in ,

ஆட்டத்தைப் பார்த்திடாமல் (சிறுகதை) – சுஶ்ரீ

எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

வனித கலா மண்டபம் அன்று என்றுமில்லாத அளவு நிரம்பி வழிந்தது. டிசம்பர் மாதம், ஜனவரி மாதம்னாலே எல்லா சபாக்களும், கச்சேரி, நாடகம், நாட்டியம்னு ஒவ்வொரு வருஷமும் களை கட்டுவது மெட்ராசைப் பொறுத்தவரை இயல்புதான்.

 அதுவும் இந்த வருஷம் பொங்கும் புயல், நாட்டிய சிரோன்மணி, நவயுகநாயகி, கயல்கண் கன்னி என குறுகிய காலத்தில் புகழ் ஏணியில் ஏறி வரும் புனிதாவின் பெயர் போட்டாலே சபாக்களில் டிக்கட் பிளாக்கில்தான் கிடைக்கும்ன்ற மாதிரி ஆயிட்டது.

வனித கலா மண்டபம் பார்த்திராத கூட்டம், முதியவர்கள், இளைஞர்கள் என்ற பேதமில்லை. புனிதாவின் கொஞ்சும் நடை அழகு, கடைக்கண் பார்வை அழகு, பிரம்மன் மொத்த அழகையும் மிச்சமின்றி அள்ளித் தெளித்திருந்தானோ என வியக்க வைக்கும், கனகச்சித பேரழகு இவை அனைத்தையும் ரசிக்கக் கூடிய கூட்டமே அது.

யார் இந்த புனிதா? ஆந்திரப்பிரதேசம் கிழக்கு கோதாவரி பகுதியில் ராஜமுந்திரி என்றழைக்கப்படும் ராஜமகேந்திரபுரியின், கீழ் பகுதியில் ஒரு கிராமம் ஹுக்கும்பேட்ட ஒரு 200 குடும்பங்கள் தினசரி வாழ்க்கைக்கு சிரமப் படும் ஒரு கிராமம்.

சோமாலம்ம கோவில் சாளுக்கிய மன்னர்கள் காலத்தில் போற்றி பாதுகாக்கப்பட்ட புராதன ஆலயம். இங்குள்ள பார்வதி அம்மன் சகல வர சித்தி தரக் கூடியவள் என சுற்று வட்டாரத்தில் பெயர் பெற்றவள்.

ஆனால் என்ன செய்வது, அங்கே கணக்கெழுதும் பலராம சாஸ்திரி வறுமையில்தான் உழன்றார். வருமானம் கைக்கும் வாய்க்கும் பத்தலை. குழந்தை பாக்யத்துக்கோ குறைவில்லை. நான்கு ஆண் குழந்தைகட்குப் பின் ஐந்தாவதாக பார்வதி அம்மன் அருளில் பிறந்த சோமாலம்மா.

சிறு வயதிலிருந்தே படு சூட்டிகை. எதிர்வீட்டு நாட்டிய பூஷனம் சங்கீதாவின் கண் பட்டு, குழந்தை நாட்டிய நுணுக்கங்கள் அனைத்தும் கற்றுக் கொண்டது. 15 வயதில் குருவை மிஞ்சினாள் சோமாலம்மா.

பெத்தஇன்டி ஆயன (பெரிய வீட்டுக்காரர்) ஜமீன்தார், கோவில் தர்மகர்த்தா இவ்வளவு சிறப்புகளும் பெற்றவர் அந்த 52 வயது சிங்காரெட்டி. அந்த சின்ன ஊர்ல அந்தக் காலத்திலயே அம்பாசிடர் கார்ல வலம் வந்தவர். வாரம் ஒரு முறை ராஜமுந்திரி வத்சலாம்மகாரு வீட்டுக்குப் போய் பணத்தைக் கரைப்பார்.

பலராம சாஸ்திரிகாருவின் வீட்டுக்கு ஏதோ ஒரு பிரமேயத்தில் தன் அம்பாசிடர் காரில் விஜயம் செய்தார். சோமாலம்ம கண்ணில் பட்டாள்.

“ஏம்மா குழந்தை நீ பலராமன் மகளா அவன் சொல்லவே இல்லையேனு” பக்கத்தில் இழுத்து தலையைத் தடவிக் கொடுத்தார். ஏதோ பயத்தால் அவளால் அவர் பிடியிலிருந்து விடுபட முடியலை.

சிங்காரெட்டிக்கு வத்சலாம்மா மறந்து போனாள், உள்ளூர்ல கோமேதகத்தை வச்சிக்கிட்டு, ஊர் விட்டு ஊர் போய் கண்ணாடிக்கல்லை தேடி இருக்கோமேனு விசனித்தார்.

ஆனால் அடுத்த ஒரு மாதத்துக்குள் நாட்டிய பூஷனம் சங்கீதாவின் சித்தப்பா ஒருவர் மெட்ராஸ் சங்கீத சபாவில் ஏதோ ஒரு பொறுப்பில் இருப்பவர் கண்ணில் குழந்தை சோமாவின் வித்வத்வம் தெரிந்தது.

இது இங்கே இருக்க வேண்டிய பெண் இல்லைனு தீர்மானம் செய்து, பலராம சாஸ்திரிகளின் குடும்பத்தினரை நம்பும்படி பேசி மெட்ராஸ் அழைத்து வந்தார். ஏழ்மை என்ன செய்யும் வேறு வழியின்றி சோமாலம்மாவை மெட்ராஸ் அனுப்பினார் பலராம சாஸ்திரிகள்.

சோமாலம்ம முதலில் புனிதாவாக நாமகரணம் சூட்டப்பட்டாள். புனிதாவின் வளர்ச்சி வேகம் சொல்லி மாளாது. இரண்டே வருடத்தில் புனிதாவின் பெயர் அடிபடாத இடமில்லை.

ஒரு சின்ன பட்ஜெட் தமிழ் சினிமாவில் கூட இரண்டாவது கதாநாயகியா நடித்து திரையுலகமும் பேசும் பொருளாகி விட்டாள். மெல்ல நாட்டியம் போச்சு, நடிகைன்ற பேர் மட்டும். சினிமா உலகின் பழம் பெரும் ஜாம்பவான்கள் ஒரு புதுமுகத்தை அவ்வளவு சீக்கிரம் வளர விட்டு விடுவார்களா என்ன?

அந்த பழம்பெரும் இயக்குனர் புனிதாவுக்கு மீண்டும் ஒரு நாட்டிய ரோல் கொடுத்தார். சும்மா இல்லை புனிதாவின் புனிதத்துக்கு பதில் உபகாரம்தான். அடுத்தடுத்து கிளப் டான்ஸ் வேடங்கள்தான். இயக்குனர் நடிகர்களின் முதல் சாய்ஸ் புனிதாவின் புனிதம்தான். 

சீ என்ன உலகம் இது, உடல் ஓய்ந்து போனது, நடிப்பே வெறுத்துப் போனது. அப்பா ஞாபகம், ஊர் ஞாபகம், அந்தக் கோவிலின் சுற்றுப் பிரகாரத்தில் கமலாவோட பாண்டி விளையாடினது, வயலில் வீசும் அந்த வைக்கோல் மணம் எல்லாம் முட்டி மோதி ஞாபகம் வந்தது.

அடுத்த நாளே மெட்ராஸை காலி செய்து ஹுக்கும்பேட் விரைந்தாள். பல பேரிடம் பாடாய் பட்டு நாராய் ஏன் கிழியணும். சிங்காரெட்டி நடிகை புனிதாவை உற்சாகமாய் வரவேற்று, தன் புதிதாய் கட்டின பங்களாவில் குடியமர்த்தினார்.

எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கண் சிமிட்டும் வானவில் (அத்தியாயம் 14) – இரஜகை நிலவன்

    பேசா மடந்தை (சிறுகதை) – சுஶ்ரீ