எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மளிகைக் கடை முருகேசன் தெருத் திண்ணையின் மேல் உட்கார்ந்து வானத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கு உடனடியாக இருபதாயிரம் ரூபாய் தேவையாக இருந்தது. கடைக்காக மொத்த வியாபாரிகளிடம் சாமான்கள் வாங்கிய இடத்தில் முதலில் கடனாக வாங்கி அந்த மாத முடிவில் பணம் திருப்பித் தருவது வழக்கம்.
வீட்டு வாசலிலேயே கடை வைத்திருப்பதால் வீட்டைச் சுற்றியுள்ள உறவினர்கள் பெரும்பாலும் முருகேசன் கடையில்தான் மளிகை சாமான்கள் வாங்குவார்கள்.
‘இன்று கடன் நாளை ரொக்கம்‘ என்ற கொள்கையில் தான் வியாபாரம் ஓடும். அதில் பெரும்பாலும் திரும்பாத கடன்தான். உறவினர்களிடம் கடுமையாகவும் கேட்க முடியாது, அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான்.
அப்போது ஊரெல்லாம் சுற்றிவிட்டு, வம்பெல்லாம் பேசிவிட்டு அவன் மனைவி மங்களம் முந்தானையை விசிறிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.
முருகேசன் அவளை முறைத்து, “நானே கவலையில் உட்கார்ந்து இருக்கிறேன். நீ எங்கே போய் ஊரைச் சுற்றி விட்டு வருகிறாய்?” என்று எரிந்து விழுந்தான்.
“நான் ஒன்றும் சும்மா ஊரைச் சுற்றவில்லை. உங்கள் கஷ்டம் தீரத்தான் நானும் ஊரைச் சுற்றிவிட்டு வருகிறேன். பக்கத்துத் தெருவில் இருக்கும் உங்கள் பெரிய அக்கா வீட்டிற்குத்தான் போய் கொஞ்சம் சமையல் செய்து வைத்து விட்டு வந்தேன். உங்க மாமா இன்று காலை முதல் சுயநினைவில்லாமல் இருக்கிறார். டாக்டர் வந்து பார்த்துவிட்டு, மருந்தும் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். ஆனால் ஒன்றும் நம்பிக்கையாக சொல்லவில்லை என்று அக்கா அழுது கொண்டு இருக்கிறாள். பிள்ளைகள் இரண்டு பேரும் ஊரில் இல்லை. இப்போது நீங்கள் உங்கள் அக்காவிடம் போய் கொஞ்சம் நடிப்பையும் சேர்த்து கெஞ்சி பணம் கேட்டால் கட்டாயம் நீங்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்கும்” என்றவள் உறுதியாக்க் கூறிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.
சிறிது நேரம் அந்த காவியும் சுண்ணாம்பும் பூசிய திண்ணையில் உட்கார்ந்து யோசித்த முருகேசன், காலாற நடந்து அக்காவீட்டிற்குப் போய் பார்த்து விட்டு வரலாம் என்று எழுந்து சென்றான்.
முருகேசனுக்குத்தான் கைக்கும் வாய்க்குமான நிலமையே தவிர, அக்கா நல்ல வசதியானவள் தான். இவனுக்கும் நிறைய முறை வீட்டிற்குத் தெரிந்தும் தெரியாமலும் பணத்தால் உதவி செய்திருக்கிறாள். ஆனால் மாமா உடம்பு சரியில்லாமல் இருக்கும் போது அவளிடம் எப்படி பண உதவி கேட்கமுடியும் என்று யோசித்தான்.
அக்காவின் வீடே அவளுடைய பணத்தின் செல்வாக்கைத் தெரிவிக்கும். அந்தத் தெருவிலேயே இரண்டு அடுக்கு மாடிவீடு. வீடு முழுவதும் ஏ.சி. வசதி செய்யப் பட்டிருந்ததால் அந்த வீட்டின் கதவுகளும், ஜன்னல்களும் எப்போதும் மூடியே இருக்கும்.
முருகேசன் காலிங் பெல்லை அழுத்தினான். அழுது சிவந்த கண்களுடன் அவன் அக்கா பார்வதிதான் வந்து கதவைத் திறந்தாள்.
முருகேசன் ஒன்றும் பேசாமல் மாமாவின் அருகில் சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு, “சாப்பிட்டாயா அக்கா” என்று விசாரித்தான். அவள் ஒன்றும் பதில் சொல்லாத்தால் இவன் நேரே சமையல் அறையில் சென்று பார்த்தான்.
அங்கே செய்து வைத்திருந்த சாப்பாடு அப்படியே இருந்தது. ஒரு தட்டில் சிறிது சாதமும் சாம்பாரும் போட்டு, செய்து வைத்திருந்த பொரியலையும் எடுத்து வைத்து ஒரு ஸ்பூன் வைத்து பார்வதியிடம் கொடுத்தான்.
அவள் வேண்டாமென்று தலையசைக்க, “சாப்பிடாமலே இருந்து நீயும் மாமாவின் பக்கத்தில் படுத்துக் கொள்ளப் போகிறாயா அக்கா?” என்று கேட்டவன், இவனே ஊட்டி விட முயற்சித்தான். அவன் பரிவில் உருகி கண்கள் கலங்கி அவளே சாப்பிடத் தொடங்கினாள்.
சிறிது நேரம் ஏதேதோ பேசிவிட்டு பேச்சோடு பேச்சாக முருகேசன், அவனது பண நெருக்கடி பற்றி அக்காவிடம் உள்ளம் உருக்க் கூறினான்.
ஏற்கெனவே அவன் அன்பினால் மனம் நெகிழ்ந்து போயிருந்தவள், அவனை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த ஒரு அறைக்குள் சென்றாள். அங்கு பூதாகாரமாக ஒரு பழையகால இரும்புப் பெட்டி இருந்தது.
அதை அரையடி நீளத்திற்கு இரண்டு சாவி எடுத்து ஒன்றன் பின் ஒன்றாக திறந்தாள். இத்தனை வருடங்களாய முருகேசன் அந்த இரும்புப் பெட்டியின் உள்ளே பார்த்ததில்லை.
“முருகேசா ! இப்போதெல்லாம் என் பிள்ளைகள் முன்பு போல் இல்லை. நிறைய கணக்கு பார்க்கிறார்கள். இதிலிருக்கும் பணத்திற்குக் கூட கணக்கு வைத்திருக்கிறார்கள். அதனால் உனக்குத் தேவையான இருபதாயிரம் ரூபாயை நான் கடனாகக் கொடுக்கிறேன். ஆனால் நீ அந்தப் பணத்தை ஒரு மாத்த்திற்குள் திருப்பித் தர வேண்டும். அது முடியுமா?” என்றாள்.
“ஒரு மாதம் எல்லாம் வேண்டாம் அக்கா. வெளியே போயிருக்கிற பணம் எப்படியும் பத்து நாட்களுக்குள் வந்துவிடும். பணம் வந்தவுடனே கொண்டு வந்து கொடுத்து விடுவேன் அக்கா” என்றான் முருகேசன்.
“வழக்கம்போல் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இருக்கலாம் என்று மட்டும் நினைத்து விடாதே. இவர்கள் உன் மாமாவைப்போல் கருணை காட்ட மாட்டார்கள். ஜாக்கிரதை” என்று எச்சரித்து விட்டுப் பணம் கொடுத்தாள்.
ஆனால் முருகேசனுக்குப் பணம் கொடுத்தால் அது ஒன் வே டிராபிக்தான் என்பதை மறந்து விட்டாள் அந்த பாசக்கார அக்கா.
அவனுக்கு பணம் வாங்க வேண்டும் என்பது தான் ஞாபகம் இருக்கும். வாங்கிய பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்பதை மறந்து விடுவான். இப்போதும் அப்படியே மறந்து விட்டான்.
வீட்டிற்குள் நுழைந்தவுடன் மங்களத்திடம் பணத்தைக் கொடுத்து பத்திரமாக வைக்கச் சொன்னான். அவன் அக்கா சொன்னதையும் சொன்னான். இவன் பத்து நாட்களுக்குள் திருப்பிக் கொடுத்து விடுவதாய் வாக்களித்து விட்டு வந்ததையும் சொன்னான்.
“பத்து நாட்களில் திருப்பித் தரமுடியுமா? சொந்தக்காரர்கள் மத்தியில் வாக்குத் தவறினால் நன்றாக இருக்காது“ என்றாள் மங்களம் கவலையுடன்.
“அண்ணன் என்னடா,தம்பி என்னடா அவசரமான உலகத்திலே” என்று உரக்கப் பாடிக்கொண்டு துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு சென்றான்.
‘அடப்பாவி , நல்லதிற்கு காலமில்லை ; உன்னை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்‘ என்று மங்களம் தனக்குள் முனகிக் கொண்டாள்.
ஒரு வாரத்தில் பார்வதியின் கணவர் இறந்துவிட்டார். அந்த அலைச்சலில் அக்காவின் பிள்ளைகள் இரும்புப் பெட்டியில் இருக்கும் பணத்தை கணக்கு பார்க்க மாட்டார்கள் என்று முருகேசன் நினைத்து விட்டான். வாங்கிய கடனை மறந்தும் விட்டான்.
ஆனால் பதினாறாம் நாள் காரியம் முடிந்த பிறகு பிள்ளைகள் இருவரும் பங்காளிகள் முன்னிலையில் பாகம் பிரித்துக் கொண்டனர். அப்போது குறைந்த பணத்திற்கு பார்வதி, முருகேசனுக்குக் கடனாகக் கொடுத்த இருபதாயிரம் ரூபாயைப் பற்றிக் கூறானாள்.
உடனே பிள்ளைகள் இருவரும் அசல் இருபதாயிரம், ஸ்பீட் வட்டி, கந்துவட்டி என்று என்னென்னவோ வட்டி சேர்த்து நாற்பதாயிரத்திற்கு கடன் பத்திரம் தயார் செய்து மாமாவிடம் வசூல்செய்ய சில உறவினர்களோடு வந்து விட்டார்கள்.
“இதென்ன அநியாயம்! நான் இருபதாயிரம் தானே என் அக்காவிடம் வாங்கினேன். அது கூட கை மாற்றாக வாங்கியதுதான். இதற்குப் போய் இவ்வளவு வட்டி போட்டால் என்னால் எப்படி கொடுக்க முடியும்?“ முருகேசன்.
“மாமா நாங்கள் ஒன்றும் ஏமாந்த சோணகிரிகள் இல்லை. பத்து நாட்களில் திருப்பித் தருவதாக அம்மாவிடம் சொல்லி பணத்தை நாங்கள் இல்லாதபோது வாங்கி இருக்கிறீர்கள். ஒரு மாதம் முடிந்துவிட்டது. ஆனால் பணம் இன்னும் வரவில்லை. அதனால் பணம் அசலும் வட்டியும் நாற்பதாயிரம் தரவேண்டும். இல்லையெஎன்றால் உங்கள் கடையை நாங்கள் எடுத்துக் கொள்வோம்“ என்று மிரட்டினார்கள் அக்காவின் இரு பிள்ளைகளும்
முருகேசன் வேறு வழியில்லாமல் வட்டிக்குமேல் வட்டி கொடுத்து கடையை மீட்டுக் கொண்டான்.
சமாதானம் செய்ய வந்த பெரிய மனிதர்கள், “எப்போதும் ஏமாற்ற நினைத்தால் நாம்தான் ஏமாந்து விடுவோம். கடவுளுக்கோ இல்லை மனச்சாட்சிக்கோ பயந்து வாழ வேண்டும்“ என்று அறிவுரை கூறிச் சென்றார்கள். மங்களம் அவனை அழகு காட்டி, ‘ஏமாறாதே ஏமாற்றாதே என்று பாடினாள்.
“போடி“ என்று அவளை முறைத்தான் முருகேசன்.
எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)



GIPHY App Key not set. Please check settings