in ,

அடுத்தவங்க அழுதா மனசு தாங்காது – (சிறுகதை) முகில் தினகரன்

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

         மறுபடியும் மறுபடியும் அம்மா என்னை நச்சரிக்க எரிச்சலானேன்.   “அம்மா!… நீ எத்தனை தடவை கேட்டாலும் என்னோட பதில் ஒண்ணுதான்!… என்னால் எழவு வீட்டுக்கெல்லாம் வர முடியாது!… என்னை விட்டுடு” கத்தலாய்ச் சொன்னேன்.

      “அதுதான் ஏன்?னு கேட்கறேன்”.

      “ஐயோ… அம்மா… செத்துப் போனவர் யாரு?…. எவரு?…ன்னே எனக்குத் தெரியாது!… நீதான் அந்த ஆளு எனக்கு மாமா முறை… மச்சான் முறை…ன்னு சொல்லிட்டிருக்கே!… எனக்கு அந்த ஆளு மூஞ்சியைக் கூட ஞாபகத்துக்குக் கொண்டு வர முடியலை!… அப்படியிருக்கும் போது நான் எப்படிம்மா… அங்க வந்து… ம்ஹும்… வாய்ப்பேயில்லை!”

      “இங்க பாருடா… செத்துப் போன சுந்தரம் மாமன் கூட நானும் அதிகமாப் பேசியதில்லை…  அதுக்காக அவரோட சாவுக்குப் போகாம விட்டுற முடியுமா?… உங்க அப்பா செத்தப்ப முதல் ஆளா வந்து நின்னவன் இந்த மாமன்!… இதுவே உங்க அப்பா உயிரோடு இருந்திருந்தா இந்நேரம் அங்க போய்… எல்லாக் காரியங்களையும் இழுத்துப் போட்டு செஞ்சுக்கிட்டிருப்பார்”.

      “நீ என்ன வேணா சொல்லும்மா…. என்னால வர முடியாதுன்னா… முடியாதுதான்!… உண்மையை சொல்லணும்னா எனக்குக் கொஞ்சம் கூட சோகமே வர மாட்டேங்குதும்மா!…” பரிதாபமாய் சொன்னேன்

      “அப்ப நடி!… நான் மட்டுமென்ன தாங்க முடியாத சோகத்தோடவா போறேன்?… ஒரு கடமைக்காகப் போறேன்!… எனக்கே அங்கே போய் அழுகை வராதுதான் என்ன பண்றது?… சும்மா முகத்தைத் தொங்க போட்டுக்கிட்டு சோகமா இருக்கிற மாதிரி… பாவ்லா பண்ணிட்டு வர வேண்டியதுதான்”. யதார்த்த உண்மையைப் போட்டுடைத்தாள் அவள்.

     நான் எவ்வளவோ மறுத்தும் கூட விடாமல் என்னை அரித்தெடுத்தாள் அம்மா.

     சாம, பேத, தான, தண்டம்ன்னு எல்லா முறைகளையும் பயன்படுத்தி கடைசியில் என்னைச் சம்மதிக்க வைத்தே விட்டாள். “சரி… வந்து தொலைக்கிறேன்! ஆனா ஒரு கண்டிஷன்!… போயிட்டு கொஞ்ச நேரத்துல திரும்பி வந்துடணும்!… அங்க போய் ஒரு மணி நேரம்… ரெண்டு மணி நேரம்ன்னு மொக்கை போடக் கூடாது… இப்பவே சொல்லிட்டேன்!” என்ற நிபந்தனையின் பேரில் கிளம்பினேன்.

     சாவு வீட்டின் ஒப்பாரி, தப்பட்டை சத்தங்கள் அந்த தெருவை தாண்டி கேட்டுக் கொண்டிருந்தன.

     அதுவரையில் வெகு இயல்பாகவும், கலகலப்பாகவும் என்னுடன் பேசிக் கொண்டு வந்த அம்மா சட்டென்று தன் முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு,  “டேய் சிரிச்சது போதும்… கொஞ்சம் அமைதியா வாடா” என்று என்னை அடக்கினாள்.

     அம்மாவின் அந்தச் செயல் எனக்கு வினோதமாய் இருந்தது.  அதை விட சாவு வீட்டை நெருங்க நெருங்க பெருத்த குரலில் ஓலமிட ஆரம்பித்தது, என்னை மேலும் வியப்புக்குள்ளாக்கியது.

      “என்ன உலகம்டா இது?… மனுஷன் அன்றாட வாழ்க்கையில் எப்படியெல்லாம் நடிக்க வேண்டியிருக்கு!” மனசுக்குள் சிரித்துக் கொண்டேன்.

     சாவு வீட்டை அடைந்ததும், அம்மா கூப்பாட்டுடன் உள்ளே செல்ல, நான் வாசலில் போடப்பட்டிருந்த இருக்கை ஒன்றைக் கைப்பற்றி அமர்ந்தேன்.

     அந்த சூழ்நிலைக்கு நான் ஒருத்தன் மட்டும் வித்தியாசப்பட்டிருப்பதாய்ப் எனக்குப் பட்டது. அங்கிருந்த எல்லோர் முகத்திலும் இறுக்கம், கவலை, சோகம், வேதனை. என் முகத்தில் மட்டும்,  “எப்படா இங்கிருந்து போகலாம்?” என்கிற  மாதிரியான தவிப்பு.

     இருபது நிமிடங்களை இருபது யுகமாய்க் கழித்து விட்டு, வீட்டின் உட்புறம் பார்வையைச் செலுத்தி அம்மாவைத் தேடினேன்.  அம்மா பார்வைக்கு சிக்காது போக ஆத்திரமானேன்.  “ஹும்… என்னை இங்கே சிக்க வெச்சிட்டு எங்கே போய் தொலைஞ்சது?”.

     தர்ம சங்கடமாய் நெளிந்து கொண்டிருந்தவன் கடைசியில் பொறுமை  இழந்தேன்.  மெல்ல நடந்து அந்த வீட்டு வாசலைத் தொட்டு உள்ளே எட்டிப் பார்த்தேன். நட்ட நடு ஹாலில் பிணத்தைக் கிடத்தியிருந்தார்கள்.  ஏதோ ஒரு மட்டமான ஊதுபத்தி மணம் மூக்கைத் துளைத்தது.

     என்னை கண்டவுடன் ஒரு பெண் திடீரென்று உச்சஸ்தாயில் கதற, தலைவிரி கோலமாய் இருந்த அந்தப் பெண்ணைக் கூர்ந்து கவனித்தேன்.

     எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே? என்று நினைக்கும் போது அந்த உருவம் திரும்பியது.

     “அ…ம்…மா”

“அம்மாவா இப்படிக் கதறி அழறா?… அழுகையே வராது… சும்மா நடிக்கத்தான் போறேன்!னு சொன்னாளே?… இப்ப அழுதழுது மூஞ்சி வீங்கிப் போய் உட்கார்ந்திருக்காளே!… இதுல எது உண்மை?”.

     குழப்பமாகி மறுபடியும் இருக்கையில் வந்தமர்ந்தேன். ஒவ்வொருத்தரையும் வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்த என்னை யாரோ  திரும்பினேன்.

     “கிளம்பலாம்டா” என்றாள் அம்மா.

       துள்ளியெழுந்து அம்மாவுடன் நடந்தேன்.

     தெருமுனை திரும்பியதும் “ஏம்மா… என்னமோ பெருசா  “நான் அழ மாட்டேன்… அது இது!”ன்னு வசனம் வேற பேசினே?.. கடைசில அங்க போய் மூஞ்சி  வீங்க அழுதுட்டு வர்றே!…”.

     “இப்பவும் சொல்றேன் சுந்தர மாமன் சாவுல எனக்குத் துளி கூட வருத்தமே வரலை!”

      அம்மா மறுபடியும் அதையே சொல்ல.  கோபம் பொத்துக் கொண்டு வந்தது எனக்கு.  “என்னை என்ன பைத்தியக்காரன்னு நெனச்சிட்டியா?… அங்கிருந்த பெண்களிலேயே அதிகமாக அழுதது நீதான்!… அதிக சத்தமும் உன்னோடதுதான்!… கேட்டா… துளிக் கூட வருத்தமே இல்லைங்கறே?”

     லேசான புன்முறுவலுடன் என்னைப் பார்த்த அம்மா,  “டேய்… நான் அழுதது… அந்தப் பிணத்தைப் பார்த்து இல்லை!… அதைச் சுற்றி உட்கார்ந்து அழுதிட்டிருந்தாங்க பாரு?… அவங்களைப் பார்த்து”

      “என்னம்மா சொல்ற?” புரியாமல் கேட்டேன்.

      “ஆமாம்டா… எனக்கு இடப்பக்கம் பச்சை நிறச் சேலை கட்டிட்டு…. கருப்பா… குண்டா… ஒரு பொண்ணு அழுதிட்டிருந்ததே பார்த்தியா?” அம்மா கேட்டாள்.

     ஒரு சிறிய யோசனைக்குப் பின், “ஆமாம்!…. ஆமாம்!… பார்த்தேன்”.

     “அவதான் அந்த சுந்தரம் மாமாவோட மூத்த பொண்ணு!… கல்யாணம் ஆகி ஒரே வருஷத்துல குடிகாரக் கணவனோடு அடி தாங்க முடியாம… அவனை உதறி விட்டு வந்து வாழாவெட்டியா பொறந்த வீட்டில் இருக்கா!… இதுநாள் வரைக்கும் அப்பன் ஆதரவா இருந்தான்!… இப்ப அவன் போயிட்டான்!… தனிமரம் ஆயிட்டா அவ!.. இனி அவளுக்குன்னு யாருமே கிடையாது!… இருட்டாய்த் தெரியற எதிர்காலத்தை நெனச்சு அவ கதறிட்டு கிடக்கா!… அவளைப் பார்த்து… அவள் நிலைமையை நினைச்சு…. நான் கதறினேன்”.

     நான் நெற்றியைச் சுருக்கி கொண்டு பார்த்தேன்.

     “அப்புறம் மூலைல… ஒரு கட்டில்ல…. படுத்து கிடந்ததே ஒரு கிழவி?… அதுதான் சுந்தரம்மாமாவோட அம்மா!… மகன் செத்துட்டாங்கறதை சொல்லியிருக்காங்க…. எந்திரிச்சு உட்கார்ந்து வாய் விட்டு அழ முடியாத அந்த ஜீவன் படுத்தபடியே கண்ணீர் சிந்திட்டு கிடந்துச்சு!… தனக்குக் கொள்ளி போடுவான் மகன்னு நெனச்சிட்டு இருந்திருக்கும்… இப்ப அவன் முந்திக்கிட்டான்னு தெரிஞ்சதும் அதுக்கு எப்படி இருந்திருக்கும்?… அதை யோசிச்சுப் பார்த்தேன்!…  தாங்க முடியல…. அதனாலதான் அழுதேன்”.

     “அ…ம்…மா” என் குரல் தழுதழுத்தது.

     “சுந்தர மாமனுக்கு கூடப் பிறந்தவ ஒரே ஒருத்தி… கொழிஞ்சாம்பாறைக்காரி… அண்ணன் மேல உசுரையே வெச்சிருந்தா!… அந்த தங்கச்சிக்காரி கதறின கதறல்ல… எனக்கு செத்து போன எங்க அண்ணன் ஞாபகமே வந்திடுச்சு!… அதான் நான் அவளை கட்டிக்கிட்டு ஏகமாய்க் கதறினேன்”.

      “ஆக செத்த மனுஷனை பார்த்து உனக்கு அழுகை வரல… சுத்தி இருந்தவங்களைப் பார்த்துத்தான் அழுகை வந்திருக்கு… அப்படித்தானே?” நக்கலாய்க் கேட்டேன்.

     “உண்மைதாண்டா!… இப்போ அங்கு கூடியிருந்தவங்களோட துயரம் எல்லாம் ஒரே நேர்கோட்டில்தான் இருந்திருக்கும்… அதாவது அப்பன் செத்துட்டான் என்கிற துயரமாகவோ…. இல்லை மகன் போய் விட்டான் என்கிற கவலையாகவோ… அல்லது அண்ணன் போயிட்டாரு… என்கிற வேதனையாகவோதான் இருந்திருக்கும்…. ஆனா என்னோடது அப்படியில்லை!… அப்பனை இழந்துட்ட ஒருத்தியோட துடிப்பையும் பார்க்கணும், மகனை இழந்துட்ட ஒரு தாயோட துடிப்பையும் நினைக்கணும், அண்ணனை இழந்துட்ட ஒரு தங்கையோட துடிப்பையும், யோசிக்கணும் ஆக எல்லா விதத்திலும் வேதனைப் படுற சக ஜீவன்களை பார்க்கிறப்ப… என்னோட மனசு எந்த அளவுக்கு வேதனைப் பட்டிருக்கும்?”.  சொல்லும் போது அம்மாவின் கண்களில் நீர்க்குளம் தேங்க,

      “என்னமோடா… சக மனிதனோட வேதனையை நேருக்கு நேர் பார்க்கிறதை விடப் பெரிய சோகம் இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லைடா”.

     அம்மா சொல்லச் சொல்ல நான் பிரமித்து போனேன்.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உன் கதையில்… என் கதை – (சிறுகதை) முகில் தினகரன்

    அப்பான்னா… அப்பாதான் – (சிறுகதை) முகில் தினகரன்