எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“என்னங்க சாப்பிட வரலையா? அப்படியே தூங்கிடாதீங்க.”
“இல்ல சரளா, நீங்கெல்லாம் சாப்பிடுங்க. எனக்கு ஒருமாதிரி இருக்கு. நான் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடறேன்.”
தலைக்கு மேலே சுழன்று கொண்டிருந்த மின்விசிறியைப் பார்த்தபடியே தன் மனைவியிடம் சொன்னான் ரகு. கணவனின் மனநிலையை அறிந்தவளாதலால் சரளாவும் அதற்குமேல் வற்புறுத்தாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.
ரகுவின் சிந்தனை முழுவதும் அவனுடைய அப்பா வேதமூர்த்தி நிறைந்திருந்தார். அப்பாவின் திடீர் மரணம் அவனை உலுக்கிவிட்டிருந்தது. ஏதாவது உடல்நலம் சரியில்லாமல் ஆஸ்பத்திரி, சிகிச்சை, நடமாட்டம் குறைதல், படுத்த படுக்கை என்று சிரமப்பட்டிருந்தால்கூட அவரின் இறுதிக் காலம் நெருங்குகிறது என்று மனதைத் தயார்ப்படுத்தியிருப்பான். ஆனால் நன்றாக நடமாடிக் கொண்டிருந்தவர் திடீரென ஒரு நாள் காலையில் கண் விழிக்கவில்லை என்றால், அந்த இழப்பை ரகுவால் ஜீரணிக்க முடியவில்லை.
அநேக வீடுகளில் நடக்கும் நிதர்சனம் இதுதான். உடல்நலம் சரியில்லாத முதியவர்களைப் பராமரிப்பதை பாரமாகக் கருதுபவர்கள் ஒருபுறம். ஆரோக்கியமாக, தங்கள் வேலைகளைத் தாங்களே செய்துகொண்டு, யாருக்கும் தொந்தரவில்லாமல் வாழும் முதியவர்களை, வயதில் மூத்தவர்கள் என்ற கோணத்தில் நடத்தாமல், தங்களுக்கு இணையாக நடத்திவிட்டு, அவர்கள் மறைந்தபின் தவிப்பவர்கள் ஒருபுறம். இதில் ரகு இரண்டாவது ரகம்.
ரகு எதிலும் பிடிப்பில்லாமல் நாட்களை நகர்த்தினான். அப்பாவின் காரியங்கள் முடியும் வரை, உறவுகள் வந்து போக இருந்ததால் எப்படியோ சமாளித்துவிட்டான். ஆனால் இப்போது வீட்டில் அப்பா இல்லாதது மிகப்பெரிய வெற்றிடம் உருவான உணர்வைத் தந்தது அவனுக்கு.
அப்பாவின் அறையில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் ஆயிரம் கதைகளைச் சுமந்து கொண்டு மௌன விரதம் இருப்பதாகத் தோன்றியது. அப்பா பேசிய வார்த்தைகள் காதில் வந்து வந்து மோதி அவனை ஆழம் பார்த்தன.
“என்னப்பா ரகு வேலையா இருக்கியா? கொஞ்ச நேரம் இப்படி வந்து உட்காரேன், ஏதாவது பேசிட்டிருக்கலாம்.”
“அப்பா, சும்மா பேசறதுக்கு என்ன இருக்கு? ஏற்கனவே பேசின பழங்கதைகளையே திரும்பத் திரும்பப் பேசுவீங்க. அதைக் கேட்கற அளவுக்கு எனக்கு நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை. அந்த நேரத்துக்கு நான் ரெண்டு மெயில் அனுப்பிடுவேன். டிவில நாலு பாட்டு பார்த்துடுவேன்.
காலைல ஓட ஆரம்பிச்சா ட்ராஃபிக், ஆஃபீஸ் டென்ஷன், மறுபடியும் ட்ராஃபிக்னு எல்லாம் முடிச்சு வீட்டுக்கு வந்தா, பசங்க படிப்பு, அவங்க ஸ்கூல் பிரச்சனைனு சமாளிக்கறதுக்குள்ள பைத்தியம் புடிக்குது. கிடைக்கற கொஞ்ச நேரத்துல கண்ணை மூடி நிம்மதியா இருக்கலாம்னா நீங்க வேற தொணதொணனு ஏதோ நச்சறீங்க.
நீங்க வேலை பார்த்த காலத்துல இவ்வளவு கஷ்டங்கள் உங்களுக்கு இருந்திருக்காது பா. அம்மா வேலைக்குப் போகல. அதனால வீட்டுப் பிரச்சனைகளை அம்மாவே சமாளிச்சிருப்பாங்க. ஆனா இங்கே நாங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போறோம். புரிஞ்சுக்கோங்க பா. கொஞ்ச நேரம் என்னை ஃப்ரீயா விடுங்க.”
கடந்த ஒரு வருட காலத்தில் ரகு தன் அப்பாவிடம் அதிகம் பேசிய வார்த்தைகள் இவை. வேதமூர்த்தி எழுபத்தைந்து வயதிலும் உற்சாகமாகப் பேசக் கூடியவர். போன வருடம்வரை சாத்தூரில் மனைவி கமலாவுடன் வாழ்க்கையை ஓட்டியவர். கமலாவின் மறைவுக்குப் பிறகு தனியாக இருக்க வேண்டாம் என்று ரகுதான் பலவந்தமாக வேதமூர்த்தியை சென்னைக்கு அழைத்து வந்தான். வேதமூர்த்திக்கு இதில் உடன்பாடில்லை.
“ரகு, பழகின இடம். நானும் கமலாவும் வாழ்ந்த வீடு. நான் பாட்டுக்கு என் வாழ்க்கையைப் பார்த்துக்கறேன். நீ எப்போ முடியுதோ வந்து பாரு. அங்கே எனக்கு யாரையும் தெரியாது ரகு.”
“அப்பா, உங்களை இங்கே தனியா விட்டுட்டு அங்கே நான் நிம்மதியா இருக்க முடியாது. நினைச்ச நேரத்துக்கு ஓடி வர முடியாது. அங்கே எல்லா வசதிகளும் இருக்கு. பேசாம வாங்க.”
ரகுவுடன் சென்னைக்கு வந்த வேதமூர்த்தியின் சுதந்திரம் சாத்தூரிலேயே தங்கிவிட்டது. சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பு வாழ்க்கை, பரபரப்பு நிறைந்த அன்றாட நகர்வுகள், பேச்சுத் துணையில்லாத தனிமை, மனைவி இல்லாத வெற்றிடம் எல்லாம் சேர்ந்து வேதமூர்த்தியைப் பதம் பார்த்தன.
“அப்பா, இது சாத்தூர் இல்ல. நீங்க பாட்டுக்கு கடைக்குப் போறேன்னு தனியா வெளியில கிளம்பாதீங்க. இங்கே டிராஃபிக் அதிகம். கொஞ்சம் ஏமாந்தா அவ்வளவுதான். ரொம்ப கவனமா இருக்கணும். நான் வெளில போகும்போது உங்களையும் கூட்டிட்டுப் போறேன். வீட்டுல டிவி இருக்கு, கதைப் புஸ்தகங்கள் இருக்கு. பேரனும் பேத்தியும் இருக்காங்க. இதுக்கெல்லாமே உங்களுக்கு நேரம் போதாது.
நானும் சரளாவும் வேலைக்குக் கிளம்பறதுக்கு முன்னால உங்களுக்கு எல்லாம் செஞ்சு வச்சுடுவோம். நீங்க வீட்டுல நிம்மதியா இருங்க. சாயந்தரம் ஸ்கூல்ல இருந்து வர பேரப் பிள்ளைகளைப் பார்த்துக்கோங்க. அப்புறம் முக்கியமான விஷயம் பா, அக்கம்பக்கம் தேவையில்லாம யாருகிட்டயும் பேசாதீங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி. நீங்க ஊர்ல பேசற மாதிரி இங்கே பேசினா தப்பா நினைப்பாங்க. கவனமா இருங்க. இவ்வளவு வருஷங்கள் அப்பப்போ வந்து போயிட்டிருந்தீங்க, அது வேற. ஆனா இனிமேல் இங்கதான் இருக்கப் போறீங்க. நான் சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சுக்கோங்க.”
வந்ததும் வராததுமாக ரகு அடுக்கிய பட்டியல் வேதமூர்த்திக்கு மலைப்பைத் தந்தது. இருந்தாலும் ரகு, சரளா, பேரக் குழந்தைகள் இருக்கிறார்களே, அவர்களுடன் பேசலாம் என்று தேற்றிக் கொண்டார். ஆனால் பத்து நாட்களில் அவர்களின் சாயம் வெளுத்தது. யாரும் வேதமூர்த்தியோடு உட்கார்ந்து பேசத் தயாராக இல்லை. அவர்களின் அன்றாட அலுவல்கள் அப்படி இருந்ததால் தன்னிடம் பேசவில்லை என்று சமாதானப்படுத்திக் கொண்டார் வேதமூர்த்தி.
பதின்பருவத்தில் இருந்த பேரனும் பேத்தியும் மொபைல், டிவி, ஹோம் வொர்க் என்று பொழுதைக் கழித்தார்கள். வேதமூர்த்தி ஏதாவது கேட்டால்கூட சலிப்பாக பதில் வரும்.
“ஐயோ தாத்தா, உனக்கு ஒண்ணுமே தெரியல. சும்மா கேள்வி கேட்காதே.”
“தாத்தா, நீ சொல்ற கதை எல்லாம் போரிங்கா இருக்கு. நீயும் அப்பாவும் சின்ன வயசுல பண்ண குறும்பெல்லாம் மொக்கையா இருக்கு தாத்தா. அதைவிட இந்த மொபைல்ல கேம் எவ்வளவு நல்லாயிருக்கு தெரியுமா. நடுல டிஸ்டர்ப் பண்ணாதே தாத்தா.”
இப்படித்தான் அவர்களிடமிருந்து பதில் வரும். அவ்வப்போது ஃபோனில் நண்பர்கள், உறவுகளிடம் மணிக்கணக்காகப் பேசுவார். அப்போது முகத்தில் பூரிப்பு விரியும். தெம்பாகி விடுவார். ஞாபகத்தில் இருக்கும் பால்ய நினைவுகளை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள மாட்டோமா என்ற தவிப்புக்கு ஒரே வடிகால் இதுபோன்ற ஃபோன் உரையாடல்கள்தான்.
அதற்கும் ரகு ஒரு நாள் கோபப்பட்டான்.
“என்னப்பா நீங்க, ஃபோன்ல வீட்டு விஷயம் எல்லாம் சொல்றீங்க. சட்டுனு பேசிட்டு வைக்கத் தெரியாதா? பசங்க எந்த ஸ்கூல்ல படிக்கறாங்க, சரளா வேலைக்குப் போறது இதெல்லாம் அவங்களுக்கு எதுக்குத் தெரியணும்? என்ன ஏதுன்னு அஞ்சு நிமிஷம் பேசிட்டு கட் பண்ணுங்க. நீங்க நம்மளைப்பத்தி அவ்வளவு சொல்றீங்களே, அவங்க வீட்டு விஷயம் ஒண்ணாவது வெளில விட்டாங்களா? சொல்லியிருக்க மாட்டாங்க, எனக்குத் தெரியும்.
எல்லாரும் தெளிவா இருக்காங்கப்பா. நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கீங்க? வயசானா மட்டும் போதுமா? காலத்துக்குத் தகுந்த மாதிரி, இருக்கற இடத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோங்க. உங்களை எப்பவும் கண்காணிச்சுட்டே இருந்தா மத்த வேலைகளைக் கவனிக்க வேண்டாமா? ஊர்ல தனியா சிரமப்படுவீங்களேன்னு இங்கே கூட்டிட்டு வந்தேன். ஊர்ல இருக்கறதை விட எல்லா வசதிகளும் இங்கே இருக்கு. ஆனா உங்களுக்கு கிருஷ்ணா ராமானு இருக்கத் தெரியல. ஊர் வம்பை இழுத்துட்டு வந்தா நான் பஞ்சாயத்து பண்ண மாட்டேன்.
நம்ம அபார்ட்மெண்ட்லயே என்கூட வேலை செய்யற ரெண்டு மூணு பேர் இருக்காங்க. அதுல ஒருத்தன் அடுத்த ப்ளாக்லயே இருக்கான். போன வாரம் அவன் உங்களை நம்ம அபார்ட்மெண்ட் கடைல பார்த்தானாம். அந்தக் கடைக்காரர்கிட்ட நீங்க ஏதோ வாதம் பண்ணிட்டு இருந்ததா சொன்னான். எனக்கு அவமானமாப் போச்சு நீங்க எதுக்கு கடைக்குப் போறீங்க? என்ன வேணுமோ நான் வாங்கித் தரேன். வாக்கிங் போயிட்டு பேசாம வீட்டுக்கு வரத் தெரியாதா? ஏம்பா இப்படிப் பண்றீங்க?”
கோபமும் சலிப்புமாக ரகு இப்படிப் பேசி சரியாக இன்றோடு ஆறு மாதங்கள் ஆகின்றன. இப்போது வேதமூர்த்தி உயிரோடு இல்லை. இருபது நாட்களுக்கு முன், தூக்கத்திலேயே மீளாத் தூக்கத்தைத் தேடிக்கொண்டார்.
பழைய நினைவுகளில் மூழ்கிக் கிடந்த ரகுவின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கன்னங்களில் கோடு போட்டது.
‘அப்பா, உங்களை ரொம்ப காயப்படுத்திட்டேன் பா. உங்களை அப்படியே ஏத்துக்காம நிறைய கட்டுப்பாடுகள் போட்டு, உங்களை இழந்துட்டேன். சுதந்திரமா, உங்களுக்குப் புடிச்ச மாதிரி இருக்க விடல. அதுவே உங்களுக்கு எமனா மாறிடுச்சு. என்கிட்ட ஏதேதோ பேசணும்னு சொன்னீங்க. ஆனா நான் கேட்கல. கலகலப்பா இருந்த உங்களை ரூம்லயே முடக்கிப் போட்டுட்டு இப்போ ஏங்கறேன். நீங்க இல்லாத வீடு வெறுமையா இருக்கு பா. உங்க குரலைக் கேட்காம என்னவோ மாதிரி இருக்கு.
ரெண்டு வயசு ஆன பிறகும் நான் சரியாப் பேசலேன்னு நீங்க விரதம் இருந்து எனக்காக சிரமப்பட்டீங்கன்னு அம்மா நிறைய தடவை சொல்லியிருக்காங்க. நான் பேசணும்னு ஏங்கின உங்களை, பேசக் கூடாதுன்னு அடக்கி வச்சுட்டேன். உங்க இயல்பை, இந்த வயசுக்கே உரிய சின்னச் சின்ன அடிப்படை ஆசைகளைக்கூட நான் மதிக்காமல் விட்டுட்டேன் பா.
அக்கம்பக்கம் இருக்கறவங்க, என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம், அப்பா ரொம்ப நல்லாப் பேசுவார், நேரம் போறதே தெரியாது. சமீபகாலமா அவரைப் பார்க்கவே முடியல. இப்படிப் போயிட்டாரேனு இப்ப சொல்றாங்க. நீங்க அவங்ககூட பேசினா என்னைத் தப்பா நினைப்பாங்கனு உங்களை அடக்கி வச்சேன். ஆனா இப்போதான் எல்லாரும் என்னைத் தப்பா நினைக்கறாங்க.
மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு கவலைப்பட்ட நான், நீங்க என்ன நினைக்கறீங்கனு கேட்கவே இல்லையே பா. நீங்க நீங்களாகவே ஊர்ல இருந்திருந்தா உயிரோட இருந்திருப்பீங்க பா. எனக்கு உயிர் தந்து என்னையே உயிரா நினைச்ச உங்களைக் காயப்படுத்தி கொன்னுட்டேனேபா. இப்போ உங்க குரலைக் கேட்காம ஒவ்வொரு நிமிஷமும் வெறுமையா இருக்கு. இருக்கறப்போ அருமை தெரியாதுன்னு சொல்வாங்களே, அது சரிதான் பா. உங்களை ரொம்ப மிஸ் பண்றேன். உங்ககிட்ட நிறைய பேசணும் போல இருக்கு.
என்மேல அன்பும் அக்கறையும் வச்சு, என்னை வழி நடத்தற வயசுல வேற யாரும் இல்லையேப்பா. வாழ்க்கைல திடீர்னு ரொம்பப் பெரிய வெற்றிடம் உருவான மாதிரி இருக்கு. நான் பண்ணின குறும்புகளை நீங்க பொறுத்துக்கிட்டீங்க. சின்ன வயசுல கேட்ட கேள்விகளையே நான் திரும்பத் திரும்ப கேட்டப்போ நீங்க பொறுமையா பதில் சொன்னீங்க. அப்போ நீங்க கோவப்பட்டிருந்தா நான் இப்போ இந்த நிலைமைல இருக்க முடியுமா? உங்களை இழந்த பிறகு இதை உணர்ந்து என்ன பிரயோஜனம்.
அம்மா இருந்தவரைக்கும் நீங்க அம்மாகிட்ட நிறைய பேசுவீங்க. அம்மா இல்லாத வெறுமையைப் போக்க, நீங்க என்கிட்ட பேச விரும்பறீங்கனு புரிஞ்சுக்காம விட்டுட்டேனே பா. தப்பு பண்ணிட்டேன் பா, என்னை மன்னிச்சுடுங்க. கலகலப்பா இருக்கற உங்க இயல்பை அடக்கி வச்சு, உங்க ஆயுசை சுருக்கிட்டேன் பா. உங்களுக்குப் பழக்கமான இடம், உங்க இயல்பைத் தெரிஞ்சுகிட்டு மனசுவிட்டு உங்ககிட்ட பேசற நண்பர்கள் இதெல்லாம் விட்டுட்டு எனக்காக வந்தீங்க. ஆனா நான்…’
வாய்விட்டுக் கதறினான் ரகு. அப்பாவைத் தொலைத்ததால் ஏற்பட்ட வெற்றிடம் அவனைப் பார்த்து எள்ளி நகையாடியது.
எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings