எழுத்தாளர் கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அந்த இடத்தை பேருந்து கடக்கையில் அமுதாவின் மனது படபடத்தது. அவன்’ எங்காவது தென்படுவானா? கண்கள் பல இடங்களிலும் தேடியது. அதற்குள் பேருந்து கடந்து வந்திருந்தது.
அமுதாவுக்குக் கவலையானது. சீட்டில் சாய்ந்து கொண்டே நினைத்துக் கொண்டாள். ‘இதோடு நான்காவது தடவையாக இந்த இரண்டு வருடங்களில் குருவாயூர் கோவிலுக்கு வருகிறாள். இந்த புத்தன்பள்ளி ஸ்டாப் எனப்படும் நிறுத்தத்தைக் கடந்து போகிற பொழுதெல்லாம் தேடுகிறாள். அவன் தென்படுவதேயில்லை. பெயர் தெரியாத, இந்த ஊரில் எங்கு வசிக்கிறான் என்று தெரியாத அவனது முகம் மட்டும் பத்து வருடங்களாக மனதில் நிலைத்துக்கொண்டது.
அமுதாவின் மனம் பத்து வருடம் பின்னோக்கிப் போனது.
கேரளாவில் உள்ள குருவாயூரில் அந்த பிரசித்தமான பெண்கள் கல்லூரியில் அமுதா இளநிலை தாவரவியல் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தாள். அப்பத்தாவுடன் வந்நேரி என்ற ஊரில் குடும்பவீட்டில் தங்கியிருந்தாள்.
அப்பாவோடு சேர்த்து ஐந்து மகன்கள் இருந்தாலும் யாரும் அப்பத்தாவுடன் இல்லை. வேலை நிமித்தமாக வெளியூர்களில் இருந்தனர். தேனியில் பலசரக்குக் கடை நடத்தும் அப்பா, ஒரு மாறுதலுக்காக கேரளாவிற்கு போய் அப்பத்தாவுடன் இருந்து படிக்கச் சொல்ல, வந்தவள் தான் அமுதா. ஊரும் கல்லூரியும் எல்லாம் அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது. தேனியிலிருந்தாலும் வீட்டில் மலையாளம் பேசிப் பழகியிருந்ததால் இங்கு எளிதில் எல்லோருடனும் பழக முடிந்தது.
அந்த வருடம் இண்டர்சோன் போட்டி எனப்படும் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியின் சுற்றறிக்கை கல்லூரியின் நோட்டிஸ் போர்டில் ஒட்டப்பட்டிருந்தது. அதில் தமிழ் சிறுகதைக்கென்று போட்டி இருந்தது. ஆச்சரியமாக இருந்தது.
அதைப்பற்றி தன் புரஃபசரிடம் கேட்டபோது, ‘உன்னைப்போலவே நிறைய தமிழ் தெரிந்தவர்கள் இங்கு பல பல கல்லூரிகளில் படிக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்தப் போட்டி’ என்றார்.
அவள் மகிழ்ச்சியுடன் தன் பேரையும் பதிவு செய்தாள். அமுதா அப்படியொன்றும் பிரமாதமான எழுத்தாளரில்லை. ஆனால் தேனியில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் சில வாரப்பத்திரிக்கைகளிலும் மாத இதழ்களிலும் எழுதி அனுப்பி பிரசுரமாகியிருந்தது. அதனால் இதில் கலந்து கொள்ளலாம் என்ற தைரியம் இருந்தது.
அமுதாவும் இன்னும் சில மாணவிகளுக்கும் திருச்சூர் சாலக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் வைத்து போட்டி நடப்பதாக அறிவிக்கப்பட, அவர்கள் அந்தக் கல்லூரியின் விருந்தினர் அறையில் தங்கவைக்கப்பட்டனர். அவளுடன் வந்திருந்த சிலர் ஓவியப்போட்டி, மலையாளக்கவிதை, கதைப்போட்டி, மெல்லிசைப்பாடல் என பல போட்டிகளில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.
அடுத்தநாள் போட்டி நடக்கும் கல்லூரிக்குச் சென்று பேர் பதிவு சரிபார்த்து அந்தந்தப் போட்டிகளுக்கான அறைகளில் சென்று அமரவைக்கப்பட்டனர். அமுதாவின் அறையில் நாற்பதுக்கும் மேல் இருந்தனர்.
இத்தனைபேர் தமிழ் தெரிந்தவர்களா? ஆச்சரியமானாள். அப்போதுதான் தனக்குப்பின் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவன் தன்னையே பார்த்துக்கொண்டிருந்ததை கவனித்தாள். போட்டி தொடங்கிய பின்னரும் எழுதுவதற்கிடையே அவளை பார்ப்பது உள்ளுணர்வில் தெரிந்தது.
போட்டி முடிந்து வெளி வந்தபோது, ‘எக்ஸ்க்யூஸ் மீ’ அமுதா திரும்பிப்பார்க்க அவன்!
‘ஒரு நிமிஷம்!’ அவன் கூற ‘என்ன’ என்பதுபோல் அருகே வந்தாள்.
‘உங்களை எங்கேயோ பாத்திருக்கேன், நீங்க மதுரையா?’
பலரும் அவளிடம் அப்படித்தான் ஆரம்பிப்பார்கள். பின்பு வழிவார்கள்.
‘தெரிஞ்சு..என்ன பண்ணப்போறீங்க?!’
‘தப்பா எடுத்துக்காதீங்க! காலைலருந்து சாப்பிடலை. கையிலருக்க பணம் பத்தலை. இந்தப் போட்டிக்காக மட்டும்தான் ஹாஸ்டலில் இருந்து வந்தேன். இன்னிக்கு ஊருக்குப் போகணும். அதுக்கான காசு மட்டும் தான் இருக்கு. காலேஜ் காண்டீன்ல ஒரு டீ வாங்கித் தர முடியுமா?’ அவன் கேட்ட விதத்தில் உண்மைத்தன்மை தெரிய ‘வாங்க’ எனக் கூட்டிச் சென்றாள்.
‘ஒரு மசால் தோசை, ஒரு டீ’ டோக்கன்களை பெற்றுக்கொண்டு கவுன்டரில் கொடுத்து விட்டு வந்தாள். எதிரெதிரே உட்கார்ந்திருந்தனர். அவனது முகத்தில் களைப்பிருந்தது. முன்பின் தெரியாத ஒருவரிடம் அதுவும் ஒரு பெண்ணிடம் கேட்டு விட்டோமே என்ற உணர்வு கண்களில் நிழலாடியது. தோசை வந்ததும் அவன் சாப்பிட்ட வேகத்தில் பசி தெரிந்தது.
டீயை ஆற்றிக்கொண்டே, ‘ரொம்ப தேங்க்ஸ், நீங்க மட்டும் இல்லைன்னா இன்னிக்கு என்ன ஆயிருப்பேன்னு தெரியாதுங்க’
‘இதென்னங்க, இங்க யார்கிட்ட கேட்டாலும் உதவுவாங்க’
‘அதில்லிங்க, யாரப் பாத்தும் கேட்கத் தோணலை. நீங்க வந்ததிலிருந்து பாத்துட்டு இருந்தேன், காரணமே தெரியலை, உங்ககிட்ட மட்டும்தான் கேட்கத் தோணுச்சு’
அவனது குரலில் உண்மை இருந்தது. இப்படிப்பட்ட தருணங்களில் ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொண்டு கைபேசி எண் பரிமாறிக்கொண்டு போகலாம். ஆனால் அவன் அதைச் செய்யாமல்,
‘நீங்க நேரா காலேஜ் ஹாஸ்டலுக்கா?’ என்று கேட்டான்.
‘இல்லிங்க, வந்நேரில அப்பத்தா வீட்டில தங்கி படிக்கிறேன்.’
‘அடடா! நான் போற வழில புத்தன்பள்ளில தான் இறங்கணும். சேர்ந்தே போலாமா?’
ஏனோ நிராகரிக்கத் தோன்றவில்லை. விட்டகுறைதொட்டகுறை போல ‘சரி’ என்றாள். சகமாணவர்களிடம் சொல்லிவிட்டு புறப்பட்டனர்.
பேருந்தில் அருகருகே அமர்ந்தனர். நடத்துனர் வந்தபோது அவளுக்கும் சேர்த்து அவன் பயணச்சீட்டு வாங்கி கையில் கொடுத்தான். அவனது கையிலுள்ள சில்லறை தீர்ந்திருக்கும். சம்பிரதாயத்திற்காக ‘உங்ககிட்ட தான் காசில்லை, அப்புறம் ஏன் டிக்கெட் எடுத்தீங்க?’ கேட்டாள்.
‘இரண்டு பேருக்கும் சேர்த்து ஒன்பது ரூபா தாங்க, அது என்கிட்ட இருந்துச்சு.’
பிறகு எதுவும் பேசவில்லை. புத்தன்பள்ளியில் இறங்கும்போது,
‘ஒன்ஸ் அகெய்ன் தாங்க்ஸ்ங்க, எங்கயாவது எப்பவாவது பார்க்கலாம்’ இறங்கி, நடந்து காணாமல் போனான்.
அவனிடம் ஒன்றும் விசாரிக்கத் தோன்றாத தன் மனநிலையை தானே கடிந்து கொண்டாள். படிப்பு முடிந்து, கோவையில் மேற்படிப்புக்காக சேர்ந்து, பின்பு ஒரு பள்ளியில் ஆசிரியை ஆன பிறகு, இப்படி குருவாயூருக்கு ஒவ்வொரு தடவையும் பயணப்பட்டு போகும்போதெல்லாம் தேடுகிறாள்.
கிடைக்கவில்லை. சிலவருடங்களுக்குப் பிறகு, பிரபலமான இளம் எழுத்தாளரின் பேட்டி ஒன்றில் மறக்க முடியாத சம்பவமாக இந்த விஷயத்தைப் பகிர்ந்து நன்றி சொல்லியிருந்தார் அந்த இளம் எழுத்தாளர்.
ஆச்சரியமும் தவிப்புமாக அதில் இருந்த புகைப்படத்தில் தெரிந்த அந்த முகத்தைப் பார்த்தாள். அவனே…தான்! எழுத்தாளனாகியிருந்தான். கீழே பெயர் இருந்தது.
என்றோ வாழ்வில் சடக்கென்று வந்து காணாமல் போனவனின் பெயர் ‘ஆத்மா’.
எழுத்தாளர் கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings