in ,

அட… நீயும் சராசரிதானா? (சிறுகதை) – முகில் தினகரன்

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

வழக்கத்திற்கு மாறாக பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் அதிகமாயிருக்க எனக்குள் ஏதோவொன்று பிறாண்டியது.  “என்னாச்சு?… இன்னிக்கு ஏன் இந்த பஸ் ஸ்டாப்பிங்ல இத்தனை கூட்டம் நிற்குது?… ஸம் திங் ராங்!… யாரைக் கேட்கலாம்?”. யோசித்தபடி அக்கம்பக்கம் பார்த்தேன்.

கைகளைப் பிசைந்தபடி நின்று கொண்டிருந்த அந்தப் பெண், என்னை நேர்ப் பார்வை பார்க்க, அவளருகே சென்று மெல்ல விசாரித்தேன்.

என்னோடு பேச விரும்பாதவள் போல் அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள, நான் விடாமல் இன்னொரு முறை கேட்டேன்.

                எரிச்சலாய்த் திரும்பியவள், “அதையேன் சார் கேட்கறீங்க?… மெயின் ரோட்டுல ஏதோ ஜாதிக் கட்சியோட பேரணியாம்… இந்த ரோட்டுக்கு இன்னும் ரெண்டு மூணு மணி நேரத்துக்கு பஸ்ஸே வராதாம்… கர்மம்… ஆபீஸ் முடிஞ்சு போகிற நேரத்தில்தானா இந்த சோதனையெல்லாம் வரணும்?… ச்சை!… அங்க வீட்டு வாசல்ல பள்ளிக் கூடத்திலிருந்து வந்த குழந்தை எனக்காக காத்திருக்கும்!” சொல்லும் போது அஷ்டகோணலாய்ப் போனது அந்த அழகு முகம்.

                அவளைப் போலவே பல யுவதிகள் பஸ் இப்போதைக்கு வராதென்று தெரிந்தும் அது வரும் திசையை திரும்பித் திரும்பிப் பார்த்து திட்டிக் கொண்டிருந்தனர். 

உள்ளுக்குள், “அய்யோ… லேட்டாய்ப் போனா… இந்த மாமியார்க் கிழவி வேற தொண தொணப்பாளே!” என்று சில பெண்களும்,

“கடவுளே… ஏற்கனவே என் மேலே ஏகப்பட்ட சந்தேகத்தோட திரியற என் புருஷன்… நான் லேட்டாய்ப் போனா கேள்வி மேலே கேள்வி கேட்டே என்னைச் சாகடிச்சிடுவானே?” என்று சில பெண்களும்,

“ஹும்,… இன்னிக்குத்தான் அதிசயமா என்னோட ஆளு… ஷாப்பிங் கீட்டிட்டுப் போறேன் சீக்கிரமா ஆபீஸிலிருந்து வந்திடு”ன்னு சொன்னான்… சரியா இன்னிக்குப் பார்த்து பஸ் வராம என்னைச் சோதிக்குது… சனியன்” என்று ஒரு இளம் யுவதியும் புலம்ப, திடீரென்று அந்தச் சூழ்நிலை மாறியது.

                “ஏய்… நாம இப்படி நின்னுட்டிருந்தா நின்னுட்டே இருக்க வேண்டியதுதான்! டூவீலர்க போயிட்டுத்தானே இருக்கு? பாரு… எத்தனை ஆம்பளைங்க தனி ஆளா… சிங்கிள்ஸ்லே போய்க்கிட்டிருக்காங்க!… அவங்களை நிறுத்தி லிப்ட் கேட்டா என்னடி?”  துணிச்சலாய்ப் பேசிய சுடிதார்ப்பெண் என் கவனத்தை ஈர்க்க, “அட… பரவாயில்லையே” கவனிக்கலானேன்.

                அவளுடன் நின்றிருந்த மற்ற பெண்கள், “அது செரி… நாம் நிறுத்தி லிப்ட் கேட்டுட்டா… உடனே குடுத்திடுவாங்களா?… அதெல்லாம் ஒரு காலத்துல!… இப்ப ஆம்பளைகெல்லாம் ரொம்பவே உஷாராயிட்டாங்க… வலிய வந்து லிப்ட் கேட்கற பெண்களை டபிள்ஸ் ஏத்தினா அது பெரிய வில்லங்கத்துலதான் கொண்டு போய் விட்டுடும்ன்னு ரொம்ப முன் ஜாக்கிரதையாயிருக்காங்க” என்றாள் இன்னொருத்தி.

       “ஏண்டி அதுக்குன்னு எல்லோரையுமா அந்த மாதிரி நினைப்பாங்க?… நம்மையெல்லாம் பார்த்தா அப்படியா இருக்கு?… நீயா கற்பனை பண்ணிக்கிட்டு ஏதேதோ சொல்லாதே… நான் நிறுத்திக் காட்டுறேன் பாரு”

                சொன்னதோடு நில்லாமல் அந்தச் சாலையில் கடந்து செல்லும் டூவீலர் ஆசாமிகளை குறுக்கே கை நீட்டி மறித்தாள்.

                “என்னம்மா… என்ன வேணும்?” ஹெல்மட் தலையனொருவன் கத்தலாய்க் கேட்க,

                “சார்… இந்த ரோட்டுக்கு இப்போதைக்கு பஸ் வராது… பாருங்க எத்தனை லேடிஸ் பரிதாபமா நின்னுட்டிருக்காங்க… நீங்க தனியாத்தானே போறீங்க… யாராவது ஒருத்தருக்கு லிப்ட் கொடுத்து உதவலாமில்ல?” முதலில் கெஞ்சல் பாணியில் கேட்டாள்.

                “வாட?… லிப்ட்டா?… நோ… நோ… நமக்கு அந்தப் பழக்கமெல்லாம் கெடையாது…அதுக்குன்னு எவனாச்சும் வருவான் அவன்கிட்டக் கேளுங்க!.. வழிய விடுங்க மொதல்ல..”

                லேசாய்க் கோபமான சுடிதார்ப்பெண், “என்ன சார் லேடீஸ்க்கு லிப்ட் குடுத்தா என்ன சார் தப்பு?… மனுசனுக்கு மனுசன் இந்த உதவி கூடச் செய்யக் கூடாதா?” விடாமல் பேசினாள்.

                “த பாரும்மா… பொண்ணுங்களையெல்லாம் நான் டபுள்ஸ் ஏத்தினதில்லை… ஏத்தவும் மாட்டேன்”

                “அதான் ஏன்?னு கேட்கறேன்?… பயமா?… யாராச்சும் பார்த்து ஏதாச்சும் கதை கட்டிடுவாங்களோன்னு பயமாயிருக்கா?… இல்ல உங்க சம்சாரத்துக்கு தெரிஞ்சு… குடும்பத்துல குழப்பம் உண்டாயிடுமோன்னு அச்சமாயிருக்கா?” விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு கேட்டாள் அவள்.

                அவன் மௌனமாய் விழிக்க,

                “என்ன சார்… அதைப் பத்திக் கவலைப்பட வேண்டிய பொண்ணுங்களே தைரியமா லிப்ட் கேக்கறாங்க… நீங்க ஆம்பளை… அதுவும் அடர்த்தியா மீசை வெச்சிருக்கற ஆம்பளை நீங்க பயப்படறீங்களே”

                “இல்லம்மா… அது.. வந்து.. பிரச்சினைம்மா…” தர்ம சங்கடத்துடன் நெளிந்தான் அந்த ஆள்.

                “பிரச்சினைக்கு பயப்படற நீயெல்லாம் எதுக்கய்யா வெளிய வர்றே,.. வீட்டுக்குள்ளாரவே முடங்கிக் கெடக்க வேண்டியதுதானே?”

                அவள் பேச்சில் மரியாதை தடாலென்று இறங்க, அவன் பரிதாபமாய் எல்லோரையும் பார்த்தான்.

                “இங்க பாருய்யா… உன் மனசு சுத்தமான மனசுன்னா… யாராவது ஒருத்தரை கூட்டிக்கிட்டுப் போ” என்றவள் பெண்கள் பக்கம் திரும்பி “ஏய் காயத்ரி… நீ இந்தப் பக்கம்தானே போகணும்?.. வா.. வந்து சார் வண்டில உட்காரு” என்றழைக்க,

                அந்த காயத்ரி காத்திருந்தவள் போல வேக வேகமாய் வந்து “ணங்”கென்று பில்லியனில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

                ஹெல்மட்காரன் வேறு வழியில்லாமல் முனகியபடியே வண்டியைக் கிளப்பினான்.

                எனக்கு அந்தச் சுடிதார்ப்பெண்ணின் பேச்சும் செயல்பாடும் மிகவும் பிடித்திருந்தது.  “வெரிகுட்.. பெண்கள்ன்னா இப்படித்தான் இருக்கணும்.. பாரதி கண்ட புதுமைப்பெண்”

                தொடர்ந்து அதே போல் பல இருசக்கர வாகனாதிபதிகளை நிறுத்தி சாம, பேத, தான, தண்ட முறைகளைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட பெண்களை அங்கிருந்து வெற்றிகரமாக அனுப்பி வைத்தாள்.

                சில நிமிடங்களில் அந்த பஸ் ஸ்டாப்பே காலியானது.

                இறுதியில் அந்த சுடிதார்ப்பெண் மட்டும் தனித்து நிற்கையில் ஒரு டூவீலர்க்காரன் கடந்து செல்ல நான் கேட்டேன். “என்னம்மா… ஒரு வண்டி போகுது… அதை நிறுத்தி அதுல நீ போகலாமே?”

                “இல்ல சார் எங்க வீட்டுக்காரர் வந்திட்டிருக்கார்.. என்னை பிக்அப் செய்ய” என்றாள் அவள்.

                அடுத்த ஐந்தாவது நிமிடம் ஒரு பைக் வந்து நின்றது.  அதிலிருந்து இறங்கிய அந்த இளம்பெண் “ரொம்ப தேங்க்ஸ் சார்… எங்க ஹாஸ்டல் இங்கிருந்து பக்கம்தான்… நான் நடந்தே போயிடறேன்” என்று சொல்லி விட்டு நகர, அந்த பைக்காரனை நோக்கி வேகவேகமாய்ச் சென்றாள் சுடிதார்க்காரி.

                “யார் அவ?” கேள்வியில் கோபம் தெறித்தது.  அவள் கண்கள் நடந்து போகும் அந்த இளம்பெண்ணை பார்வையால் எரித்தது.

                “தெரியாதுடா… இங்கதான் எங்கியோ லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கியிருப்பா போலிருக்கு!.. இந்த ரோட்டுலதான் பஸ் வரலையே… தனியா நடந்து வந்திட்டிருந்தா…நான்தான் நிறுத்தி… கேட்டு.. லிப்ட் குடுத்தேன்!”

                கண்களைப் பெரிதாக்கிக் கொண்டு பற்களை ‘நற..நற’வென்று கடித்த சுடிதார்க்காரி “கொஞ்சம் செவப்பா… அழகா இருந்தால் போதுமே… உடனே.. “ஈஈஈஈ” ன்னு இளிச்சுட்டு லிப்ட் குடுத்துடுவீங்களே!… இதே ஒரு கிழவி வந்து கேட்டா குடுத்திருப்பீங்களா?.. மூஞ்சியைத் திருப்பிக்கிட்டு கண்டுக்காமப் போயிருப்பீங்க!… ஏன்னா நீங்கெல்லாம் ஜொள்ளுப் பார்ட்டிக” “பட… பட”வெனப் பொரிந்து தள்ளினாள்.

                “அட என்னம்மா… இதுல என்ன இருக்கு?.. மனுசனுக்கு மனுசன் செய்யற உதவிதானே?”

                “போதும் பேசாதீங்க” சட்டென அவன் வாயை அடைத்து விட்டு, பிசாசுத்தனமாய் பில்லியனில் ஏறி அமர்ந்தாள்.

அவன் நிதானமாக வண்டியைக் கிளப்ப, “வீட்டுக்குப் போய் உங்கள வெச்சுக்கறேன் இருங்க”

 போகிற போக்கில் அவள் கோபமாய்ச் சொல்லிக் கொண்டே சென்றது என் காதுகளில் விழ நான் மூர்ச்சையாகாத குறைதான்.

“அடிப்பாவி.. போறவனையெல்லாம் நிறுத்தி… இல்லாத வசனமெல்லாம் பேசி லிப்ட் குடுக்க வெச்சிட்டு… உம்புருஷன் ஒரு பெண்ணுக்கு லிப்ட் குடுத்ததுக்கு இந்த உறுமு உறுமுறியே?.. ச்சே.. உன்னைப் போயி புதுமைப்பெண்ணுன்னு நெனச்சேனே… அட… நீயும் சராசரிதானா?”

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தீம் தரிகிட பாரதி மகள்கள் (அத்தியாயம் 3) – பாரதியின் பைத்தியம்

    முள் பாதை (அத்தியாயம் 12) – பாலாஜி ராம்