இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ராஜஹம்சனும் மதுவந்தியும் ஒரு மோதலில் சந்திக்கின்றனர். ஆனால் அதன்பின் ஹம்சன் மதுவந்தியின் குடும்பத்தை ஒரு பெரிய விபத்திலிருந்து காப்பாற்றுகிறான். மதுவந்தி அவள் தாயார் கனகா, தம்பி உதயனுடன் ராஜஹம்சனின் அக்கா வீட்டு திருமணத்திற்கு செல்கிறாள். அங்கே வரும் மதுவந்தியைப் பார்த்து அவள் அழகில் பிரமித்து போகிறான் ஹம்சன்.
மண்டபத்தின் படிகளில் அழகோவியமாய் வரும் மதுவந்தியை பார்த்து இமைக்க மறந்தவனாய் நின்றான் ராஜஹம்சன். தன் தம்பி ஆசையுடன் அந்த பெண்ணை பார்க்கும் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் தெரிந்தது உமையாளுக்கு.
கனகவல்லி மண்டப முகப்பில் நின்றிருந்த மனோகரன் உமையாளுக்கு வணக்கம் கூறியவாறு வந்தார். மனோகரன் கனகாவிடம் “வாங்க வாங்க சார் வரலைங்களா?” என்று கேட்டபடி அவர்களை வரவேற்றான்.
“இல்ல தம்பி அவருக்கு ஒரு வாரமா வைரல் காய்ச்சலால உடம்பு சுகம் இல்லை அதான் அவர் வரல நாங்க மட்டும் வந்தோம்” என்றார் கனகா.
மதுவை பார்த்தபடி வேகமாக அங்கு வந்த பிரியா, ராஜஹம்சனை நெருங்கி நின்று அவன் கைகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு, “அத்தான் நான் சொல்வேன் இல்ல மதுவந்தி ஊட்டியில் இருந்து வர்றான்னு அவ தான் இவ” என்று மதுவை அவனுக்கு அறிமுகப்படுத்தினாள்.
அதுவரை மலர்ந்த முகத்துடன் ராஜஹம்சனின் பார்வையால் வெட்கத்துடன் தலை குனிந்து இருந்த மதுவந்தி, ப்ரியா மதுவை அவனுக்கு அறிமுகப்படுத்துவது போல் தங்களின் நெருக்கத்தை அவளுக்கு உணர்த்தியதில் மதுவந்தியின் முகம் சுருங்கிப் போனது.
ஆனால் அதை பொருட்படுத்தாது இயல்பாக இருக்க முயற்சித்த மது, “ஹலோ ப்ரியா நீங்க எங்க இங்க ஊட்டியில” என்று அவளிடம் சட்டென்று கேட்டாள்.
எதிர்பாராத இந்த கேள்வியால் சற்று விழித்த ப்ரியா “இது என் அத்தை பெண் வீட்டு கல்யாணம்” என்று கூறி அசடு வழிந்தாள். அதற்குள் ஹம்சன் உதயனிடம் ஏதோ பேசியபடி அங்கிருந்து மண்டபத்தின் உள்ளே சென்று விட்டான்.
கனகாவும் மகளுடன் மண்டபத்திற்குள் செல்லவும் ப்ரியாவும் உடன் சென்று மதுவிடம் “வாங்களேன் கல்யாண பெண்ணை பார்த்துட்டு வரலாம்” என்று அழைத்தாள்.
“இல்ல வேண்டாம்” என்று கூறிய மது தன் அம்மாவின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். அதற்கு மேல் அங்கு இருக்க பிடிக்காமல் ப்ரியா ராஜஹம்சன் எங்கே என்று கண்களால் தேடினாள்.
அவனோ உதயனுடன் அங்கிருந்து இளைஞர்கள் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தான். ப்ரியாவிற்கு அங்கு செல்ல துணிவில்லை. எரிச்சலுடன் ஒரு நாற்காலியில் அமர்ந்தாள்.
மேடையின் அருகில் நின்றிருந்த ஹம்சனின் அன்னை மீனாட்சி மதுவந்தி மண்டபத்தின் உள்ளே நுழையும் போதே பார்த்தவர் எத்தனை அழகா தெய்வீகமா இருக்கா பொண்ணு என நினைத்தார். எதேச்சையாக திரும்பியவர் அவன் வயதொத்த இளைஞர்களுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்த தன் மகன் ஹம்சனின் பார்வை அவ்வப்போது அந்த பெண்ணின் மேல் படிந்து மீள்வதைக் கண்டார் .
அவர் மனத்தில் சந்தோஷ சாரல். அருகில் நின்ற தன் கணவர் விசாகனிடம் மெதுவாக இது பற்றி கிசுகிசுத்தார். அவரும் மதுவைப் பார்த்தவர் பையன் சரியான பெண்ணைத் தான் தேர்ந்தெடுத்து இருக்கான் என்று நினைத்து மகிழ்ச்சி முறுவல் பூத்தார்.
சற்று நேரத்தில் பெண் அழைப்பு நடந்து சடங்குகள் முடிந்ததும் ரிசப்ஷன் ஆரம்பமானது. கனகவல்லிக்கு இந்த திருமணத்தை பார்த்ததும் மகள் மதுவுக்கும் கூடிய சீக்கிரம் நல்ல பையனாக பார்த்து மணம் முடிக்க வேண்டும் என்ற ஆசை தோன்றியது.
மனம் நெகிழ தன் மகளை பார்த்தவர் என் மக தான் எத்தனை அழகாக இருக்கா என பெருமிதம் அடைந்தார்.
அப்போது உதயனுடன் கனகாவின் அருகில் வந்த ராஜஹம்சன் “ஆன்ட்டி உங்களுக்கு எங்க அப்பா அம்மாவை அறிமுகப்படுத்துகிறேன் வாங்க ப்ளீஸ்” என்று கூப்பிட்டான்.
அதற்கு அவசியமில்லாமல் கனகாவும் மதுவும் அமர்ந்திருந்த இடத்திற்கு மீனாட்சியும் விசாகனும் வந்துவிட்டனர். இருவரும் ஒருவரை ஒருவர் தாங்களே அறிமுகப்படுத்திக் கொண்டனர். மது மிகவும் வினையமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது மீனாட்சி விசாகனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. தூரத்திலிருந்து பார்த்த ப்ரியாவுக்கு எதுவுமே பிடிக்கவில்லை.
“ஹாய் ப்ரியா சாப்பிட போகலையா” என்று கேட்டபடி அங்கு வந்தான் ரகுவரன். அவள் பார்வை போன திசையையும் அவளின் கடுகடுத்த முகத்தையும் பார்த்த ரகுவரன் வாய் விட்டு சிரித்தான்.
“இதுக்கெல்லாம்மா கடுப்பாகிறது. ராஜஹம்சன் உனக்கு தான் கவலையை விடு” என்று கூறி ப்ரியாவை மேலும் எரிச்சல் படுத்தினான் ரகுவரன். ப்ரியாவின் மனம் பொறாமையால் தகித்தது.
மீனாட்சிக்கு கனகாவின் குடும்பத்தை மிகவும் பிடித்துப் போனது. அவர்கள் மண்டபத்தில் இருந்தவரை அவர்களுடனேயே இருந்தார் மீனாட்சி. உமையாளின் மாமியார் ரேகா கூட “என்ன உங்க அம்மா அவங்கள வழி அனுப்பி வச்சிட்டு தான் வருவாங்க போலவே” என்றார் உமையாளிடம் சற்று கடுமையாக.
அதுபோலவே மதுவந்தி குடும்பத்தினர் வீட்டுக்கு கிளம்பிய பின்பே மீனாட்சி ரேகாவின் அருகில் வந்தார். “என்ன அண்ணி அந்த பொக்கே ஷாப் குடும்பத்தோட ஐக்கியம் ஆயிட்டீங்களே” என்று ரேகா நக்கலாக கேட்டார் மீனாட்சியிடம்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல ரேகா. சடங்கு எல்லாம் முடிஞ்சதனால அவங்களோட பேசிட்டு இருந்தேன்” என்று சிரித்தபடி கூறினார் மீனாட்சி.
அன்று இரவு மீனாட்சி, தனியாக இருந்த உமையாளிடம் மதுவந்தியைப் பற்றி தன் அபிப்பிராயத்தை கூறினார். உமையாளும் “பொண்ணு ரொம்ப அழகா அடக்கமா இருக்குறா அம்மா தம்பிக்கு பார்க்கலாம்” என்றாள் ஆர்வத்துடன்.
“எனக்கும் அதுதான் தோணிச்சு, அப்புறம் கடவுள் சித்தம் பார்ப்போம்” என்றார் மீனாட்சி யோசனையுடன்.
உமையாளின் நாத்தனார் ஜெயந்தியின் திருமணம் முடிந்ததும் அன்று மாலையே மீனாட்சியும் விசாகனும் கோவை திரும்பினர். ராஜஹம்சன் தன் அக்காவிற்கு உதவி செய்துவிட்டு அடுத்த இரண்டு நாட்களில் கோவை வருவதாக கூறினான்.
திருமண ரிசப்ஷனில் ப்ரியாவை பார்த்ததிலிருந்து மதுவந்தியின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது. ப்ரியாவின் சுயதம்பட்டம் அவள் கல்லூரியில் மிகப் பிரபலமாயிருந்தது.
“என்னடி இவ சினிமா எல்லாரும் தான் போறோம். நான் ப்ரூக் ஃபீல்ட்ஸ்ல தான் போவேன். ஆடி கார்ல தான் போவேன்னு பீலா விட்டுட்டு இருக்கா இவ” என்று தோழிகள் ப்ரியாவை கலாய்ப்பார்கள். ப்ரியாவும் மதுவும் ஒரே கல்லூரியில் ஒரே டிபார்ட்மெண்டில் படித்தாலும் மது கல்லூரிக்கு வந்த நாளிலிருந்து ப்ரியாவுக்கு அவளை பிடிக்கவில்லை.
ப்ரியா நிறத்தில் மிக வெளுப்பாக சற்று சோகையாக இருப்பது போல் இருப்பாள். அதற்கு நேர் எதிராக மது ரோஜா நிறம் கலந்த வெளுப்பில் இருப்பாள். மதுவுக்கு நீண்ட அடர்த்தியான கூந்தல். ப்ரியாவுக்கு சுருண்டு பம் என்று குட்டையாக இருக்கும் தலை முடி. இரண்டுமே ஒவ்வொரு விதத்தில் அழகாகத் தான் இருக்கும் ஆனால் ப்ரியாவுக்கு மதுவிடம் சற்று பொறாமை தான்.
அவ்வப்போது மதுவை மட்டம் தட்டுவது போல் ப்ரியா பேசினாலும் மது அதை கண்டு கொள்ள மாட்டாள் அதிகம் பேசி வெளியூரில் வீண் வம்பை விலைக்கு வாங்கி விடாதே என்று அவள் அன்னையின் அறிவுரை அவ்வப்போது மதுவின் மனதில் பளிச்சிடும். அதனால் வாயை இறுக மூடிக் கொள்வாள் மது.
அதுவே அவளிடம் தோழிகளை அதிகம் வரச் செய்தது. அளவா சரியா பேசுற. நல்லா படிக்கிறா. எல்லாருக்கும் உதவியா இருக்கா என்று அவள் தோழிகள் மதுவை பற்றி கூறுவர்.
கல்லூரியில் என்னிடம் அதிகம் பேசக்கூட மாட்டா இந்த ப்ரியா இங்க வந்து ராஜ் பக்கத்துல கைய கோர்த்து நின்னுட்டு என்னை வெறுப்பேத்தறா என்று நினைத்த மது திடீரென என்னது ராஜ்ன்னா சொன்னேன் என்று திடுக்கிட்டாள்.
இது என்ன புதுசா அவன் யாரோ எனக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்த அவளின் கண்களில் கண்ணீர் திரையிட்டது. அவளையும் அறியாமல் மனம் சோகமானது.
“மது காலேஜுக்கு போக துணி எல்லாம் பேக் செய்துட்டயா” என்று கேட்டபடி அறையின் உள்ளே நுழைந்த கனகா மகளின் வாடிய முகத்தை பார்த்து, “இன்னொரு நாள் இருக்குதில்ல ஊருக்கு போக அதுக்குள்ள ஹோம் சிக்கா” என்று கேட்டு மதுவை அணைத்துக் கொண்டார்.
அன்னையின் கனிவான அரவணைப்பில் காரணமே இல்லாமல் விம்மி அழுதாள் மது. மகள் அழுவதை பார்த்ததும் கனகாவுக்கு தாங்கவில்லை. “என்ன கண்ணா எதுக்கு அழுகற உடம்புக்கு ஏதும் முடியலையா” அம்மா கொஞ்சினார்.
அன்னையின் அணைப்பில் கொஞ்சலில் மனம் தெளிந்த மது “காலேஜ் போனா ஒரு மாசம் உங்கள பார்க்க முடியாது இல்லமா அதான்” என்று கூறி சமாளித்தாள்.
மனம் சோர்வடைய காரணம் என்னவென்று புரிந்து துணுக்குற்றாள் மது. ராஜஹம்சனை இனி எப்போது பார்ப்போமோ என்பதால் வந்து அழுகையும் சோர்வும் வருத்தமும் மதுவுக்கு திகைப்பை ஏற்படுத்தியது. அவள் மனம் அவளுக்கே புரியவில்லை.
புதன்கிழமை காலை கல்லூரிக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் மதுவந்தி. வழக்கமாக அவர்கள் கடையில் வேன் ஓட்டும் டிரைவரை தங்கள் வீட்டு காரில் மதுவந்தியை கல்லூரியில் கொண்டு விடுமாறு பணித்தார் ஜெகன்நாதன்.
அந்த விபத்திற்கு பிறகு காரில் லாங் டிரைவ் செய்வதை கொஞ்ச நாட்கள் தவிர்க்கலாம் என நினைத்து டிரைவரை ஏற்பாடு செய்தார். ஆனால் மதுவோ “நான் பஸ்ஸிலேயே போய்க்கிறேன்” என்று கெஞ்சினாள் தந்தையிடம். ஆனால் ஜெகன்நாதன் கண்டிப்பாக மறுத்துவிட்டார்.
“இந்த தாத்தா டிரைவர் என்னை காலேஜுக்கு சாயங்காலம் தான் கொண்டு விடுவாரு” என்று முணங்கிக் கொண்டே புறப்பட்டாள் மது. அவள் புறப்பட்டுச் சென்ற சற்று நேரத்தில் ராஜஹம்சன் மதுவந்தியின் வீட்டுக்கு வந்தான்.
கனகவல்லி மிகுந்த வியப்புடன், “வாங்க தம்பி” என அவனை வரவேற்றார்.
தான் கொண்டு வந்திருந்த ஸ்வீட் பாக்ஸை “அக்கா கொடுத்து விட்டாங்க” என கனகாவிடம் கொடுத்த ஹம்சன், “என்ன ஆன்ட்டி வீட்டில ஒருத்தரையும் காணோம் “என்று விசாரித்தான் .
“மது காலேஜ்க்கு கோயம்புத்தூர் கிளம்பிட்டா உதயனும் அங்கிளும் கடைக்கு போய் இருக்காங்க” என்று கூறிய கனகா “தம்பி டீ குடிக்கிறீங்களா” என்று கேட்டார்.
“வேணாம் ஆண்ட்டி நான் அவசரமா ஊருக்கு போயிட்டு இருக்கேன் உதயன் வந்தா சொல்லிடுங்க “என்று கூறி கனகாவிடம் விடைபெற்றான் ஹம்சன்.
காரை வேகமாக ஓட்டிய ஹம்சன் மேட்டுப்பாளையத்தில் தான் மதுவின் வீட்டுக் காரை பார்த்தான். அதன் பின் அந்த கார் கல்லூரி வளாகத்துக்குள் நுழையும் வரை பார்த்த பின்பே தன் வீட்டுக்கு சென்றான் ராஜஹம்சன். தன் மனம் மதுவின் வசம் சிறைபட்டுள்ளது என அறிந்தவன் மகிழ்ச்சியில் புன்னகையுடன் தன் வேலைகளைச் செய்தான்.
அன்று ஆபீஸில் அவனைப் பார்த்த அனைவரும், “என்ன சின்னவரு இன்னைக்கு சிரிச்ச முகமா இருக்காரு” என வியந்தனர். பொதுவாக ஹம்சன் வேலை ஆட்களிடம் சற்று இறுக்கமாக கண்டிப்புடனே இருப்பான். இன்று அவன் மனத்தின் இனிமைத் துள்ளல் எல்லோரிடமும் ஒட்டிக்கொண்டது.
ஆனால் இதற்கு எல்லாம் நேர் மாறாக மதுவந்தியின் தந்தை ஜெகன்நாதன் தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்தார். ஹம்சனின் எண்ணம் நிறைவேறுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings