in ,

ஆகாயத்தில்… (அத்தியாயம் 1) – இரஜகை நிலவன்

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

தொண்டர்கள் வரிசையாகப் போட்ட மாலையை வாங்கி சோபாவில் போட்டுவிட்டு திரும்பிய போதுதான் இந்துமதி அவனைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பது புரிந்தது.

தமிழரசன் வெளியே எட்டிப்பார்த்தான். “வெளிநாடு செல்லவிருக்கும் அமைச்சர் தமிழரசன் வாழ்க” என்ற கூக்குரல் வானைப் பிளந்தது.

வீட்டிலேயே எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் கூடியிருக்க, விமானத்தில் புறப்படத்தயாராக இருந்த தமிழரசன், இப்போது இந்துமதியை தனியாக சந்திக்க முடியுமா என்று எண்ணிக் கொண்டிருந்த போது, உதவியாளன் முகிலன் “என்னண்ணே என்ன விஷயம் ?” என்று கேட்டான்.

”’ஒரு நிமிஷம் இந்துமதியோடு பேசவேண்டும்.”

”என்ன காதலிக்கு கடைசி நேர முத்தமா?”

”விளையாடக்கூடிய நேரமா இது?”

“சரி சரி” என்றவன் எல்லோரையும் காரில்; ஏறச் சொல்லிவிட்டு கொஞ்சம் சத்தமாக, “தலைவரே உங்களுடைய முதல் வெளிநாட்டுப் பயணம் இது, அம்மாவின் போட்டோவிற்கு மாலை போட்டுவிட்டுப் போங்கள்” என்றான்.

அவனிடம் மெதுவாக “சாகசக்காரன் நீ” என்று சொல்லிக் கொண்டு மெதுவாக தன் அறையின் பக்கம் வந்தான் தமிழரசன்.

அவனுடைய சைகையைப் புரிந்துகொண்ட இந்துமதி அவனோடு அந்த அறைக்குள் நுழைய, கதவைத் தாழிட்டுக்கொண்டவன், ”ஏன் இந்துமதி மிகவும் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தாய்… என்ன விஷயம்?” என்று கேட்டான்

”தமிழ். நீங்கள் என்னை விட்டு ரொம்ப ஒதுங்கிப் போகிற மாதிரி தோன்றுகிறது”…அவள் குரல் கொஞ்சம் கம்மிப்போயிருந்தது.

”இதோ இருக்கின்ற குவைத் நாட்டிற்கு தொழில் வளம் பற்றி தெரிந்துக் கொள்ளப் போகிறேன். ஒருவாரத்தில் திரும்ப வந்து விடுவேன். இதற்காகப் போய்…..”கொஞ்சம் அலுத்துக்கொண்டான் தமிழரசன்.

”அதற்கில்லை தமிழ், நாம் சந்தித்த அந்தக் கிராமம், அங்கே எனக்காக காத்திருந்த கணங்கள். நீங்கள் அரசியல்வாதியான பிறகு எல்லாமே காணாமல் போய் விட்டது”

”எனக்காக ஒருமணி நேரம் கூட ஒதுக்கமுடியாமல் போனதுதான் ஆச்சரியமாக இருக்கிறது”

”என்ன செய்யட்டும் இந்து. எல்லாம் நம்முடையை எதிர்கால வாழ்க்கைக்காகத்தானே….”

“இப்போதைய இளமையைத் தொலைத்துவிட்டு நாளைய வாழ்க்கைக்கான துரத்தல் தேவையா தமிழ்”

“நம் வாழ்க்கை முறையின் அடிப்படை இதுதானே.!… அதில் நாம் மட்டும் விதிவிலக்கல்லவே.. வரட்டுமா?”

அவன் கிளம்ப எத்தனித்த போது “ம்… எல்லாமே மறந்தாச்சு. என்றைக்கு காதலை வெளிப்படுத்தினோமோ அன்று பேசியதைக் கூட மறந்தாச்சு” என்று இந்துமதி சிணுங்க, ஒரு நிமிடம் யோசித்தவன் அருகில் வந்து “வெரி சாரி” என அவளுக்கு முத்தம் கொடுத்துவிட்டு “ உனக்கு என்ன பரிசு வாங்கி வரவேண்டும் இந்துமதி” எனக்கேட்டான்.

”நீங்கள் என் நினைவோடு திரும்பிவந்தாலே போதும்”

”சே! கேட்டு கேட்டுச் சலித்துப் போச்சு. என்ன வேண்டும் இந்த முறை நான் போவது வெளிநாடு. ஏதாவது ஆசையாக வாங்கி வரலாமிண்ணு நினைக்கிறேன்” என்றான்..அவள் செவ்விதழைப்பிடித்துக் கொண்டு…

”ஒருமுறை நாம் பல மாதங்கள் பிரிந்து திரும்பச் சந்தித்த போது சொன்ன ஞாபகம் இருக்கிறதா?”

“ம்..கூம்..” உதட்டைப் பிதுக்கினான் தமிழரசன்

“அதுதான் நம்காதல் விவகாரங்கள் தவிர எல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கும்”

“ஓகே ஓகே எல்லோரும் கீழே காத்துக் கொண்டிருக்கிறார்கள். சொல்லு”

“மண்டியிடுங்கள்”

அமைதியாக நின்றான் தமிழரசன்

“பார்த்தீர்களா? காதலுக்காக நீங்க்ள் எதையும் செய்யும் லட்சணம் இது தான். எனக்காக நீங்கள் எதையும் வாங்கி வரவேண்டாம்” திரும்பி நின்று கண்களை துடைத்துக் கொண்டாள் இந்துமதி.

”இதே விஷயம் அரசியலாக இருந்தால் அந்த இடத்தில் எத்தனை உயிர்கள் சேதமாகியிருக்கும். என் அன்பு காதலியே உனக்காக நான் என் கோபங்களை அடக்கிக் கொண்டு கௌரவங்களைத் தூக்கி எறிந்துவிட்டு கேட்கின்றேன். சொல்” அவள் முன்னால் வந்து முழந்தாளிட்டு அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு கேட்டான்.

முதலில் கொஞ்சம் சிரித்தவள், அவன் முன் நெற்றியில் குனிந்து முத்தமிட்டாள் “எனக்கு ஒரு வைர நெக்லஸ் வாங்கி வரமுடியுமா?” என்றாள்.

“அட்ரா சக்கை! என்னால் வைர நெக்லஸ் வாங்கித்தர முடியும் இந்து. ஆனால் எனக்காக நீ கொஞ்சம் பொது விஷயங்களில் நேரம் ஒதுக்க அனுமதிக்க வேண்டும்”

கையைத் தட்டியவள், இங்குமங்கும் பார்த்துவிட்டு, “யாரங்கே இவர் கேட்டதைக் கொடுங்கள்” என்று சொல்லி விட்டுச் சிரித்தாள் இந்துமதி.

“சரி. எனக்கு நேரமாகிறது எல்லோரும் கீழே காத்துக் கொண்டிருக்கிறார்கள்.” வேகமாக எழுந்தான் தமிழரசன்.

”கவனமாகப் போய் வாருங்கள்” என்று சொல்லிய இந்துமதி, அவனுடைய தலையை கலைத்துவிட, வாசல் கதவு சப்தமெழுப்பியது.

”தலைவரே சீக்கிரம் கீழே இறங்குங்கள். விமானத்திற்கு நேரமாகி விட்டது” என்று உதவியாளன் முகிலன் சப்தமெழுப்பினான்.

“இதோ” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தவன் கீழே வந்து வேகமாக காரில் ஏறிப் புறப்பட “தொழில் வளம் காண வெளிநாடு செல்லும் மந்திரி தமிழரசன் வாழ்க” என்று தொண்டர்கள் குரல் எழுப்பினர்.

”…இன்னும் எவ்வளவு நேரமிருக்கிறது” என்று கேட்டவாறு காரில் ஏறினான் தமிழரசன்.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காத்திருந்த வாழை மரம் – (சிறுகதை) முகில் தினகரன்

    ஆகாயத்தில்…(அத்தியாயம் 2) – இரஜகை நிலவன்