இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இப்படியா போயிட்டிருந்தது லைஃப். கேஷ் கவுன்டர் பொண்ணு உஷாநந்தினி அழகாதான் இருந்தா. எப்ப நேர்ல பாத்தாலும் நல்லா சிரிச்சு பேசுவா. என்னை விரும்பறாளோனு பட்டது. எனக்கும் கொஞ்சம் சபலம்தான்.
சில சமயம் லன்ச்சுக்கு அப்பறம் வெளில அவளும் வருவா, வாங்களேன் ஜாம்ஜாம் ஸ்டால்ல டீ சாப்பிடலாம்னு கூப்பிடுவா. சேகர் கடைக்கு பதிலா ஜங்ஷனுக்கு எதிர்ல உள்ள அந்த டீ ஸ்டால்ல ஒரு சமோசா, டீ ரெண்டு பேரும். அவ பாத்திருப்பா போல இருக்கு சிரிச்சிட்டே சொல்லுவா, “எனக்காக உங்க சிகரெட்டை தியாகம் பண்ண வேண்டாம், கேரி ஆன்”
அவ்வளவு போதுமே, பக்கத்துலயே வாழைப்பழ தார் கயத்துல கட்டி தொங்க விட்ட பொட்டி கடையில் நம்ம வில்ஸ் பில்டரை வாங்கி, பக்கத்துல தொங்கற தீக் கயிறுல பத்த வச்சி ஸ்டைலா ஊதி வளையம் விட்டேன் அவ அதை ரசிக்கற மாதிரிதான் தெரிஞ்சது.
விளையாட்டா ஒரு நாள் தம் அடிக்கறயானு கேட்டேன். சிரிச்சிட்டே, “எப்பவாவது நாம தனியா போறப்ப குடுங்க டிரை பண்றேன்னா” சான்ஸ் அவளே கொடுக்கறப்ப விடலாமா. ”எப்ப போகலாம் எங்கே போகலாம்னு” கேட்டேன்.
“அச்சோ உடனே தயாராகறதைப் பாரு, சதீஷ்கிட்ட கேட்டுட்டு சொல்றேன் அவன் வந்தா அவனையும் கூட்டிட்டு போலாம் கொடைக்கானல். நீ கூட வந்தா அனேகமா அவன் அப்ஜெக்ட் பண்ண மாட்டான்.”
“உன் தம்பியா”
“இல்லை என் அத்தை பையன், வுட் பி, வேலை தேடிட்டிருக்கான், 3மாசத்துல வேலை கிடைச்சா அவன் லக்கி, இல்லைன்னா உனக்கு அடிச்சது சான்ஸ்”
என் கையிலிருந்த சிகரெட் விரலை சுட்டது, உஸ்னு உதறி தூக்கி எறிஞ்சேன்.
அதுக்கப்பறம் உஷாநந்தினியோட எப்பவும் ஜாம்ஜாம் டீ ஸ்டாலுக்கு போகலை, அவளே ரெண்டு மூணு தடவை என்னாச்சு நம்ம புரோக்ராம்னு கேட்டும் ஏதோ சாக்கு போக்கு சொல்லி அவாய்ட் பண்ணிட்டேன்.
இந்த ஞாயித்துக்கிழமை வீட்டு வாசல்ல நின்னு, வைகை ஆத்து கிரிக்கெட் மேச் பாத்திட்டிருந்தேனா தன் லொடலொட சைக்கிள்ல வந்து இறங்கினார் சுந்தர், கல்யாண புரோக்கர்.
“என்ன தம்பி செளக்கியமா, அம்மா இருக்காங்களா” கேட்டுட்டே உள்ளே நுழைந்தார்.
அவர் உள்ளே இருந்த 20 நிமிஷம் நான் உள்ளே போகலை, ஒரே போர், ஜாதகம், போட்டோ வேற என்ன.
அவர், வெளில போறப்ப, ”சீக்கிரம் நல்ல முடிவு எடுங்க தம்பி, இப்ப காலந் தாழ்த்தினா இழுத்துட்டே போயிடும், சாயந்தரம் திரும்பி வாரேன்”
நான் காதுல கேக்காத மாதிரி, வைகை மணல் பரப்புல அரை நிர்வாண பொடியன் அடிச்ச சிக்சருக்கு கை தட்டினேன்.
உள்ளே அம்மா கூப்பிட்டா. “இட்லி ஆறரதுடா சீக்கிரம் குளிச்சிட்டு வா, சாம்பார் கூட ரெடி ஆயிடுச்சு”
குளிச்சு முடிச்சிட்டு சாப்பிட உக்காந்தேன், அம்மா தட்டுல இட்லி. வச்சு, “சாம்பார் இட்லி மேலயே ஊத்தவா”
“கோச்சிக்காதேம்மா, இட்லி பொடி, நல்லெண்ணை போடு, சாம்பார் வேண்டாம்”
“ஏண்டா, முருங்கை காய், கேரட்லாம் போட்டு வச்சேண்டா”
“அடுத்த தடவை ஆடிட் திண்டுக்கல் போறப்ப உன்னை கூட்டிட்டு போறேன்மா, அங்கே அபிராமி அம்மன் கோவில் இருக்கு, தரிசனம் பண்ணிட்டு எதுத்தாப்பல தேர் நிப்பாட்டி இருக்காங்க அதுக்கு பக்கத்துல ஒரு சின்ன ஓட்டல் கடை, அங்கே ரவா தோசையோட சாம்பார் அது மேல ஊத்தறான் பாரு அது சாம்பார்.”
“ஏன் ஆடிட் போறப்பதான் திண்டுக்கல் போகணுமோ, பொண்ணு பாக்க அங்கே வரமாட்டீகளோ”
“என்னம்மா உளறரே, எந்த பொண்ணு நான் எங்கே சரி சொன்னேன்”
“சுந்தர் 3 போட்டோ கொடுத்துட்டு போனான், அதுல இந்த பொண்ணு லட்சணமா இருக்கா, நான் புதன்கிழமை பொண்ணு பாக்க வரோம்னு சொல்லிட்டேன், இப்ப கூட ஒண்ணும் கெடலை உனக்கு இஷ்டமில்லைன்னா கேன்சல் பண்ணலாம்.”
அம்மா நீட்டின ஃபோட்டோவை மனசில்லாம பாத்தேன். எழுந்து குதிக்காத குறை, “அம்மா அந்த சரஸ்வதி ஸ்டோர் சுசீலா மாதிரியே இருக்காம்மா”
அம்மா, ”மாதிரி இல்லை அவளேதான் ,உனக்கு பிடிக்கலைன்னா சொல்லு, சாயந்தரம் சுந்தர் வருவான் கேன்சல் பண்ணிடலாம்”
“அதில்லை அந்த அய்யர் கடை ரவா தோசை, சாம்பாருக்காக உன்னை திண்டுக்கல் கூட்டிட்டு போகணும், இதை சாக்கா வச்சு போவோமே”
“அதுக்கென்னடா அவசரம், அது அடுத்த ஆடிட் போறப்ப போயிக்கலாம்”
“போம்மா, புதன்கிழமை லீவு போட்டுடறேன், என்ன சாமான்லாம் கொண்டுட்டு போகணும் லிஸ்ட் போட்டு கொடு இன்னிக்கே வாங்கிட்டு வரேன்”
அம்மா சந்தோஷமா சிரிச்சா, என் உணர்ச்சிகளுக்கோ வார்த்தை இல்லை திரும்ப கிரிக்கெட் பாக்க வெளில வந்தேன். அதே பொடியன் பந்தை தூக்கி அடிச்சான், அது விண்ணில் பறந்தது என் மனசைப் போல, என் சுசீ, என்னோட சுசீ , இது நிஜமா?
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தொடரும்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings