுத்து ஐந்துபேரையும் சமமாகப் பிரித்து எடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
‘ மவனே, நான் கொடுத்ததோ ஐம்பது ரூபா. ஆனா போன் பேசற மும்முரத்துல நான் நூறு ரூபா கொடுத்ததா நினைச்சிக்கிட்டு எழுபது ரூபா மீதி கொடுத்தே இல்லே. உனக்கு தண்டனை அம்பது ரூபா… ’ என்று மனதுக்குள் திட்டிக்கொண்டே இருபது ரூபாய் சில்லறையுடன் வீடு திரும்பினேன்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings