எழுத்தாளர் அகிலா சிவராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சீனிவாசனும் வத்சலாவும் மும்பை பிரபாவதியில் இருக்கும் தன்னுடைய மகன் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். மகனுக்கு இப்போதுதான் ஆறு மாதத்திற்கு முன்னால் திருமணம் ஆனது. மகன் திருமணத்திற்கு முன்னாலேயே மும்பையில் தான் வேலை செய்கிறான். சீனிவாசன் ஒரு தனியார் கம்பெனியில் வேலை புரிந்து ரிட்டயர் ஆகிவிட்டார். அவருடைய மகள் மெல்போனில் எம்.எஸ். படித்துக் கொண்டிருக்கிறாள்.
அன்று சாயங்காலம் வழக்கம்போல சீனிவாசன் வாக்கிங் போக கிளம்பினார். வாக்கிங் பண்ணி விட்டு அருகில் இருக்கும் பார்க்கில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அங்கு இருப்பவர்கள் எல்லாரையும் பிரண்ட்ஸ் பிடித்து விட்டார். இப்படி உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென எதிரில் 28 அல்லது 27 வயதில் இருக்கும் ஒரு பையன் போய் கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்த உடனே இவருக்கு உடம்பு எல்லாம் வியர்த்து விட்டது அவனிடம் போனார். ஹலோ, பேட்டா, தேரா நாம் கியா ஹை? தும் கஹாங் ரஹ்தா ஹை (உன் பெயர் என்ன? நீ எங்கிருக்கிறாய்?) என்று கேட்டார். அதற்குள் அந்த பையனுக்கு ஒரு ஃபோன் கால் வரவே அவன் தமிழில் பேசிக் கொண்டிருந்தான்.
ஓ, அப்ப நான் நினைத்தது சரி தான் என்று மனதில் சொல்லிக் கொண்டு, நீ தமிழா?? அப்ப நான் தமிழிலேயே கேட்டிருப்பேனே பா.. உன் பேர் என்ன பா? நீ எங்க இருக்க?
அந்தப் பையனும் தன் பெயர் சீனிவாசன் என்றும் அருகில் உள்ள பிளாட்டில் தான் இருக்கிறேன் என்றும் கூறினான்.
உங்க அம்மா பேரு என்னப்பா என்று கேட்டார்
அவன் சாரு என்றான்.
அவ்வளவுதான் சீனிவாசனுக்கு வயிறு கலக்கி விட்டது. உன் வீடு எங்கப்பா இருக்கு என்றார். அவன் அருகில் இருக்கும் பிளாட்டை காண்பித்து, அங்கிள் இந்த பிளாட்டில் தான் ground floorல் தான் இருக்கிறேன் என்ற கூறிவிட்டு அவன் போய் விட்டான்.
அவன் போன பிறகு சீனிவாசனுக்கு வயிறு கலக்கி முகம் பேய் அறைந்தது போல் மாறியது. வீட்டிற்குள் போனார்.
வத்சலா கேட்டார், என்ன ஆச்சு உங்களுக்கு? என்று…
வயிறு சரியில்ல வேற ஒன்னும் இல்லை என்றார்.
அன்று இரவு அவருக்கு சாப்பிடவும் பிடிக்கவில்லை, தூக்கமும் வரவில்லை.
மறுநாள் காலை எழுந்தவுடன் வாக்கிங் போகிறேன் என்று கூறிவிட்டு அந்த பிளாட்டுக்கு போனார் பெல் அடித்தார்.
சாருவின் கணவர் மகேஷ் வந்தார். வாங்க சார், வாங்க வாங்க. என்று உள்ளே கூப்பிட்டார்.
சார் எப்படி நீங்க இத்தனை ஆசையா என்னை வரவேற்கிறீர்கள்?? என் மேல உங்களுக்கு கோபமே இல்லையா?? என்றார் சீனிவாசன்..
அதற்குள் சாருவின் மகனும் உள்ளிருந்து வந்தான்.
நீங்களா, வாங்க வாங்க என்றான்..
சார் இவன் பேரும் சீனிவாசன் தான் என்றார் மகேஷ்
தெரியும் பா,நேற்று சொன்னான் என்றார் சீனிவாசன்.
ஆமாம் பா.. இந்த அங்கிளை நேத்திக்கு நான் பார்த்தேன் என்றான் மகன்..
சார், உங்க மேல உயிரா இருந்ததால முதலிலேயே சொல்லிட்டா சாரு, எனக்கு பையன் பொறந்தா எங்க அண்ணன் பேரு தான் வைப்பேன் என்று. அதான் இவனுக்கு சீனிவாசன் என்று பெயர் வைத்தேன் என்றார் மகேஷ்.
அதைக் கேட்ட மகனுக்கு ஷாக் ஆகிவிட்டது என்னது இவரு என்னுடைய மாமாவா??? அதனாலதான் இவரு என்ன பாத்து பேர் என்ன? எங்க இருக்க என்றெல்லாம் கேட்டாரா?? என்றான்.
ஆமாம்பா, அச்சு ஆசலா என் சாரு மாதிரியே நீ இருக்க.. உன்ன பார்த்த உடனே எனக்கு வயிறு எல்லாம் கலக்கி விட்டது என்றார் சீனிவாசன். சரி, எங்க என் சாரு, கூப்பிடுங்க என்றார்.
சார் அவ போய் சேர்ந்துட்டா..
அய்யய்யோ.. என்னப்பா இது என்று தலையில் அடித்து கொண்டு கதற ஆரம்பித்தார்…
ஆமா சார், சரியா 28 வருஷத்துக்கு முன்னால நவம்பர் மாசம் 16ந் தேதி… என்று சொல்லி முடிப்பதற்குள் சீனிவாசன் முந்தி கொண்டு அன்னிக்கு தான் எனக்கு கல்யாணம் ஆச்சுப்பா என்றார்.
சார், அன்னைக்கு தான் அவளுக்கு சிசேரியன் ஆப்ரேஷன், பண்றதுக்கு முன்னாடி டாக்டர் சொல்லிட்டாங்க, ஒரு உயிர் தான் பிழைக்கும் என்று கூறி விட்டார்கள்.. ஆபரேஷன் தியேட்டரில் இருந்த சாரு அண்ணாகிட்ட பேசணும் அம்மாகிட்ட பேசணும் என்று கதறினாள். நானும் நிறைய தரவை உங்களுக்கு ட்ரை பண்ணினேன், நீங்க எடுக்கல.. குழந்தை பிறந்து அரை மணி நேரத்திற்கெல்லாம் இவனை என்கிட்ட கொடுத்துட்டு போய் சேர்ந்துட்டா. அவ போன பிறகு நான் என் அம்மாவோட குழந்தையை எடுத்து கொண்டு திருச்சிக்கு போய் விட்டேன். எப்படியோ இத்தனை வருஷமா சாருவோட நினைவிலியே காலத்தை கழித்து விட்டேன், மும்பைக்கு வந்து நான்கு வருடம் ஆயிடுத்து என்றார் மகேஷ.
சார், அன்னிக்கு எனக்கு கல்யாணம் இருந்தது, so நாங்க யாரும் வீட்டில் இல்லை. இப்ப மாதிரி அப்ப மொபைல் இருந்திருந்தா நான் பேசி இருப்பேனே.. அய்யோ…. என்றார் சீனிவாசன்.
சாருவின் கல்யாணத்தில் சீனிவாசனை தவிர அம்மா அப்பாவிற்கு சம்மதம் இல்லாமல் இருக்கவே அவளை பற்றிய விவரமே தெரியாமல் போய் விட்டது. இதோ, இன்று 28 வருடத்திற்கு பிறகு தான் அவள் இறந்த செய்தியே தெரிகிறது. எல்லாம் விதி என்று புலம்பினார் சீனிவாசன்.
பிறகு சார், நான் இதுக்கெல்லாம் பிராயசித்தம் பண்ண விரும்புகிறேன். நீங்க என் பொண்ணுக்கு உங்க பையனை தர்றீங்களா?? நான் என் பொண்ணுகிட்ட கேட்டுட்டு அவளை வரவழைக்கிறேன். அதுக்கப்புறம் மேற்கொண்டு பார்க்கலாம், சரியா, என்று சொல்லிவிட்டு சீனிவாசன் கிளம்பி விட்டார்.
சீனிவாசன் அன்று இரவே பெண்ணுக்கு whatsappல் மிகவும் அவசரமாக பேச வேண்டும்.. இந்தியா வர முடியுமா?? நான் சொன்னதாக நீ அம்மாகிட்ட சொல்லிக்க வேண்டாம், நீ தானா வர மாதிரி அவகிட்ட சொல்லிக்கோ.. என்று எழுதி அனுப்பினார்.
அவள் உடனே, Dad, ஏன் இத்தனை டென்ஷனா இருக்கீங்க?? கூல் Dad கூல், எப்படியும் எனக்கு அடுத்த வாரம் லீவு தான், நான் கிளம்பி வரேன். அம்மாகிட்ட லீவுக்காக வரேன்னு சொல்லிகறேன். ஓகே, take care, bye என்று மெசேஜ் கொடுத்தாள்.
மூன்று நாள் கழித்து மகளும் வந்துவிட்டாள். பிறகு மகளும் அப்பாவும் வாக்கிங் போவது போல் வந்து பார்க்கில் உட்கார்ந்து பேசினார்கள். அப்பா, அத்தையின் கணவரையும் மகனையும் பார்த்ததை பற்றியும் அத்தைக்கு நேர்ந்தது பற்றியும் எல்லாவற்றையும் கூறினார்.
Dad, இப்படி ஆயிடுச்சே..நான் நெனச்சேன் நீங்க அத்தை கணவரை பார்த்தீங்கன்னு சொன்ன உடனே அத்தையை பார்க்கலாமென்று. ரொம்ப நாளா அத்தையை பார்க்கணும்னு எனக்கு ஆசை இருந்தது. என்னைக்காவது ஒரு நாள் கண்டிப்பாக பார்க்காலாம் என்று இருந்தேன் இப்படி ஆயிடுத்தே என்றாள்..
சரி விடுமா… விதிப்படிதானே நடக்கும். அவங்க வீட்ல போய் பையனை பார்ப்போம்.. உனக்கு அவன புடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கோ… நான் கம்பெல் பண்ண மாட்டேன் சரியா.
இன்னொரு விஷயம், வீட்ல இதை பத்தி எதுவும் சொல்ல வேண்டாம், நாளைக்கு ஒரு இடத்துக்கு போகணும் சொல்லி எல்லோரையும கூட்டிண்டு போவோம். அங்க போய் சர்ப்ரைஸா இருக்கட்டும் சரியா என்றார் சீனிவாசன்.
ஓகே Dad, ஓகே… ஓகே.. என்றாள் மகள்.
பார்க்கில் இருந்து வீட்டுக்கு போன உடனே சீனிவாசன் மனைவியிடமும் மகனிடமும் நாளைக்கு எல்லோரும் காத்தால 10 மணிக்கு ரெடியா இருங்க. ஒரு இடத்துக்கு போகணும் எனறார் சீனிவாசன்.
வத்சலா எங்க?? எங்க?? என்று பல முறை கேட்டும் அவர் எதுவும் சொல்லவில்லை.
மறுநாள் காலை மகள் பவித்ரா ஜொலிக்கும் பட்டுப் புடவை கட்டிக்கொண்டு தயாராகினாள். அம்மா பார்த்து விட்டு என்னடி மாப்பிள்ளையா பாக்க போறோம் இந்த மாதிரி மினுக்கிண்டு வர என்றார்.
போறாக்குறைக்கு சீனிவாசனும் பட்டு வேஷ்டியை கட்டி கொண்டு மேலே ஜிப்பாவையும் போட்டுக் கொண்டு அமர்க்களமாக வந்தார்.
வத்சலா, அப்பாவும் பொண்ணும் சேர்ந்து ஏதோ பண்றேள், சரி சரி தெரியதானே போறது என்று சொல்லிவிட்டு அவளும் ரெடி ஆகி வந்தார்.
மகன் காரை எடுக்கப் போனான். டேய், காரெல்லாம் வேணாம். இங்க பக்கத்துல தான் டா.. நடந்தே போவோம் என்றார். அதுக்கு எதுக்குங்க இத்தனை கூத்து என்றார் வத்சலா. சீனிவாசன் பதில் எதுவும் சொல்லாமல் மகேஷின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
எல்லோரையும் பார்த்த சந்தோஷத்தில், மகேஷிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. வாங்க, வாங்க, என்று எல்லோரையும் வரவேற்றார்.
இவர் யார் தெரியுமா உனக்கு? என்றார் சீனிவாசன்..
தெரியாதுங்க.. என்றார் வத்சலா.
எனக்கு ஒரு தங்கை இருக்கா சாருனு சொன்னேன் இல்லையா???
ஆமாங்க…
அவளோட கணவர் தான் இவரு..
அப்பாடி ஒரு வழியா உங்க தங்கையை நீங்க கண்டுபிடிச்சிட்டீங்களா.. எங்க கூப்பிடுங்க… கூப்பிடுங்க.. என் நாத்தனார பாக்கணும் நானும் எத்தனை நாளா ஆசையா இருக்கேன் அவளை பார்க்க என்றார் வத்சலா..
ஆமாப்பா ஆமா என்று மகனும் கூடவே சொன்னான்.
பிறகு சீனிவாசன் எல்லா கதையையும் அவர்களிடமும் கூறினார்.
இவர்கள் எல்லோரும் இங்கே பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் பவித்ரா நேராக சீனுவின் ரூமுக்கு சென்று அவனோடு சேர்ந்து கொண்டு சிரித்து பேசி கொண்டிருந்தாள்.
பெரியவர்கள் எல்லோரும் ஒருவழியாக பேசி பேச்சை நிறுத்தும் போதுதான் கவனித்தார்கள் தன்னந்தனியாக ரூமில் இவர்கள் இருவரும் உட்கார்ந்து கொண்டு சிரித்து சிரித்து பேசுவதை.
அடப்பாவிகளா.. இங்க நாங்க பேசி முடிவு கூட பண்ணல, நீங்க ரெண்டு பேரும் அதுக்குள்ள இத்தனை லூட்டி அடிக்கிறீங்களா என்றார்கள்.
அதற்குள் பவித்ரா நான் எதுக்கு பயப்படணும். இவன் என்னோட அத்தை பையன், நான் அவனோட மாமா பொண்ணு.. எங்களை யாரால் தடுக்க முடியும்? இல்லையாடா என்று சொல்லிவிட்டு அவனோட வண்டி சாவியை எடுத்துக் கொண்டு டேய், சீனு வாடா நம்ம இரண்டு பேரும் வெளியே போகலாம், இந்த பெரியவர்கள் இங்கேயே பேசி கொண்டு இருக்கட்டும், நீ வா.. நாம இரண்டு பேரும் சேர்ந்து ஜாலியா சுத்திட்டு வரலாம் என்று அவன் கையை இழுத்துக்கொண்டு தர தரவென சென்று விட்டாள் பவித்ரா.
இரண்டு மனங்களும் இணைந்து விட்டன. மனங்கள் இணைந்தது மட்டுமல்லாமல் சீனிவாசனின் பாரமும் இறங்கி லேசாகிவிட்டது. அவர் தன் தங்கைக்கு செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்து விட்டார்.
எழுத்தாளர் அகிலா சிவராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings