எழுத்தாளர் கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
விமானத்தில் அமர்ந்திருந்த சங்கருக்கு இருப்புக் கொள்ளவில்லை. இன்னும் சில மணி நேரங்கள் தான். பின்னோக்கிச் சென்றன நினைவுகள்!
‘உன்னயச்சொல்லி குத்தமில்ல, ஒம்பாடுபட்டு ஒனக்கு திங்க வாங்கிப் போடுறாளே ஒங்கம்மா அவள சொல்லணும்’ ஆச்சி கத்திக்கொண்டிருந்தது.
தூக்கம் பிரியாத கண்களுடன் வந்த சங்கருக்குத் தெரிந்துவிட்டது சங்கவிதான் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறாள் என்று. அவனைக் கண்டதும் கையைக் கன்னத்தருகில் வைத்து வாயை மறைத்து ‘கிழவிக்கு பைத்தியம்’ என்று மெல்லச் சொன்னாள்.
ஆச்சி கவனித்து விட்டது. ‘ஆமாடி! ஒங்கப்பனுமில்லாம மாமனும் தொரத்துனப்ப பச்சப் புள்ளகளையும் வச்சு பொழக்கட்டுமேன்னு இங்க கூட்டியாந்தேன் பாரு, நான் பைத்தியந்தேன்’ சொல்லிக் கொண்டே திண்ணையில் உட்கார்ந்தது ஆச்சி.
‘ஆத்தா, அவதான் சின்னப்புள்ள ஏதோ பண்றான்னா.. .நீ அவளைவிட சின்னப்புள்ளயா இருக்க. இந்தா இந்த டீயைக்குடி’ டீ தம்ளரை ஆச்சியருகே வைத்துவிட்டு அம்மா உள்ளே சென்றாள்.
சங்கர் சைகையில் வீட்டிற்குப் பின்னால் வரச்சொல்லி சங்கவிக்கு காட்டிவிட்டுச் சென்றான். அண்ணனுக்கும் தங்கைக்கும் வீட்டின் பின்புறமுள்ள விறகு அடுக்கிவைத்த ஓலை மேய்ந்த இடம்தான் முக்கியமான விஷயங்களைப் பேச தோதானது.
‘என்னாச்சு சங்கா?’ கேட்ட சங்கருக்கு பண்ணிரண்டு வயது.
‘இல்ல…நான் பாட்டுக்கு மிச்சர் தின்னுகிட்டு இருந்தேனா… ஆச்சி வந்து புடுங்கப்பாத்துச்சா… கைய தட்டிவிட்டேன்..அதுக்குத்தான் முனச்சுக்குது’ சொன்ன சங்கவிக்கு பத்து வயது.
ஆச்சிக்கு சங்கவியை குழந்தையாய் இருக்கும்போதே பிடிக்காது. அவள் பிறந்து ஒருவாரத்தில் அப்பா இதயத்துடிப்பு நின்று இறந்துபோனார். ஒன்றரை ஏக்கர் நிலம் கடன் தீர்க்க விற்கப்பட்டது. எல்லோருக்குமான குடும்பவீட்டை விற்று சிறியதொகை ஒன்றை கையில் கொடுத்து அனுப்பிவிட்டார் மாமா. அம்மாவின் அண்ணன்.
திக்கற்று நின்ற அம்மாவை ஆச்சிதான் கூட்டிவந்து வைத்துக்கொண்ட.து. அம்மாவின் சிறு வயதிலேயே அம்மம்மா இறந்துபோனதால் இரண்டாம் தாரமாக வந்த அழகம்மா ஆச்சி, தாத்தாவும் இறந்துவிட, பிள்ளையில்லாததால் சொந்தப் பிள்ளைகளைப் போல அம்மாவையும் மாமாவையும் வளர்த்தது.
கதிரறுக்கவும், கொத்தனார் வேலை, கிணறு வெட்ட என கிடைத்த வேலையெல்லாம் செய்து வளர்த்தது. அதனால் அம்மாவுக்கு ஆச்சியின் மீது மரியாதை இருக்கிறது. நன்றாகத் தான் பார்த்துக்கொண்டிருக்கிறாள். ஆனால் சங்கவியை ஏனோ ஆச்சிக்குக் கண்டாலே பிடிக்கவில்லை.
சங்கரை ‘ராசா’ என்று கொஞ்சி, சுருக்குப்பையிலிருந்து காசு எடுத்து கொடுக்கும். சங்கவிக்கு கொடுக்காது. அதைப்பற்றி ஆச்சியிடம் கேட்டால் முறைத்துக்கொண்டு நகர்ந்துவிடும். சங்கவி அழுவதைப் பார்க்க பாவமாக இருக்கும்.
‘கையை தட்டிவிட்டதுக்கா திட்டுச்சு?’
‘இல்ல, கொண்டிக்கிளவின்னு கூப்பிட்டேன். அதுக்கு’
‘அப்டி கூப்பிடாதன்னு எத்தனதடவ சொல்றது சங்கா, நம்ம ஆச்சி வயசானவங்கல்ல?’
‘நம்ம ஆச்சி இல்ல, ஒன் ஆச்சி. எனக்கு அதப்பிடிக்காது’ சொல்லிவிட்டு போனாள்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆச்சி சங்கவியை ஏதாவது சொல்லும். பதிலுக்கு ஆச்சியை ‘கொண்டிக்கிளவி, கோட்டிக்கிளவி’ எனக்கூப்பிட்டு கடுப்பேற்றுவாள் சங்கவி. இவர்களது பஞ்சாயத்தை தீர்க்கமுடியாமல் புலம்புவாள் அம்மா.
ஆச்சி காதில் தண்டட்டி இருந்தது. ஆச்சி அதைக்காட்டி ‘இந்தக்காதுல இருக்கற மூணு பவுன் ஒனக்கு, இந்தக்காதுல இருக்கற மூணுபவுன் ஒங்கம்மாவுக்கு’ என்று சங்கரிடம் சொல்வாள். அப்போது சங்கவியைப் பார்க்க பாவமாக இருக்கும்.
காலங்கள் கடந்தது. சங்கர் கல்லூரி படிப்பு முடிந்து ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்துப் போனான். பெங்களூருவில் ட்ரெயினிங் என்று சங்கவி கிளம்ப, வெடித்தது பூகம்பம்.
‘யாரைக்கேட்டு பொட்டச்சி வெளியூருக்கு கிளம்புறா? என்னய மதிக்க வேண்டா. உன்னயக் கேட்டாளா?’ என்ற அம்மாவை திட்டியது ஆச்சி.
‘அவ வாழ்க்க, அவ பாத்துக்கறா, நல்லதுதான ஆத்தா? போகட்டுமே’ என அம்மா சொல்லியும் ஆச்சி அடங்கவில்லை. இறுதியில் அம்மாவிடம் மட்டும் சொல்லிக்கொண்டு புறப்பட்டு போனாள் சங்கவி.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் அம்மாவையும் சங்கவியையும் தொலைபேசுவான் சங்கர். சங்கவி வீட்டுக்கு வந்தாலே ஏதாவது ஒன்றைச் சொல்லி சண்டையிட்டுக் கொண்டிருக்குமாம் ஆச்சி. சமாதானப்படுத்துவான். பிறகு, ஆச்சி இறந்தபோது விடுப்பு கிடைக்காததால் சங்கர் வரமுடியாமல் போனது.
இப்போது சங்கவியின் கல்யாணத்திற்காக வருகிறான். விமானம் தரையிறங்கியது. வீட்டிற்குள் நுழைந்ததும் அம்மா கண்கலங்கினாள். சமாதானப்படலமும் நலம் விசாரிப்புகளும் முடிந்து சங்கவியின் அறைக்குச் சென்றான். அவனைப்பார்த்தும் ‘ஓ’ என்று அழுது கொண்டு அவன்மேல் சாய்ந்தாள் சங்கவி.
‘அழாத சங்கா! அதான் வந்துட்டேன்ல’ அவள் தலையைத் தடவிக்கொடுத்தான்.
‘ஆச்சி…ஆச்சி..’ என்றழுதாள்.
‘என்னாச்சு இவளுக்கு? ஆச்சியை நினைத்து அழுகிறாளா? ஆச்சிதான் இப்போது இல்லையே?!’ குழம்பி நின்றான் சங்கர்.
‘ஆச்சி முடியாமக் கிடக்கறப்ப தண்டட்டிய கழட்டி அவ கையில குடுத்துச்சு. ‘சங்கரு சம்பாதிக்கிறான். நீயும் சம்பாரிக்கிற. இருந்தாலும் பொட்டப்புள்ள ஒனக்கு நா ஒண்ணும் இதுவரைக்கும் செஞ்சதில்ல, இத வச்சுக்கோ. உங்கல்யாணத்துக்கு இதுலதான் கம்மலும் மோதிரமும் செஞ்சு போடணும், நல்லா மகராசியா இரு’ அப்டின்னு சொல்லுச்சு சங்கரு’ என்றாள் அம்மா.
ஆச்சியின் தண்டட்டி சங்கவியின் காதிலும் விரலில மின்னியது.
எழுத்தாளர் கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings