எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
வள்ளிக்கு கடவுள் பக்தி ரொம்பவும் அதிகம். கண்ணில் படும் கோவில்களுக்கெல்லாம் போய் விடுவாள்.
கல்யாணம் ஆகி வந்ததும் முதல் முதலாக குலதெய்வ கோவிலுக்கு போக வேண்டுனென்று சொல்லிவிட்டார்கள். முப்பது கிலோ மீட்டர் தூரம் என்பதால் டாக்ஸி எடுத்துக்கொண்டு போகலாம் என்று கார்த்திக் சொன்னான். ஆனால் வள்ளிக்குத்தான் புல்லட்டில் போக ஆசை. கணவனின் தோளில் கைப் போட்டுக்கொண்டு போகவேண்டும். புது மனைவியாயிற்றே, அவன் மறுக்கவில்லை.
போகிற வழியில்தான் அந்த அதிர்ச்சியான விஷயத்தை அவன் சொன்னான்.
‘வள்ளி… உனக்கு எப்படின்னு எனக்குத் தெரியலை… ஆனா எனக்கு இந்த சாமி பூதம் எதுலேயும் நம்பிக்கை இல்லை. அம்மா அப்பா சொன்னாங்களேனு கிளம்பிட்டேன். உங்க அப்பா அம்மாவும் கூட அன்னிக்கு சொன்னாங்க… முதல்ல குலதெய்வ கோவிலுக்குத் தான் போகணும்னு. நான் அப்போவே சொல்லியிருப்பேன், எனக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்லைனு. ஆனா பெரியவங்க சொன்னதும் உடனே மறுத்தா நல்லா இருக்காதுன்னு தோனுச்சு. நீ போயி சாமியை கும்பிடறே. நான் வெளியேயே நின்னுக்கறேன்… ‘
அவன் சொல்ல ஆரம்பித்ததும் அதிர்ச்சியானாலும், எப்படியாவது அவனை மாற்றி விடலாம் என்ற நம்பிக்கையும் அப்போதே அவளுக்குள் துளிர்விட்டுவிட்டது.
அவள் எங்காவது கோவிலுக்கு போய்விட்டு வந்து விபூதியோ குங்குமமோ அவனிடம் கொடுத்தால் எடுக்க மறுத்துவிடுவான். அவளாகவே அவனது நெற்றியில் வைக்க வந்தாலும் தடுத்துவிடுவான்.
ஆனால் அவனது அம்மா அப்படியே நேர் எதிர். வள்ளியை விட அவள் இன்னும் பயபக்தியாக இருந்தாள்.
‘செவ்வா வெள்ளில மறக்காம கோவிலுக்கு போகணும். வரலட்சுமி நோம்பு பிடிக்கணும்… துளசி மாடத்துக்கு தண்ணி ஊத்தி சுத்தி வரணும்… அஷ்டமி நவமி ராகு காலமெல்லாம் பார்த்துதான் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் செய்யணும்… ‘ இப்படி இன்னும் நிறைய விஷயங்களை அவளது மூளையில் அடுக்கினாள் மாமியார்.
வள்ளிக்கு அது எதுவும் பெரிய பிரச்சினையாக தோன்றவில்லை. அவள்தான் ஏற்கனவே பக்திமானியாயிற்றே. ஆனால் கணவன் ஏன் இப்படி இருக்கிறார் என்றுதான் அவளுக்குப் புரியவில்லை. மாமியாரிடம் கேட்கவும் பயம். அதனா கேட்காமல் விட்டிருந்தாள்.
கோவில் கும்பாபிஷேகம் என்று ஒரு கும்பல் வந்தது. ‘ என்கிட்டே கேஷ் இல்லை. நான் நெஃப்ட் பண்ணிடறேனே… ‘ என்றுவிட்டு ஆயிரம் ரூபாயை நன்கொடையாக அனுப்பினான். அந்தக் கும்பல் போனதும் இவள் கேட்டாள், ‘ ஏங்க… உங்களுக்குதான் கடவுள் நம்பிக்கை இல்லையே… அப்புறம் எதுக்கு நன்கொடை கொடுத்தீங்க… ‘
அவன் சிரித்தான். ‘ பாருப்பா… ரெண்டு விஷயம்… ஓன்னு, எனக்குத்தான் நம்பிக்கை இல்லை. ஆனா மத்தவங்களுக்கு இருக்கில்லே… நான் அதை மதிக்கறேன்… பார்… போன மாசம் அம்மனுக்கு பட்டுப் புடவை சாத்தனும்னு சொன்னே. ஆயிரம் ரூபாய்க்கு நான் புடவை வாங்கித் தரலையா… அப்படித்தான்… ‘ என்றவன், ‘ இன்னொன்னு, என்னை யாரும் ஏமாத்திடக் கூடாதுங்கறதுலேயும் உஷாராயிருப்பேன். அதுக்குதான் கேஷ் இல்லைன்னுட்டு நோட்டீஸ்ல இருந்த நெஃப்ட் டீடெய்ல்ஸ் பார்த்துட்டு நெஃப்ட் பண்ணினேன்… இப்போ நம்ம பணம் நேரா கோவிலுக்கே போய்டுமில்லையா… அவங்க நம்மலை எமாத்திடக் கூடாதில்லையா…’ என்றுவிட்டு சிரித்தான்.
அவளுக்கும் கொஞ்சம் திருப்திதான். எங்கே, எனக்கும் நம்பிக்கை இல்லை, சாமிக்கும் எதுவும் செய்யவும் மாட்டேன் என்று தத்துவம் பேசுவானோ என்று.
ஒருமுறை மாமியாரே சொல்லியிருக்கிறார், ‘ இதோ பார்மா… சாமி விஷயத்துல அவன்கிட்ட கறாரா பேசாதே. அவன் சிலசமயம் டென்ஷனாயிடுவான். நாங்க சாமி கும்பிடுவோம். படையல் போடுவோம். அவன் நல்லா சாப்பிடமட்டும் செய்வான். மத்தபடி நாங்களும் அவனை சாமி கும்பிடு, விபூதி வைனெல்லாம் வற்புறுத்தறதில்லை. அப்படியே வளர்ந்துட்டான். ஆனா நீ ரொம்ப பயபக்தியா இருக்கே. முடிஞ்சா அவனை மெல்ல மெல்ல மாத்த முயற்சி பண்ணு… வற்புறுத்தாதே… ‘ என்று விட்டு புன்னகைத்தார்.
இடையில் அவனுக்கு உத்தியோக உயர்வு கிடைத்தது.
‘பாருங்க… நீங்க அன்னிக்கு இண்டர்வியூக்கு போகும்போதே நான் சாமிக்கிட்டே வேண்டிக்கிட்டிருந்தேன். இப்போ ப்ரமோஷன் வந்திடுச்சு… சாயங்காலம் கோவிலுக்குப் போறோம்… நேர்த்திக் கடன் செலுத்தறோம்… ‘ என்றாள்.
சிரித்தபடி சொன்னான், ‘ தாராளமா… பூஜா ஸ்டோர்ல என்னென்ன வாங்கிட்டு வரணும்னு சொல்லு… வாங்கிட்டு வர்றேன்… ‘
கோவிலில் இருந்து கொண்டுவந்த விபூதியை அவனது நெற்றியில் இட்டுவிட்டாள். முறைத்தான் அவன், ஆனால் திட்டவில்லை.
மாடிக்குப் போய் காகத்துக்கு சாதம் வைத்துவிட்டு வா என்று அவனை அனுப்பினாள் அம்மா. போய்விட்டு வந்தவனின் நெற்றி சுத்தமாய் இருந்தது.
‘ இந்தாங்க… நெத்தில வச்சுவிட்ட விபூதி எங்கே… ‘ என்று செல்லமாய் கடிந்து கொண்டாள்.
‘ மொட்டை மாடில முகம் கழுவினேன். போயே போச்சு… ‘ என்று சிரித்தான்.
‘ சாமி கும்பிட்டபிறகு முகமும் அலம்பக் கூடாது… ‘ என்று செல்லமாய் கடிந்து கொண்டாள். சிரித்தான் அவன்.
ஒருநாள் வாந்தி எடுத்தாள். டாக்டரிடம் போனதும் பரிசோதித்துவிட்டு நாற்பது நாட்கள் ஆகியிருக்கும் என்றார் டாக்டர். வெளியே வந்ததும், ‘ தேங்க்ஸ்… ‘ என்றான்.
‘ எதுக்கு. .. ‘ என்றாள்.
‘ எனக்கு இன்னொரு புரோமோஷன் கிடைக்கப் போகுதில்லே… அதுவும் உன்மூலமா… ‘ என்றான்.
சிரித்தாள் அவள். ‘ சரி… வாங்க வீட்டுக்கு போற வழியில கோவிலுக்குப் போயிட்டுப் போகலாம்…’ என்றவள், ‘ அப்பாவாகப் போறீங்க… வந்து சாமி கும்பிடலைன்னாலும் பிரகாரத்தையாவது சுத்திவாங்க… அம்மையப்பனை சுத்தி வந்து மாம்பழத்தை வாங்கிகிட்ட விநாயகர் மாதிரி… ‘
அவள் சிரிக்க அவனும் சிரித்தான்.
கோவில் நெருங்கியதும், ‘ நீ போயிட்டு வா… சுத்திட்டு வா… ‘ என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டான். அவள் செல்லமாய் கடிந்து கொண்டு, பிறகு தானே போய் வந்தாள். தொன்னையில் கொண்டுவந்த பொங்கலை அவனிடம் நீட்டினாள். எடுத்துச் சுவைத்தான். ‘ பேஷ் பேஷ் ரொம்ப பிரமாதமாயிருக்கு ‘ என்றான்.
‘ பொங்கல் எப்படி சாமி பிரசாதமோ, அப்படித்தான் விபூதி குங்குமமும்… ‘ என்றுவிட்டு விபூதியை அவனது நெற்றியில் வைக்கப் போனாள். முறைத்தான். ஆனாலும் விபூதி குங்குமத்தை வைத்துவிட்டாள்.
தினமும் ஆபீஸ் விட்டு வந்ததும் ‘ பாப்பா என்ன பண்றே… ‘ என்று வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் பேச ஆரம்பிப்பான்.
‘ இந்தாங்க… மகன்தான்… ஏன் திரும்பத் திரும்ப பாப்பானு சொல்றீங்க ‘ என்பாள்.
‘ இல்லே பாப்பாதான்… ‘ என்பான் அவன்.
‘ இல்லே இல்லே… நான் தினமும் சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டுதான் இருக்கேன் பையன்தான் பிறக்கணும்னு… ‘ என்றவள் ‘ நான் பேர் கூட செலக்ட் பண்ணிட்டேன்… ‘ என்று சிரித்தாள்.
‘ எப்போ செலக்ட் பண்ணினே… என்னனு… ‘
‘ இன்னிக்கித்தான்… பேர் கணேஷ்… ‘
சிரித்தான் அவன். ‘ அப்பாவுக்கு தம்பி பேரு… மகனுக்கு அண்ணன் பெயரா… சரி சரி… ஏதாவது ஓன்னு பிறக்கட்டும்… ‘
‘ ஏங்க… நான் சாமிக்கிட்டே நேர்ந்துகிட்டிருக்கேன்… தம்பி பொறந்ததும் போய் நேர்த்தி கடனை செலுத்திடனும்… ‘ என்றாள்.
வலி வந்துவிட்டது என்று ஆபீஸ்க்கு ஃபோன் வந்தது. உடனே புல்லட்டை எடுத்துக்கொண்டு பறந்தான். பாதி வழியிலேயே ‘ குழந்தை பிறந்துடுச்சு… பையன்… ‘ என்று அம்மா சொன்னார்கள்.
பதைபதைப்புடன் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தான். வள்ளியை இப்போது பார்க்க முடியாது என்று தெரிந்தது.
கையில் பிளாஸ்க்குடன் வந்து நின்ற அம்மா, ‘ அப்பா வந்துக்கிட்டிருக்கார்டா… அதுக்குள்ளே நர்ஸ் காபி வாங்கிட்டு வந்து வைக்கச் சொன்னாங்க… வள்ளிக்கு கொடுக்கணுமாம்… ‘ என்றார்கள்.
‘ சரி கொடு நான் வாங்கிட்டு வர்றேன்… ‘ என்று பிளாஸ்க்கை வாங்கிக்கொண்டு ஓடிப்போய் காபி வாங்கிக்கொண்டு ஓடோடி வந்தான். சில நொடிகளில் ஸ்ட்ரெச்சர் வந்தது. வள்ளி அவனைப் பார்த்ததும் புன்னகைத்தாள். நர்ஸ்கள் காபி பிளாஸ்க்கை மட்டும் வாங்கிக்கொண்டு அவர்களை காத்திருக்கச் சொன்னார்கள்.
சில நொடிகளில் நர்ஸ்கள் வெளியேறியதும் மகனை மட்டும் முதலில் அனுப்பினார் அம்மா. மனைவிக்கு கை கொடுத்தபடி, ‘ புது அம்மாவுக்கு வாழ்த்துக்கள்… ‘ என்றான்.
‘ உங்களுக்கும்தான்… ‘ என்றாள்.
உடனே சட்டைப் பாக்கெட்டில் இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்தான்.
அவள் வியப்புடன் கேட்டாள், ‘ என்ன கிஃப்டா… ‘
‘ ஒண்ணுமில்லை.. அதைவிட மதிப்பானது… ‘ என்றவன் பொட்டலத்தை பிரித்துக் காட்டி, ‘பிரசாதம்… வர்ற வழியில அம்மன் கோவில் இருக்கில்லே. வண்டியை நிறுத்தி நீ ஆசைப்பட்ட மாதிரி பையனே பொறந்துடவும் உன் பேருக்கும் தம்பி பேருக்கும் ஒரு அர்ச்சனை பண்ணினேன்… ‘ என்றபடி குங்குமத்தை அவளுக்கு இட்டுவிட்டான். அவனது கையை இறுகப் பற்றிக்கொண்டாள், அவள்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings