இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தன் வீட்டு பால்கனியிலிருந்து அசுவாரசியமாக பார்த்தாள் அந்த புது மாதிரியான எலுமிச்சை நிற குட்டிக் காரை. மனசுக்கு குளுமை தரும் வர்ணம். இந்த நிறக் காரை இதுவரை பாரத்ததில்லை, நல்ல ரசனை உள்ளவர்களோடதா இருக்கும்.
மதுரைல அந்த ஷோலே படம் பார்க்க போன தியேட்டர் பேர் ஞாபகம் இல்லை, சுவரெல்லாம் இதே எலுமிச்சை வர்ணம், மனம் மயக்கும் ஒரு ரோஜா மணத்துடன் அரை இருட்டில் குளிர்சாதன குளுமை.
பக்கத்தில் அந்த ஶ்ரீதர் முதன் முறையா ஒரு ஆண் ஸ்பரிசம்.படம் பார்க்க மனம் விளைந்தாலும் அந்த இணைந்த கைகளின் ஏதோ மயக்கம் எங்கோ கொண்டு சென்றதே. அது இத்தனை வருஷமா எப்ப நினைச்சாலும் நெஞ்சை நனைக்கும் ஈரமான வனிலா ஐஸ்கிரீமா சிலிர்க்கிறதே.
அவளையறியாமல் கன்னம் வழியும் கண்ணீரை தன் சல்வார் நுனியால் நாசூக்காய் துடைத்துக் கொண்டாள், அவளுக்கே உறிய இனிமையான மூக்கு உறிதல் சத்தம். இது கூட அந்த திருடனுக்கு ரொம்ப பிடிக்கும்.
“சுசீ நீ மூக்கு உறியற சத்தம் அந்த சின்ன செருமல் சத்தம் கூட இனிமையா இருக்கு தெரியுமா, நைட் நீ உங்காத்துல முளிச்சிண்டிருந்தா சின்ன செருமல், இருமல் எனக்கு சங்கேதம் சரியானு“ சின்ன ஒரு பேப்பர்ல எழுதி சுருட்டி என் மேல எறிஞ்சிட்டு போனானே. எத்தனை நாள் பத்திரமா பாதுகாத்தேன் அந்த பேப்பரை.
அடுத்தடுத்த இரவுகள் வராத இருமல் செருமல் எல்லாம் அந்த போர்ஷனிலிருந்து வரும், பதில் செருமல் ஆண்மை கலந்து பதில் கூறும், இப்ப நினைச்சா இதெல்லாம் சிறு பிள்ளைத்தனமா தோன்றினாலும் அப்போது அந்த இரவுகள் இனிக்கதான் செய்தன.
“சுசீம்மா” னு கூப்பிட்டுண்டே அம்மா மேலே வந்தாள்.
“என்னடி அழுமூஞ்சியா உக்காந்திண்டிருக்கே, அவாள்ளாம் வந்தாச்சு மூஞ்சி அலம்பிண்டு பளிச்னு கீழே வா, உங்கப்பா நீ கண் கலங்கறதை பாப்பாரா, உனக்கேத்த பையன்தான், உயரமா சிவப்பா லட்சணமா இருக்கான்”
சீக்கிரம் வா அந்த புது டிரஸ் அப்பா போன வாரம் வாங்கிண்டு வந்தாரே அதை போட்டுக்கோ கொத்திண்டு போயிடுவான் பையன்” சொல்லும் போதே ஏன் அம்மா முகத்துல குறும்பு சிரிப்பு.
மனசே இல்லாமல் தயாராகி கீழே போனாள் சுசீ, தலையெடுத்து யாரையும் பாக்க மனசில்லை. அம்மா, பையன் அந்த பையனோட மாமா, மாமினு நாலு பேர் வந்திருந்தா.
அம்மா கொடுத்த அந்த கேசரி பஜ்ஜி தட்டுகளை சோபாவில் ஒவ்வொருத்தருக்காய் தலை குனிந்த வண்ணம் கொடுத்தாள். அந்த பையனின் சிமென்ட் கலர் பேண்ட் மட்டும் பாக்க முடிஞ்சது. அந்த மாமா உக்காரும்மான்னார், அவர் மனைவி பாட்டு வருமான்னா.
அம்மா, ”சுசீ நாலு வரி ஏதாவது பாடு”
“க்கும்” என்ற அந்த செருமல் சத்தம் சுசீயை தூக்கிவாரிப் போட செய்தது.
சட்டென தலை நிமிர்ந்தாள், கண்கள் சந்தித்தன ஒரு சின்ன விக்கலோட கண்கள் ததும்பியது. அவளால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை, ‘எக்ஸ்க்யூஸ் மீ’ என எழுந்து கீழ் தள பாத்ரூமுக்குள் நுழைந்து ஒரு பாட்டம் அழுது தீர்த்தாள். முகத்தை மீண்டும் கழுவிய பின் மெதுவாய் வெளியே வந்தாள்.
புன்னகை பூத்த முகத்துடன் வெளியே அப்பா காத்திருந்தார். ”ஏம்மா மேற்கொண்டு மாப்பிள்ளை வீட்டார்கிட்ட பேசலாமா, இல்லை….”
அவர் கழுத்தை கைகளால் வளைத்துக் கொண்ட சுசீ,”யூ ஆர் தி பெஸ்ட் டாட்”
“சரி கண்ணை துடைச்சிக்கோ, போய் சின்னதா ஒரு பாட்டு பாடு, பாவம் கேசரி பஜ்ஜி தட்டை கையில வச்சிண்டு சாப்பிடலாமா வேண்டாமானு முழிச்சிண்டிருக்கா”
வெளியே வந்த சுசீ இப்போ எல்லாரையும் பாத்து பொதுவா ஒரு புன்னகை பூத்தாள். கணீரென இனிமையாய் அந்த ஹாலை சூழ்ந்தது சுசீயின் இனிய குரல், “கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே, எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே” அந்த இனிய பழைய பாடல் அனைவரையும் மந்திரமாய் கட்டிப் போட்டது. பாட்டை முடித்தவுடன் அனைவரும் மனதார பாராட்டி கை தட்டினார்கள்.
மேற்கொண்டு என்ன, மற்ற விஷயங்களை பெரியவர்கள் பேச ஶ்ரீதரும், சுசியும் கொஞ்சம் வீட்டை சுற்றி பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
சுசீ, “ இத்தனை வருஷமா என்னை மறந்துதானே போனே?”
“கரெக்ட், நினைச்சுக் கூட பாக்கலை, ஆமாம் நிஜமா நாம இதுக்கு முன்னால சந்திச்சிருக்கோமா?”
தன் முஷ்டியால் அவனை மாறி மாறி செல்லமாககுத்தினாள்.
“திருட்டுப் பையா, ஷோலே படம் இன்னும் கூட முழுசா பாக்கலை, அதென்ன அப்படி கையை கையை கோத்துக்கறது?”
தன் இரு கைகளால் அவள் கன்னத்தை பற்றிய ஶ்ரீதர் அவள் முகத்தை நெருங்கினான்.
சட்டென்று அவனிடமிருந்து விலகிய சுசீ, ”இதெல்லாம் கழுத்துல தாலி ஏறினப்பறம் சரியா, ஆமாம் இதென்ன புது பழக்கம் சிகரெட் குடிப்பயா. ஸ்டிராங்கா ஸ்மெல் வருது”
“ஆமாம் புண் பட்ட மனசை புகை விட்டு ஆற்ற வேண்டாமா?”
“அந்தக் கதையெல்லாம் இங்கே வேண்டாம் இனிமே சிகரெட்டை தொட்டயோ பக்கத்துல வர விட மாட்டேன்”
“சரி மகா ராணி, வேற என்ன உத்தரவோ”
“இப்போதைக்கு சமத்தா அம்மாவோட ஊருக்கு போங்க, சீக்கிரமா வந்து கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போங்க சரியா”
“அப்ப சீக்கிரமா ஒரு ஹக் பண்ணிக்கோ”
“ஹக் பண்ணலைனா கல்யாணம் பண்ண வர மாட்டீங்களோ”
“அப்படி இல்லை நீயா வரலைனா நானே வந்து டைட்டா ஹக் பண்ணிப்பேன்.”
“ஐய்யோ இப்படியா போட்டு நெருக்கறது, இதுவரை ஒரு பொண்ணையும் ஹக் பண்ணினதில்லையா”
“இல்லை நானா போனதில்லை அவங்களாதான்.”
“அடப்பாவி அதுவும் பன்மைலயா? வா உன்னை வச்சிக்கறேன்”
“அச்சச்சோ சும்மா சொன்னேன்பா, உன் விரல்களை தொட்ட இந்த கைகள் வேற பொண்ணை தொடுமா”
ஒரு வழியா பெண்பார்க்கும் படலம் இனிதே முடிந்து, கல்யாண தேதி மளமளவென நிச்சியக்கப்பட்டடது. ஒரே மாத்த்துக்குள் திண்டுக்கல்லில் கல்யாணம். மதுரை ரோட்ல PGB கல்யாண மகால் சுசீயே தேடி தேடி செலக்ட் பண்ணினது.
போதுமா கதை, கல்யாணம் அந்த சுசீலாவோடதான் ஆச்சு, மதுரைல குடித்தனம் அடுத்த ரெண்டு வருஷத்துல பையன். அங்கேயே படிக்க வச்சோம். மெட்ராஸ் ஐஐடில படிச்சிட்டு லண்டன்ல வேலை பாக்கறான்.
இப்ப நாங்க இந்த சம்மருக்கு முத தடவையா லண்டன் போறோம். என்ன மாரியப்பன் சார் ஹேப்பியா இப்ப? லண்டன் போற கதையை இன்ட்ரஸ்டா சொல்ல ஆரம்பிச்சா எதை எதையோ இழுத்து விட்டுட்டீங்க. இனி லண்டன் கதை இன்னொரு தடவை சொல்றேன் (மாரியப்பன் சார் இல்லாதப்ப)
“இருடி சுசீ செல்லம், வந்து ஹெல்ப் பண்றேன் பேக்கிங்குக்கு”
வரட்டா சுசீ கோச்சிப்பா
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings