ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
“போகாதீங்கடா போகாதீங்கடா” என்று மதுக்கடை நோக்கி வருவோரின் கால்களையும், கைகளையும் பற்றிக் கொண்டிருந்தார் அந்த முதியவர்
“என்ன பெருசு ஓவராயிடுச்சா?” என்று ஒரு குரல், அந்த முதியவரை ஒதுங்கிச் சென்றது.
“சரக்குப் பத்தலயா?” மற்றொரு குரல்.
சில பேர் வாய்க்கு வந்ததெல்லாம் திட்டினர். சிலர் எட்டி உதைத்தனர். இதையெல்லாம் சற்று தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தான் சேது.
முதியவர் அருகில் சென்று பரிவுடன், “ஐயா, எந்த ஊரு நீங்க? ஏன் இப்டி உருண்டு புரண்டு பெனாத்துரிங்க?” என்றான்.
ஏதோ சொல்ல எழுந்து, கீழே விழுந்தார் அந்த முதியவர். விழுந்தவரை மெல்ல கைத்தாங்கலாக அழைத்து வந்து, தண்ணீர் பாட்டில் வாங்கி முகத்தில் தெளித்தான். கண்களை அகலமாக விழித்து விழித்து மூடினார் அந்த முதியவர்.
“ஐயா ஐயா…” என்று சேது அந்த முதியவரின் கன்னத்தில் தட்டினான்.
“என்னை விடு… விடு” என்று கைகளைத் தட்டி விட்டார்.
அப்படியே விட்டுச் செல்ல மனமில்லாமல், “வாங்க வீட்டுக்குப் போகலாம்” என்று வலுக்கட்டாயமாக தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான் சேது.
வீட்டில் நுழைந்ததும், “தம்பி என்னை விடு” என்று சொல்லிக் கொண்டே கைகளை உதறி நிற்க கூட முடியாமல் தொப்பென தரையில் விழுந்தார்.
“சரி ஓய்வெடுக்கட்டும்” என்று முன் அறையில் அப்படியே விட்டு விட்டு, தலைக்கு தலையணை வைத்து விட்டு, தன் அறைக்குப் படுக்க சென்றான் சேது
சற்று நேரத்தில் கதவைத் தட்டும் சத்தம். கதவைத் திறந்ததும் ஒரே மகிழ்ச்சி. சிறு வயதில், தன்னுடன் ஒன்றாய்ப் படித்த வில்சன் நின்றிருந்தான்
தனியார் நிறுவனத்தில் நடக்கும் நேர்முகத் தேர்விற்காக வந்திருந்தான். பார்த்ததும் இருவரும் கட்டி அணைத்துக் கொண்டனர்
“மச்சான்… எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன், நீ மச்சி?”
“ரொம்ப நல்லா இருக்கேன்”
“வீட்டில எல்லாரும் நல்லா இருக்காங்களா?”
“ம்…” என்றான் வில்சன்.
“சரி உள்ளே வா மச்சி… சாப்டியா?”
பதில் எதிர்பார்க்காமல், “சரி குளிச்சிட்டு ஓய்வெடு மச்சி, பக்கத்தில தான் ஹோட்டல் இருக்கு. உடனே வரேன்” என்று சொல்லி புறப்பட்டான் சேது.
அரை நிர்வாண கோலத்தில் படுத்திருந்த அந்த முதியவரை, ஏதோ அசிங்கத்தைப் பார்ப்பது போல் பார்த்தான் வில்சன்.
‘யார் இந்த ஆளு இப்படி கிடக்கிறாரென’ யோசித்தான்,
அதற்குள் சேது டிபன் வாங்கி வர, “மச்சி யாருடா இது? கண்ணு மண்ணு தெரியாம குடிச்சிருப்பான் போல”
“ம் ஆமாம் மச்சி. பாவம்டா, ப்ளீஸ் மச்சி மரியாதை இல்லாமல் பேசாத. இவரைப் பார்த்தாலே எனக்கு அப்பா ஞாபகம் தான் வருது. அப்பா தினந்தோறும் காலையில் சாப்பிடாமல் டீ மட்டும் குடித்துவிட்டு வேலைக்குச் செல்வார். வேலை முடிந்து சாயங்காலம் வந்த பிறகு சாராயக் கடை பக்கம் போவார். வீட்டிற்கு வரும் போது செம போதையாய் வந்து சேருவார். வந்தவுடன் அம்மா ஆரம்பித்து விடுவாள்.
‘சத்துக்கு கல்லு போதைக்குச் சாராயம்னு தினம் இப்டி குடிச்சிட்டு வந்தா எப்படிப் பொழைக்கிறது. இருந்த தோட்டம் தொறவெல்லாம் குடிச்சே அழிச்ச, நகை நட்டெல்லாம் அடகு வச்ச, அது அப்டியே போச்சி. இன்னும் திருந்தாமல், இந்தப் பாழாய்ப் போன கருமத்தை குடிச்சிட்டே இருக்க
உன்னை நம்பி, என் குடும்பத்தை விட்டுட்டு, உன்னை வந்து கட்டிக்கிட்டேன் பாரு. எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். நீயெல்லாம் ஒரு மனுஷனா? நாசமா போவானே. சாராயம் குடிக்கிறதுக்குப்பதிலா மூத்திரத்தைக் குடிக்க வேண்டியது தானே. இவ்ளோ திட்றனே, உனக்கு வெட்கமா இல்லை’ எனத் திட்டி முடிப்பாள்.
அம்மா எப்படி திட்டினாலும், அப்பா ஒரு வார்த்தைக் கூட பதில் பேசியதில்லை. குடித்து விட்டால் சிலருக்கு அப்படி ஒரு வீரம் பிறக்குமில்ல. ஆனால் அப்பாவிற்கு அப்படியெல்லாம் ஒன்றும் வீரம் வந்ததாக தெரியவில்லை. இரண்டே இரண்டு சப்பாத்தி சாப்பிட்டு விட்டு, அப்படியே சாய்ந்திடுவார். காலையில் ஒன்றுமே நடக்காதது போல் எழுந்து குளித்து விட்டு நெற்றியில் பட்டை போட்டுக் கொண்டு கிளம்புவார்.
ஒரு நாள் உடல்நிலை சரியில்லாம மூச்சு விட சிரமப்பட்டேன். அப்பா மருத்துவமனை அழைத்துச் சென்றார். மருத்துவரின் அறிவுரைப்படி எல்லா பரிசோதனைகளும் எடுத்துப் பார்த்தனர்.
‘உங்கள் பையனுக்கு ஆஸ்துமா இருக்கு. கூலிங்கா எதுவும் சாப்பிடக் கூடாது. சுடு தண்ணீர் தான் குடிக்கணும். சத்தான பழம் காய்கறி சாப்பிடனும். பையன் ரொம்ப வீக்கா இருக்கான்’ என்று மருத்துவர் சொன்னார்.
‘சரி’ என்று தலையாட்டி விட்டு இரண்டு கைகளையும் கூப்பி நன்றி சொல்லி விட்டு வீட்டிற்கு வந்தார்.
தெரிந்தவர்கள் சிலர், ’மாட்டுக்கறி வாங்கிக் கொடுங்க ஆஸ்துமா வரவே வராது’ என்று சொல்ல, அன்று முதல் என் மீது, அப்பா முழு கவனத்தையும் செலுத்தினார். சரியான நேரத்தில் மருந்து மாத்திரை கொடுக்கவும் அம்மாவை அறிவுறுத்துவார்.
எவ்வளவு குடித்தாலும், இரவு அப்பா எனக்காக மாட்டுக்கறி வாங்கி வர மறந்ததே இல்லை. சில நேரம் அப்பா வருவதற்குள்ளாக தூங்கி விட்டால், ‘சேது எழுந்திரு எழுந்திரு’ என்று கன்னத்திலும், முதுகிலும், பிட்டத்திலும் தட்டித் தட்டி எழுப்பி விடுவார்.
கண்களை மேலும் கீழும் திறந்து மூடியபடி, ‘அப்பா தூக்கம் வருது, காலையில சாப்பிட்டுக்கறேன்’ என்றால் போதும், ‘கொஞ்சம்யா கொஞ்சூண்டு சாப்பிடுயா’ என்று சாப்பிட வைப்பார்.
அந்த மாட்டுக் கறியை ஒரு வாய் சாப்பிட வைத்தால் போதும். ஒரு கிலோ கறினாலும் மிச்சம் வைக்காமல் சாப்பிடத் தூண்டும். அவ்வளவு ருசியாக இருக்கும்.
அப்பா எவ்வளவு போதையாக இருந்தாலும், ‘தம்பி சாப்பிட்டானா?’ என்று அம்மாவிடம் கேட்காமல் இருந்ததில்லை. ஒருமுறை அப்பா சாராயக் கடை அருகிலேயே செம போதையில் உருண்டு பிரண்டு கொண்டிருந்தார். உறவினர் ஒருவர் வீட்டில் வந்து சொல்ல, அம்மாவோடு சென்று, அப்பாவை வீட்டிற்கு அழைத்து வந்து, குளிப்பாட்டி படுக்க வைத்தோம்.
அப்பா உயிருடன் இருக்கும் வரை, நான் எதற்கும் பயந்ததில்லை. எதைப் பற்றியும் யோசித்ததுமில்லை. இன்றோ அப்பா இல்லை, அவர் நினைவுகள் மட்டுமே” என்று வில்சனிடம் புலம்பித் தீர்த்தான் சேது.
இரவு 10 மணி ஆனது
“நான் புலம்பிக்கிட்டு தான் இருப்பேன் மச்சி. நீ நாளைக்கு சீக்கிரம் எழுந்திருக்கனும்ல. சாப்பிட்டு படுத்து ஓய்வெடு மச்சி” என்று சேது கூற, வில்சன் போர்வையில் முகம் புதைத்துக் கொண்டான்.
வில்சன் காலை 5 மணி ஆனதும் குளித்து நேர்முகத் தேர்விற்காக தயாரானான். சேது தெரிந்த ஆட்டோ ஓட்டுநருக்கு போன் செய்ய, ஆட்டோ வந்தது
சேது, “ஆல் த பெஸ்ட்” சொல்ல, வில்சன் விடைபெற்றான். மறுபடியும் படுக்கச் சென்றான் சேது.
சற்று நேரத்தில் பொழுது விடிய, படுக்கையை விட்டு எழுந்த சேது, அந்த முதியவரைப் பார்த்தான். இரவு முழுக்க உருண்டு புரண்டதில் தலையணை ஒரு பக்கமாகவும், அந்த முதியவர் ஒரு பக்கமாகவும் கிடந்தனர்.
சற்று நேரத்திற்குள்ளாகவே போதை தெளிந்து தலையைக் கோதியபடி, “யாருப்பா நீ? என்னை ஏன் இங்கே கூட்டிட்டு வந்துருக்க?” என்றார்.
“ஐயா… நீங்க மதுக்கடைக்கு வருபவர்களின் காலில் விழுந்து விழுந்து போகாதீங்கடா போகாதீங்கடானு போதையில் பெனாத்திக்கிட்டு இருந்தீங்க. சில பேர் உங்களை அசிங்கமாக திட்டினர். சிலர் எட்டி உதைத்தனர். மனசு சங்கடமா போச்சி ஐயா. எவன் குடித்தால் உங்களுக்கென்ன? நீங்கள் குடித்து விட்டு போகாதீங்க போகாதீங்கனு சொன்னா எவன் கேட்பான்? புத்தி சொல்லனும்னா நாம சரியா இருக்கனும்ல” என்றான் சேது.
“தம்பி உம் பேரு?”
“சேது”
“ம்… தம்பி எனக்கு கல்யாணம் ஆகுறத்துக்கு முன்பெல்லாம், இந்தக் கருமத்தைத் தொட்டுக் கூட பார்த்ததில்லை. கல்யாணம் பண்ணினேன், இரண்டு குழந்தைகள் ஆயிடுத்து. குடும்பத்தைக் காப்பாற்றியாகனும்ல, மாடு மாதிரி உழைத்தேன். வாழ்க்கை மகிழ்ச்சியாக போனது.
அந்தப் பாவி முருகேசனை மட்டும் என் வாழ்க்கையில சந்திக்கலேனா, நான் குடிச்சிருக்கவே மாட்டேன். என் வீட்டில் இரண்டு உழவு மாடுகள் இருந்தது. காலையில வயல உழ ஆரம்பித்தால், சாய்ந்தரம் வரைக்கும் என் பாட்டுக்கு வேலையாக கிடப்பேன்.
வேலை முடிந்ததும் தோளில் துண்டைப் போட்டுக்கிட்டு சாவடிப் பக்கம் காற்று வாங்க போவேன். இன்றைக்கு நினைத்தாலும் மகிழ்ச்சியாக இருக்கும். ஒரு நாள் சாவடி பக்கம் முருகேசன் வந்தான். வெளிநாட்டில் இருந்திட்டு, முதல் நாள் தான் வந்திருந்தான். என்ன மாமா உட்கார்ந்திட்ட?” என்றான்.
“சும்மா மாப்ள உடம்பெல்லாம் ஒரே நோவு, செத்த காத்து வாங்கலாம்னு” என்றேன்.
“காத்து வாங்குனா உடம்பு நோவெல்லாம் சரியாகாது, வீட்டுக்கு வா மாமா” என்று அவன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
(வீட்டிற்குள் நுழைந்ததும்) “சீமச் சரக்கு மாமா, இதை போட்டாக்க உடம்பு நோவெல்லாம் பறந்து போயிடும்” என்றான்.
“மாப்ள, நமக்கு இதெல்லாம் சரிபட்டு வராது, நான் கிளம்புறேன்” என்றேன்.
“மாமா கொஞ்சம் போட்டுத் தான் பாரேன்” என்றான்.
“என் உடல் நோவால், முதல் முறையாக கொஞ்சம் சிரமப்பட்டுப் போட்டேன். போட்டதுக்கு பிறகு அப்படியே வானத்தில் மிதக்கிறாப்ல இருந்தது. அடுத்த நாள் வேலை முடிந்ததும், கொஞ்சூண்டு போட்டா தேவலைனு தோன்றியது. சாய்ந்தரம் சாய்ந்தரம்னு நிறைய போட ஆரம்பித்தேன்.
விடிந்ததும் விடியாததுமா ஒரை ஊத்தவும் சொல்லியது.அப்படியே தொடர்ந்து ராத்திரி பகல் என்று முழுக்க அந்த கருமத்தை போட ஆரம்பித்தேன். அந்தப் பாழாய்ப் போன கருமம் வீட்டையே மறக்கடித்தது.
அப்பொழுதெல்லாம் என் பொண்டாட்டி, நான் வீட்டுக்குப் போற வரைக்கும் சோறு திண்ண மாட்டாள். அவ்வளவு பாசமாக இருப்பாள். என் பிள்ளைகள் இரண்டும் என் கையால இரண்டு உருண்டை சாதம் சாப்பிட போட்டிப் போட்டு நிற்கும், அவ்வளவு மகிழ்ச்சியான நாட்கள் தம்பி அது
நாளடைவில் அது அப்படியே மாறிப் போய்டுத்து. ஊரில் எவனெவனோ சொன்னாய்ங்க, ராத்திரி உன் வீட்டுக்கு அடிக்கடி ஒருத்தன் வந்து போறானென்று. என் பொண்டாட்டி நல்லவ தான். ஊருக்காரனுவ அப்படிச் சொல்ல, நான் தான் சரியில்லாமல் போனேன்.
ஒருநாள் நான் போதையில் ரோட்டோரமா தள்ளாடி போறதை பார்த்த என் பையன், என்னைப் பிடிக்க வரும் போது லாரியில் அடிபட்டு அங்கேயே செத்து போய்ட்டான்.இந்தப் பாழாய்ப் போனவனுக்கு போதையில் அது கூட தெரியல தம்பி”
கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. சேது தன் கைகுட்டையால் அந்தப் பெரியவரின் கண்களை துடைத்து விட்டான்
சிறிது மெளனத்திற்குப் பிறகு அந்தப் பெரியவர் பேச தொடங்கினார்
“மகனைப் பறி கொடுத்ததை நினைத்து நினைத்து மேலும் போட ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்தில் என் பொண்டாட்டியும், மகளும் என் ஊதாரிதனத்தால, அரளி விதையை அரைச்சி குடிச்சிட்டு தற்கொலை பண்ணிக்கிடுச்சிங்க தம்பி, போச்சி எல்லாம் போச்சி”
தலையில் அடித்துக் கொண்டு, “இப்ப கூட ஒரை ஊத்த சொல்லுது தம்பி அதான் என்னைப் போல அந்த பழக்கத்துக்கு அடிமையாகி அனாதை ஆகிட வேண்டாம்னு எல்லாரையும் கெஞ்சறேன்” என கண்ணீரோடு கூறினார் முதியவர்
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமாய் அவரின் வாழ்வு வீணாய் போனது, இது நம் எல்லோருக்குமான வாழ்க்கைப் பாடம்
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings