ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
‘மறுபடியும் தோல்வி’ பல மின்னிதழ்களின் தலைப்பு செய்தியாக வந்தது.
விடுதலையின் விளிம்பில் இருப்பதாக இறுதி மூச்சை பிடித்துக் கொண்டிருந்த எங்களுக்கு மறுபடியும் தோல்வி
“பூமி 2.0 பயணம் ரத்து, கவலை வேண்டாம். தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடத்திக் கொண்டு தான் உள்ளன. இன்னும் இரண்டே மாதங்களில் உங்கள் அனைவருக்கும் நற்செய்தி. காத்திருங்கள் 1 ஏப்ரல் 2105 புதிய உலகத்திற்கான பயணம் நிச்சயம்’
மேலும் படிக்க தெம்பில்லாமல் படுக்கையில் சாய்ந்தேன்.
நேர்முகத்தேர்வு, உடல் ஆய்வு, புத்தி கூர்மை தேர்வு என பல சோதனைகளிலும் தேர்வாகி விண்ணப்பப் பாரத்தில் என் பெயரின் அருகில் “செலக்டட்” என்ற வார்த்தையைப் பார்த்ததும் சொர்க்க வாசலை பார்த்து விட்ட மகிழ்ச்சி மனதில் ரீங்காரமிட்டது.
“இந்த நரகத்திலிருந்து மொதல்ல உன்னை வெளியேத்தனும்” என்ற அம்மாவின் தியாக மரணத்திற்கு முன் அடிக்கடி கூறிய வார்த்தைகள் நினைவாகப் போவதாக எண்ணியிருந்த எனக்கு அதிர்ச்சி கலந்த ஏமாற்றம் தான்.
அடுத்து என்ன?
உயிரற்ற உடலை சென்சர் மூலமாக அறிந்து சற்று நேரத்திற்கெல்லாம் உடல் மின்சார பெட்டி மூலம் 64வது மாடியிலிருந்து அறுவை அறைக்கு அனுப்பட்டது
கண்களும், கிட்னியும் உறை பெட்டியில் எனக்கு வந்து சேர்ந்தன. அப்பாவின் கண்களை விட அம்மாவின் கண்கள் ஆரோக்கியமாக இருப்பதாக ரிப்போர்டும் கூடவே வந்தது.
ஆங்காங்கே ஏமாற்றத்தில் கதறி அழும் ஓலங்கள் மட்டும் ஒலித்து ஒலித்து ஓய்ந்து கொண்டிருக்கின்றன. அரசாங்கத்திடமிருந்து மௌன பதில்கள். குப்பைகளோடு வாழ்ந்து வரும் இந்த வாழ்க்கை இன்னும் எது வரை நீடிக்கும் என்று தெரியவில்லை.
டன் கணக்கில் குவிந்துள்ள குப்பைகளின் ரசாயன தாக்கம், ஆக்சிஜன் குறைப்பாடு, நிலஅதிர்வு என பல நெருக்கடிக்களுக்கு தீர்வு காண போராடி தோற்றுப் போன அரசாங்கம் கண்டுபிடித்த அடுத்த நூதன திட்டம் தான் புதிய உலகம்.
மனித நடமாட்டமே இதுவரை இல்லாத புதிய உலகத்தில் ஆய்வுகூடங்களை அமைத்து மானிடர்கள் வாழ ஏற்பாட்டு பணிகள் அனைத்தும் நடப்பதாக கூறி அதற்கான தேர்வுகளையும் முன்கூட்டியே செய்து முடித்தனர்.
ஆனால் இந்த முறையும் என்னமோ ஏமாற்றம் தான். சிலிண்டர் இல்லாத வாழ்க்கையைச் சொல்லத் தான் கேள்விப்பட்டுள்ளேன். புதிய உலகத்தில் எங்கும் எதிலும் ஆக்சிஜன். பச்சை நிற மேற்சட்டையும் பழுப்பு காற்சட்டையும் அணிந்தவர்கள் அங்கு அணிவகுத்து நிற்பார்களாம்.
அவர்கள் இருக்கும் வரை ஆக்சிஜனுக்கு பஞ்சமில்லையாம். விடிந்ததும் கேட்கும் விளம்பரம் என்பதால் மனதில் ஆழ பதிந்து விட்டன.
“மரம் செடி இருக்கும் போது இந்த சிலிண்டர் தேவைப்படாது. எங்க பார்த்தாலும் ஆக்சிஜன் இருக்கும். இப்படி உடம்புல தனியா கட்டிட்டு அழைய தேவையில்லை” என்று தான் கடந்து வந்த அனுபவத்தை அம்மா சொல்ல கேட்கும் போது வேற்று கிரகவாசியோடு பேசிக் கொண்டிருப்ப்தை போல உணர்வு உயிரோடும்.
அம்மாவின் அதிகமான நிழற்படத்தின் பின்னால் மரங்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. அப்படியொன்றும் அழகாக தெரியவில்லை என்பதால் எனக்கு மரத்தின் மீது ஈர்ப்பு ஏற்படவில்லை.
ஆனால் அம்மாவின் கடந்த கால கதைகளில் அவன் கண்டிப்பாக இடம் பெறுவான். மரத்தின் தோற்றத்தைப் பார்த்தால் ஆணாகத் தான் இருக்க முடியும் என்று தோன்றுகிறது.
தன் குடும்ப வாரிசுகளை உருவாக்கும் பணியில் சில வருடங்களுக்கு முன் எனக்காக சேகரித்த விந்து செலுத்தப்பட்ட கருமுட்டைகளை உறைய வைத்து பாதுகாத்தது மட்டுமின்றி, என் புதிய உலக பயணத்திற்கான அனைத்து காரியங்களையும் முனைப்போடு செய்தவர் அம்மா
மூன்றாம் உலக போருக்கு பின் உலகம் அடைந்த பேரழிவுகளை அம்மா சொல்ல கேட்டிருக்கிறேன். தொடர்கிருமி தொற்றால் உலகம் பேரழிவை எதிர்நோக்கியதாகவும், புவியின் விளைச்சல் பகுதிகள் குப்பைகளாலும் கழிவுகளாலும் முற்றழிவை எதிர்நோக்கியதையும் அம்மா கூறியபோதெல்லாம், போருக்கு முன் செழிப்பாக இருந்திருக்கும் அந்த அழகிய உலகத்தை காண வேண்டும் என்ற ஆவலே அடிக்கடி வந்து போகும்.
“போருக்கு அப்புறம் மக்கள் ரொம்பவே குறைஞ்சு போயிட்டாங்க. என் கூட பொறந்தவங்க, என்னைப் பெத்தவங்க எல்லாரும் என் கன்ணு முன்னுக்கே சீக்குல செத்துப் போறதை அந்த சின்ன வயசுலையே பார்த்தேன்.பாக்குற இடமெல்லாம் செத்த உடம்பு. அப்ப..பபா.. நினைக்கவே கஷ்டமா இருக்கு”
அம்மா தன் உடன்பிறந்தோரை இழந்த கதைகளைக் கூறி அன்றைய நாளையே துக்க நாளாகவும் அனுசரித்து விடுவார்.
அதன் பிறகு அப்பாவோடு அறிமுகம் மற்றும் திருமணம்.
“மக்கள் தொகை ரொம்ப குறைஞ்சு போச்சு, ஒரு தம்பதிங்க கண்டிப்பா 5குழந்தைகளைப் பெத்துக்கணும் கட்டாயம். இல்லைன்னா தண்டனைனு சட்டமே இருந்துச்சு அப்போல்லாம்” என்று அம்மா கூறிய போதெல்லாம் ஆச்சரியத்தின் விளிம்பிற்கே சென்ற நாட்களும் உள்ளன.
“கொஞ்ச நாளுலேயே மறுபடியும் பசி பட்டினி, நில நடுக்கம் எப்படின்னு மனுசன் பண்ண அழிவு பத்தாம இயற்கை வேற ஒரு பக்கம் மனுசன் மேல பழி தீர்த்துக்கிட்டு இருந்துச்சு, அப்பதான் நீ பொறந்தம்மா” என்று உலக அழிவை பற்றி ஆரம்பித்தாலும் இறுதியில் என் வருகையை ஆனந்ததோடு சொல்லி முடிப்பார்.
“ம்ம்ம் அப்புறம் எங்க மக்கள் தொகை அதிகரிப்பை பத்தி யோசிக்கிறது. இருக்கிறவங்களை காப்பாத்துனா போதும்ன்னு ஆச்சு. ஆனா என்ன பண்றது. அதுக்கு மேல இங்க வாழ்றதே நரகமாயிடுச்சு. போதாத காலம். அரசாங்கத்தோடு பெரிய முயற்சில தான் இந்த புதிய உலக ஏற்பாடு. நீ அங்க போயி உனக்கு பிடிச்ச மாதிரி பிள்ளைங்க பெத்துக்கிட்டு சந்தோசமா வாழனும்” என்று அம்மா சொல்லும் போதெல்லாம், அம்மா என்னை மட்டுமே அங்கு அனுப்பும் திட்டம் கொண்டுள்ளதை அறியவில்லை நான்
ஆனால் இன்று அம்மாவின் ஆசை நிராசையாகிவிட்டதை நினைக்கும் போது, நாளை விடியலை பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை. அம்மாவின் கணக்கு படி நாளை என் புதிய பயணம் ஆரம்பமாக வேண்டும், வீட்டிலுள்ள பொருட்களும் நாளையோடு முடிந்து விடும்.
நாளைய விடியலும் இருண்டு கொண்டே வருவதை போல ஓர் உணர்வு. புதிய உலக கனவு சாத்தியமில்லை என்பதை உணர்ந்த பிறகு நாளைய விடியல் எனக்கு அருவருப்பூட்டின. ஏதாவது செய்தாக வேண்டும்.
தற்கொலை செய்து கொண்டால் எப்பொழுதும் போல உயிரற்ற உடல் இருப்பதைமரண அலாரம் காட்டி கொடுத்து என் உடலும் எறிக்கப்படும்.
ஜன்னல் வழியாக புதிய உலகம் என்று காட்டப்பட்ட வானத்தைப் பார்த்தேன். நட்சத்திரங்கள் எப்பொழுதும் போல நம்பிக்கையாக மிளிர்ந்து கொண்டிருந்தன
வேறு வழியில்லை. செய்து தான் ஆக வேண்டும். வெளியில் பனிபொழிவு இருப்பதை கைப்பேசி நினைவுப்படுத்தியது. தலையை சேர்த்து மூடும் கருப்பு ஜாக்கெட்டை அணிந்தேன்.
என் பிறப்பு எண் பொறிக்கப்பட்ட சில் சங்கிலியை மாட்டிக் கொண்டு வெளியில் வந்தேன். லிட்ப் சர்ரென்று முதல் மாடிக்கு அழைத்துச் சென்றது. ஏமாற்ற கதறல்கள் ஓரளவு குறைந்திருந்தன. சாலையெங்கும் கேமிராக்கள் படமெடுத்து கொண்டிருந்தன.
சாலையை நோக்கி நடந்தேன். கேமிராக்கள் சென்சர் மூலம் நான் வருவதை அறிந்து என் பக்கம் திரும்பின. என் பாக்கெட்டிலிருந்த பொருட்களின் லிஸ்ட்டை நீட்டினேன். கேமரா படம் எடுத்துக் கொண்டது.
“ரிசிவ்ட், யூ மே கோ” என்ற குரல் பதிவை கேட்டதும், அறையை நோக்கி நடந்தேன். அடுத்த புதிய உலக பயணச் செய்திகள் வரும் வரைக்கான உணவு பொருட்கள் அறைக்கு சற்று நேரத்திற்கெல்லாம் வந்து விடும்.
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings